ஆஸ்கார் நாயகனின் அம்'மனம்'!

கமலின் ரசிகன் என்று சொல்ல முடியாது. எப்போதுமே யாருக்குமே ரசிகனாக இருக்க விரும்பியதில்லை. ஆனால், நீண்ட காலமாகத் தமிழ்ச் சினிமாவில் அதிகம் மதித்த ஆள் கமல். நடிப்புக்காக மட்டுமல்ல... அவருடைய பேச்சுக்காகவும் அறிவாற்றலுக்காகவும் ஒட்டு மொத்தத் திறமைக்காகவும்! சில மாதங்களுக்கு முன் கமல் பேசிய ஒரு பேச்சு பற்றி இன்று கேள்விப் பட்ட போது காறித் துப்பலாம் போல உணர்ந்தேன். சிறந்த கலைஞர்கள் பெரும்பாலும் திறந்த கலைஞர்களாகவே இருப்பது நம் சாபக் கேடா? 'திறந்த' என்றால் 'மனம் திறந்த' என்று அதைப் பெருமைப் படுத்தி விட வேண்டாம். மனதின் அசிங்கத்தை மறைக்கத் தெரியாத அசிங்கம் அது.

"எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் விட்டுச் சென்ற சிம்மாசனம் இன்னும் காலியாகவே உள்ளது. அதை தேவிஸ்ரீ பிரசாத் தான் நிரப்ப வேண்டும்!" என்று சொல்லியிருக்கிறார். இப்படியொரு கருத்தைச் சொல்வதன் உள்நோக்கம் என்னவென்று இதைப் படிக்கும் எவருக்கும் மிக எளிதாகவே புரிந்து விடும். ரஹ்மான் என்ற கலைஞனை அவமானப் படுத்த முனைந்த அரைவேக்காட்டுத்தனம்தான் அது. அது எதற்காக? ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியபோதே என் தம்பி சொன்னான் - "இனியும் கமலஹாசன் ஆஸ்கர் நாயகன் என்று கூச்சமில்லாமல் போட்டுக் கொள்ள முடியுமா வாழ்க்கையில்..." என்று. அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. பதிலை வைத்துக் கொண்டு கேள்விக்காக அலைந்தேன். இப்போது கிடைத்து விட்டது. இப்போது புரிகிறதா? எதற்காக ரஹ்மான் மீது இப்படியொரு கோபம் என்று. இதில் கொடுமை என்னவென்றால், இதற்கு எவருமே சரியான பதிலடி கொடுக்க முன்வர வில்லை. இதையும் தமிழ்நாடு ஆதரிப்பதாக யாரும் விளக்கம் கொடுக்காதவரை நல்லது.

இது ஓர் ஈனப் பிறவி என்று பலர் சொன்னபோது ஏற்றுக் கொள்ள வில்லை. பகுத்தறிவு பிழைப்புக்குப் போடும் இன்னொரு வேடம் என்று எத்தனையோ பேர் சொன்ன போது நம்பவில்லை. தேவர் மகனும் சண்டியர் என்ற விருமாண்டியும் எடுக்க முயன்ற போது அதன் பின்னணியில் இருந்த கேவலமான அரசியல் பற்றிப் பலர் பேசிய போது முழுமையாய் ஒத்துக் கொள்ள வில்லை. இன்றிரவு என் கருத்துக்கள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். உன்னால் முடியாததை இன்னொருவன் செய்த போது வந்த பொறாமை இயல்பானது. அதை இவ்வளவு கேவலமாக வெளிப்படுத்திய ஒரு பிறவிக்கு இனிமேலும் புத்திசாலிப் பட்டத்தை மட்டும் என்னால் கொடுக்க முடியாது. மன்னிக்கவும் உலக நாயகா! உன் புத்தி அளவுக்கு உலகம் இன்னும் சுருங்க வில்லை.

குமுதம் இதழில் இந்தச் சர்ச்சைக்கு முடிவுரை எப்படிக் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? "'தியாகராஜ பாகவதரும் சிவாஜி கணேசனும் விட்டுச் சென்ற சிம்மாசனம் இன்னும் காலியாக உள்ளது. அதை சிம்புதான் வந்து நிரப்ப வேண்டும்!' என்று யாராவது சொன்னால் கமலுக்கு எப்படி இருக்கும்?!". அருமை... அருமை... 'க'வுக்குக் 'கு'வே பரவாயில்லை.

இந்த மகா நடிகன் எழுதிய கவிதை ஒன்று சொல்கிறது... சிங்கம் செத்தபின் ஈக்கள் அதைத் திங்குமாம்; ஆனால் சிங்கம் மட்டும் உயிரோடு இருக்கும் போது எப்போதுமே ஈக்களைத் தின்னாதாம். இதில் யார் சிங்கம்? யார் ஈ? ரஹ்மான் யாரையும் திங்கவில்லை. நீதான் எது எதையோ தின்று கொண்டிருக்கிறாய். ரஹ்மான் வேண்டுமானால் மான் என்று சொல்லலாம். அதை அடித்துத் தின்னப் பார்க்கும் பிழைப்புவாத 'மிருகம்' தன்னைச் சிங்கம் என்று எண்ணிக் கொண்டு திரிந்தால் அது யார் குற்றம்?

பின்குறிப்பு: திரைப்படத்துறை பற்றி எழுத நேர்ந்த முதல் இடுகை இப்படி ஆனதில் (அதுவும் நான் அதிகம் மதித்த ஒரு கலைஞன் பற்றி!) கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், விதியை யார் வெல்ல முடியும்? ஆர்வம் அதிகமில்லாத ஒரு துறை பற்றி ஒருவரை எழுத வைக்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி, அவருடைய மனதைப் பாதிக்கும் விதமாக அந்தத் துறையில் ஒன்று நடப்பதுதான்.

அது சரி, 'அம்மணம்' கேள்விப் பட்டிருக்கிறேன். அதென்ன 'அம்மனம்' என்கிறீர்களா? அம்மணமான மனத்துக்குச் சுருக்கம்! பொறாமையை ஆடை போடாமல் அப்படியே வெளிப்படுத்தும் மனம் 'அம்மனம்'தானே.

கருத்துகள்

  1. இசையில் இளையராஜா பாணி என்பது வேறு. ரஹ்மானின் பாணி என்பது வேறு. இளையராஜா இடத்தை தேவிஸ்ரீ பிரசாத் நிரப்ப வேண்டும் வேறு ஒருவர் நிரப்ப வேண்டும் என்று கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை.

    ரஹ்மான் இளையராஜாவை எல்லாம் தாண்டி உலக அளவில் பிரபலமாகி உள்ளார். எனவே அவர் இடம் என்பது கிரிக்கெட்டில் சச்சினின் இடம் போன்றது. எனவே அவரை இளையராஜாவோடு ஒப்பிட வேண்டாம்.

    மற்றபடி ஆஸ்கார் என்பது எப்பொழுதோ கமலுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆஸ்கார் பெறாததால் கமல் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. உலக அளவில் பரிசு பெற்ற சிவாஜிக்கு கூட தேசிய விருது கிடைக்கவில்லை.

    எனவே விருதை வைத்து ஒரு கலைஞனை எடை போட வேண்டாம். கமல் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு ஜீனியஸ்.

    பதிலளிநீக்கு
  2. என் இடத்தை பிடிக்க இன்னும் ஒருவன் பிறக்கவே இல்லை..அவன் எட்டி பார்த்தால்கூட நான் ஓய்வு பெற்ருவிடுவேன் என்று சொன்ன கலைஞந்தான் இவர்.நானும் ரஜினியும் படிக்காதவர்கள் எங்களை அரசியலுக்கு கூப்பிடாதீர்கள் என எதிரிக்கு ஒரு கண் போக வேண்டும் என்ற மனிதாபிமானத்துக்கும் சொந்தக்காரர்..

    பதிலளிநீக்கு
  3. ஆஸ்கார் பெற்று தந்த தமிழ்னை பொறாமையால் அவமானப்படுத்தும் ஆஸ்காருக்காக ஏங்கும் நாயகன்..இப்படி சொன்னதில் வியப்பேதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி சிவலிங்கம் அவர்களே. உங்கள் கருத்து புரிகிறது. ஆனால், அந்த அளவு பெருந்தன்மை அவரிடம் இருந்ததா என்பதுதான் தெரியவில்லை. மற்றபடி, கமலின் திறமையில் கோளாறு சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  5. வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்குமார் அவர்களே. நீங்கள் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். துரதிர்ஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  6. அதெப்படி கமலை இவ்வளவு முட்டாளாக நினைக்கிறீர்க்ள். ஆஸ்க்கார் தரம் பற்றி அரியாதவரா கமல்.ரஹ்மான் திற‌மையில் குறைசொல்வதர்க்கில்லை.ஆனால் அதைவிட அருமையாக சில தமிழ் பட‌ங்களுக்கு இசை அமைத்துளாரே , அதெற்க்கெல்லாம் ஆஸ்க்கார் கொடுக்கவில்லயே.ஒரு ஆங்கில படத்துக்குதானே கொடுத்தார்கள்.ரஹ்மான் இயங்கும் தளம் வேறு,கமல் இயங்கும் தளம் வேறு.இதெல்லாம் நமக்கே தெரியும்போது கமலுக்கு தெரியாமல் இருக்குமா ? ஆஸ்க்கார் என் நோக்கம் இல்லை என்றும்,தமிழ் படங்களில் நடிப்பதே தனது விருப்பம் என்றும், ஆஸ்க்கார் கொடுக்கும் முறை பற்றியும் கமல் பல முறை பேசியுள்ளாரே!அதையெல்லாம் ஏன் எல்லோரும் மறந்துவிட்டார்கள் ? கமல் புத்திசாலி . ரஹ்மானை பார்த்து பொறாமைபடுவார் என்று நான் நினைக்கவில்லை. வேரு தமிழ் நடிகன் ஒரு தமிழ் படத்துக்கு ,வாங்கினால் நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு.

    பதிலளிநீக்கு
  7. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே. கமலை நான் முட்டாளாக நினைக்க வில்லை. அவருடைய அதீத புத்திசாலித் தனத்தைப் பல முறை வியந்திருக்கிறேன். ஆனால், கெட்டெண்ணங்கள் எல்லோருக்கும் வருவதுண்டு. அவரும் மனிதப் பிறவியாக இருப்பதால் அது அவருக்கும் வரத்தான் செய்யும். இந்த விஷயத்தில் அதை அசிங்கமாக வெளிப்படுத்தி விட்டார் என்றுதான் படுகிறது. அப்படி இல்லையென்றால் அப்படியொரு கருத்தைச் சொல்வதற்கான அவசியமே இல்லை அல்லவா? கமல் சொன்னதற்காக அந்தக் கருத்தில் நியாயம் இருக்கிறதா என்று கஷ்டப் பட்டுத் தேட வேண்டியதில்லை என நினைக்கிறேன். நீங்கள் அவர் அப்படி நினைக்கக் கூடிய ஆளே இல்லை என்று கருதுபவராக இருந்தால் அதைப் பொய்யென்று நிரூபிக்கவும் என்னால் முடியாது. இது ஒரு மாற்றுக் கருத்து. அவ்வளவே. :)

    பதிலளிநீக்கு
  8. kamalahasan oru nermal illatha nadigan allathu athiga naal ematra therintha nadigan. OK. anyway, He is exposed atleast now, that is good for this tamil nationality.

    பதிலளிநீக்கு
  9. அண்ணே... நீங்களும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா? நன்றி! நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. கமலின் கருத்தில் தவறில்லை.

    கமல் எ.ஆர். ரகுமான், இசையை பற்றி உங்கள் எண்ணமும் கருத்தும் சிறுபிள்ளைதனமாய் உள்ளது.

    இளையராஜாவின் இடம் காலியாக இருக்கிறது என்பது சத்தியம். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு இசை பாணி இருந்தது. எ.ஆர். ரகுமான் வந்த பிறகு இந்தியா முழுவதும் ஒரே இசை. அதுவும் மேற்கத்திய இசை.

    எ.ஆர். ரகுமானுக்கு ஆஸ்கார் வழங்கப்பட்டது எதற்கு?
    இந்தியர்களை கேவலமாக சித்தரிக்க பட்டதை பார்த்து குஷி ஆகி கொடுக்கபட்டது. அந்த விருது திறமைக்கு கொடுக்க பட்டதல்ல..

    கொடுகபடாததால் கமல் தகுதி அற்றவர் அல்ல..

    சிவாஜிக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை..
    தனுஷ் வாங்கிவிட்டார்..

    இளையராஜாவின் இடத்தை தொட்டு பார்க்க கூட எ.ஆர் ரகுமானால் முடியாது..

    பதிலளிநீக்கு
  11. எழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது.

    இந்த ஒற்றை வரிகாகவே உங்கள் ப்ளாக் படிப்பவன் நான்..

    இவ்வளவு தரம் தாழ்த பதிவை எதிர் பார்க்கவில்லை

    பதிலளிநீக்கு
  12. பிரகாஷ் அவர்களே, வணக்கம். மித மிஞ்சிய வேலை காரணமாக உடனடியாகப் பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

    "கமல் கருத்தில் தவறில்லை" என்ற உங்கள் கருத்தில் தவறில்லை. எதுவரை என்றால், அந்த இடம் காலியாக இருக்கிறது என்று சொல்லும் வரை பரவாயில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்ப இன்னார்தான் சரியானவர் என்று அவர் தேர்ந்தெடுத்த ஆளும் அப்படியான பொது மேடையும் பேசிய காலச் சூழலும் எனக்கு சரியாகப் படவில்லை. அதுவும் சரிதான் என்று நீங்கள் எண்ணினால் பரவாயில்லை. வேறுபட்ட கருத்துகள் என்று விட்டு விடலாம்.

    உங்களுக்கு ரஹ்மான் இசை பிடிக்கிறதோ இல்லையோ அவர் ஒரு சாதனையாளர். வெறும் விருதை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. அவருடைய இசையை என்று எத்தனையோ கோடிப் பேர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தனித் தன்மையைச் சிதைத்தார் என்பது ஒரு வாதம் என்றால் ஒருமைப்பாட்டை உருவாக்கினார் என்பது இன்னொரு வாதம். இரண்டும் வெவ்வேறு விதமாகப் பார்க்கப் படும் விஷயங்கள். இது எல்லாத்திலுமே இருக்கிறது. சில மொழிகள் பிற மொழிகளோடு இணைந்து வளமடைவதைப் பெருமையாகக் கருதுகின்றன. சில மொழிகள் தனித் தன்மையை இழக்காமல் இருப்பதே பெருமை என்கின்றன. இதிலும் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை. யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு விடை இளையராஜா என்றே கூட இருக்கலாம். ஆனால், அவரோடு ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு இருக்கும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரே ஆள் இவர்தான். இவர் முழுக்க வேஸ்ட் என்று சொல்வதற்கில்லை. மேலும், அந்தந்த மாநிலத்துக்கு இருக்கும் இசை வடிவங்கள் இப்போதும் இருக்கின்றன என்றே எண்ணுகிறேன். அவையெல்லாம் இப்படி ஒரே ஆள் வந்து காலி பண்ணும் அளவுக்கு பலவீனமானவை அல்ல. அப்படி ஒன்றை ஒரு தனி மனிதர் செய்ய முடிந்தால் அதுவும் ஒரு மேதமை தானே (வம்புக்குப் பேசுகிறேன் என்றெண்ணிப் படிக்க வேண்டாம். நான் சொல்ல முயல்வதைப் புரிந்து கொண்டால் மகிழ்வேன்!).

    கொடுக்கப் படாததால் கமல் தகுதியற்றவர் இல்லை. ஒத்துக் கொள்கிறேன். ஆனால், தான் ஆசைப் பட்ட ஒன்று இன்னொருவருக்குக் கிடைத்துத் தனக்குக் கிடைக்காமல் போகையில் வரும் பொறாமை இயல்பானது. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாளுகிறோம். அதை அவர் சரியாகக் கையாள வில்லை என்பதே என் எண்ணம். அவர் அப்படி ஆள் இல்லை; அதற்கான வாய்ப்பே இல்லை என்று நீங்கள் நம்புவீர்களேயானால், அதைத் தவறென்று நிரூபிக்கும் மந்திரம் ஏதும் என்னிடம் இல்லை. ஒருவேளை, நான் தவறாகவும் எடை போட்டிருக்கவும் கூடும் (இந்த விசயத்தில் அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே எண்ணுகிறேன்!).

    சரி, நீங்கள் சொன்னபடியே இளையராஜாவின் இடத்தை ரஹ்மான் தொட்டுப் பார்க்கவும் முடியாது என்றே ஏற்றுக் கொள்கிறேன். அப்படியானால், கமல் சொன்ன ஆள் மட்டும் தொட்டு விட முடியும் என்று எண்ணுகிறீர்களா? இந்த இடத்தில் நீங்கள் கமல் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு உங்களைச் சரியான பதிலைச் சொல்ல விடாமல் தடுக்கும் என நினைக்கிறேன்.

    இறுதியாக... இவ்வளவு விரும்பி என் எழுத்தைப் படித்த ஒருவரை மூன்றாம் மனிதப் பிரசினைகளுக்காகக் கோபப் படுத்தி விட்டோமே என்று சங்கடமாகவும் இருக்கிறது. ஆனால், அப்படியே யோசித்தால் பல விசயங்களை எழுத முடியாமலே போய் விடுமே என்றும் கவலையாக இருக்கிறது. கடைசி வரி, நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. உண்மையைச் சொல்லவா? இது தரம் தாழ்ந்த பதிவுதான். என் அரசியல் பதிவுகளிலும் இது போன்ற விமர்சனங்கள் வருவதுண்டு. பல நேரங்களில் இப்படிப் பட்ட பதிவுகளை எழுதவே கூடாது என நினைப்பதுண்டு. ஆனால், 'நான் தரமற்ற செயல் என்று எண்ணும் விஷயங்கள்' பற்றி எழுதும் போதெல்லாம் தரம் தாழ்ந்து போய் எழுதினால்தான் நிம்மதி கிடைக்கிறது. அதையும் மாற்றிக் கொள்ள வேண்டும்தான். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. kamal, raja,rahman ellorum thamizhargal. ovvoruvarin kalangalum vevveru.thanathu isaiyal thamizhargalodu vazhbavar ilayarajavum viswanathanum endral ovvoru thamizhanum garvappattukkollum saathanaiyalan rahman. ellorum nattukkuthevai.
    kamal oru oppattra kalaignan. Avvalave. kalaignan solluvathellam sariyagividathu.Avaridam irrukkum kalayai mattume parthaal naam kaarimuzhiyum alavukku pogavendiyathillai. inge sirithu unarch vasappattu vitteergar B raja avargale.
    kalaignan manathil ninaithathai pesuvatharkku vurimai irrukkirathu, athai voppukolvathum kollathathum namthu vurimai. Vazhga nam inam.

    rajkumar

    பதிலளிநீக்கு
  14. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜ்குமார் அவர்களே. உணர்ச்சிவசப் பட்டு விட்டது உண்மைதான். ஆனால் அவருடைய திறமையை ஒருபோதும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது. கலைஞர்கள் எல்லோருமே கலை வேலையை மட்டும் பார்த்தால் நாம் வேறெதையும் பார்க்கப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் கேள்வியும், ஆதங்கமும் 100க்கு 100சதவீதம் சரியானதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... நன்றி! அவ்வப்போது இத்தகைய உறுதிப்படுத்தல்களும் தேவைப் படுகின்றன! :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்