நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - 1/N

இன்றைய தலைமுறைக்கு, வாசிக்க அளவிலாத நூல்கள் இருக்கின்றன தமிழில். எழுதுவதற்கு எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். புதிதாக வாசிக்கத் துவங்கும் எவருக்கும் எதில் இருந்து ஆரம்பிப்பது என்பது பெரும் குழப்பம்தான். எல்லாத் தலைமுறையையும் சேர்ந்த எல்லா எழுத்தாளர்களும் கவிஞர்களும் சொல்லும் மூன்று - திருக்குறள், கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம். "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை" என்று அதைத்தானே பாரதியும் சொல்கிறார். இவை மூன்றும் ஒவ்வொரு வேறுபட்ட வகை இலக்கியம். திருக்குறள் புனைவற்ற இலக்கியம் (NON-FICTION). கம்பராமாயணம் வேற்று மொழியில் எழுதப் பட்ட ஒன்றின் தழுவல். கிட்டத்தட்ட மொழிபெயர்ப்பு போன்றது. சிலப்பதிகாரம் தமிழிலேயே எழுதப்பட்ட முழுமையான புனைவிலக்கியம் (FICTION). ஆக, தமிழில் எழுதப் பட்ட தலைசிறந்த புனைவிலக்கியம் என்று சொல்லத் தக்க ஒன்று இதுதான். மொத்த இந்தியாவுக்கு இராமாயணம்-மகாபாரதம் எவ்வளவு பெரிய காப்பியங்களோ அந்த அளவுக்கு சிலப்பதிகாரம் தமிழகத்துக்கு முக்கியம். இந்தியர் நாம் இராமாயணம்-மகாபாரதத்தை தொலைக்காட்சித் தொடராகவெல்லாம் போட்டுச் சிறப்புச் செய்த அளவுக்குத் தமிழர் நாம் சிலப்பதிகாரத்தைக் கொண்டாடியிருக்கிறோமா? இல்லை! இன்னும் சொல்லப் போனால் இது தமிழகமும் கேரளமும் சேர்ந்து கொண்டாட வேண்டிய படைப்பு. ஏன் அந்த அளவுக்குக் கொண்டாடப் படவில்லை என்று தெரியவில்லை.

ஜெயகாந்தன் போன்ற பெரும் பெரும் எழுத்தாளர்களே, தமிழனாகப் பிறந்தவர்கள் முதலில் தமிழின் பழைய இலக்கியங்களைப் படியுங்கள்; அப்புறம் உலக இலக்கியங்கள் எல்லாம் படிக்கலாம் என்று சொல்வதைக் கேட்டு, அதற்கான சரியான நூல்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நூலகத்தில் வித்வான். டாக்டர். துரை. இராஜாராம் அவர்கள் எழுதிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (முழுவதும் - உரைநடையில்) என்ற நூலைக் கண்டதும் அப்படியே அள்ளிக் கொண்டு வந்து விட்டேன். நூலின் அட்டையில் இருக்கும் படம் கொஞ்சம் குழப்புகிறது. அழகான ஒரு பெண்ணுக்கு இன்னோர் அழகான பெண் (இரண்டும் வெவ்வேறு விதமான அழகுகள்) தலை வாரி விடுவது போன்ற படம். கண்ணகியும் மாதவியுமாக இருக்குமோ என்றால், அவர்கள் அந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்து வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லையே. ஒருவேளை அவர்கள் அப்படி இருந்து கொண்டால் தனக்கு வசதி என்று கோவலன் கனவு கண்டிருக்கலாம். அல்லது, ஒருவர் கண்ணகியாகவோ மாதவியாகவோ இருக்கலாம்; மற்றவர் பணிப்பெண்ணாக இருக்கலாம். சிலப்பதிகாரம் என்றாலே கண்ணகி-மாதவி என்ற இரு பெண்களின் கதை என்று நம் மனதில் பதிந்து விட்டதால் வந்த குழப்பம். பாசக்கலர் உடை அணிந்திருக்கும் அழகி அழகாக இருக்கும் அதே வேளையில் அப்படியே தமிழ் முகம் கொண்டவளாகவும் இருக்கிறாள்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் செய்யுட் பகுதியில் படித்த சிலப்பதிகாரம் ஒரு போதும் முழுமையான கதையையும் படிக்கும் வாய்ப்பைக் கொடுக்க வில்லை. ஏதாவதொரு பகுதியை மட்டும் கொடுத்து, அதையும் புரிந்து கொள்ள விடாமல் தடுத்து, மனப்பாடப் பகுதியில் பத்து மதிப்பெண்கள் சுளையாக வாங்க வேண்டுமென்றால், அத்தனையையும் அப்படியே அச்சரம் தவறாமல் மனப்பாடம் செய்து கொள்ளுமாறுதான் அறிவுறுத்துவார்கள். அதிலும் எம்மைப் போன்ற நல்ல தமிழாசிரியர் பெற்ற பாக்கியசாலிகள் கூடுதலாகக் கொஞ்சம் புரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அப்படி எங்கள் தமிழாசிரியை சொன்ன எத்தனையோ தகவல்கள்-கருத்துகள், மனதின் ஆழத்தில் அப்படியே புதைந்து கிடக்கின்றன. எந்த நூலை எடுத்தாலும் அந்த நூல் பற்றி அவர் கொடுத்த அறிமுகம்தான் முதலில் நினைவுக்கு வரும். அப்படி அவர் சிலப்பதிகாரம் பற்றிச் சொன்ன ஒரு தகவல், "சிலப்பதிகாரம்... புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று சேர-சோழ-பாண்டிய ஆகிய மூன்று நாடுகளிலும் நடந்த கதை. சோழ நாட்டில் பிறந்த கண்ணகி, நீதி தவறிய பாண்டிய மன்னனின் உயிரைக் குடித்து, சேர நாட்டில் போய்க் கடவுள் நிலை அடைவாள்!" என்று சொல்வார்.

அதை நினைத்துக் கொண்டே முதற் சில பக்கங்களைப் புரட்டினால், அவர் சொன்ன மாதிரியே மூன்று பாகங்களாகவும் அவற்றுக்குள்முப்பது காதைகளாகவும் பிரித்தமைக்கப் பட்டிருக்கிறது நூல். இதில் புகார்க் காண்டம் மட்டுமே படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் கொடுக்கப் பட்ட காலம் முடிந்து விட்டது என்று நூலகத்தில் இருந்து தகவல் வந்து விட்டது. கொடுத்து விட்டு மீண்டும் எடுத்து வர வேண்டும். பயப்பட வேண்டாம். நூல் ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை. நாம் வாசிக்கும் வேகம் அப்படி.

முன்னுரையில் சில முக்கியமான தகவல்கள் உள்ளன. தமிழில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவிதமான காப்பியங்கள் உள்ளன என்றும் அவற்றை எப்படி வேறுபடுத்துவது என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். "பெருங்காப்பியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனைப் பெற்றிருக்கும்; ஏற்புடைய கடவுள் வாழ்த்தோடு விளங்கும்; மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்பன போன்றவற்றின் வருணனைகள் ஆங்காங்கே உரிய இடங்களில் காணப்படும். காண்டம், இலம்பகம், சருக்கம், காதை, படலம் போன்ற பெரும் பிரிவுகளையும், உட்பிரிவுகளையும் கொண்டதாயிருக்கும். நகை, வீரம், வெகுளி போன்ற ஒன்பான் சுவைகளைப் பெற்றிருத்தலோடு, ஆறாம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களை உடைத்தாயிருக்கும். மேலே கூறியவற்றில் எவை குறைந்தாலும் பரவாயில்லை. ஆனால், நால்வகைப் பயன்களில் பெருங்காப்பியத்தில் ஒன்றுகூடக் குறைந்துவிடக் கூடாது" என்கிறார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் இவ்வாறமைந்த தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் சிலப்பதிகாரமே எல்லாவற்றுக்கும் மூத்ததாகக் கருதப் படுவது.

சிலம்புதான் இக்காப்பியத்தின் நாயகம். காப்பியத்தலைவன் கோவலனின் (அவன்தான் காப்பியத் தலைவனா அல்லது இது தலைவிகளை மையமாகக் கொண்ட காப்பியமா என்று தெரியவில்லை!) உயிரையும் பாண்டிய மன்னனின் உயிரையும் குடித்து இப்படியொரு காப்பியம் உருவாகக் காரணமாக இருந்தது  இந்தச் சிலம்புதான். சிலம்புதான் சிலப்பு. சிலம்பதிகாரம்தான் சிலப்பதிகாரம். கடைசியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் முறையிடுகையில், "என்னுடைய சிலம்பு முத்துப் பரல்கள் கொண்டவை; உன்னுடையவை மாணிக்கப் பரல்கள் கொண்டவை!" (முத்தும் மாணிக்கமும் இடம் மாறியிருக்க வாய்ப்புள்ளது!) என்று குழப்பத்தை நிவர்த்தி செய்து வைக்கும் காதை ஏதோவொரு வகுப்பில் படித்த நினைவும் இருக்கிறது.

இந்த நூல் சொல்வதாகச் சொல்லப் படும் நீதிகள் மூன்று: 1. அறநெறி தவறிய அரசனை அறக்கடவுளே இயமனாக நின்று அழிக்கும், 2. கற்புடை மகளிரை இவ்வுலகத்தார் மட்டுமல்லாது வானோரும் போற்றுவர், 3. ஊழ்வினை எவரையும் விடாது உருத்துவந்து ஊட்டும்.

நீதி 1. அறநெறி தவறினால் அரசனே ஆனாலும் அழிக்கப் பட வேண்டும் அல்லது தன்னைத் தானே அழித்துக்  கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு இந்த மண்ணில் நியாயமும் நீதியும் மேலோங்கியிருந்த காலம் ஒன்று இருந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்களால் முடிகிறது என்றால் அதையும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போதைய அரசர்களும் அவர்களுடைய உறவுகளும் (இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்கிற விளக்கம் வேறு!) நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே அதற்குக் காரணம். சிலப்பதிகாரம் என்ற சொல்லைத் தவிர வேறெதுவும் கேள்விப் பட்டிராத அரசர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்; அதில் ஆராய்ச்சி செய்து களைத்து ஆட்சி செய்ய வந்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

நீதி 2. கற்புடை மகளிரின் பெருமையை இளங்கோவடிகள் சொல்லிச் சென்று பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இன்னும் கற்பு பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், "கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்!" என்று சொல்லும் அளவுக்கு முற்போக்குச் சிந்தனை கொண்ட பாரதி என்ற மகான் ஒருவர் பிறந்து, கற்பு சார்ந்த வாதங்களை அவற்றின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். முதல் நீதி முற்றிலும் அழிந்து விட்டதே என்று கவலை கொள்ளும் வேளையில், இரண்டாம் நீதி பேச்சளவிலாவது ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது நல்ல செய்திதானே. கற்பு நிலையை இரு கட்சிக்கும் பொதுவில் வைக்கும் அதே வேகத்தில் அதற்கான முக்கியத்துவமும் குறைந்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. "கற்பை இழந்தால், செத்தா போய்விடப் போகிறோம்?!" என்று கேள்வி கேட்கும் அளவுக்கு முன்னேறி விட்டோம். அதுவும் நல்ல முன்னேற்றமே. உயிரை விட மானம் பெரிதுதான். மானம் என்பது கற்பு மட்டுமே சார்ந்ததல்ல. ஒருவனுக்கு ஒருத்தியோ அல்லது ஒருத்திக்கு ஒருவனோ உண்மையாக இருக்க வேண்டியது முக்கியம்தான். அதற்கு அந்த ஒருவனோ ஒருத்தியோ தகுதியானவர்களா என்பதும் முக்கியம். ஒருத்தர் மட்டும் உண்மையாகவும் இன்னொருவர் ஏமாளியாகவும் இருப்பதை விடவும் எல்லோரும் அதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவது உத்தமம்தானே.

நீதி 3. சிலப்பதிகாரம் என்றாலே, நினைவுக்கு வரும் மனப்பாட வரி, "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பது. அதாவது, என்னதான் திட்டமிட்டுச் செயல் பட்டாலும், பொறுப்பாக இருந்தாலும், இருக்க முயன்றாலும், முற்பிறவியில் செய்த புண்ணியமும் பாவமும் உனக்கு நிகழ்த்த வேண்டியவற்றை நிகழ்த்தாமல் செல்லா என்பதே அதன் பொருள். இது கொஞ்சம் இடிக்கிறது. இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணும் படிதான் நம் வாழ்க்கைகள் இருக்கின்றன என்றாலும், இப்படி ஒரு கருத்தைச் சொல்லி விடுவதன் மூலம், நம் தவறுகள் அனைத்துக்கும் நாம் பொறுப்பேற்காமல் தப்ப வாய்ப்புக் கொடுக்கப் படுகிறது.

இதை எழுதியவர், இளங்கோவடிகள். ஒரு சேர மன்னனின் மகன். இவருடைய அண்ணன்தான் செங்குட்டுவன். செங்குட்டுவன்தான் கண்ணகிக்குக் கோயில் கட்டியவர். மன்னவனான அண்ணன் அவரால் முடிந்ததைச் செய்கையில், எழுத்தாணியைக் கையில் பிடித்த இவர், இவரால் முடிந்ததாகச் செய்ததுதான் இந்த மாபெரும் இலக்கியம். இருவரும் சேர மன்னர் குடும்பத்தில் பிறந்ததால்தான் கேரளமும் இவர்களைக் கொண்டாட வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அவர்கள் எந்த அளவு அதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கண்ணகி கோயில் இன்னும் கேரளாவில் உள்ளதாகச் சொல்கிறார்கள். அதுவும் அதே பெயரில் இல்லை. மங்கள தேவி கோயில் என்று சொல்கிறார்களாம். அதுவும் தமிழக எல்லைக்கு அருகில் இருப்பதால், நம்மவர்கள் போய் சித்திரைப் பவுர்ணமிக்கு வணங்கி விட்டு வருகிறார்களாம். அதற்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்து வருவதாகச் சொல்கிறார்கள். தேக்கடியில் கூட்டம் குறைந்து வருவதால், இதைச் சுற்றுலாத் தளமாக்க யோசனை செய்து கொண்டிருக்கிறதாம் கேரளா வனத்துறை. நம்மவர்கள் மந்தை மந்தையாகப் போய்க் குவிகிற விதமாக, 'ஆண்டு தோறும் கண்ணகிக்குப் பச்சைச் சேலை வைத்து வணங்கி வந்தால் மூத்த பிள்ளைக்குப் பணக்கார வீட்டில் பெண் கிடைக்கும்' என்கிற மாதிரி ஏதாவது ஒரு கதையைக் கட்டி விட்டார்கள் என்றால், கண்ணகியின் புகழ் காலத்துக்கும் இருக்கும். அவர்களுக்கும் வருமானத்துக்கு வருமானம் ஆகி விடும். துணிக்கடைக்காரர்களாவது பிள்ளைக்குக் கண்ணகி என்று பெயர் வைப்பார்கள்.

தொடரும்...

கருத்துகள்

 1. இந்த அட்டையில் உள்ள பெண்கள் வஞ்சிமாநகர பெண்களாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி, துவாரகன்.

   ஆகா, அருமை. ஆளை வைத்து ஊரைச் சொல்லும் கலையில் கை தேர்ந்தவராக இருப்பீர்கள் போல! :)

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்