நல்ல வேளை... ஹசாரேவிடம் தோற்றோம்!

நம் எல்லோருக்குமே அன்னா ஹசாரேவின் இயக்கம் போல ஒன்று வேண்டும் என்ற ஆசை இருந்தது. நாமே அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் ஒருவருக்கும் இல்லை என்றபோதும் நம் எல்லோருக்குமே ஏதாவது நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நம் ஒருவருக்குமே என்ன செய்வதென்று தெரியாத போது அவர் ஒரு வழி கண்டு பிடித்தார். மனம் இருந்தது. எனவே, மார்க்கமும் இருந்தது. இந்த எண்ணம், தெலுங்கானாப் புகழ் - பிரிவினை அரசியல்வாதி சந்திரசேகர் ராவிடமிருந்து அவருக்கு வந்ததோ என்று கூடத் தோன்றியது. எந்த ஒற்றுமையும் இல்லாத இந்த இரு மனிதர்களையும் ஒப்பிடுவதன் மூலம் நான் ஒரு மாபாவம் செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அதற்காக மன்னிக்கவும்.

ஒட்டு மொத்த நடுத்தர வர்க்க இந்தியாவும் அதன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் (ஆம், இது திரு. ஹசாரே அவர்களின் வெற்றி மட்டுமல்ல; வெறுப்பில் இருக்கும் ஒட்டு மொத்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் வெற்றி), பல அரசியல்வாதிகளும் மற்றோரும் இந்த காந்தியவாதியின் அணுகுமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சில விபரமான ஆசாமிகள் இப்போதே அவருக்கும் அவருடைய குழுவைச் சார்ந்தோருக்கும் எதிராக அவர்களுடைய பெயரைக் கெடுக்கும் விதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் - ஊழல் அற்ற இந்தியா அமைவதை நோக்கி நடைபெறும் முன்னேற்றங்களை எப்படியாவது தடுப்பதற்காக; அதுதான் அவர்களின் பிழைப்பிலேயே கை வைத்து விடுமே. அவர்கள் இது போன்ற கேவலமான வேலைகளில் இறங்குவது இது முதல் முறையல்ல. தமக்கெதிரான அபாயங்களை எதிர் கொள்வதில் - அவற்றைச் சுக்கு நூறாக்குவதில் அவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்கள் வாழ்நாளிலேயே சந்தித்த மிகப் பெரும் அபாயம் இதுவாகத்தான் இருக்கும். அப்படியிருக்கையில், சும்மா இருப்பார்களா?!

நம் காலத்து நாகரிகமான முதலமைச்சர்களில் ஒருவரான ஒமர் அப்துல்லாவில் ஆரம்பித்து சனநாயகத்தில் தனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிற ஒவ்வொருவரும் ஹசாரேவின் அணுகுமுறை பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். அவை எல்லாமே நியாயமான கேள்விகள். அவர்கள் கேள்விகள் சரியா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், அவர்களின் நோக்கத்தைச் சந்தேகிக்கிறேன். உண்மையிலேயே நாட்டைப் பற்றிக் கவலைப் படுவோராக இருந்தால் இதை அவர்கள் எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்? நான் ஒரு கை சுத்தமான - எந்த உள்நோக்கமும் இல்லாத அரசியல்வாதியாக இருந்திருந்தால், அரசியல் சார்பற்ற ஒரு தனி மனிதராக இருந்து கொண்டு அவர் செய்திருக்கும் செயலுக்காக முதலில் திரு. ஹசாரே அவர்களைப் பாராட்டி விட்டு அதன் பின்பு அவர் அணுகுமுறையில் உள்ள கோளாறுகள் பற்றிப் பின்பொரு முறை பேசியிருப்பேன்.

அது அவ்வளவு அடக்க முடியாமல் துளைத்தெடுத்தால் - பிறிதொரு நேரத்தில் பேசிக் கொள்ளலாம் எனத் தள்ளி வைக்க முடியாதென்றால் - அப்போதும் திரு. ஹசாரே அவர்களைப் பாராட்டி விட்டு அதன் பின்பு இது ஏன் ஒரு நல்ல முன்னுதாரணம் அல்ல என்றும் மற்றவர்கள் ஏன் அவர்களுடைய எல்லாப் பிரச்சனைக்கும் இந்த அணுகுமுறையைக் கையில் எடுக்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பேன். ஏன் சந்திரசேகர் ராவ்களும் (அவருடைய கோரிக்கை சரியென்று வைத்துக் கொண்டாலும் கூட) ஹசாரேக்களும் ஒன்றில்லை என்பதை விளக்குவதில் பல நாட்களைச் செலவிட்டிருப்பேன். ஏனென்றால், அரசியல்வாதிகளுக்குத்தான் தாம் செய்வதை விளக்குவதற்கும் நியாயப் படுத்துவதற்கும் ஏகப் பட்ட நேரம் இருக்கிறதே.

என்னதான் சொன்னாலும், பல உண்மையான உள்ளம் கொண்டோரும் இதே கேள்விகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர்களுக்காக, திறந்த மனதோடு அவர்களுடைய கேள்விகளை அணுகுவோம்; உரையாடலுக்குச் செல்வோம். சரி. இப்போது... அவர்களுடைய மிகப் பெரிய கேள்வி என்ன?

இது சனநாயகத்துக்கு எதிரானது. வருங்காலத்தில் எல்லோரும் இது போல அரசாங்கத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது? சுயநலக் காரணங்களுக்காகவும் , தேச விரோத மற்றும் சனநாயக விரோதக் கோரிக்கைகளுக்காகவும் கூட!

இதற்கு நம் போன்ற சாமானியர்களின் பதில் - "அதைப் பற்றியெல்லாம் எனக்கென்ன கவலை!".

"சனநாயகம்தான் சிறந்த அமைப்பா அல்லது அதை விடச் சிறந்தது ஏதாவது எங்காவது இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு வேண்டியதெல்லாம் சுத்தமான ஓர் அமைப்பு. அது ஒரு சனநாயகமற்ற அமைப்பில் அல்லது அணுகுமுறையில்தான் கிடைக்கும் என்றால் அதுவே எனக்கு சனநாயகத்தை விட அதிகம் பிடிக்கும். எதையுமே கண் மூடித் தனமாக ஆதரிக்க எனக்கு எந்தக் காரணமும் இல்லை. இது என்னுடைய கண்டுபிடிப்போ என் தாத்தாவின் கண்டுபிடிப்போ அல்ல. சில முப்பாட்டன்களின் பிற்பேரன்களைப் போல் எனக்கொரு நேரடிப் பயன்பாடும் இல்லை அதனால். அது சனநாயகம்தான் வேண்டும் என்று கொடிப் பிடிப்பவர்களின் தலைவலி - எல்லாத்தையும் இழந்தாகிலும் (கோடானு கோடி மக்களின் வாழ்க்கையையும் கூட) அதைக் காக்க வேண்டும் என்று எண்ணுபவர்களின் தலைவலி. என் பிரச்சனைகளுக்குத் தீர்வு தர முடியும் என்றால் அது புரட்சி மூலம் நடந்தாலும் சரிதான். இவ்வளவு பெரிய மக்கள் தொகையும் இத்தனை வேறுபட்ட சிக்கல்களும் நிறைந்த இது போன்ற நாட்டில் புரட்சி என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அது பற்றியெல்லாம் கனவு கண்டால், அதை எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து செத்த நம் பொதுவுடைமைத் தாத்தாக்கள் போலவே நானும் அதைப் பார்க்காமலே செத்துப் போவேன் என்பது உறுதி.".

இருந்தாலும், அது என்னுடைய வேலை இல்லை என்றாலும் (இந்த நேரத்தில், தான் கூடுதலாகச் செய்யும் ஒவ்வொரு அற்பமான வேலையையும் சொல்லிக் காட்டுவதற்காகவே சொல்லிக் காட்டும் விபரமான அலுவலக நண்பரின் மூஞ்சிசைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்!), இது போன்ற முக்கியத்துவமற்ற பிரச்சனைகளில் தன் மூளையை வீணடிக்க விரும்பாத சனநாயகப் பைத்தியம் பிடித்த நம் அரசியல்வாதி நண்பர்களுக்காக கூடுதலாக ஒரு மைல் சென்று உதவத் தயார் நான். :)

இவைதான் இப்போதைக்கு நம் அரசாங்கங்களிடம் இருக்கும் ஆப்ஷன்கள்:
1. தவறான கோரிக்கைகளுக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் சாக விட்டு விடலாம். அடுத்த தேர்தலில் மக்களின் ஆதரவை இழந்து விடும் அபாயம் இருக்கிறது இதில். ஆனால், அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும், மக்களின் ஆதரவை இழக்கலாம். இந்தக் குழப்பம்தான் தெலுங்கானாவில் காங்கிரசைக் கொன்று கொண்டு இருக்கிறது. ஆனால், நம் தலைவர்கள் உணர வேண்டியது என்னவென்றால், ஆட்சி செய்வது என்பது வெறும் விளையாட்டல்ல. அவர்கள் அங்கு இருப்பதே நம் சிக்கலான பெரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவே. ஒரு தனியார் நிறுவனத்தில் சாதாரண பொறுப்பில் இருக்கும் மேலாளர் கூட பெரும் பெரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது. அதை ஏன் வானளாவிய அதிகாரம் படைத்த - மித மிஞ்சிய மரியாதைகளைப் பெறுகிற இந்தப் பெரிய மனிதர்களும் செய்யக் கூடாது?

2. இப்படியொரு சட்டம் ஏற்கனவே இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால், வருங்காலத்தில் இது போன்ற உண்ணாவிரதங்களே இருக்கக் கூடாது என்று புதியோதொரு சட்டம் கொண்டு வரலாம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போர் எல்லோரையும் சிறைச் சாலைக்கு அனுப்பி வலுக்காட்டயமாக சாகிற அளவுக்கு அவர்கள் வாயில் சாப்பாட்டைத் திணிக்கலாம். இதையெல்லாம் நேரடியாக 24X7 செய்திச் சேனல்களில் பார்த்து விட்டு இனி ஒரு மனிதர் இந்தக் காரியத்தைச் செய்யத் துணிய மாட்டார். ஆனால், இதுவும் அரசாங்கத்தின் பெயரைக் கெடுத்து விடும், ஹசாரே போன்றவர்கள் அவர் செய்தது போல மக்கள் ஆதரவு கொண்ட கோரிக்கைகளுக்காகச் செய்யும்போது.

3. மூன்றாவது ஆப்ஷன் இரண்டும் கலந்த மாதிரியானது - சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வியூகம். இங்கே அரசாங்கம் தன் புத்தியைப் பயன்படுத்த வேண்டும் (அதைத்தான் அவர்கள் அளவுக்கு மிஞ்சிச் செய்வார்களே). எது நியாயமானதோ - எது எளிதில் தீப்பிடிப்பது போல மக்கள் ஆதரவைப் பெற்று விடுமோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; மற்றவை கண்டு கொள்ளப் படக் கூடாது. மக்கள் ஆதரவு மட்டும் உள்ள ஆனால் நியாயமற்ற கோரிக்கையாக இருந்தால், அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் - ஏற்றுக் கொள்ளாதது போலவும் காட்டிக் கொள்ளாமல், ஓய்வு பெற்ற நீதிபதிகள் நாலு பேரை அழைத்து, ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்து, கோரிக்கையோ அதை வைப்பவரோ சாகும் முன்பு அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லலாம். கிட்டத்தட்ட இதைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.

4. நான்காவது ஆப்ஷன்தான் எல்லாத்திலும் எளிதானதாகப் படுகிறது. அரசாங்கங்களும் பெரும் பதவிகளில் இருப்போரும் இன்னும் கொஞ்சம் நாகரிகமாகவும் பொறுப்போடும் நடந்து கொண்டால், அவர்களுடைய மக்களுக்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கக் காரணமே கிடைக்காது. இதைத்தான் நம் இந்தியத் தலைவர்களிடமும் நான் எதிர் பார்க்கிறேன். அவர்களால் முடியாது என்றால், என்ன நடக்கும் தெரியுமா? வெறுப்புற்ற இளைஞர்கள் ஒவ்வொன்றாகக் காட்டுக்குள் போய், கையில் ஆயுதம் எடுப்பார்கள். அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் இருக்கும் நகரங்களுக்குள் வருவார்கள். அடுத்து எல்லோரும் சேர்ந்து சட்டத்தைக் கையில் எடுப்பார்கள். அது மெதுவாகப் பெரு நிறுவனங்களிலும் பரவும். அடுத்து நாட்டையே கைப்பற்றி விடுவார்கள். அடுத்து என்ன நடக்கும்? சனநாயகத்தை உயிரோடு காக்க நினைத்தவர்களே உயிரோடு இருக்க மாட்டார்கள். அவர்கள் சனநாயகமும் இராது!

தெலுங்கானாவை ஏற்றுக் கொள்வதோ இல்லை என்பதோ ஒரு மாநில ஆட்சியைத் தான் விலை கொடுக்க வேண்டியிருந்திருக்கும் காங்கிரசுக்கு. ஹசாரேவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிரா விட்டால், 200% உறுதியாகச் சொல்வேன், இன்றோ நாளையோ மத்திய அரசையே விலை கொடுக்க வேண்டியிருந்திருக்கும். எனவே, எப்போதும் போலவே, காங்கிரஸ் அதன் ஆட்டத்தைச் சிறப்பாகவே ஆடியுள்ளது. வெல்ல முயன்றால் பெரியதொரு தோல்வி காத்திருக்கிறது என்பதை உணர்ந்து, விரும்பியே தோற்றுக் கொண்டார்கள் இந்த முறை. இடையில் நிறையக் கால அவகாசம் உள்ளது. இப்போதைக்குத் தோற்பது போல் தோற்று விட்டு அடுத்து கிரகங்கள் சாதகமாக ஆகும்போது வேலையைக் காட்டிக் கொள்ளலாம்.

கருத்துகள்

  1. Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

    http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

    Thank you.

    Anamika

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்