கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 1/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

சென்ற முறை சிங்கப்பூர் வந்து திரும்பிய போது பயணம் நிறைவடையாமலே திரும்பிய ஓர் உணர்வோடுதான் வண்டியேறினேன். அதனால்தான் சிங்கப்பூர் பற்றிய கடைசி இடுகையின் இறுதியில், "மீண்டும் வருவேன்; அப்படி வரும் போது இன்னும் அதிகமான நாட்கள் இருந்து விட்டுத்தான் செல்வேன்!" என்று தொடையில் தட்டிச் சூளுரைத்துச் சென்றேன். சினிமாப் படங்களில்தான் நாயகன் சூளுரைத்த படி சொன்னதை எல்லாம் சாதித்துக் காட்டுவார். நம்ம வாழ்க்கை என்ன கதை வசனம் எழுதி இயக்கப் படும் படமா? அப்படியே சாதித்துக் காட்ட? ஏதோ விதியின் புண்ணியத்தில் மீண்டும் சிங்கப்பூர் வரும் வாய்ப்புக் கிடைத்தது. சென்ற முறை இரண்டு வாரமா இரண்டு வருடமா என்கிற தெளிவில்லாமல் வந்திறங்கினேன். இரண்டே வாரங்கள் கூட இராமல் வந்த வழியே வண்டியேறினேன். ஒன்று மட்டும் இந்த முறையும் மாற வில்லை. அது அதே தெளிவின்மை. எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பது யார் கையில் இருக்கிறது என்று இன்றுவரை புரிபடவில்லை. ஆனால், குறைந்த பட்சம் நான்கு மாதங்கள் ஓட்டி விடலாம் என்கிற உத்திரவாதம் இருக்கிறது. அதனால் சென்ற முறை போலல்லாமல் இம்முறை முழு நிறைவோடு திரும்ப வேண்டும்.

முதல் முறை வந்த போது இந்தியாவை மட்டும் பார்த்திருந்ததால் சிங்கப்பூர் பற்றி எழுதியதில் எல்லாத்தையுமே இந்தியாவோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பேன். இடையில் ஒரு மாதம் இலண்டன் சென்று வந்த பின் இலண்டன் பற்றிய இடுகைகள் அனைத்திலும் எல்லாத்தையுமே இந்தியாவோடும் சிங்கப்பூரோடும் ஒப்பிட்டுப் பேசியிருப்பேன். இந்த முறை என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொல்லவா வேண்டும்?! சிங்கப்பூரை இந்தியாவோடும் இலண்டனோடும் ஒப்பிட்டுப் பேசுவேன். பொறுத்தருள்க.

சென்ற முறை தனியாக வந்திருந்தேன். இந்த முறை குடும்பத்தோடு வரும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்தான் சாத்தியப் பட்டது. எப்போதும் போல் இம்முறையும் அடி தொடியாக அரக்கப் பறக்கக் கிளம்ப நேர்ந்தது. மகளுடைய மேற்படிப்பு (LKG) நிறைவடைய இன்னும் ஒரு மாத காலம் மிச்சமிருக்கிறது. கிளம்பும் நாளன்றே அவளுடைய பள்ளிக்குச் சென்று கணக்கை முடித்துக் கொண்டு, வீடும் வீடு சார்ந்த மற்ற பணிகளையும் அரை குறையாக முடித்துக் கொண்டு வண்டியேறினோம். வழக்கம் போல் கிளம்பும் போது சொல்கிற கெட்ட பெயரும் கிடைத்திருக்கும். ஊரில் இருக்கும் உறவுகளுக்கு வந்து வழியனுப்பி வைக்கக் கூட நேரம் கிடையாது. வழியனுப்பி வைக்கும் அளவுக்கு இந்தப் பயணம் அப்படியென்ன முக்கியத்துவம் மிக்கது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. நான் மட்டுமாக இருந்தால் யாரும் சீந்தப் போவதில்லை. உடன் மனைவியும் வருவதாலும் ஒன்றும் பெரிதாக மாறி விடப் போவதில்லை. எங்களோடு உடன் வரும் மகளும், மகளா மகனா என்று தெரியாத என் மனைவியின் வயிற்றுக்குள் இருக்கும் இன்னொரு குழந்தையுமே அந்த முக்கியத்துவத்துக்குக் காரணம்.

பெரும்பாலும் வெளிநாடு போகிற யாரும் அந்நேரத்தில் குழந்தையைச் சுமக்கும் மனைவியை அழைத்துக் கொண்டு போவதில்லை. முன் பின் தெரியாத இடத்தில் ஆள் வசதி இல்லாமல் அவதிப் படுவதைத் தவிர்ப்பதற்காக மகப்பேற்றைச் சொந்த மண்ணிலேயே வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகக் கருதப் படுகிறது. அப்படியிருக்கையில், இன்னுமொரு மாதமானால் விமானப் பயணமே செய்ய முடியாது என்கிற மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், "அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று குடும்பத்தோடு கிளம்பி விட முடிவு செய்தோம். தொழில் நுட்ப ரீதியாக மகப்பேற்றுக்கான வசதிகள் இந்தியாவை விட நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும். அதுவல்ல பிரச்சனை. அந்த முக்கியமான நேரத்தில் உடனிருக்க உருப்படியான ஆள் யாரும் இருக்கப் போவதில்லை. அதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்கிற தெளிவேதும் இல்லை. ஆனால் சமாளித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை மட்டும் கொஞ்சம் இருந்தது. கொஞ்சம்தான்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பயமுறுத்தினார்கள். எதுவுமே பயமுறுத்துவதற்காகச் சொல்லப் பட்டதல்ல. பையன் சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறானோ என்கிற உண்மையான பயத்தில் - அக்கறையில் சொல்லப் பட்டதே என்பதையும் உணர முடிந்தது. "விமானத்தில் ஏற்ற மாட்டார்கள்!", "ஏற்றிக் கொள்வார்கள்; ஆனால் இறங்கும் போது பிடித்துக் கொண்டு, விட மாட்டார்கள்!", "கிளம்பும் முன்பே சிறப்பு அனுமதி பெற வேண்டும்!", "இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வது இந்தியாவில் இருக்கும் மற்றொரு நகரத்துக்குச் செல்வது போலத்தான். பாஸ்போர்ட்டில் வைக்கும் சீலைத் தவிர்த்து வேறு எந்த வேறுபாடும் இல்லை!" என்று வித விதமான கருத்துகள். அதிகார பூர்வமான வழியில் சென்று சரியான பதில் தேடினால், வரும் பதில் அனைத்துமே சுற்றி வளைத்துச் சொதப்புவதாகவே இருந்தது. கேட்கிற கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வது ஏன் அவ்வளவு பெரிய பிரச்சனை என்று தெரியவில்லை.

இதே குளறுபடி இன்னொன்றிலும் ஏற்பட்டது. அதிக பட்சம் எவ்வளவு சுமை கொண்டு செல்லலாம் என்பதற்கு வெவ்வேறு விதமான பதில்கள். பயணச்சீட்டில் 20 கிலோ என்கிறார்கள். எவ்வளவோ சிரமப் பட்டு அதற்குள் அடக்கிக் கொண்டு போனோம். உள்ளே போய், எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டால், "அப்படித்தான் சொல்வோம்; ஆனால் 25 கிலோ வரை கண்டு கொள்ள மாட்டோம்!" என்றார்கள்.  எல்லா இடங்களிலும் நேரடியாகப் பதில் சொன்னால் தன் வேலை போய்விடும் என்கிற மாதிரியே எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்திய நேரம் இரவு பதினொரு மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பினோம். சிங்கப்பூர் நேரம் காலை ஆறு மணிக்கு சிங்கப்பூரில் வந்து இறங்கினோம். மூன்றரை மணி நேரப் பயணத்தில் என்ன தூங்க முடியும்! எரியும் கண்களோடு வந்திறங்கினோம். டாக்சி பிடித்து ஓட்டல் சென்று சேர்ந்தோம். சென்ற முறை தனியாக வந்திருந்தேன். விக்டோரியா ஸ்ட்ரீட்டில் ஓர் ஓட்டலில் தங்கினேன். அதனால் ஓரளவுக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தது. இம்முறை குடும்பத்தோடு வந்து இறங்கினேன். அதுவும் ஓட்டல் இருந்த இடம் லிட்டில் இந்தியா. ஒன்பது நாட்கள் வீடு பிடிக்கும் வரை லிட்டில் இந்தியாவில்தான் இருந்தோம். கொஞ்சம் கூட ஒரு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. முழுக்க முழுக்கத் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு நகரத்தில் இருக்கிற மாதிரியே உணர்வு. "இவ்வளவு சுத்தமாகத் தமிழ் நாட்டில் எந்த ஊர் இருக்கிறது தம்பி?" என்று நீங்கள் சொடக்குப் போட்டுக் கேட்பது நியாயம்தான். லிட்டில் இந்தியாவைப் பொருத்த மட்டில் அது ஒன்று தவிர்த்து மற்ற எல்லாமே இந்தியா மாதிரித்தான் இருக்கிறது. அதையும் கூட உள்ளூர்க் காரர்கள் சுத்தமற்ற இடம் என்றுதான் சொல்கிறார்கள். :)

முதல் நாள் வந்து இறங்கியதும் ஒரு காக்காக் குளியல் போட்டு விட்டு அப்படியே அலுவலகத்துக்கு ஓட வேண்டிய நிலை. கையில் செல்போன் கூட இல்லை. உடனடியாக வாங்கிக் கொடுத்து விட்டு ஓடலாம் என்றால் அதற்குக் கூட நேரம் இல்லை. லிட்டில் இந்தியாவில் வந்து இறங்கிய ஒரே நம்பிக்கையில் "சும்மா போய் சுற்றிப் பார். நம்ம ஊர் மாதிரித்தான் இருக்கும்!" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டேன். கையில் இருந்த மிகக் குறைவான பணத்தைப் பங்கு போட்டுக் கொடுத்து விட்டுப் போனேன். ஓட்டல் நம்பருக்குக் கூட அழைத்துப் பேச வில்லை. 'என்ன ஆனதோ?! எப்படிச் சமாளித்தார்களோ?!' என்று பயந்து கொண்டே திரும்பி வந்து விசாரித்த போது, "தமிழ் நாட்டை விடத் தமிழ் நன்றாகப் பேசுகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் உணர்வே வரவில்லை!" என்றாள். "அப்பாடா!" என்று அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மகளும் "எல்லா இடத்திலும் தமிழ் நல்லாப் பேசுறாங்கப்பா; இந்த ஊர் ரெம்பக் க்ளீனா இருக்குப்பா; எனக்கு இந்த ஊர் ரெம்பப் பிடிச்சிருக்குப்பா; இங்கேயே இருந்துக்கலாம்ப்பா!" என்றாள். 'நம்ம கையில் என்னப்பா இருக்கிறது!' என்று எண்ணிக் கொண்டு, "சரிம்மா!" என்றேன்.

நாங்கள் தங்கி இருந்த ஓட்டலுக்குப் பின்னால்தான் முஸ்தபா சென்டர். ஓட்டலைச் சுற்றிலும் ஏகப் பட்ட தமிழ்க் கடைகள். சரவண பவன், முருகன் இட்லிக் கடை, தலப்பாக்கட்டு பிரியாணிக் கடை, அஞ்சப்பர், பொன்னுசாமி, ஆனந்த பவன், கோமளாஸ் (விடுபட்ட கடைக்காரர்கள் மன்னிக்கவும்!) என்று ஏகப் பட்ட கடைகள். தினமும் வேளைக்கு ஓரிடத்தில் என்று ஒவ்வொரு நாளும் வித விதமாக வயிறு முட்டச் சாப்பிட்டோம். வேறு எந்த இடத்தில் தங்கியிருந்தாலும் இவ்வளவு எளிதாகச் சமாளித்திருக்க முடியாது. முதன்முறையாக இந்தியாவில் இருந்து வரும் எல்லோருமே ஆரம்பத்தில் கொஞ்ச நாள் லிட்டில் இந்தியாவில்தான் தங்க வேண்டும் என்று நுழைய அனுமதி கொடுக்கும் போதே ஆணையிட்டால் நன்றாக இருக்கும். அப்படித் தங்கி விட்டால் இந்த நாடே அவர்களுக்கு நிறையப் பிடித்து விடும். வேறு பல நாடுகளைப் பார்த்து விட்டு வருகிறவர்கள் அந்த ஒரு காரணத்துக்காகவே சிங்கப்பூரை மட்டமாக எண்ணுவதையும் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமை மாலை, லிட்டில் இந்தியாவில் மூச்சு முட்டும் அளவுக்குக் கூட்டம். "இந்தியாவில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் எல்லோரையுமே ஒரே இடத்தில் சந்திக்க விரும்பினால் ஞாயிற்றுக் கிழமை மாலை லிட்டில் இந்தியா வாருங்கள்!" என்று பின்னர் எங்கோ கேள்விப் பட்டேன்.

ஒன்பதாவது நாள் லிட்டில் இந்தியாவை விட்டுக் கிளம்பும் போது கிளம்பவே மனம் இல்லை. எல்லாமே எட்டிப் பிடிக்கிற தொலைவில் இருந்து பழகி விட்டு எங்கோ ஒரு மூலையில் போய் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறோமே என்று பெரும் கவலையுடன்தான் கிளம்பினோம். ஆனால் கவலைப் பட்ட அளவுக்கு இல்லை. ஒவ்வொரு பகுதியும் அனைத்து வசதிகளும் அருகிலேயே கொண்ட ஒரு தன்னிறைவான பகுதியாகவே இருக்கிறது. எனவே, இந்தப் பகுதியில் இருக்கிறோம் அந்தப் பகுதியில் இருக்கிறோம் என்று எந்தப் பகுதியில் இருப்போருமே வருத்தப் பட வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, நாங்கள் வீடு பிடித்துள்ள இடம் பிடோக் (BEDOK). பிடோக்கில் இருக்கும் ஒருவர் அவருக்கு வேண்டிய எல்லா சாமான்களையுமே பிடோக்கிலேயே வாங்கிக் கொள்ள முடியும். வீட்டைச் சுற்றி ஏகப் பட்ட கடைகள். உணவு, துணிமணிகள், இதர வீட்டு உபயோகப் பொருட்கள்... எல்லாமே வீட்டுக்கு அருகிலேயே நடந்து செல்லும் தொலைவில் கிடைக்கும். இது போன்ற ஓர் அமைப்பு மும்பையில் ஓரளவுக்கு இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்றபடி இந்தியாவில் வேறெங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எல்லா ஊர்களிலுமே இது பற்றிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அடிக்கடி யாராவது ஓர் அரசியல்வாதி வந்து "நம்ம ஊரை சிங்கப்பூராக்கப் போகிறேன்!" என்று அல்வாக் கொடுக்கிறார்.

சுற்றிப் பார்த்தால் இங்கே இருக்கிற உணவகங்களின் எண்ணிக்கை வீடுகளின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருக்கும் போலத் தெரிகிறது. வீட்டில் சமைக்கும் பழக்கம் என்பது மிகக் குறைவு என்று கேள்விப் பட்டேன். அதனால் இங்கே வெளியில் உணவு சாப்பிடுவதும் பெரிய அளவில் பணப்பையை ஓட்டை போடுவதில்லை. அப்படி இருந்திருந்தால் வீடுகளில் சமைக்க ஆரம்பித்திருப்பார்களே! தெருவுக்கு ஒரு கடை இருபத்தி நான்கு மணி நேரக் கடையாக இருக்கிறது. அப்படியானால் என்ன அர்த்தம்? இரவெல்லாம் சாப்பிட வருகிறார்கள் என்றுதானே கொள்ள வேண்டும்? நாம் மதுரையைத் தூங்கா நகரம் என்கிறோம். தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருவோர் போவோருக்கு ஒரு நல்ல மையமாக இருப்பதால், அதுவும் அப்படி வருவோர் போவோருக்கு திசைக்கு ஒன்றென ஐந்தாறு பேருந்து நிலையங்களைக் கொண்டிருப்பதால் ஒரு நிலையத்துக்கு இருபது கடைகள் என்று வைத்துக் கொண்டாலும் மொத்தம் நூறுக்கு மேலான கடைகள் திறந்திருக்கின்றன. ஆனால், சிங்கப்பூர் அப்படியில்லை. முழுக்க முழுக்க உள்ளூர்க்காரர்கள் மட்டுமே உண்டு மகிழ்வதற்காக இருக்கும் கடைகள் இவை. 

இரவு வாழ்க்கையை இங்கே மிகவும் விரும்புகிறார்கள். எனக்கும் இரவு வாழ்க்கை மிகவும் பிடிக்கும். இரவில் ஊர் சுற்றுவது பிடிக்காது (இருட்டுவதற்குள் வீடு திரும்பி அடைந்து விடுவதுதான் பிடிக்கும்!). வீட்டுக்குள்ளேயே விழித்திருந்து விடியும் வரை வெட்டிக் கதைகள் பேசுதல் மிகவும் பிடிக்கும். அப்படி இரவெல்லாம் விழித்திருக்கும் போது ஒருவேளை வெளியேறிச் செல்ல நேர்ந்தாலும் வெளியுலகம் முழுக்க வெளிச்சமாக இருந்து வரவேற்றால் அது ஓர் அழகுதானே. அதற்கொரு காரணமாக நான் கணிப்பது - இந்த ஊரின் தட்ப வெப்ப நிலை. தூக்கம் வராத அளவுக்கு வியர்க்கும் ஊரில் இடையில் எழுந்து நடமாடுவது ஒன்றும் பெரிய அதிசயம் அல்லவே. இதுவே குத்திக் கிழிக்கும் குளிராக இருந்தால் இழுத்திப் போர்த்தி உறங்குவதுதானே எல்லோருக்கும் பிடித்த வேலையாக இருந்திருக்கும்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. இங்கே காத்தாடுகின்றது....நீங்கள் யாருக்கும் மொய் வைப்பதில்லைபோலும்..

    நட்சத்திரப் பதிவர் என்றாலும் பதிலுக்குப் பதில் என்ற அளவிற்கே பின்னூட்டம் கிடைக்கும்.

    அல்லது ஏதாவது ஒரு கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒரு பயலும் திரும்பிப் பார்க்கமாட்டான்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராவணன் அவர்களே.

    உண்மைதான். ஆளே இல்லாத கடையில்தான் டீ அடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைத்தான் அறிமுக இடுகையிலேயே சொல்லி விட்டேனே. :)

    பதிவுலக நடைமுறைகள் பற்றி நானும் ஓரளவு அறிவேன். எழுதுறதுக்கே இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கிறது. இதில் மொய் வேறு வைக்க ஆரம்பித்தால் பதிலுக்கு மொய் கிடைக்கும். ஆனால் இடுகை மாதம் ஒன்று கூட இட முடியாது.

    இருக்கட்டும். அதுதான் ஏற்கனவே சொல்லி விட்டேனே. பதிவுலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுதும் சக்தி நமக்கில்லை. அதுக்கெல்லாம் ஒரு இது வேணுமில்லையா! ஏதோ முடிந்ததைச் செய்து கொண்டு கிடைக்கிற மொய்யில் கிளர்ச்சி அடைந்து கொள்ள வேண்டியதுதான். :)

    பதிலளிநீக்கு
  3. அது கோமல விலாஸா அல்ல கோமலாஸா? நான் இது வரை சிங்கபுரம் சென்றதில்லை. குழந்தை அங்கு பிறந்ததா இல்லையா? அறிய ஆவல். தொடருங்கள் சில சமயம் யாரும் டீ ஆத்த வரமாட்டாங்க தான் அதப்பார்த்தா நாம இடுகை போட முடியுமா? சிங்கபுரத்தில் நம் பதிவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களையாவது தொடர்புகொண்டிருக்கலாம். உறவுகள் இல்லாத நிலை நீங்கியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. கோமள விலாஸ் என்றும் இரண்டு இடங்களில் பார்த்தேன். கோமளாஸ் என்றும் ஒன்று இருக்கிறது. கோமாளாசில்தான் நாங்கள் சாப்பிட்டது.

    குழந்தை இங்குதான் பிறக்கும். இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.

    பதிவர்கள் இருவரோடு இன்றுதான் தொடர்பு ஏற்பட்டது. விரைவில் ஒவ்வொருவராகச் சந்திக்க முடியும் என்றெண்ணுகிறேன். பார்க்கலாம். மற்றபடி, சுற்றிலும் நம்மவர்கள் நிறைய இருக்கிறார்கள். நண்பர்கள் - தூரத்து உறவினர்கள் எல்லாம் உள்ளனர்.

    உங்கள் அக்கறை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நட்சத்திர வாழ்த்துக்கள் பாரதிராஜா.

    பதிலளிநீக்கு
  6. பழைய கடை கோமளவிலாஸ் என்றும் புதுசா இப்போ இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கடை கோமளாஸ் என்றும் நடந்துகொண்டிருக்கிறது.

    எனக்கு பழைய கடைதான் பிடிக்கும். முந்தி எல்லாம் வாழை இல்லை போட்டு நம்மூர் மாதிரி என்ன வேணும் என்றெல்லாம் கேட்டுப் பரிமாறுவார்கள்.

    இப்ப காலமாற்றம் நாகரிகமுன்னு பழைய
    அன்பான உபசரிப்பெல்லாம் இல்லை:(

    சிங்கைப் பயணப் பதிவுகள் நம்ம பக்கத்தில் ஏராளமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. நன்றி துளசி கோபால் அவர்களே. நாகரிகத்தின் தாக்கம் நல்லாயில்லைதான்.

    நேரம் கிடைக்கும் போது நிச்சயம் உங்கள் தளத்துக்கும் வந்து நிறைய வாசிக்கிறேன். ஒரே ஊரை இருவர் எப்படி வெவ்வேறாகப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் அல்லவா!

    பதிலளிநீக்கு
  8. இன்னொரு முறை சிங்கப்பூர் போய் வந்த மாதிரி இருந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி