வைகோ - அம்புட்டுத்தேன்

சுற்றியிருந்த எல்லோரும் நிராகரித்த பின்னும் கூட என்னால் ஒரு சிலரை அப்படி எளிதில் புறந்தள்ள முடிந்ததில்லை. அப்படியான ஒருவர் சிதம்பரம் முதலில். அவருடைய அரசியலை மிகச் சிறிய வயதில் இருந்து கவனித்து வருகிறேன். அவரைப் போன்ற தலைவர் கிடைக்கத் தமிழர்கள் தம் தகுதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. வயிற்றுப் பிழைப்புக்காக அரசியலில் இருக்கும் ஆள் அல்ல அவர் என்று எண்ணினேன். மூப்பனாரின் மறைவுக்குப் பின் - தன்னை ஒரு தேசியத் தலைவர் போல வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் தன் தொகுதி மக்களே தன்னை மண்ணைக் கவ்வ வைத்த பின் அவரின் அரசியல் வெகுவாக மாறியது. மண்ணுக்கேற்ற அரசியலைப் பழக முயன்றார். அதற்கும் கூட மக்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கினேன். ஆனால் பின்னாளில் அவரும் ஒரு பெரும் கொள்ளைக்காரனைப் போல் - கூட்டம் சேர்ப்பவனைப் போல் அரசியல் செய்யத் தொடங்கி, முழு நம்பிக்கையையும் இழந்து விட்டார்.

அப்படியான இன்னொருவர் வைகோ. இவரையும் மிகச் சிறிய வயதிலிருந்து கவனித்து வருகிறேன். அப்போதிருந்தே அவரைக் கொண்டாடியவர்களும் உண்டு; முழுமையாக வெறுத்தவர்களும் உண்டு. இரண்டுமே தவறான காரணங்களுக்காக. எல்லோருமே அவருடைய பேச்சாற்றலைப் பெரிதாகப் பேசுவார்கள். எனக்கு ஒரு போதும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. நாடகத்தனமாக இருக்கும். எரிச்சலூட்டும். இன்னும் சொல்லப் போனால், பேச்சில் உப்புக் கரிக்கும் அளவுக்கு உணர்ச்சியைக் கொட்டும் எவரையுமே எனக்குக் கண்டதும் பிடிக்காமல் போய்விடும். ஆனாலும் இவர் மீது அப்படி ஆனதில்லை. அதற்குப் பல காரணங்கள்:
1. திராவிட அரசியல்வாதிகளில் ஓரளவு மனச்சாட்சியும் நேர்மையும் உடையவராக நடந்து கொண்டார். மற்ற திராவிடக் கட்சிகளைப் போலன்றி, இலாப-நட்டக் கணக்குப் போடாமல் விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்தார்.
2. பணபலம், ஆள் பலத்தை நம்பி அரசியல் நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராடும் ஒரு பண்பாட்டை முன்னிறுத்த முயன்றார். அதில் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றார் என்பது வேறு கதை.
3. இது ஒரு குறியீடு தான். ஆனால் முக்கியமானது. அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் அவைக்கு ஒழுங்காகச் சென்றார்கள். அவரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டார்.

அரசியலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லாக் கட்சிகளுமே அளவிலாத சமரசங்கள் செய்துள்ளன. மாற்றி மாற்றிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்திருக்கின்றன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அதனால் எந்த ஒரு கட்சியையும் தலைவரையும் தனிமைப்படுத்தி விமர்சிக்க முடியாது. அப்படி இவரும் பல தவறுகளைச் செய்திருக்கிறார்.
1. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்று சொல்லி சிறையில் போட்டுச் சவக்கிய ஜெயலலிதாவிடமே போய்க் கூட்டணி வைத்தது.
2. எந்தத் திமுகவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாரோ அந்தத் திமுகவோடே போய்க் கூட்டணி வைத்தது.
3. மூலை முடுக்கெல்லாம் போய் மோதி புகழ் பாடிவிட்டு அவர் பதவிக்கு வந்த நாளிலேயே முறுக்கிக் கொண்டு வெளியே வந்தது.
4. மதுவுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் செய்து விட்டு, மகன் சிகரெட் தொழிலுக்கு வக்காலத்து வாங்கியது.

இப்படிப் பல. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது என்று அவை அனைத்தையும் புரிந்து கொண்டேன். இந்த எல்லாக் கூட்டணிகளில் இருந்த போதும் அவர் தவறாமல் செய்த தவறு, கூட்டணித் தலைவர்களின் புகழ் பாடுவதில் சொந்தக் கட்சி அடிமைகளையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இறங்கிப் போய்ப் பேசுவது. இந்த நிரந்தமற்ற வாழ்வில் - நாளைக்கே உடையப் போகிற ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இப்படியெல்லாம் தன் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமா? இது தன்மானக் குறைவு அல்லவா? உங்களைப் பற்றி மாற்றுக் கட்சியினர் யாராவது இதுவரை இப்படிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறீர்களா? நாளையே கூட்டணியை விட்டு வெளியே வந்து துண்டைத் தூக்கித் தூக்கி விட்டுக் கொண்டு கத்தும் போது தன் கட்சிக்காரனே தன்னை எப்படிப் பார்ப்பான் என்று எண்ணியதே இல்லையா? கூடவே இருந்து குடைச்சல் கொடுப்பவர்களைத் தான் எழுந்து நின்று வரவேற்பார்கள் அரசியலில். இது கூடத் தெரியாமலா இவ்வளவு காலம் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

அதிமுகவிடம் 1500 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்குகளைப் பிரிப்பதற்காகத்தான் மூன்றாம் அணி உருவாக்கி இருக்கிறார் என்று சொன்னதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. விலை போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால் வெளியில் சித்தரித்த அளவுக்கு இழிவாக இராது என்று நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். எப்போதும் ஓடோடி வந்து மக்கள் பிரச்சனைகளில் முன்னின்று போராடிய ஒருவரை மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கிற போது, தன் தகுதிக்குச் சற்றும் பொருத்தமில்லாத - தொகுதிக்குத் தொடர்பில்லாத - அரசியலுக்கே சம்பந்தமில்லாதிருந்து குறுக்கு வழியில் சீட்டு வாங்கி வருகிறவர்களிடமெல்லாம் தோற்கும் போது, அம்மனிதன் நிலை குலைந்து தரம் தாழ்வது தனி மனித நோக்கில் இயல்பானதே. ஆனால் அதன் பின்பும் நாம் அவரைத் தாங்கிப் பிடிக்க முடியாது. இனியும் அவரை மக்களால் ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன் இப்போது.

என் சிறு வயதில் எல்லோரும் இந்தியக் கிரிக்கெட் அணியின் தோல்விகளுக்கு சூதாட்டந்தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை. ஆனால் சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் எனக்குப் பிடித்த அஜய் ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் ஒரே மாதிரி லட்டு மாதிரி அடித்துக் கொடுத்து வெளியேறிய வேளையில் அதை ஏற்றுக் கொண்டேன். அதுபோல, வைகோவின் கடந்த ஒரு வாரப் பேச்சில் ஒன்று உறுதியாகப் படுகிறது - அவர் விலை போய் விட்டார். அதற்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றும் எனக்குப் புரியலாம். ஆனால் அவர் விலை போய் விட்டார் என்ற கருத்து மாறப்போவதில்லை. இன்னமும் அவர் பல மக்கள் நலப் பிரச்சனைகளில் முன்னின்று செயல்படுவார். அவற்றைக் கொச்சைப்படுத்த மாட்டேன். ஆனால் அவர் பற்றிய நகைச்சுவைகளைப் படித்தால் மனம் விட்டுச் சிரிப்பேன். அவர் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பவர்களைக் கண்டு நகைக்க மாட்டேன். அவரைப் போலவே அவருடைய புதிய கூட்டணிக் கட்சியினர் அவரைப் புகழ்ந்து தள்ளலாம்; பழைய கூட்டணிக் கட்சியினர் காய்ச்சி எடுக்கலாம். விபரமானவர்கள் தெளிவாகத் திட்டமிட்டு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு நட்டாற்றில் விடலாம். அப்போதும் அவரைப் பார்த்துப் பரிதாபப்படலாம். ஆனால் அது முன்பை விடக் குறைவாக இருக்கும். ஏனென்றால், இப்போது அவர் விலை போய் விட்டார் என்று நம்பி விட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்