பிடிவாதங்கள்... பிடிக்காவாதங்கள்...
மண் வாசனை மிக்க
பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்
மனம் கிறுக்குப் பிடித்தது போல
ஏடாகூடமாக
ஆடத் துடிக்கிறது
சின்ன வயதில் கேட்ட
கொட்டுச் சத்தம்
ஒயிலாட்டக் காரர்களின் காற்சலங்கையொலி
நாட்டுப்புறப் பாடகர்களின் முரட்டுக் குரல்
இவையெல்லாமே
இப்போதும்
மனதுக்குள் புழுதியைக் கிளப்பி
அருள் வரச் செய்கின்றன
எப்போதாவது
இரவு நேரப் பயணங்களில்
ஊதக் காற்றில்
காதைப் பொத்திக் கொண்டு
பாதியாகக் கேட்க நேரிடும்
பழைய பாடல்கள்
பைத்தியம் பிடிக்க வைக்கின்றன
ஆனாலும்
"பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை" என்ற
பழைய பாடலின் வருத்த வரி
எங்கோ இடிக்கிறது
பழமை
எப்போதுமே பெருமைதான்
அதுவும் ஒருநாள்
புதுமையாய் இருந்ததாலும்
புதுமைக்கு முன்பே
புழக்கத்துக்கு வந்ததாலும்
அதுவும்
ஒருவித நன்றிக்கடனே
ஆனால்
அதுவே சிலநேரம்
அடிமைத்தனமோ?!
என்றொரு குழப்பம்
எப்போதுமெனக்கு
எனவே
பழமை மட்டுமே
பெருமை என்று பேசும்
பிடிவாதங்கள் மட்டும்
எப்போதுமே எனக்குப்
பிடிக்காவாதங்களாகவே இருக்கின்றன!
புதுமைக்கு மட்டுமே
கொடிப்பிடிக்கும்
கொடுமையைப் போலவே...
Thanks For Ur Post
பதிலளிநீக்குWebsite Design Chennai
நல்வரவு நண்பரே!
பதிலளிநீக்கு