மோதியும் அவர் அரசியலும்

கத்லால் இடைத்தேர்தல் வெற்றி மோதி மற்றும் அவருடைய அரசியல் பற்றிய என் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யப் பணிக்கிறது. இந்திய அரசியலில் அவரை விரும்புவது மனிதாபிமானமற்ற குற்றமாகிவிடும் என்பதை நான் அறிவேன். தீவிரவாதிகளுக்கு எதிரான அவரது இரும்புக் கரம் பாராட்டப்பட வேண்டும். அதே வேளையில், தன் சொந்த 'அப்பாவி' மக்களையே கொடூரமாகக் கொன்று குவிக்க ஒரு முதலமைச்சர் பச்சைக் கொடி காட்டுவது நிச்சயமாக ஒரு மூன்றாம் தரமான வேலை. ஓர் உண்மையான தேசியத் தலைவர் அப்படியொரு வேலையைச் செய்ய முடியாது. ஒரு சனநாயக நாட்டில் அவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு ஒரு முதலமைச்சர் எவ்வளவு தரம் தாழ்ந்து போக முடியும் என்பதை நிரூபித்த பெருமை அவரையே சாரும்.

கோத்ரா ரயிலில் தீயிட்ட கொடூரர்கள் அனைவரையும் பிடித்து ஊடகங்களின் முன்னிலையில் அவர்களை வீதிகளில் தூக்கில் தொங்க விட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன். அவர்களுக்கு அத்தகைய தண்டனை தகும். ஆனால், அதைச் செய்தோர் பிறந்த மதத்தில் பிறந்த ஒரே பாவத்துக்காக அம்மதத்தைச் சேர்ந்த அப்பாவிகள் எப்படிப் பொறுப்பாக முடியும்? எந்தத் தண்டனையும் தவறு செய்தவர்களுக்குக் கொடுக்கப் பட வேண்டும்; சாதி, சமூகம், மதம், பகுதி, இனம், மொழி, தேசியம் போன்ற மக்களைப் பிரிக்கும் எந்தவிதமான பிரிவையும் பொறுத்து அல்ல - அதைச் சார்ந்த மற்றவர்களுக்கு அல்ல என்பது மிக அடிப்படையான அறிவு. 

ஒரு பிரிவைச் சேர்ந்த பலமான ஒருவர் செய்யும் தவறான செயல்களுக்கு அதே பிரிவைச் சேர்ந்த பலவீனமான வேறு சிலரை வதைப்பது நியாயம் என்று பேசும் ஆட்களும் இருப்பதை நான் அறிவேன். மென்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்படிப் பேசுவோரெல்லாம் இன்னும் உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் எல்லோருமே அப்படி யோசிப்பதில்லை என்பதுதான். அறிவுள்ளோர் இன்னும் உள்ளார். சுருங்கச் சொன்னால் அப்படிப் பேசுவது மனிதத் தன்மையற்ற - காட்டுமிராண்டித் தனமான செயல். எந்தப் பிரிவினருக்கு எதிராகவும் நடத்தப்படும் எந்த இயக்கத்தைப் பற்றியும் இதுதான் என் பார்வை. யூதர்கள், பிராமணர்கள், முகமதியர்கள், அல்லது அவர்களில் ஒரு சாரார் செய்யும் சேட்டைகளுக்குத் தண்டனையாக மொத்த இனமே குறி வைக்கப் படும் எந்த இனமானாலும் சரி, அவர்கள் மீதான தாக்குதல்களை நான் ஆதரிக்க வில்லை. முதலில் அது ஒரு கோழைத்தனத்தின் அடையாளம். இரண்டாவது, அதுதான் தலைவர்களையும் அறிஞர்களையும் சாமானியர்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது.

ஒரு பிரிவைச் சேர்ந்த சிலர் செய்யும் தவறுகளுக்கு அப்பிரிவைச் சேர்ந்த எல்லோருமே கொன்றழிக்கப் பட வேண்டும் என்றால், நீங்களும் நானும் கூட இவ்வளவு காலம் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். குற்றவாளிகள் எல்லாப் பிரிவுகளிலும் இருக்கிறார்கள். அதில் சிலர் ஏதோவொரு தவறு செய்தால் உடனடியாக அந்த இனத்தையே அழித்தொழிக்கும் வேலையில் முழு மூச்சாக இறங்கி விடுவது நல்ல புத்திசாலித்தனமா? அப்படித்தான் நீங்கள் யோசிப்பீர்கள் என்றால், ஒரு மாநிலத்தின் தலைசிறந்த அரசியல்ப் பதவி உங்களுக்கு லாயக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உங்களைப் போன்றே சிந்திக்கும் அரை வேக்காட்டுச் சாமானியர்களுடன் தெரு முக்குகளில் உட்கார்ந்து விவாதம் புரியத்தான் சரிப்பட்டு வருவீர்கள்.

அதெல்லாம் சரி. அதற்காக அவர் முதலமைச்சர் என்ற முறையில் செய்துள்ள சாதனைகளை மறைக்க முயல்வதும் ஏற்றுக் கொள்ள மறுப்பதும் சரியாகி விடுமா? ஒரு சிறந்த நிர்வாகி என்ற முறையில் அவர் செய்திருக்கும் நற்பணிகளைப் பற்றி எடுத்துரைக்க எவருக்கும் தைரியம் வர மறுக்கிறது. அவர் செய்யும் எதையும் பாராட்டி விட்டால் நம் மீது ஏதாவது முத்திரை குத்தப் பட்டு விடுமோ என்று பயப்படுகிறோம். அவர் ஓர் அருமையான நிர்வாகி என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபித்து விட்டார். அவருடைய மக்களை அவர்கள் இதுவரை கண்டிராத - அசாதாரண ஆட்சிமுறைக்குப் பழக்கப் படுத்தி வருகிறார். அப்படியில்லாமல் இரண்டாவது முறையாக அவரால் வென்றிருக்க முடியாது. 

மோதியின் வேட்பாளருக்கு (அவரை பா.ஜ.க.வின் வேட்பாளர் என்று சொல்ல மாட்டேன்) ஏன் வாக்களித்தோம் என்று கத்லால் முஸ்லிம்கள் விளக்கிச் சொல்வதைப் பார்க்கும் போது உண்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன். கேமரா முன் அப்படிப் பேசுவதற்காக அவர்களுக்குக் காசு கொடுக்கப் பட்டது என்று சொல்பவர்களை நான் கண்டு கொள்ளப் போவதில்லை. என்னோடு இந்துக் கோயில்களுக்கும் வந்த என் நண்பர்களின் முஸ்லிம் தெருவில் வளர்ந்த எனக்கு (நானும் அவர்களுடைய மசூதிகளுக்குள் அது போல் போயிருக்கிறேனா என்பது போன்ற அற்பான கேள்விகளை யாரும் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) இது போன்ற நடப்புகள் உணர்ச்சிவசப் பட வைக்கின்றன. இதற்கு சரியான முறையில் மோதியும் பதிலுதவி செய்ய வேண்டும் என்று மனமார ஆசைப் படுகிறேன்.

இது ஒரு சமூக நல்லிணக்கத்தின் அடையாளமில்லையா? நீண்ட காலமாகத் தன் எதிரி மீது ஒரு சமூகம் சுமந்து வந்த கசப்பான உணர்வுகளுக்கு முடிவு கட்டப்போவதன் ஆரம்பமில்லையா இது? மோதியை அவர் மீதிருக்கும் அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுவிக்கச் சொல்லி இதை எழுத வில்லை. 2002 கலவரத்தில் அவருக்குத் தொடர்பே இல்லை என்று வாதிட வில்லை. நான் செய்ய முயல்வதெல்லாம், ஒரு சுத்தமான அரசியல்வாதியின் - இனியொரு முறை கண்டிப்பாக வெளிவரப்போகாத கேவலமான ஒரு பக்கத்தோடு சேர்த்து அவருடைய நல்ல பக்கத்தையும் பற்றிப் பேசுவது. அவ்வளவுதான்.

அரசியல் எப்போதுமே திருட்டும் ஊழலும் நிறைந்த கொள்ளைக் காரர்களின் வியாபாரமாகத்தான் இருந்து வருகிறது. இந்த நாட்டின் எந்த சாமானியனையும் போலவே, அப்படிப்பட்டோரையே அதிகம் பார்த்து வருவதால் (சமீப காலங்களில் அப்படிப் பட்டோரை மட்டுமே பார்க்க முடிகிறது), ஒரு சுத்தமான அமைப்பு என்பது மிக அடிப்படையான தேவையாக இருக்க வேண்டும் என்ற போதிலும் அதுதான் நம் தலைசிறந்த எதிர் பார்ப்பாக இருக்கிறது இப்போதைக்கு. நம்முடைய நாட்டில் அப்படியோர் அரசைப் பார்ப்பதென்பது பேரதிசயமாக இருக்கிறது. நல்லது எதுவுமே நடக்க வாய்ப்பில்லாத ஒரு மண்ணில் அதையெல்லாம் நடத்திக் காட்டியிருக்கிறார் இவர். மதச் சார்பற்ற மாமனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர் போன்ற மற்றவர்கள் இந்த ஒரு பாடத்தை அவரிடம் கற்றுக் கொண்டால், அவரைப் பெருமையாகப் பேச எனக்குக் காரணமே கிடைக்காது. இதைப் படிக்கும் உங்களில் சிலரை அது மகிழ்ச்சிப்படுத்தும் என்பதையும் நன்கறிவேன்.

கருத்துகள்

  1. nalla sinthanai nanbarey...pseudo-secularists can learn a thing or two from Modi..

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை. ஆயினும் மோடி பற்றி எழுதினால் யாரேனும் ஏசுவார்களோ என்ற தற்காப்பு உணர்ச்சியே கட்டுரையில் மிகுதியாகத் தெரிகிறது. உண்மையைச் சொல்ல அஞ்ச வேண்டியதில்லை. மோடியின் தனிப்பட்ட இணையதளம (http://www.narendramodi.in/)சென்று பாருங்கள். அப்போது தான் அவர் செய்யும் அற்புதங்கள் முழுமையும் உங்களுக்கு தெரியவரும்.
    -சேக்கிழான்

    காண்க: எழுதுகோல் தெய்வம் (http://saekkizhaan.blogspot.com)

    பதிலளிநீக்கு
  3. நன்றி சேக்கிழான் அவர்களே. உண்மை. "நீ இப்படி ஒரு ஆள்" என்று முத்திரை குத்தி விட்டார்களே ஆனால் அதன் பின்பு நாம் எதைச் சொன்னாலும் ஏற்க ஆள் இல்லாமல் போய் விடும். அதனாலேயே அப்படிப் பேச வேண்டியுள்ளது. அவருக்கும் எவ்வளவு சிறப்பான ஆட்சி கொடுத்தாலும் காலம் முழுக்க இது ஒரு கறையாகத் தொடரத்தான் செய்யும். அதற்காகவே அவருடைய சாதனைகளைக் கூட மறைக்கும் முயற்சிகளும் ஏற்க மறுக்கும் நிலையும் தொடரும். வலைத்தளம் பகிர்ந்தமைக்கு நன்றி. நானும் அதை முன்பே பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி