பெருந்தலைகள் முட்டும் தொகுதிகள்!

இந்தத் தேர்தலில் பெருந்தலைகள் முட்டும் தொகுதிகள் என்று பார்த்தால் கொளத்தூர், விழுப்புரம், ரிசிவந்தியம், மடத்துக்குளம், பேராவூரணி, திருப்பத்தூர், இராமநாதபுரம், தென்காசி ஆகிய எட்டுத் தொகுதிகளைச் சொல்லலாம்.

இதில் முதன்மையானது கொளத்தூர். மொத்தத் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியும் வென்று கொளத்தூரில் அதன் வேட்பாளரும் வென்றால் உடனடியாகவோ அல்லது சில மாதங்கள் கழித்தோ முதல்வராகப் போகிறவரும் மொத்தத் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும் வென்று கொளத்தூரில் அதன் வேட்பாளரும் வென்றால் சிறிது காலம் (!) அமைச்சராகப் போகிறவரும் நேருக்கு நேர் மோதும் தொகுதி. சைதை துரைசாமி அமைச்சராகப் போகிறவர் என்பது மட்டுமில்லை. தமிழகத்தில் திருட்டுப் பயகள்தான் அரசியலில் இருக்க முடியும் என்று ஆகிவிட்ட ஒரு காலகட்டத்தில் அரசியலில் இருந்து கொண்டே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மாதிரியான சேவை ஒன்றைச் செய்து கொண்டிருப்பவர். கட்சியில் அ.தி.மு.க. என்றாலும் சிந்தனையில் இடதுசாரி என்கிறார்கள்.

மேயராக இருந்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல நிர்வாகி என்று பெயர் எடுத்தவர் இன்றைய துணை முதல்வர். அதிலெல்லாம் ஏமாறக்கூடிய ஆளில்லை நான். அவரே ஒரு பேட்டியில் சொன்னது என்னவென்றால் "நானும் கொஞ்சம் தடாலடியான ஆள்தான் ஆரம்பத்தில். குறிஞ்சி மலர் தொலைக்காட்சித் தொடரில் நடித்த பின்பு, மக்கள் அதில் நான் நடித்த அரவிந்தன் கதாபாத்திரத்தை அதிகம் விரும்பியதன் காரணம் புரிந்து அது போலவே மெனக்கெட்டு என்னை நிதானமான ஆளாக மாற்றிக் கொண்டேன்". இதை நன்றாகப் புரிய முயன்றால் கிடைக்கும் பொருள் - "எது மக்களை ஏமாற்ற எளிதான குணாதிசயம் என்பதைச் சரியாகப் புரிந்து அப்படியே நடிக்கப் பழகிவிட்டேன்" என்பதே. இவர் மட்டுமல்ல. தன் சொந்தத் திறமையை மட்டும் நம்பி இறங்கினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சரியாகப் புரிந்து எந்தத் துறையிலும் (அரசியல், சினிமா என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை; எல்லாத் துறையிலுமே!) பின்புலத்தைப் பயன்படுத்தி - பின் வாசல் வழியாக நுழைகிற எல்லோருமே செய்வதுதான். இதுதான் இங்கே எடுபடும் என்று புரிந்து விட்டால் அதன்படி இருந்து விட்டுப் போவது ஒன்றும் பெரிய மேதாவித் தனம் இல்லை. இவருடைய அப்பாவை விட இவர் நல்லாட்சி கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவே (வாய்ப்பு கிடைக்க வேண்டும்) நானும் நம்புகிறேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எப்படியும் இந்தத் தமிழ்த்  திருநாட்டின் முதலமைச்சர் ஆகி விட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஏதோவொரு மாவட்டத்தில் - நகரத்தில் ஏதோவொரு விழாவில் கலந்து கொள்கிறார். பாராட்டப் பட வேண்டியதே. ஆனால் அப்படி நடக்கிற எல்லா விழாக்களிலும் - எல்லா ஊரிலும் நான் பார்த்த ஒரு பெரும் கொடுமை - கோடிக்கணக்கான மக்கள் பணத்தில் அருவருக்கத் தக்க வகையில் செய்யப் படும் ஆடம்பரங்கள். இவர் உண்மையிலேயே நல்லவராக இருந்திருந்தால் அதைத் தடுத்திருக்க வேண்டும். தந்தையைப் போலவே என்ன விலை கொடுத்தாவது விளம்பரம் பெற வேண்டும் என்கிற வேட்கை இருப்பது போலத் தெரிகிறது. அது நல்லதில்லை.

இன்றைக்கு சைதை துரைசாமி காசு வாங்காமல் உருவாக்கியிருக்கிற சாதனையாளர்களின் எண்ணிக்கை சாதாரணமானதல்ல. இப்படி ஒரு நல்லவர் ஏன் இந்தக் கட்சியில் இருக்கிறார் என்று நினைத்து நினைத்து எனக்கு வேதனையாக இருக்கிறது. மனித நேயம் என்றொரு நிறுவனம் வைத்திருப்பவர் ஏன் இந்த மனித நேயமற்ற இயக்கத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறாரோ?! எது கையிலோ சிக்கி என்னவோ ஆன எது போலவோ இவருடைய வாழ்க்கை ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம்முடைய இப்போதைய கவலை. சைதையார் போன்ற நல்லவர் ஒருவர் இங்கே வென்றால் அது மக்களாட்சியின் வெற்றி என்றே செல்வேன். அதனால் கொளத்தூரில் எனது வாக்கு சைதைக்கே. இதைப் படித்து விட்டு முட்டிக் கொண்டு கோபம் வரும் என் நண்பர்கள் இதற்கு எப்படி நியாயம் சொல்லப்போகிறார்கள் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.

அடுத்து நான் முக்கியமாக நினைப்பது தென்காசி. அமைச்சர் ஆகியிருக்க வேண்டிய கருப்பசாமி பாண்டியன் எனும் கானாவும் முதலில் ரஜினி மாதிரி ஆக நினைத்து அது முடியாமல் போய் இப்போது விஜயகாந்தின் வளர்ச்சியைப் பார்த்து இது மாதிரிக் கூட ஆக முடியவில்லையே என்று வேதனையில் துடிக்கும் சரத் குமாரும் மோதும் தொகுதி. 

ஆரம்ப காலத்திலிருந்தே சரத் குமாரின் அரசியல் எனக்குப் பிடிக்காது. ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக இறங்கியபோது இவரை வைத்து விளையாட்டுக் காட்ட நினைத்தார் ஜெ. மொத்தத் தமிழகமும் ஜெ மீது கொலை வெறி கொண்டிருந்த போது உலக வரலாற்றிலேயே இப்படியொரு தலைவியைக் கண்டதில்லை என்று எல்லோரையும் கடுப்பேற்றியவர், தனக்கொரு தலைவலி என்றவுடன் தான் பேசிய எல்லாமே தவறு என்று சொல்லிக் கொண்டு வந்து நம்மை நம்பச் சொன்னார். அதன் பின்பு அவர் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை. மத்திய அமைச்சர் ஆக ஆசைப் பட்டவரை 'இவர் வளர்ந்தால் இயக்கத்துக்குப் பிரச்சனை' என்று கருதி மூனா கானா கழற்றி விட்டதும் இந்தப் பக்கம் வந்து பேசிய பேச்சு கொஞ்சமில்லை. காமராஜருக்குப் பிறகு நம் இனத்தில் தோன்றிய மிகப் பெரிய தலைவன் நான்தான் என்று ஊர் ஊராகப் போய்க் காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்.

கானா பற்றி எனக்கு சமீப காலம் வரை அதிகம் தெரியாது. பல தி.மு.க. புள்ளிகளைப் போல இவரும் ஓர் உள்ளூர் அடாவடிப் பேர்வழி என்றுதான் நினைத்தேன். அவரைச் சுற்றியிருக்கும் கூட்டம் பெரிய அடிதடிக் கூட்டமாம். ஆனால் அவர் மிகவும் மென்மையானவராம். தொகுதிக்கு அளவிலாமல் செய்திருக்கிறாராம். தேவர் இனத்தில் பிறந்து தென் தமிழகத்தில் உள்ள நாடார் அதிகம் உள்ள ஒரு தொகுதியில் அவர்களுடைய ஆதரவிலேயே வெல்வதென்பது விளையாட்டல்ல. தென் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தால் உங்களுக்கு இது நன்றாகப் புரியும். ஆனால், இந்த முறை சரத் வந்து அவருடைய ஆதரவைக் கொஞ்சம் குறைத்து விட்டார் என்று சொல்கிறார்கள். கானாவுக்கு உதவியவர்களை எல்லாம் நேரில் சந்தித்துப் பேசி உறவு கொண்டாடி விட்டாராம். அதையும் மீறி நிறையப் பணக்காரர்கள் கானா பக்கம் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். தேர்தல் முடிவுதான் சொல்ல முடியும் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை. சென்ற முறை இவரை ஏன் தமிழினத் தலைவர் அமைச்சராக்க வில்லை என்று எல்லோருக்குமே புரியவில்லை. பின்னர் கிடைத்த தகவல் - தலைமைக்கு அதிகமாக இவர் சிங்கி அடிப்பதில்லையாம். ஆனால், இந்த முறை ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது மிக நேர்மையாக ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார் - "என் தொகுதியில் கூட நான் இவ்வளவு செய்ததில்லை. அந்த அளவுக்குக் கானா செய்திருக்கிறார்" என்று. எனவே, இந்த முறை தென்காசியில் என் வாக்கு கானாவுக்குத்தான். தொகுதிக்கு நல்லது செய்வோர் ஊக்குவிக்கப் பட வேண்டும் என்பதாலும் இது போன்ற வெற்றிகள் புற்று நோய் போல எம்மக்களைக் கொன்று கொண்டிருக்கும் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டும் என்பதாலும். ஆனால் இது போன்ற நாகரிக அரசியல் நிறைய நடைபெற வேண்டுமென்றால் எல்லோரும் தென்காசி முதலாளிகள் போலவே பெருந்தன்மை கொண்டோராக இருக்க வேண்டும். தேவர் தொகுதிகளில் நல்ல நாடாரும் வெல்ல வேண்டும். அதெல்லாம் எப்போது நடக்குமோ தெரியவில்லை.

அடுத்து ரிசிவந்தியம். விஜயகாந்த் நிற்கிறார் என்பதால் அல்ல. அவரை எதிர்த்து நிற்கும் சிவராஜ் நான்கு முறை அதே தொகுதியில் வென்றவர். ஒருவேளை (அழுத்தி அடிக்கிறேன் - ஒருவேளை) தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், இவர் அமைச்சராகக் கூட ஆகலாம். ஈழத்தமிழரின் இனப்படுகொலைக்குக் காரணமான கட்சியில் இருப்பவர் என்றாலும், அரசியல் ஆதாயங்களுக்காகக் கூட ஈழப் பிரச்சனையைக் கையில் எடுக்காதவரை (எடுத்திருந்தால் அள்ளியிருக்கலாம் ஆதரவை) எதிர்த்து நிற்பவர். காலங்காலமாக ஈழத்தமிழருக்கு நண்பன் போலக் காட்டிக்கொண்டவர்கள் அவர்களுக்கு உதவாதது தவறா அல்லது அவர்களைப் பிடிக்காதென்று சொல்பவர்கள் அவர்களை அழித்தது தவறா என்பது உங்கள் சுய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது அவருடைய படங்களை வெறித்தனமாகப் பார்ப்போரை விட எனக்கு அதிக மகிழ்ச்சி. அவருடைய படங்களைப் பார்த்தால் குறைந்த பட்சம் அடுத்த ஒரு மாசத்துக்காவது என்னால் இயல்பு நிலையில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு மீது எனக்கொரு வெறுப்பு உண்டு. ஆனால் அவர் நடிகர் சங்கத் தலைவராக நடந்து கொண்ட விதம் - அரசியலில் நுழையும் முன் அவர் எடுத்து வைத்த அடிகள் - கட்சி ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் அவர் நடந்து கொண்ட விதம் - இவையெல்லாமே என்னை அவருடைய அரசியல் ரசிகனாக்கின. அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்பது கூட நான் சில வருடங்களுக்கு முன்பே ஆசைப்பட்டது. அவர் தரம் தாழ்ந்து பேசுகிறார் என்று கண்ணாடிப்பிரியர்கள் பேசும் போது கூட தரம் தாழ்ந்த அரசியலைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதுதான் நன்றாக இருக்கிறது என்றுதான் கூறுகிறேன். சரிதானே?! அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற பலருக்கு வராத தைரியம் இவருக்கு இயல்பாகவே வந்தது. அதுதான் இப்போதைய தேவையும் கூட. அதற்கொரு காரணம் பெரும்பாலும் இயல்பு நிலையில் இல்லாமலே இருப்பதாகக் கூட இருக்கலாம்.

ஆனால், கடந்த ஒரு வருடமாக இவருடைய நடத்தை சிறிதும் பிடிக்க வில்லை. வளர்ச்சியை நிர்வகிக்கத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. அளவுக்கு மிஞ்சிய போதை. இரவில் குடித்து விட்டுக் குத்தாட்டம் போட்டால் யாரும் கவலைப் படப் போவதில்லை. நாள் முழுக்க சுயநினைவே இல்லாத ஒருவருக்கு நாட்டைக் கொடுக்க வேண்டுமென்றால் சிறிது சிரமம்தான். கூட்டணிப் பேச்சு வார்த்தையின் போது இவர் தைரிய லட்சுமியைப் படுத்திய பாடு கூட எனக்கு நிரம்ப நிரம்பப் பிடித்தது. திமிரைத் திமிர் கொண்டு அடக்கும் கதைகள் எல்லாமே எனக்கு அம்புட்டுப் பிடிக்கும். அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மை வராமல் இவரை நம்பி ஆட்சி அமைத்தால் அடுத்த ஐந்து வருடங்கள் நான் தினம் தினம் சந்தோசத்தில் குதிப்பேன். திருவாளர் சோ அவர்களின் தரகில் வாஜ்பாய் அரசில் சேர்ந்து, சேர்த்து விட்டவருக்கே வலிக்கும் அளவுக்கு வாஜ்பாய் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவருக்கு, அப்போதுதான் இப்படித்தானே மற்றவர்களுக்கு வலித்திருக்கும் என்பது புரியும். ஆனாலும் கேப்டன் போக்கு சரிப்பட்டு வராது போல்த் தெரிகிறது. அதற்கு ஒரே வழி - அவருக்கு ஒரு சிறிய தோல்வியைக் கொடுத்து அதன் வலியை உணர வைத்தால் வீட்டில் போய் உட்கார்ந்து ஒரு நாளாவது யோசிப்பார். அப்படி யோசித்தால் அவருடைய எதிர் காலத்துக்கும் நம்முடைய எதிர் காலத்துக்கும் நல்லதாக இருக்கும். எனவே, ரிசிவந்தியத்தில் எனது வாக்கு வேறு யாரோ ஒரு சுயேட்சைக்கே.

அடுத்து திருப்பத்தூர். இரு முன்னாள் அமைச்சர்கள் நிற்கும் இடம். இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த உறவினர்கள். அது அவர்களுடைய மக்களுக்கு நிரம்ப வருத்தமாம். இருவருமே சட்டமன்றம் செல்ல முடியாதே என்று. எப்படிப் போகுது பாருங்கள் நம் அரசியல். ஒருவர் பார்க்க ரவுடி மாதிரி இருந்தாலும் அடாவடித்தனம் அதிகம் செய்யாத தி.மு.க. அமைச்சர் பெரியகருப்பன். அதற்காக நேர்மையின் சிகரம் - தங்கத்தின் தங்கம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. 

இன்னொருவர் சென்ற முறை சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் மாமேதை சிதம்பரத்துக்கு எதிராக நின்று உண்மையில் வென்றவர் என்று நிறையப் பேரால் சொல்லப்படும் ராஜகண்ணப்பன். பெயர் மாற்றமே பெரும்பாலான நேரங்களில் எனக்குப் பெரிதாகப் பிடிப்பதில்லை. அதை ஆரம்ப காலத்தில் செய்து விட்டால் கூடப் பரவாயில்லை. பாதிக் கிணறு தாண்டியபின் பண்ணுவது சுத்தமாகப் பிடிப்பதில்லை. சரி, அதை விடுங்கள் வெட்டி விஷயம். ஒரு முக்கியமான விஷயம் - இவருக்கும் நடிகை சுகன்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வில்லை என்பதையும் இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவர் பெரியகருப்பனுக்குத் தலைகீழ். பார்க்க நிரம்ப நாகரிமாகத் தெரியும். ஆனால் பண்ணும் அரசியல் அவ்வளவு நாகரிகமில்லை. 96-இல் வீட்டுக்கு அனுப்பப் பட்ட கொள்ளைக் கூட்டத்தின் முக்கியத் தளபதி. வழக்குகளிலிருந்து தப்புவதற்காக இவரைப் போன்ற பல அ.தி.மு.க.காரர்கள் செய்த அதே வேலையை இவரும் செய்தார். தி.மு.க.வில் இணைந்து திராவிடப் பாரம்பரியத்தின் இழந்த மானத்தை மீட்டெடுக்கக் கஞ்சி குடிக்காமல் உழைத்தவர், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும் திரும்ப சேலை துவைக்க வந்தார். இந்த முறை திருப்பத்தூரில் என் வாக்கு இவருக்கில்லை.

அடுத்து முக்கியமாக இராமநாதபுரத்தைச் சொல்ல வேண்டும். ஒருவர் "ஆமாம். நான் இராஜபக்சேவுக்கு நண்பன்தான். என்ன செய்வீர்கள்?" என்று கேட்கும் இராஜபக்சேயின்  உறவுக் கட்சிக்காரர். அவர் பெயர் ஹசன் அலி. அவருடைய கட்சிப் பெயர் காங்கிரஸ். இரத்தின வியாபாரி. இரத்த வியாபாரியின் நண்பர். பெரும் கோடீஸ்வரர். காசால் எதையும் சாதிக்க முடியும் அல்லவா? எனவே, சென்ற முறை வென்று சட்ட மன்றம் சென்று விட்டார். இந்த முறை விடக் கூடாது. இராஜபக்சேயின் எதிரிகள் போக முடியாத சபைக்குள் அவனுடைய நண்பர்களையும் போக விடாமல் செய்வதுதானே தமிழினத்தின் கடமை. இன்னொருவர் ஜவாஹிருல்லாஹ். பேராசிரியர் பணியை விட்டுப் பொது வாழ்வில் நுழைந்திருக்கும் பண்பாளர். இரத்தின வியாபாரியும் அல்லர்; இரத்த வியாபாரியும் அல்லர்; இரத்த தானம் முதலான பல அரிய சேவைகளைச் செய்ய வைப்பவர் தன் இயக்கத்தை. இங்கே கண்டிப்பாக என் வாக்கு இவருக்கே.

விழுப்புரத்தில் இரு பெரும் தலைகள் மோதுகின்றன. தி.மு.க. சார்பில் அதன் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவரான பொன்முடி போட்டியிடுகிறார். அந்தக் கட்சியிலேயே அதிகம் படித்த அமைச்சரும் கூட. சின்ன வயதில் இருந்தே எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். பார்த்தால் நாகரிகமாக இருப்பார். நல்லவரென்று நினைத்தேன். கொஞ்ச காலம் முன்புதான் வடிவேல் காமெடி பார்த்துவிட்டு இவருடைய படத்தையும் பார்த்த போது நினைத்தேன் - "இருட்ல யோக்கியனுக்கு என்ன வேலை?". சமீப காலங்களில் கேள்விப் பட்ட கதைகள் அதை உறுதி செய்கின்றன. இப்போது நானும் உறுதியாகி விட்டேன் - படித்தலும் பார்ப்பதற்கு அழகாக இருத்தலும் மட்டும் போதாது எங்கள் மண்ணை மாற்ற! இன்னொருவர் அ.தி.மு.க. காலத்தில் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம். அவரைப் பற்றி அதிகம் தெரியாது. எனவே, இங்கும் என் வாக்கு சுயேட்சைக்கே.

மடத்துக்குளம் மற்றோர் 'அமைச்சர்கள் மோதும் தொகுதி'.சாமிநாதன் மற்றும் சண்முகவேலு - இருவரில் எவர் வரினும் பெரிதாக மாற்றமில்லை. சாமிநாதன் பொன்முடி போல பார்ப்பதற்கு மட்டுமே நாகரிகமாக இருக்கும் பேர்வழி என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். சண்முகவேலு ஒன்றும் நீண்ட காலமாக அமைச்சராக இருந்தவர் இல்லை. இவரும் மற்ற பல ரத்தத்தின் ரத்தங்கள் போல மிகக் குறுகிய காலம் செல்வியின் அமைச்சரவையில் இருந்தவர். சண்முகவேலு கொஞ்சம் குறைவாகக் கொள்ளை அடிப்பார் என்று அப்பகுதி நண்பர் ஒருவர் சொல்கிறார். இருவருமே வரமுடியாமல் போனாலும் அதை விட மகிழ்ச்சியே. எனவே, இங்கும் என் வாக்கு சுயேட்சைக்கே.

பேராவூரணியை இந்தப் பட்டியலில் இணைத்திருக்க வேண்டியதில்லை. என் மன திருப்திக்காகச் சேர்த்துக் கொள்கிறேன். ராகுல் காந்தியின் நம்பிக்கையை வென்ற இளைஞர் காங்கிரஸ் இளைஞர் ஒருவர் (மகேந்திரன்), விஜயகாந்தின் நம்பிக்கையை வென்ற இன்னொரு சினிமாக்காரர் அருண் பாண்டியனை எதிர்த்துப் போட்டி இடுகிறார். அருண் பாண்டியன் சினிமாவின் கவர்ச்சியைத் தவிர வேறென்ன கொண்டு வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை சட்டசபையில் சண்டை போடச் சரியான ஆள் என்று கொண்டு வந்திருக்கிறாரா கேப்டன்?! எனவே பெரிதாகப் பேசப்படும் மகேந்திரனை ஆதரிக்கலாம் என நினைத்தால் அவருடைய கட்சி நம் இன எதிரியாக இருக்கிறது. எனவே, இங்கும் சுயேட்சைக்கே.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்