தைரியமும் அதன் ஒன்னு விட்ட தம்பியும்


மிகச் சிறிய வயதிலேயே மனதில் ஆழமாகச் சென்று பதிந்த இரண்டு நற்குணங்கள் தைரியமும் நேர்மையும். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், "பயப்படாதே", "பொய் சொல்லாதே". ஆனால், நானும் உங்கள் எல்லோரையும் போலவே, பயப்பட வேண்டியதற்குப் பயப்பட வேண்டும் என்றும் நல்லதுக்குப் பொய் சொல்லலாம் என்றும் பின்னர் படித்துக் கொண்டேன்.

"தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல; அதை வெல்வது" என்பார்கள்.
நம்மில் பெரும்பாலானவர்களின் தைரியம் பயம் இன்மையே என நினைக்கிறேன். சிந்தனையற்ற பயமின்மை நம்மை எதில் கொண்டு போய் விடும் என்பதை உணரத் தவறியதன் விளைவு அது. பால்யப் பருவத்தில் நம்மிடம் இருக்கும் தைரியம் அப்படிப் பட்ட ஒன்றே. பயப்பட வேண்டியதற்குப் பயப்படா விட்டால் என்ன நடக்கும் என்பது தெரியாததால் நாம் தைரியமாக இருக்கிறோம்.

நாமே அதை அனுபவிக்கும் வரை அல்லது வேறொருவர் தொடும்போது சுடுவதைப் பார்க்கும் வரை அல்லது இன்னொருவரிடம் இருந்து (பட்ட அல்லது பார்த்த ஒருவரிடமிருந்து) கேள்விப் படும் வரை தீ சுடும் என்பது நமக்குத் தெரிவதில்லை. ஒருவழியாகக் கடைசியில் நாம் எல்லோருமே அனுபவத்தால் சில விஷயங்களுக்குப் பயப்படப் பழகி விடுகிறோம் (எவ்வளவு பட்டாலும் பாடம் படிக்க மறுப்பவர்கள் இருக்கிறார்களே?' என்ற கேள்வி வருகிறதா? இப்போதைக்குக் கொஞ்ச நேரம் அந்த மாதிரி ஆட்களை ஒதுக்கி வைத்து விட்டு நம் உரையாடலைத் தொடர்வோம்!).

மற்ற பல நற்பண்புகளைப் போலவே தைரியமும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட ஒரு கருத்தாக்கம். பொது இடங்களில் அந்நியர்களோடு அடிபிடிச் சண்டையில் இறங்குவது அத்தகைய ஒரு தைரியமே. போதுமான முன் ஏற்பாடுகள் இல்லாமல் ஏதாவது முக்கியக் காரியத்தில் இறங்குவதும் அத்தகைய தைரியமே. வரப் போகும் சிக்கல்களை முறையாக முன் கூட்டியே அறியத் தவறுவதும் அத்தகைய தைரியத்தின் காரணமாகவே. ஒவ்வொரு சமூக விரோதியும் அத்தகைய தைரியத்தின் சொந்தக்காரனே. சிறைச்சாலைகளில் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே அத்தகைய தைரியத்தோடு வளர்க்கப் பட்டோரே.

தைரியம் என்பது ஒவ்வொரு முறையும் வெல்வது மட்டுமில்லை, சரியான ஆட்டங்களில் தோற்பதுவும் அதில் அடங்கும். அப்போதுதான் எதிரி சற்று இளைப்பாறுவான். பதுங்கும் புலிகள்தாம் இருக்கிறே விலங்குகளிலேயே தைரியமானவை. மாரத்தான் ஓட்டத்தில் ஆரம்பத்திலேயே அதிவேகம் பிடிக்க வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் முடிக்கிறபோது சக்தியே இல்லாமல் போய் விடும். இங்குதான் ஆமைகள் முயல்களை வென்று விடுகின்றன. முதல்ச் சுற்று ஆட்டம் ஒன்றில் தோற்பது அதற்குப் பின் வரும் நாக்-அவுட் ஆட்டம் ஒன்றை வெல்வதற்கான வியூகமாகவும் இருக்கலாம்.

அது போலவே, நம் சௌகர்ய வட்டத்துக்குள் இருக்கும் வரை முரட்டுத் தனம் (உடல் ரீதியான முரட்டுத் தனம் பற்றிச் சொல்ல வில்லை இங்கு; அதாவது, AGGRESSIVENESS! இவர்தான் தைரியத்தின் ஒன்னு விட்ட தம்பி!) பிரச்சனையில்லாததாக இருக்கும். தெரியாத இடங்களுக்கு வெளியில் வரும்போது அது பிரச்சனையாகி விடும். எல்லோரிடமும் சிந்தனையற்ற முரட்டுத் தனம் சரிப்பட்டு வராது - சிக்கல்களில்தான் கொண்டு விடும். அது போன்ற ஏகப் பட்ட சிக்கல்களில் சிக்கிச் சின்னாபின்னமான பின்பு, முரட்டுத் தனமான ஆட்களிடம் முரட்டுத் தனத்தைக் காட்டுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன். :)

பலசாலிகளிடம் அடங்கிப் போவது முதலில் சீரணிக்க முடியாததாகவே இருந்தது. ஆனாலும், அடங்கிப் போதல் மன நிம்மதியையும் உருப்படியான வேலைகள் செய்யக் கூடுதல் நேரத்தையும் கொடுத்தது என்பதை உணர்ந்து கொண்டேன். இரு சாராருக்குமே! அதன் பின் வளைந்து கொடுக்கும் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அடங்கிப் போதலுக்கு மரியாதையான பெயர்!

எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரியில் சேர்ந்த முதல் சனிக்கிழமை நான் மதிக்கும் பெரியவர் ஒருவர் சொன்னார், "நியாயத்துக்குப் போராடுவதெல்லாம் பெரும் நற்பண்புதான். ஆனால் அமைதியான வாழ்க்கை வேண்டும் என்றால், தேவைப்பட்ட இடங்களில் வளைந்து கொடுக்க வேண்டும் - எதிர் பார்ப்போருக்கு சலாம் போட வேண்டும்.". அந்த இளம் வயதில் அது மிகத் தெளிவாக என் மனதுக்குள் சென்றது. அந்த நிமிடத்தில் இருந்து என் சுபாவ மாற்றம் ஆரம்பமானது. அப்போதிருந்து, முரட்டுத் தனமா வளைந்து கொடுத்தலா என்பது பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஒவ்வொரு கருத்தும் நிகழ்வும் என்னை ஈர்த்தது. அது பற்றி விலாவாரியாக யோசிப்பதில் அளவிலாத நேரம் விரயமானது.

நிறைவாக, சிந்தனையில் என்னை விடப் பல மடங்கு தைரியமான எதிலும் பிடிப்பான ஆனால் செயல்பாட்டில் வளைந்து கொடுத்துப் போகிற நண்பர் ஒருவரைச் சந்தித்த போது, முழுமையாக அடங்கிப் போனேன். சரியென்று நினைப்பதற்கெல்லாம் நெஞ்சை விடைத்துக் கொண்டு நிற்பதை விட விட்டுக் கொடுத்துப் போவதில் கூடுதலாகச் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தேன். ஏனென்றால், சரியென்று எதற்கு எழுந்து நின்றாலும், அங்கொரு பாதிக்கப் பட்ட ஆள் இருக்கிறது - ஒவ்வொரு முறையும் அங்கோர் எதிரியைச் சம்பாதித்து விடுகிறோம். சில நேரங்களில் தவறான பக்கம் இருக்க நேர்வதும் மனித இயல்புதானே. நான் நினைப்பதே எல்லா நேரங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லையே.

எனவே, அற்ப விஷயங்களுக்காகவெல்லாம் ஓயாமல் எழுந்து நின்று எழுந்து நின்று, நம் பாதையெல்லாம் தடைகளை விதைக்கிற (கற்கள், முற்கள் மற்றும் சில நேரங்களில் கண்ணி வெடிகளும் உண்டு) எதிரிகளைத்தான் நிறைய உருவாக்கிக் கொள்கிறோம். பின் இறுதியில் சாதனை எங்கே சாதிக்க முடியும்? நம் ஆற்றலும் கவனமும் எங்கே செலவாகும்? குறிக்கோளை அடைவதிலா எதிரிகளைச் சமாளிப்பதிலும் அவர்கள் எறிந்த - புதைத்து வைத்த தடைகளைக் கண்டறிந்து நீக்குவதிலா?

இது வாழ்க்கையில் ஒருவிதத் தெளிவைக் கொண்டு வந்தது. சரியென்று நினைக்கிற எல்லாத்துக்காகவும் சண்டை போட்டுச் சண்டை போட்டு சக்தியை வீணடிக்காமல் முக்கியமான சில விஷயங்களுக்காக மட்டும் முழு ஆற்றலையும் செலவிட்டால் நல்லதென்று பட்டது. பெரும் குறிக்கோள்கள் எல்லாத்தையும் சாதிக்க வேண்டும் என்றால், சின்னச் சின்ன விஷயங்களில் சமரசம் செய்துதான் போக வேண்டும். வீடும் வாகனமும் போன்ற பெரிய வசதிகள் வேண்டும் என்றால், வார இறுதி ஷாப்பிங்கையும் பார்ட்டிகளையும் தவிர்க்க வேண்டும். சரிதானே?

கருத்துகள்

  1. //மற்ற பல நற்பண்புகளைப் போலவே தைரியமும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட ஒரு கருத்தாக்கம். //
    100% உண்மை.

    கடைசி பந்திகளில் கொஞ்சம் உடன்படாத ஃபீலிங்க். சொல்லத் தெரியவில்லை. வெள்ளையுமல்லாத கறுப்புமல்லாத க்ரே ஸ்கேலில் நீங்கள் ஒரு இடத்தில் இருக்கிறீர்கள். நான் ஒரு இடத்தில் இருக்கிறேன். இருவரும் க்ரே ஸ்கேலில் தான் இருக்கிறோம்.

    முட்டாள்தனமான தைரிய நடவடிக்கைகளுக்கு நான் எதிரி.

    வளைந்து கொடுப்பதை வயதாக வயதாக வரும் பக்குவம் என்று சிலர் சொல்லுவார்கள். அதைப் பங்குவம் என்ற டெட்டோல் போட்ட வார்த்தையால் சொல்லுவதை நான் ஏற்பதில்லை. மனப் பக்குவம் என்பதை விட மரத்துப் போன இதயம் என்று சொல்லுவேன். இளங்கன்று. இப்படித் தான் சொல்லிட்டு, நாளைகே மனப்பகுவம் என்று நானும் சொல்லத் தொடங்கலாம். ஹி ஹி. சரியான ஹிப்போக்கிரிட் இல்லே? கண்டுக்காதீங்க.

    பதிலளிநீக்கு
  2. நன்றி அனா. சரியாகச் சொன்னீர்கள். பதினைந்து வருடங்களுக்கு முன் (அப்போது எனக்கு வயது இருபது கூட இல்லை) வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபோது ஓர் உள்-உரையாடல். அவரும் இடது சாரியாக ஆரம்பித்து வலது சாரியாக மாறி அதிலும் மிதவாதியானவர் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்ட போது, அவர் ஏன் அப்படி மாறினார் என்று எனக்குள் கேட்டேன். "இருபத்தி ஐந்து வயதில் இடது சாரியாக இராதவனும் ஐம்பது வயதில் இடது சாரியாகத் தொடர்பவனும் தவறான ஆள்" என்கிற மாதிரி இராஜாஜி ஏதோ சொன்னதாகவும் அதன்படி வயதால் பக்குவப் பட்ட வாஜ்பாயும் மாறிவிட்டார் என்றும் என் இன்னொரு மனம் பதில் சொன்னது. அதெப்படி பக்குவமாகும்? மழுங்கி விட்டதென்றே சொல்ல வேண்டும் என்று என் நாட்குறிப்பில் முடிவுரை எழுதினேன். அதைத்தான் இன்று நீங்களும் சொல்கிறீர்கள். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்