உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 2/3

முன்னுரை: நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. ஒடுக்கப் பட்ட மக்கள் ஒடுங்கியே கிடக்க வேண்டும் என்று எண்ணுபவனும் அல்ல. என் குடும்பப் பின்னணி மற்றும் இளமைக் கால வாழ்க்கை பற்றி அறிந்தவர்கள் இதை அறிவார்கள். பெண்கள் அடுப்பூதிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருக்கும் ஆளும் இல்லை. உண்மையை என் மனைவியிடம் வந்து விசாரித்துப் பாருங்கள் (எனக்குள்ளும் கொல்ல முடியாத ஆணாதிக்க குணங்கள் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் பெண்கள் நிறைய முன்னுக்கு வரவேண்டும் என்று மனமார விரும்புகிறேன்; பல இடங்களில் அவர்கள் ஆண்களை விட மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்; ஏற்றுக் கொள்கிறேன்!). உண்மையில், சாதிகள் மற்றும் பாலினம் கடந்து சமத்துவம் தலை தூக்க வேண்டும் என்று மனமார ஆசைப் படுவோரில் நானும் ஒருவன். "இதை நம்ப முடியாது. சும்மா வெளிப் பேச்சுக்கு அப்படிப் பேசுகிறாய்!" என்று சொல்வீர்களேயானால் உங்களிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. விட்டு விடுங்கள். நான் சொல்வதில் சிறிதேனும் நம்பிக்கை இருந்தால், நான் சொல்லப் போகும் கருத்துக்களைத் திறந்த மனதோடு படித்து, ஆரோக்கியமான விவாதத்துக்கு வழி செய்யுங்கள்.

இப்போது விசயத்துக்கு வருவோம். உள்ளாட்சித் தேர்தல்களில் அளிக்கப் படும் இட ஒதுக்கீடு இன்றுவரை எந்த வகையிலும் அதன் நோக்கத்தை எட்ட உதவ வில்லை என்பது என் அழுத்தமான கருத்து. உள்ளாட்சித் தேர்தல்களே அவற்றின் நோக்கத்தை எட்ட உதவ வில்லை என்பதும் சரிதான். அதனால், இட ஒதுக்கீடு மட்டுமே அதில் ஒரு பிரச்சனை என்று திசை திருப்பவும் முயலவில்லை. அதே வேளையில் இட ஒதுக்கீடு என்பது ஒரு தொலை நோக்குப் பார்வையிலான திட்டம் என்று சொல்வதை மறுப்பவனும் இல்லை நான். ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதனால் செய்யப் படும் அநியாயங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டால் ஒரு துளி கூட பெண்களின் நிலை மாறியுள்ளது என்று எவரும் நிரூபிக்க முடியாது. எல்லா இடங்களிலுமே அதே கொள்ளைக்காரர்கள்தாம் தத்தம் பொண்டாட்டிகளை முன்னிறுத்திக் கொள்ளையைத் தொடர்கிறார்கள். இடதுசாரிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

இதன் மூலம் எத்தனை ராப்ரி தேவிகளைக் கண்டெடுத்திருக்கிறோம் தெரியுமா? ராப்ரி தேவி என்றால் மட்டமா என்று மட்டமான விவாதங்களுக்குள் என்னை இழுக்காதீர்கள். இன்றுவரை தான் நின்ற வார்டு எது என்று கூடத் தெரியாத பெண்மணி ஒருவர் ஐந்தாண்டு காலம் ஊராட்சி மன்றத்தில் உறுப்பினராக இருந்து முடித்து விட்டார். இவரெல்லாம் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் போய் எண்ணத்தைப் பிடுங்குவார் என்று எதிர் பார்க்க? அரசியலை விடுங்கள்... எது பற்றியுமே எந்தவிதமான அடிப்படை அறிவும் அற்ற என் உறவினரே ஒருவர் சென்ற முறை உள்ளாட்சி அமைப்பில் நுழைந்தார். அதன் கொடுமையைக் கண் கூடாகப் பார்த்தேன். இந்த முறையும் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தால் வேதனையில் உள்ளம் கொதிக்கிறது. எதற்கும் எடுபடாத கேஸ் என்று ஊரில் தண்ணீர் தெளித்து விட்டிருக்கும் உதவாக்கரைகள் எல்லாம் நன்கு வெளுத்த வெள்ளைச் சட்டைகளை மாட்டிக் கொண்டு, தானும் ஒரு வருங்கால சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் நினைப்பை வைத்துக் கொண்டு செயற்கைச் சிரிப்போடும் கும்பிடுகளோடும் வலம் வருகின்றன.

நிறையப் பேர் இதுதான் நம் சனநாயகத்தின் முதிர்ச்சி என்று முதிர்ச்சி இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதெப்படி முற்போக்கான அரசியல்க் கொள்கையாகும் என்று புரிய மறுக்கிறது எனக்கு. குண்டக்க மண்டக்க ஏதாவது பேசுவதே கொள்கை என்று எதையோ தவறாகப் படித்து விட்டு வந்திருக்கிறார்களா இவர்கள் என்று புரியவில்லை. அடி மட்டக் கள நிலவரம் அறியாமல் பேசும் கருத்தியல்கள் எல்லாம் கருமாந்திரங்கள். "எல்லாக் கொள்கையிலும் குறைபாடுகள் உண்டு. அதனால் கொள்கையையே எதிர்க்கக் கூடாது!" என்று பேசும் புத்திசாலிகளுக்கு ஒரு கேள்வி - சுற்றிப் பார்த்தால் நூற்றில் ஒன்று கூட உருப்பட உதவ வில்லை என்று தெரிந்த பின்பும் எப்படி அதில் குறைகளை விட நிறைகள் அதிகம் என்று வாதிடுகிறீர்கள்? இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும்வரை நீங்கள் மட்டுமே உங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு திரிய வேண்டும். மக்களின் மரியாதை எல்லாம் ஒன்றும் கிடைக்காது. சரி, அதை விடுங்கள். எங்கள் மரமண்டைகளுக்குப் புரிகிற மாதிரியாவது உங்களால் பேச முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்புறம் என்ன நீங்கள் அறிவாளிகள்?

அடுத்து, பட்டியல் இன (SCHEDULED CASTE) மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிப் பேசுவோம். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விட இது ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. ஏனென்றால், எல்லா வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லா வீட்டிலும் பட்டியல் இன மக்கள் இல்லை. "என்ன சொல்ல வருகிறாய்?" என்று முழிக்கிறீர்களா? இதோ.. இதுதான் மேட்டர் - இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பல இடங்களில் பட்டியல் இன மக்கள் ஒன்று கூடி ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். ஆனால், அப்படியோர் ஒன்று கூடலோ சூழலோ பெண்களுக்கு நேர்வதே இல்லை. ஏனென்றால், அவர்களுக்கும் சேர்ந்து அதே வீட்டில் இருக்கும் அவர்களுடைய கணவர்களே யோசிக்கிறார்கள் - முடிவெடுக்கிறார்கள். ஆக பலசாலிப் பெண் வெளியே வருவதில்லை. பலசாலிக் கணவனின் மனைவியே வெளியே வருகிறாள். பலசாலிக் கணவனில் காலுக்கடியில் கிடக்கும் அவள் எப்படி பலசாலியாக இருப்பாள்? ஒன்றுமே தெரியாத அவள் எப்படி தன் பலசாலிக் கணவனை விட நல்ல முடிவுகள் எடுக்க முடியும்? சரி, நீங்கள் "இதில்தான் நிறைகள் அதிகம்!" என்று பிடிவாதத்துக்குப் பேசிக்கொண்டு உங்கள் மனசையே மேலும் சிந்திக்க விடாமல் ஒடுக்கும் முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒருவர் என்றால், இதற்கு மேல் ஒன்றும் பேச முடியாது. உங்கள் வழிக்கே வந்து ஒரு கருத்தைச் சொல்லி விடுகிறேன். குறைந்த பட்சம், இதில் இருக்கும் மிகக் குறைந்த குறைகளையாவது களைய வழி பாருங்கள்.

சரி, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொடுக்கப் படும் இட ஒதுக்கீட்டால் அவர்களுடைய வாழ்க்கை முன்னுக்கு வந்து விட்டதா? அதுவும் இல்லை. அதே பலசாலிக் கணவன் - மனைவி கதைதான் ஆதிக்க சாதிகளுக்கும் ஒடுக்கப் பட்ட சாதிகளுக்கும் இடையில் பல கிராமங்களில் நடக்கிறது. ஊரிலேயே பலசாலியான ஒருவன், தன் பேச்சுக்குக் கட்டுப் படும் ஓர் ஒடுக்கப் பட்ட இனத்தவனைத் தன் சொந்தச் செலவில் நிறுத்தி வெற்றி பெற வைத்து விடுகிறான். அவனுக்கு எதிராக நிற்கும் ஒடுக்கப் பட்ட மக்களின் உண்மையான பிரதிநிதியை - அவர்களில் பலசாலியை - மிரட்டி ஒதுங்க வைத்து அல்லது தோற்கடித்து தன்னுடைய சொல் பேச்சுப் படியே எல்லாத்தையும் நடத்துகிறான். எனக்குத் தெரிந்து பல ஊர்களில் இது நடந்திருக்கிறது. இப்போதும் நடக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவருக்கான சம்பளம் முதற்கொண்டு எல்லாமே ஆதிக்க சாதிக் கார முதலாளிக்கே போகும்; மாதத்துக்கு ஐம்பது கிலோ அரிசி மட்டும் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டுக்குப் போகும். முதலாளி முதலாளியாகவே இருப்பான். வேலைக்காரன் வேலைக்காரனாகவே இருப்பான். அதுவும் அதே வீட்டில். கேட்கிற இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுப்பான். இது எப்படி ஒடுக்கப் பட்ட மக்களின் விடிவுக்கு வழி வகுக்கிறது என்று யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்.

சரி, அதை விடுங்கள். அவர்களின் உண்மையான பிரதிநிதிகளே கூட எளிதில் வெல்ல முடிகிறதா? வென்றாலும் அவர்கள் பக்கமே காலம் முழுக்க நிற்பார்களா? அதற்கும் பதில் நல்லபடி இல்லை. பெரும்பான்மை மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் வெல்கிறார். அதாவது, ஒடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியாகக் களம் இறங்குபவர் மற்றவர்களின் நண்பன் போலக் காட்டிக் கொண்டால்தான், ஒடுக்கப் பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி அதிகம் பேசாமல் இருந்தால்தான், மற்றவர்களைக் கவர முடியும். இல்லையேல், அவர் அந்தந்தச் சாதி வட்டத்துக்குள் சுருட்டப் பட்டு விடுவார். அப்படியே வென்றாலும், பெரும் கட்சிகளில் வளர வேண்டுமானால், அந்தச் சாதி அடையாளத்தை அதிகம் பயன்படுத்தாமலே இருக்க வேண்டும். இதெப்படி அவர்களின் மக்களுக்கு உதவுகிறது? ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் பதவி சுகம் அனுபவிப்பதற்கும் அந்த இனத்தின் விடுதலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே இதுவரை நான் கண்ட அரசியலின் நிதர்சனம். இதற்கு மாற்றுக் கருத்து யாரிடமும் இருக்கிறதா?

இதில் நிறை என்று பார்த்தால், எல்லோரும் சொல்லும் ஒரு விசயம் இதுதான். இது ஆரம்ப காலம் - மாற்றத்தின் காலம்; இப்போதைக்கு இது போன்ற குறைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும்; காலம் போகப் போக எல்லாம் சரியாகி விடும்; இதைப் பயன்படுத்தி மெதுவாகக் கால மாற்றம் நிகழ்ந்து விடும். பொதுத் தேர்தல்களில் ஒடுக்கப் பட்ட மக்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள இட ஒதுக்கீட்டால், சுதந்திரம் அடைந்த பின் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு மாறியுள்ளது என்பதைப் பார்த்தால் இதற்குச் சரியான விடை கிடைக்க வாய்ப்புள்ளது. கண்டிப்பாக மாறவில்லை என்று சொல்வதிற்கில்லை. எவ்வளவோ மாறியிருக்கிறது. அதற்கு அரசியல் அதிகாரமும் ஒரு காரணம். அது மட்டுமே என்று சொல்ல முடியாது என்றாலும் அதுவும் என்று சொல்லலாம். அதுவும் தனித் தொகுதிகள் இருப்பதால் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய வாக்குகளும் தேவைப்படுவதால் என்றுதான் சொல்ல முடியும். இன்னொன்று - பொதுத் தேர்தல்களில் இது பெரிதாகத் தோல்வி அடையாததற்குக் காரணம், பல இலட்சம் பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் வருகிற போது ஓரளவு எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். அதுவே உள்ளாட்சி அமைப்புகளில் எடு படாமல் இருப்பதற்குக் காரணம் - இது சில நூறு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதே. அந்த நூற்றில் ஒருவர் இல்லாதபோது தகுதியற்றவர் ஒருவர் தலையெடுத்து விடுகிறார். இட ஒதுக்கீடு இல்லாமல் வருகிற எல்லோரும் தகுதியானவர்களா என்றால், அதுவும் இல்லை. அதிலும் நிறையப் புட்ட கேஸ்கள் வரத்தான் செய்கின்றன. அதற்கு யார் பொறுப்பு? நம்முடைய அறிவீனம். அதை எப்படிச் சரி செய்வது? அவ்வளவு சீக்கிரம் அதைச் சரி செய்ய முடியாது. அதையும் மீறி நல்ல உள்ளாட்சி அமைப்புகளை நடத்தியாக வேண்டும். அதற்கு நம் சட்டங்களை இறுக்க வேண்டும். போட்டியிடுவதற்கான தகுதிகளைக் கடுமையாக்க வேண்டும். பதவியில் இருந்து கொண்டு சமூகத்துக்கு எதிரான குற்றங்கள் புரிவோரை அரசியலுக்குள் வரவே முடியாது விரட்டும் அளவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் எல்லாம் மக்கள் தம் தலைவரை இயல்பாகவே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்களே ஒதுங்கிக் கொள்ள விரும்பினாலும் விடாது வற்புறுத்தி உள்ளே வர வைத்திருக்கிறார்கள். அதுதான் முதிர்ந்த சமூகங்களில் நடக்கும் என்பது என் நம்பிக்கை. முன்னுக்கு வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்கே பின்னுக்குச் சென்று கொண்டு இருக்கிறோமோ என்று சந்தேகமாக உள்ளது. "போட்டியின்றித் தேர்வு செய்வதாக இருந்தால் வருகிறேன். இல்லையேல், வேறு ஆளைப் பாருங்கள்!" என்று சொல்கிற கதைகள் எல்லாம் முன்பு நிறையக் கேள்விப் பட்டிருக்கிறோம். இப்போது அப்படியெல்லாம் யாரும் சொல்வதில்லை. மக்கள் பணி செய்ய வருபவர் அப்படித் தானே வர வேண்டும். நான் அந்த மக்களுக்கே பிடிக்காத ஒருவன் என்றால், எதற்காக அவர்களுக்கு உதவும் ஒரு பொறுப்புக்காக அலைய வேண்டும்? அதை அடைய அத்தனை முறைகேடுகள் செய்ய வேண்டும்? நாகரிகமாக ஒதுங்கிக் கொள்தல்தானே முறை? அது ஏன் நடப்பதில்லை? உழைக்காமல் சம்பாதிக்க இது ஒரு மிக எளிய தொழில் வாய்ப்பாகப் பார்க்கப் படுகிறது. அதன் வருமானம் பற்றி எண்ணும் போதே புல்லரிக்கிறது.

இப்போதைய அமைப்பில் இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை - ஒடுக்கப் பட்ட மக்களில் இருக்கும் தகுதி உடைய தலைவர்கள் பற்றி வெளியில் தெரியவே வராது. அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க எவருமே முன் வர மாட்டார்கள். பெரியவர் பெரியவராகவே இருப்பார். அடிமைகள் அடிமைகளாகவே இருப்பர். சாதிக் கட்டமைப்புகள் இறுக்கமாக இருக்கும் பெரும்பாலான ஊர்களில் பெரியவர்களின் கைக்கூலிகளாகவே இருப்பர். அது கண்டிப்பாக நல்லதில்லையே. அவர்களில் திறமைசாலிகளை வெளிக் கொணர வேண்டும் என்றால் இந்த இட ஒதுக்கீடு இருந்தே ஆக வேண்டும். அதே வேளையில் இத்தனை ஆண்டுகளில் இட ஒதுக்கீடு முழுமையான வெற்றி பெறவில்லை என்பதையும் கோபப் படாமல் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதன் மூலம் புரிபடும் ஓர் உண்மை - அது மட்டுமே நம் குறிக்கோளை அடைய உதவாது; இன்னும் என்னன்னவோ செய்ய வேண்டியுள்ளது என்பதே. அது வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அது மட்டுமே பற்றாது. அத்தோடு மேலும் பல வசதிகளையும் கேட்க வேண்டியுள்ளது. இதன் நியாயத்தை உணர்ந்து நடந்து கொள்வதை விட அதை வைத்து அரசியல் செய்வதையே நிறையப் பேர் செய்கிறார்கள். அதனால்தான் அம்மக்களின் விடியல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதை அவர்களே உணர வேண்டும். இதன் மூலம் நான் எதையும் திசை திருப்ப முயலவில்லை என்பதைச் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். ப்ளீஸ்!

அமைப்பு ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. சட்டமன்ற/ நாடாளுமன்றத் தொகுதிகளைப் போல் உள்ளாட்சித் தொகுதிகளிலும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதைப் பொறுத்து இட ஒதுக்கீட்டை மாற்றி அமைக்க வேண்டும். சுதந்திரம் வாங்கிய போது ஊராட்சிகள் எப்படிப் பிரிக்கப் பட்டிருந்தனவோ அப்படியே இப்போதும் பிரிக்கப் பட்டிருக்கின்றன. எத்தனையோ கிராமங்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டன. நகரங்களுக்கு அருகில் இருக்கும் பல கிராமங்கள் பன்மடங்கு பல்கிப் பெருகி இருக்கின்றன. சில ஊராட்சிகள் இருநூறு/ முன்னூறு பேரையும் வேறு சில ஊராட்சிகள் பல்லாயிரக் கணக்கான வாக்காளர்களையும் கொண்டுள்ளன. இது முறையாகாது இல்லையா? எனவே, ஆயிரம் முதல் இரண்டாயிரம் என்றோ ஐயாயிரம் முதல் ஆறாயிரம் என்றோ ஓர் ஊராட்சியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் இல்லாவிட்டால் குறிப்பிட்ட சிலர் மட்டும் அடிக்கும் கொள்ளையை அவை இருந்தால் நிறையப் பேர் பங்கு போட்டு அடிக்கிறார்கள். கேள்வி கேட்காத படிக்கு அமைதி காப்பதற்காகவே தலைவர்கள் உறுப்பினர்களுக்கென்று ஒரு பங்கு கொடுத்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்து எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் வருவாய்க்கு அதிகம் வாய்ப்புள்ள ஒரு நகராட்சியில் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் மாதாமாதம் முப்பதாயிரம் ரூபாய் வீடு தேடி வந்து விடுகிறது. நேர்மையாக இருக்க விரும்பும் 'பிழைக்கத் தெரியாத பேர்வழி' யாராவது அதை வேண்டாம் என்று சொன்னால், அதையும் மிச்சமிருக்கும் முப்பது பேருக்குப் பங்கு போட்டு விடுவார்கள். மொத்தத்தில் ஊழல் சனநாயகப் படுத்தப் படுகிறது. அதுவும் முட்டாள்களும் சரி சமமாகக் கொள்ளையில் பங்கு கொள்ளும் விதமான சனநாயகம் எவ்வளவு உயர்ந்தது?! இது நல்லதா கெட்டதா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்கள் பெரும் திருடர்களா அல்லது அரசு ஊழியர்கள் பெரும் திருடர்களா என்று கண்டு பிடித்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் பற்றிய சரியான முடிவுக்கு வர முடியும்.

இது தவிரவும் இன்னும் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. எனவே, *தொடரும்*.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!