முதலமைச்சர்கள் - யார் சிறந்தவர்?

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் யார்?

சிறந்த பத்து, சிறந்த ஐந்து, நல்லவை, அல்லவை பற்றிய பட்டியல்கள் பற்றிப் பேசுவது எப்போதுமே சுவாரசியம்தான். நாம் நீதி(!) வேண்டிப் போய் ஒப்பிட்டுப் பேசினால் அப்படியெல்லாம் பேசப்படாது என்று சொல்லும் பணியிடங்களில் கூட மதிப்பீடுகள் ஒப்பிட்டுத்தான் செய்யப் படுகின்றன. ஆய்வை எளிதாக்குவது மட்டுமின்றி, எது ஒருவரைச் சிறந்தவராகவும் இன்னொருவரை விளங்காதவராகவும் ஆக்குகிறது என்பதை அறியவும் அது பயன்படுகிறது. சில பண்புகளை வைத்து ஒருவரைச் சிறந்தவர் அல்லது விளங்காதவர் என்று அடையாளம் காணும்போது, அவர்களை அப்படியாக்கிய பண்புகள் எவை என்பன பற்றி மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளவும் அது வாய்ப்பளிக்கிறது. அதே பொறுப்பில் இருக்கும் ஒருவரால் செய்ய முடிந்த ஒரு வேலையை இன்னொருவர் செய்ய முடியவில்லை என்று காரணங்கள் (உண்மையில் அவை காரணங்கள் அல்ல; நொண்டிச் சாக்குகள்) சொல்லும்போது அவர்கள் வாயை அடைப்பதற்கும் அது பயன்படும். எடுத்துக்காட்டாக, ஒரு கொள்ளைக்காரப் போக்கிரியை நாம் விமர்சிக்கும்போது யாராவது வந்து "அரசியல்வாதியாக இருந்து கொண்டு ஊழல் பண்ணாமல் இருப்பதா? அதெல்லாம் முடியாதப்பா! நடைமுறைக்கு ஒத்து வருகிற மாதிரி ஏதாவது பேசு!" என்போரிடம், இது போன்ற ஆய்வை வைத்துக் கொண்டு, ஊழல்ப் பேர்வழியாக இல்லாமலேயே நல்லாட்சி கொடுக்கும் ஒருவரைக் காட்டி "இப்ப என்ன சொல்றப்பு?" என்று கேட்க முடியும்.

இந்தக் கேள்வி மனதில் வந்ததும் டக்கென வந்த சில பெயர்கள் - நரேந்திர மோதி, நிதிஷ் குமார், ஒமர் அப்துல்லா மற்றும் ஷீலா தீக்சித். நம்ம ஊரில் யாரும் இல்லையா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட எவர் பெயரையும் இங்கே சொல்வதற்கு நான் மனநிலை சரியில்லாதவனாக இருக்க வேண்டும். விளங்காதவர்களின் பட்டியல் ஒன்று போட்டால், மாயாவதி மற்றும் பல போக்கிரிகளோடு சேர்த்து அவர்களையும் பெருமையாகச் சேர்த்துக் கொள்ள முடியும். அவருடைய காலத்தில் இந்தியாவின் தலை சிறந்த முதல்வராகக் கருதப்பட்ட காமராஜருக்குப் பின், தமிழகத்தை ஆள வந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மிகக் கேவலமான ஆளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

அந்தக் கேள்வியோடு கூகுளில் போய்த் தேடியபோது, கிட்டத்தட்ட எல்லோருமே சொல்லும் பெயர் நரேந்திர மோதி. அந்த வரிசையில் அடுத்து வருவோர் நிதிஷ் குமார் மற்றும் ஷீலா தீக்சித். நெடுங்காலமாக ஒருவித மரியாதையோடு பார்த்து வருவதால் என் மனதுக்கு ஒமர் அப்துல்லாவும் வருகிறார். அரசியலுக்கு மிக அடிப்படையான தேவையான பொது வாழ்க்கை நேர்மையை மட்டும் வைத்துப் பட்டியல் தயாரித்தால், சொல்லவே வேண்டியதில்லை, பொதுவுடைமைத் தலைவர்கள் புத்ததேப் பட்டாச்சார்ஜீயும் அச்சுதானந்தனும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து விடுவார்கள். அது மட்டுமே எல்லாம் இல்லை. அவர்கள் தத்தம் மாநிலங்களுக்கு பெரிய அளவில் வேறு எதுவுமே செய்து விட வில்லை. மற்ற மாநிலங்களில் அதே பதவியில் இருக்கும் ஊழல்ப் பேர்வழிகள் செய்த அளவுக்குக் கூட அவர்கள் எதுவும் செய்யவில்லை. அது அவர்கள் குற்றமில்லை. யாராவது என் கூற்று தவறென்று நிரூபிக்க முடிந்தால் சொல்லுங்கள் - அதுவரை சனநாயகத்தில் பொதுவுடைமை அரசுகள் தோற்று விட்டன என்றே சொல்வேன். அதே வேளையில், பொதுவுடைமையாளர்கள் கொஞ்ச காலம் முன்பு வரை இருந்தது போல அவ்வளவு ஒன்றும் நேர்மையாக இல்லை என்றும் பேச்சுகள் வருகின்றன. பக்கத்து மாநிலங்களில் இருக்கும் அவர்களின் ஒன்னு விட்ட சகோதரர்கள் போல கேரளத்தில் இருக்கும் பொதுவுடைமை அமைச்சர்களும் கூட இப்போதெல்லாம் திட்டங்களில் பங்கு கேட்பதைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள்.

ஒருபுறம் சமூகத்தின் ஒரு பிரிவினரால் இதுவரை வரலாற்றில் எவருமே வெறுக்கப்படாத அளவுக்கு வெறுக்கப்படும் அரசியல்வாதியாக இருக்கும் ஒருவரை எல்லோருமே இவர்தான் இந்த நாட்டின் சிறந்த முதல்வர் என்கிறார்கள் என்றால், ஏதோ அவரிடம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய விமர்சகர்களுக்குக் கொடுக்கப் படும் நியாயமான வாய்ப்பில் அவரைப் பற்றி நமக்குக் கிடைப்பது இதுதான் - "ஆங்கிலம் பேசும் - இணையத்தில் வலம் வரும் - மேல்த்தட்டு மனிதர்களுக்கு பிரிவினைவாத இந்துத்துவம் என்கிற சிந்தனையின் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கிறது; எனவே, முஸ்லிம்களின் எதிரியான ஒருவரை அவர்கள் பெரிதாக மதிப்பது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்க வில்லை.". ஆனால், சிறிது காலம் முன்பு, மோதியைப் பற்றி விரிவாக எழுதியிருந்த ஒரு இடுகையில் சொன்னது போல, சமீப காலங்களில் குஜராத்தில் உள்ள முஸ்லிம்களையும் கூட அவர் ஈர்க்க ஆரம்பித்து விட்டார் என்று கதைகள் வருகின்றன, இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களையும் அப்படி ஈர்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் காலமாகலாம். அவரது ஆட்சியில் மதக் கலவரங்களில் இழக்கப் பட்ட உயிர்களைப் பற்றிய சிந்தனையை மறப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், அவருடைய நிர்வாகத் திறமையையும் - கொள்ளைக் குற்றச்சாட்டுகளும் ஊழல்க் கதைகளும் மலிந்து விட்ட ஒரு நாட்டில் அவர் கொடுக்கும் ஊழலற்ற ஆட்சியையும் மட்டும் கணக்கில் இட்டுப் பார்த்தால் அவர் கண்டிப்பாக முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவார் என நினைக்கிறேன். அவரை வெறுப்போரும் கூட அவர் மீது ஊழல்க் குற்றச்சாட்டுகள் வைப்பதில்லை அல்லது அவருடைய அரசை மோசமான அரசாங்கம் என்று விமர்சிப்பதில்லை. இங்கே சிலர் வண்ணத் தொலைக்காட்சியைக் காட்டி தமிழக மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருந்த அதே காலத்தில் அது குஜராத்தில் எடுபட வில்லை. அத்தகைய வாக்குறுதிகளை அள்ளி வீசிய பின்னும் மோதி என்கிற ஒரே காரணியால் காங்கிரஸ் மண்ணைக் கவ்வ வைக்கப் பட்டது. ஏனென்றால், உண்மையிலேயே நல்ல அரசாங்கம் என்பது என்ன என்று அவருடைய மக்களுக்கு அவர் காட்டி விட்டார். இது போன்ற ஆட்சியைத்  தொடர்ந்து கொடுக்க முடியுமானால் - இன்னொரு கோத்ரா அல்லது கோத்ராவுக்குப் பிந்தைய கலவரம் நடக்க விடாமல் பார்த்துக் கொள்ள முடியுமானால் - அவருடைய பதவிக்கு அவர் வாழ்நாள் முழுவதும் எந்த அபாயமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

என்னுடைய அபிப்பிராயத்தில், இரண்டு விஷயங்களில் மோதியை விட நிதிஷ் குமார் சிறப்பாகச் செயல் படுகிறார். அந்த இரண்டு விஷயங்கள் எவை? ஒன்று, மோதிக்கிருக்கும் மதவாதக் கறை இவருக்கில்லை. இவர் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறார். சாதி, மதம் அல்லது  மொழியை அடிப்படையாக வைத்து எந்தப் பிரிவின் மீதும் இவருக்கு எந்த வித வெறுப்புணர்வும் இல்லை. அடுத்தது, அவருக்கு முந்தையவரிடம் இருந்து மோதி கைக்கு வந்த மாநிலம் பல துறைகளிலும் சிறப்பாகச் செயல் பட்டு ஏற்கனவே நல்ல நிலையில் இருந்தது. ஆனால், நிதிஷ் கைக்கு வந்த போது அவருடைய பீகார் காடு போல இருந்தது. அரசாங்கம் என்ற ஒன்றே அங்கு இருக்கவில்லை. மொத்த மாநிலமும் சட்ட மீறல்களின் சரணாலயமாக இருந்தது. முதலில் - முதல் முறை வந்தபோது, அவருடைய மக்களை நாகரிகப் படுத்தி விட்டு அடுத்துத்தான் ஆட்சி பற்றியே யோசிக்க முடிந்தது அவரால். இப்போது பீகார் வளர்ச்சிப் பாதையில் மிகச் சரியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. குஜராத் போல முழுமையாக ஊழல்  அற்று இருக்கிறது என்று சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதில்லை. குஜராத் 60-இல் இருந்து 90-க்கு வந்தது என்றால், பீகார் 0-விலிருந்து 40-க்கு வர வேண்டியிருந்தது அல்லது முதலில் -90 இலிருந்து 0-க்கு வந்து விட்டு பின்னர் 0-விலிருந்து 40-க்கு வர வேண்டியிருந்தது. எனவே, அந்த வகையில் நிதிஷ் முதலில் வருவார் என நினைக்கிறேன். ஆனால், நான் கேள்விப்பட்டது என்னவென்றால், முதலில் நினைத்த அளவுக்கு வேகமாக அவராலேயே அவருக்குக் கீழே இருக்கும் ஊழல்ப் பேர்வழிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை - அரசு அலுவலகங்களைச் சுத்தப் படுத்த முடியவில்லை. இந்த முறை மிகப் பெரிய மாற்றம் காட்ட முடியா விட்டால் இவர் அடுத்த தேர்தலில் சிக்கலுக்கு உள்ளாகலாம். 

ஷீலா தீக்சித் பற்றி அதிகம் கேள்விப் பட்டதில்லை. ஆனால், எந்தக் கருத்துக் கணிப்பிலும், முதலில் வரும் சிலரில் இவரும் இருக்கிறார். மூன்று முறை தொடர்ந்து வென்றது தவிர என்ன சாதித்திருக்கிறார் என்று அறிய முயன்றபோது கிடைத்த தகவல்கள் இதோ. அவர் எப்போதுமே வளர்ச்சிப் பணிகள் சார்ந்தவராக இருந்திருக்கிறார். காமன் வெல்த் குழப்படியில் பங்கு பெற்ற மற்ற அனைவருமே ஊழல்ப் பேர்வழிகள் என்றபோதும் நாட்டின் மானத்தையே கப்பலேற்றி விட்டார்கள் என்றபோதும் இவர் மீது கை சுத்தமானவர் என்ற பெயர் இருக்கிறது. அவருடைய நிர்வாகம் நாட்டிலேயே சிறந்த ஒன்று. இன்னமும் இவரை எனக்கு மிகச் சிறந்தவராக எண்ண முடியவில்லை. காரணம், அவர் நிர்வகிக்கும் பகுதி மிகச் சிறியது, அதற்கென்று இருக்கும் சவால்கள் இருக்கும் என்றபோதும். எல்லாவிதமான வேறுபட்ட நிலப் பரப்புகளும் கொண்ட குழப்பம் மிக்க பெரிய மாநிலங்களை ஆள்வதை விட இது போன்ற ஒரு பெரிய மாநகரை ஆள்வது எளிது. ஏனென்றால், மாநகரங்களில் ஒருவிதக் குடிமைப் பண்பு இருக்கும். ஆனால், பட்டிக்காட்டு சனங்களுக்கோ அவர்கள் அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர் பார்ப்பதென்று கூடத் தெரியாது. அரசாள்கையும் சரி, மேலாண்மையும் சரி, உங்களிடம் இருந்து என்ன எதிர் பார்க்கப் படுகிறது என்று தெரிந்து அதற்கு வேண்டிய வளங்களும் உங்களிடம் இருந்து விட்டால் அதைச் செய்வது எளிது. டெல்லி போன்ற மாநகரங்களில் அவை இரண்டுமே இருக்கின்றன. ஆனால், அளவில் பெரிதான குழப்பங்கள் நிறைந்த பெரிய மாநிலங்களை நிர்வகிக்கும் போது, தெளிவான எதிர் பார்ப்புகளும் இருப்பதில்லை - தேவையான வளங்களும் இருப்பதில்லை. அங்கே, வண்ணத் தொலைக்காட்சி கொடுப்பதுதான் அரசாங்கங்களின் கடமை என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒமர் அப்துல்லா மிகப் பெரிதாக வளரப் போகிற அடுத்த தலைமுறைத் தலைவர் என்றும் இந்த நாட்டைச் செதுக்குவதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறவர் என்றும் நினைத்தேன் கொஞ்ச காலம் முன்பு வரை. துரதிர்ஷ்டவசமாக, அவருடைய இப்போதைய பொறுப்பில் அவர் பெரிதாக வெற்றி பெற வில்லை. மாநில அரசியலுக்கு ஏற்றவர் இல்லையோ என நினைக்கிறேன். அவருடைய ஆளுமைக்கு அது ஒத்து வரவில்லை. சண்டைக் காலத்தை விட அமைதிக் காலத்தில் சிறப்பாகச் செயல் பட முடிந்தவர் என நினைக்கிறேன். எப்போதுமே முடிவுகள் மட்டுமே ஒருவரின் திறமையை எடை போடப் பயன் படுத்தும் காரணியாக இருக்கக் கூடாது. எதிர் பாராத வகையில் பாதையையே மாற்றுகிற மாதிரியான மற்ற பல காரணிகளும் இருக்கின்றன. அவர் தன் கருத்துக்களை வெளிப்படுத்திய விதம் கண்டு வியந்திருக்கிறேன்; அதனால் அவர் எனக்குப் பிடித்தது. அவர் புத்திசாலி என நினைத்தேன். ஆனால், அது மட்டும் போதாதென்றும் இப்போது புரிந்து கொண்டு விட்டேன். மக்கள் தலைவராக இருக்க வேண்டும். அதற்கு மக்களோடு மக்களாக அளவிலாத நேரம் செலவிட வேண்டும். அதை அவர் செய்ய வில்லை என்றுதான் தெரிகிறது. உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், ஒருவேளை, லாலு போன்ற ஒரு பித்தலாட்டப் பேர்வழி கூட அந்த இடத்தில் இதை விடச் சிறந்த பணி செய்திருக்க முடியுமோ எனத் தோன்றுகிறது. பின்னாளில் இதை விடப் பெரிய பதவிகள் வகிக்க விரும்புவாரானால், இப்போதைய பொறுப்பின் தேவைகளை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொண்டு அதற்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் மூன்றாவதோ நான்காவதோ என்று சொல்ல மாட்டேன். ஆனால், அந்த இடத்தைப் பிடிக்கத் தேவையான திறமைகள் கொண்டவர் என்று சொல்லலாம். 

பெங்களூர்க் காரனாக இருந்து கொண்டு, அதற்காக - அவர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இருக்கும் ஒரே காரணத்துக்காக - எங்கள் முதல்வரே எல்லாத்திலும் முதல்வர் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும், அவர் எப்படிச் செயல் படுகிறார் என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா? எடி எனப்படும் எங்கள் எடியூரப்பா ஆரம்பத்தில் மிகவும் நம்பிக்கை கொடுக்கும் மாதிரியாகச் செயல் பட்டார். ஆனால், இப்போது சுத்தப் புட்ட கேசாகி விட்டார். எல்லாத்தையும் மீறி நல்லவராக இருக்கும் மன வலு இல்லாதவர் என்று நினைக்கிறேன். மிக மென்மையாகச் சொல்ல வேண்டுமானால், நாட்டுக்கு ஏற்ற அரசியல்வாதியாக மாறி விட்டார் அல்லது நாடு தன்னை நாசமாக்க இடம் கொடுத்து விட்டார். பா.ஜ.க.வில் அவருக்குப் பின் கட்சியை நடந்த சரியான ஆள் - கவர்ச்சியான தலைவர் இல்லை (அவரிடமே அது இல்லை என்பது வேறு கதை). இப்போது, கர்நாடகம் ஒருவித தலைமை நெருக்கடியில் இருக்கிறது என்று சொல்லலாம் (தமிழ்நாட்டை விட மோசம் இல்லை என்ற போதும்). காங்கிரஸ் கட்சியின் கோணத்தில் பார்த்தால், தலை கீழாக மாற்ற முடியாது என்றாலும், இன்னும் கொஞ்சம் பரவாயில்லாமல் ஆக்க விரும்பினால், கிருஷ்ணா மாநில அரசியலுக்கு வரவேண்டும். கவுடா குடும்பம்... மன்னிக்கவும் - உரையாடல்களின் போது கூடச் சில பெயர்களைப் பயன் படுத்துவது பிடிக்காது எனக்கு.

கருத்துகள்

 1. வணக்கம் பாரதி,50 வருடங்களாக பெங்களூரில் வசிக்கும் தமிழன் நான்.நிதிசை போல பட்நாயக்கும் ஒரு நல்ல முதல்வர்தான்.பொதுவாக புத்திசாலிகள் உள்ள கட்சி என்று பிஜேபி க்கு பெயர்,ஆனால் நம்ம முதல்வர் மாதிரி ஒரு மாங்காவை கர்நாடகம் எப்போதும் கண்டதில்லை.இன்னும் கொஞ்ச நாள் கிருஷ்ணா இருந்திருந்தால் கொஞ்ச நஞ்ச பெங்களூரையும் mnc களுக்கு வித்து போட்டிருப்பாரு,அந்த ஆளு காப்பித்தூளு விக்கத்தான் லாயக்கு.

  பதிலளிநீக்கு
 2. Nice review..
  Thanks for letting me know about the top chief ministers of our country...

  பதிலளிநீக்கு
 3. @விஜயன்- வணக்கம் ஐயா. இதில் விடுபட்ட முக்கியமான இருவர் - பட்நாயக் மற்றும் சிவராஜ் சிங் சவுகான். தமிழ்நாட்டில் சிதம்பரம் மற்றும் கர்நாடகத்தில் கிருஷ்ணா மீது எனக்கு நிறைய மரியாதை இருந்தது. சமீப காலங்களில் சிதம்பரம் மீது அதைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது. கிருஷ்ணாவையும் அது போலவே வெறுப்பவர்கள் நிறைய இருப்பதை அறிந்து ஆச்சர்யம் அடைகிறேன். சமீபத்தில் கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் இருந்த ஆட்களில் அவர் பரவாயில்லை என நினைத்தேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஒன்று உறுதி - வெளியுறவுத் துறையில் வீண் போய் விட்டார். அது முதல் வருடத்திலேயே புரிந்து விட்டது. நல்லச் சொன்னிங்க - "காப்பித் தூளு விக்கத்தான் லாயக்கு"! :)

  பதிலளிநீக்கு
 4. மோடியைப் பற்றி தவறான செய்திகளை நமது ஊடகங்கள் பரப்பி வருகின்றன என சிலர் சொல்கிறார்கள். இதை மறுக்கவும் முடியவில்லை. காரணம், நமது ஆங்கிய செய்தி சேனல்கள் ஓனர்கள் யார் என்று பார்த்தால் எல்லாம் கிறிஸ்தவ மிஷனரிகள், அல்லது அவர்களோடு தொடர்புடையவர்கள். அவர்கள் திட்டமிட்டு அவர் மேல் பலி போடுகிறார்கள். மோடிக்கு, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் ஓட்டு விழுவது அவர் முஸ்லீம்களுக்கு எதிரி அல்ல என்பதையே. து சரி வரலாற்றிலே கேவலம்மான முதலமைச்சர் யார் என்று பாருங்களேன், அந்த ஆள் மஞ்சள் துண்டு போட்டிருப்பார்.

  பதிலளிநீக்கு
 5. மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே. உண்மை. அவரை வில்லானாக்குவதில் ஒரு வேகம் இருப்பது தெரிகிறது. அதேவேளையில், அவரும் இதற்கெல்லாம் இடம் கொடாத அளவு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மோதியைப் பற்றி முன்பே ஒரு விரிவான இடுகை இட்டிருந்தேன். முடிந்தால் படியுங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தையும் அதில் உள்ளடக்கி இருக்கிறேன். மானா தூனா பற்றி நீங்கள் சொன்னதும் உண்மை. தமிழக வரலாற்றில் அவர்தான் தலை சிறந்தவர் என்று கண்டிப்பாகச் சொல்லலாம். இந்திய வரலாற்றில் தலை சிறந்த சிலரில் வருவார்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்