உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 3/3

அரசியல் என்றாலே துரோகங்கள் அதில் ஒரு முக்கிய அங்கம் என்ற போதிலும் உள்ளாட்சித் தேர்தல்கள்தான் ஒரே நேரத்தில் அதிக பட்சத் துரோகங்களை ஒருங்கே அரங்கேற்ற விட்டு வேடிக்கை பார்ப்பது. போட்டியில் இருக்கும் எல்லோருமே தெரிந்த ஆட்களாக இருக்கும் போது யாருக்கு ஆதரவு என்ற குழப்பம் உருவாகிறது. அதுவே பக்கம் விட்டுப் பக்கம் பாயும் பாதகச் செயலுக்கு வழி கோலுகிறது. கடைசி வரை வெளியில் ஒருவரை ஆதரிப்பது போல் பேசிவிட்டு திரை மறைவில் இன்னொருவருக்கு வேலைகள் செய்தல் நடக்கிறது. தலைவனாக வேண்டும் என்று ஆசையில் திரியும் ஒருவரிடம் ஐந்து வருடங்கள் ஏமாற்றி ஏமாற்றிப் பிடுங்கித் தின்று விட்டு, கூடுதலாகக் கொஞ்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான நேரத்தில் அணி மாறி விடுகிற அவலங்கள் நடக்கின்றன. ஊர்க்காசைத் தின்ன ஆசைப் படுபவன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஊர்க்காரர்களின் இழுத்த இழுவைக்கெல்லாம் போக வேண்டும்; உண்மை பேசக் கூடாது; கேட்கும் உறுதிமொழிகளை எல்லாம் அள்ளிக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஆசை நிறைவேறாது. எது பெட்டர்?

எதிராளியைப் பலவீனப் படுத்த, தனிப்பட்ட முறையில் ஒருவருடைய செல்வாக்கை வீழ்த்தும் வகையில் என்னென்னவோ புரளிகளைக் கிளப்பி விடும் கொடுமைகள் நடக்கின்றன. இருக்கும் ஒன்றிரண்டு நல்லவர்களையும் ஏதாவதொரு இல்லாத குற்றச்சாட்டை வைத்து பெயரைக் கெடுக்கும் வகையில் பரப்பி விடுகிறார்கள். காசு வாங்கி விட்டான், கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறான், முறைகேடு செய்தவன் என்று அந்த நேரத்தில் எடுபடும் விதமாக வாய்க்கு வந்த மாதிரி ஏதோ சொல்லி மரியாதையைக் காலி செய்யும் வேலைகள் செய்கிறார்கள். எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்தி வீழ்த்துவது ஒருமுறை என்றால், பலம் எதுவாக இருந்தாலும் அதை அடித்து வீழ்த்துவது இன்னொரு முறையாக இருக்கிறது. மொத்தத்தில் அரசியலில் இன்று நாம் காணும் கேவலங்கள் அனைத்தும் மேலிருந்து கீழ் வந்ததா அல்லது கீழிருந்துதான் மேலே வருகிறதா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தமிழ்நாடெங்கும் 'ஒரு ஓட்டுக் கூட வாங்காதவர்கள்' என்றொரு நீண்ட பட்டியல் பல பத்திரிகைகளில் வந்தன. அதையெல்லாம் படித்து விட்டு ஒரு புறம் சிரிப்பு; இன்னொரு புறம் அதிர்ச்சி! இதுவும் ஒரு விதத்தில் நம் சனநாயகத்தின் முதிர்ச்சியையே காட்டுகிறது. தன்னுடைய வாக்கையே வேறொருவருக்கு அளிக்கும் ஒருவன் என்ன 'முடி'க்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்? இதில் ஒரு சிலர் காசு வாங்கிக் கொண்டு அமைதியாகி விட்டவர்கள் என்கிறார்கள். "நிச்சயம் ஒரு ஓட்டுக் கூட வாங்க மாட்டேன் பாருங்கள்; எல்லாத்தையும் உங்களுக்கே விழ வைக்கிறேன்!" என்று காசு வாங்கும் போது சத்தியம் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். நாம்தான் சத்தியத்தைக் காப்பாற்றும் மகான்கள் ஆயிற்றே. காசு கொடுக்கும் எல்லோருமே சத்தியம் வாங்கிக் கொண்டுதான் கொடுக்கிறார்கள். அந்த வகையில் சத்தியத்தை மீறாத மக்கள் நம்மைச் சுற்றி இவ்வளவு பேர் இருப்பது புல்லரிக்கத்தான் வைக்கிறது.

முதல் பாகத்தில் பணம் கொடுப்பது பற்றி எழுதியிருந்தேன். அது தேர்தலுக்கு முன்பு என்பதால் கடைசி நேரத்தில் களத்தில் நடந்த பல விஷயங்கள் பற்றி அதில் எழுத முடியவில்லை. தேர்தலுக்குப் பின் கேள்விப் பட்ட கதைகள் அனைத்தும் பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றன. நான் கேள்விப் பட்ட வரையில் காசு கொடுக்காத யாருமே எங்குமே வெல்ல வில்லை. "காசு கொடுக்காமல் நின்று பார்க்கிறேன். அதில் வெல்ல முடியாவிட்டால் போகுது கழுதை!" என்று முடிவெடுத்து இறங்கியவர்கள் எல்லாம் படு கேவலமாகத் தோற்றிருக்கிறார்கள். காசு கொடுத்தவர்களும் சரி, வாங்கியவர்களும் சரி, இதை வெளிப்படையாகவே பேசுகிறார்கள் இப்போது. இன்னொரு கொடுமை - எல்லா இடங்களிலுமே பெரும்பாலான வேட்பாளர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்லது என்று நினைத்தேன். நான் நினைத்தது - 'எல்லோரும் கொடுத்தால், அதற்கு மரியாதை இல்லாமல் போய் விடும்; எனவே, இறுதியில் தான் விரும்பியவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்' என்று. நடந்ததென்ன தெரியுமா? பலரிடம் பணம் வாங்கிய எல்லா வீடுகளிலும், "யாருக்கும் துரோகம் செய்யக் கூடாது!" என்று ஒரு நியாயம் கண்டு பிடித்து பணம் கொடுத்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரும் ஒரு வாக்கு வீதம் பிரித்து வாக்களித்து தமிழ் மண்ணின் நேர்மைக் கொடியைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

சென்ற முறை பணம் வாங்குவதைக் கேவலமாகப் பார்த்த பல பணக்காரர்கள் கூட இம்முறை மறுக்காமல் வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். "வழிய வந்து கொடுப்பதை ஏன் வேண்டாமென்று சொல்ல வேண்டும்? நான் வேண்டாமென்று சொல்லி விட்டால், அந்தப் பணத்தை என்ன மக்கள் பணிக்கா செலவிடப் போகிறார்கள்?" என்று நியாயமான கேள்வி கேட்கிறார்கள். பணம் கொடுத்த எல்லோரும் வெல்ல வில்லை என்றாலும் பணம் கொடுக்காத யாரும் வெல்ல வில்லை. பணம் அதிகம் கொடுத்தவர்களே பெரும்பாலும் வென்றிருக்கிறார்கள். இதனால் இந்தப் புதிய பண்பாடு இன்னும் பத்து - இருபது வருடங்களுக்கு நம் மண்ணில் தொடரும் என்றே தோன்றுகிறது. ஒரேயொரு நல்ல விஷயம் - பணம் கொடுத்துத் தோற்றவர்கள் அடுத்த முறை அடக்கி வாசிக்க வாய்ப்புள்ளது. அதிலும் பணம் கொடுத்துத் தோல்வியுற்ற அடாவடியான ஆட்கள் பணத்தை வாங்கியவர்களில் பயந்தாங்கொள்ளிகளாகப் பார்த்து வம்புச் சண்டை இழுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதிலாவது கருமம் இந்த மக்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை.

எப்படியும் வென்று விட வேண்டும் என்ற கட்டாயம் வந்ததும் கடைசி நேரத்தில் பல இலட்சங்களை இறக்கி விட்டார்கள் பலர். இதில் தன் மொத்த வாழ்க்கையின் சம்பாத்தியத்தையும் அழித்து விட்டுத் தெருவில் வந்து நிற்போரும் இருக்கிறார்கள். கூடுதலாகக் கடன் வேறு வாங்கிச் செலவழித்து அழிந்தோரும் இருக்கிறார்கள். இப்படியாவது அடுத்த முறை இந்தக் கொடுமை குறையட்டும் என்று நினைத்தால், "இந்த முறை விட்டால் என்ன, அடுத்த முறை இதை விட அதிகமாகச் செலவழித்து எப்படியும் இழந்த பணத்தை மொத்தமாகத் திரும்ப எடுத்து விட வேண்டும்!" என்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களிலேயே பேச்சுக்களைக் கேட்க முடிந்தது. ஊராட்சி மன்றத் தேர்தலில் மூன்று இலட்சம் செலவழித்துத் தோல்வியுற்ற ஒருவர் நிரம்ப விபரமாக - மக்கள் நலனில் அக்கறையோடு பேசினார் - "நாங்களெல்லாம் ஒரே வருடத்தில் போட்ட பணத்தை எடுக்க முயல மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மூன்று வருடத்தில் கிடைத்தால் போதும்!". இது ஒரு சூதாட்டமாகவே ஆகி விட்டது. கண்ணுக்குத் தெரிந்த தொலைவில் இதற்கு ஒரு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

தன் வாழ்க்கை முழுக்க ஏதோவொரு சமூகப் பணியிலேயே கழிய வேண்டும் என்று அர்ப்பணித்துக் கொண்ட பலர், உள்ளாட்சித் தேர்தலை ஒரு குறி வைத்தே இதெல்லாம் செய்வார்கள். அப்படிப் பட்டவர்கள் எல்லாம் பெரும்பாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை இம்முறை. சேவையையும் அரசியலையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்கிறார்கள் மக்கள். இதற்கான தகுதியும் அதற்கான தகுதியும் வெவ்வேறு என்று எண்ணுகிறார்கள். அரசியலில் சோபிக்க ஆசைப் படுவோரிடம் பண பலம், இன பலம், ஆள் பலம் என்று எத்தனையோ அடிப்படைத் தேவைகள் எதிர் பார்க்கப் படுகின்றன. "அவன் பாட்டுக்கு ஏதாவது எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டு இருப்பதை விடுத்து அரசியலுக்கெல்லாம் வர வேண்டும் என்று ஏன் ஆசைப் படுகிறான்?! இவனும் அரசியலுக்கு வந்து விட்டால் நமக்கு வேண்டிய வேலைகளையெல்லாம் யார் செய்வார்கள்?!" என்று கேட்டுக் காமெடி பண்ணுகிறார்கள்.

இதில் சக வேட்பாளர்களைச் சரிக் கட்டும் வேலை என்று ஒரு படலம் இருக்கிறது. அதில்தான் எவ்வளவு பொய்கள், உறுதிமொழிகள், ஏமாற்று வேலைகள், பித்தலாட்டங்கள், மிரட்டல்கள்? நல்லவர்கள் எல்லோரும் இந்த ஒரு கட்டத்தில் வடி கட்டப் பட்டு விடுகிறார்கள். பிச்சைக் காரர்களைப் போலக் கெஞ்சுகிறார்கள் (பிச்சைக்காரர்களே இப்போதெல்லாம் கெஞ்சுவதில்லை. அதனால் அந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது!). "என்ன வேண்டுமானாலும் கேள்; செய்து கொடுக்கிறேன். ஆனால் அந்தப் பதவியை மட்டும் எனக்கு விட்டுக் கொடுத்து விட வேண்டும்!" என்று மன்றாடுகிறார்கள். "உன்னை அதாக்குகிறேன் - இதாக்குகிறேன்; அடுத்த முறை முன்னால் நின்று வேலை பார்த்து இதே இடத்தில் உன்னை உட்கார வைக்கிறேன்!" என்று வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார்கள் (இத்தனை தேர்தல்கள் பார்த்து விட்டோமே, அடுத்த முறை என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியாதா என்ன?). கொஞ்சம் பாவப் பட்ட ஆட்களை மிரட்டவும் செய்கிறார்கள். நல்லவர்கள் - தப்புத் தண்டா செய்யப் பயந்தவர்கள், "என்னடா கருமம் இது?" என்றோ "எதுக்குடா சாமி வம்பு?" என்றோ பின் வாங்கி விடுவார்கள்.

தலைவனாக ஆசைப் பட்ட ஆட்களின் பாடுதான் அப்படியென்றால், பாவப் பட்ட மக்கள் படும் பாடு அதை விடக் கொடுமை. தினமும் நாலு பேர் வந்து கதவைத் தட்டி விடுகிறார்கள். பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்த பொழுதில் எங்கள் ஊரில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அது ஒரு பெரிய காமெடி. ஏதோவொரு முகவரி தேடிச் சென்ற நண்பர்கள் நால்வர், ஒரு வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். உள்ளே இருந்து அவசர அவசரமாகக் கதவைத் திறந்த ஆசாமி ஒருவர், என்ன ஏதென்று எதுவும் கேட்காமல், "கண்டிப்பா எங்க ஓட்டு உங்களுக்குத்தான்!" என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு உடனடியாகக் கதவை மூடிக் கொண்டாராம். அன்றிரவு வந்து சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறான் நண்பன். எந்த அளவுக்கு மண்டைக் குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள். நீங்களே சொல்லுங்கள் - இதெல்லாம் பாவமில்லையா? கொடுமையில்லையா?! :)

இப்போதெல்லாம் நிறைய மருத்துவர்கள் அரசியலுக்கு வருகிறார்களே என்னவென்று வியந்து கொண்டிருந்தேன். பின்புதான் புரிந்தது - இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலில் அவர்கள் நிறையவே வந்திருக்கிறார்கள் என்று. நேரடியாகத் தினமும் நிறைய மக்களைச் சந்திக்கும் வாய்ப்புள்ள அனைவருமே அரசியலுக்குள் வருகிறார்கள். இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பால்க்காரர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், கடை வைத்திருப்பவர்கள், ஒரு வேலையும் இல்லாமல் ஊரையே சுற்றிச் சுற்றி வருபர்கள் போன்ற அனைவரும் அடக்கம்.

திமுக ஆட்சியை விட முறைகேடுகள் குறைவுதான். ஆனால், இப்போதும் நிறைய முறைகேடுகள் பற்றிக் கேள்விப் பட முடிந்தது. பல உத்திகளைக் கையாண்டு தோற்றவர் வென்றதாக அறிவித்தல், தோற்கப் போகிற நேரத்தில் தோற்பவர் வெல்வதற்கான வேலைகள் பார்த்தல் (வாக்கு எண்ணிக்கையின் போது!), வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பெட்டி காணாமல் போதல், வாக்கு எண்ணிக்கையின் போது கண்கட்டி வித்தைகள் செய்தல் போன்ற பல முறைகேடுகள் நடந்திருக்கின்றன. நான் கேள்விப் பட்ட இவையனைத்தும் சீட்டு பயன் படுத்தப் பட்ட ஊராட்சிப் பகுதிகளில். மக்களும் நான்கு சீட்டுகளை வைத்துக் கொண்டு குழம்பித் தவிக்கிறார்கள். எதுவுமே புரியாத நிலையில், எங்கெங்கு இரட்டை இலை இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்குக் குத்தி விட்டு, இல்லாத இடங்களில் உதய சூரியன் அல்லது கை போன்ற பழக்கப் பட்ட சின்னங்களுக்குக் குத்தி விட்டு, மற்ற சீட்டுகளில் நல்லா இருக்கும் சின்னம் ஏதோவொன்றில் குத்தி விட்டு வந்ததாகச் சொன்னவர்களும் உண்டு. இயந்திரமே பரவாயில்லை போலத் தெரிகிறது. வேலையும் விரைவாக நடந்து நேரமும் மிச்சம். ஆனால், நகர்ப் புறங்களில் அவற்றிலும் முறைகேடு நடந்தனவா என்று தெரியவில்லை.

சென்ற முறையை விடக் குதிரை பேரம் கொஞ்சம் குறையும். எல்லாத் தலைவர்களுமே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்ட கொடுமையில் சனநாயகம் ஆடையை அவிழ்த்துப் போட்டு ஆடிக் கொண்டிருந்தது. அவர்களைக் கடத்திச் சென்று கவனிப்பது, காசை இறைத்துக் கட்சி மாற வைப்பது போன்ற அநியாயங்கள் கொஞ்சம் குறையும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுவார் என்பதால், மொத்தமாக அவிழ்த்துப் போட்டு ஆடிய சனநாயகம் இப்போது மேல்ச் சட்டையை மட்டும் அவிழ்த்துப் போட்டு ஆடுகிறது என்று சொல்லலாம். ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்களையும் அதே போலத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வந்து விட்டால், இன்னும் சிறப்பாகும். ஆனாலும் அதிகாரத்துக்குப் பதிலாக ஊழல் பரவலாகி இருக்கிறது என்கிற உண்மையை மனநிலைக் கோளாறற்ற எவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதற்கெல்லாம் முடிவுதான் என்ன?

ஒன்று - எம்ஜிஆர் காலத்தில் போல உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல் செய்து விடலாம். இப்படிச் செய்வதில் உள்ள குறைபாடு - ஆளும் கட்சியின் ஆட்கள்தாம் உள்ளாட்சி அமைப்பினர் போலச் செயல்பட்டு எல்லாத்தையும் வருவாய்த் துறையோடு பங்கு போட்டு விழுங்குவார்கள் அல்லது மொத்தப் பணத்தையும் அரசு இயந்திரம் முழுமையாக விழுங்கி விடும்.

அல்லது - முன்பு போல, குறைவான பிரதிநிதிகளோடு இன்னும் கொஞ்சம் ஒல்லியான உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டு கொள்ளையைக் குறைக்கலாம். இதில் எல்லோருமே மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படும் விதமாக இருக்க வேண்டும். ஊழலைக் குறைக்கும் விதத்தில் சட்டங்களையும் இறுக்கலாம்.

அல்லது - "இதெல்லாம் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக - அதிகாரப் பகிர்வுக்காகப் புத்திசாலிகள் ஒன்று கூடித் தொலை நோக்குப் பார்வையில் போட்ட திட்டம். உன்னைப் போல முட்டாப் பயகளுக்கெல்லாம் ஒன்றும் புரியாது!" என்று எமக்குப் புரியாத மாதிரி ஏதோ சொல்லி விட்டு, இன்னும் இருபது - முப்பது ஆண்டுகளுக்கு இந்தக் கொள்ளையைத் தொடர விட்டுப் பார்க்கலாம். அதற்குள் சனநாயகம் எப்படியும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி விடும்.

இதில் எது சிறந்ததாகத் தெரிகிறது என்று உங்கள் கருத்தையும் தெரிவித்தீர்கள் என்றால், நன்றாக இருக்கும். அட்வான்ஸ் நன்றிகள்.

பின்குறிப்பு: இந்தத் தேர்தல் முடிவுகள் என்னவோ எல்லாக் கட்சிகளுக்குமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாகவே உள்ளது. நாம் அழிந்து விட்டதாக நினைத்த எந்தக் கட்சியும் இன்னும் அழிந்து விடவில்லை; அவ்வளவு எளிதாக அழியப் போவதுமில்லை என்றே தோன்றுகின்றது.

கருத்துகள்

 1. நல்ல அலசல்... பகிர்வுக்கு மிக்க நன்றி..

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. I always wonder after moving to Big cities for job, we stop thinking in our mother tongue. We almost forgot to write in our tamil. So it was good feeling for me to read about my friends thoughts in tamil.

  Today I am bit surprised to see english mixed up in the concluding phase of the essay.

  "அட்வான்ஸ் நன்றிகள்"

  Anyhow, keep up the good work!

  ~ila

  பதிலளிநீக்கு
 3. நன்றி நண்பரே. உண்மைதான். நானும் இடையில் நீண்ட காலம் தமிழை விட்டுத் தொலைமைப் பட்டு இருந்தேன். இப்படியான வாய்ப்புக் கிடைத்ததில் பெருத்த மகிழ்ச்சி. நிம்மதி என்று சொல்ல வேண்டும்.

  ஆம். நானும் அந்த வார்த்தையை எழுதும் போது யோசித்தேன். முடிந்த அளவு தூய தமிழில் எழுதவே முயன்றாலும் சில நேரங்களில் சில சொற்கள் உடனடியாக மனதுக்கு வர மறுக்கும் போது அல்லது பிற மொழிகளில் சொல்வதே எளிதாக, பழக்கப் பட்டதாக, அல்லது சக்தி மிக்கதாக இருக்கும் போது அந்தச் சொற்களை அப்படியே பயன் படுத்தி விடுகிறேன். குறைக்க முயல வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. very good article. it must be read and should be know all people. then only they also have some thinking about "Jananayagam".

  பதிலளிநீக்கு
 5. i like very much this article. it must be read by all people or it should be heard by all. then only all will get idea of "jananayagam"

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!