நாத்திகம் - இன்னொரு மதம்!


இந்தக் கேள்விக்கு நம் வாழ்நாளில் என்றும் ஓர் உறுதியான விடை கிடைக்காமல் போகலாம் அல்லது இந்தப் பூவுலகில் பிறக்கும் எவருக்குமே முற்றிலும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாதிரியான ஒரு பதில் கிடைக்காமலே போகலாம். கேள்வி? கடவுள் இருக்கிறாரா? தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டால் குழப்பமான பதிலே கிடைக்கிறது. இல்லை என்பதற்கான ஏற்கத் தக்க தர்க்க ரீதியான விளக்கம் கிடைக்காத போது என் பதில் நேர்மறையாக உள்ளது. இருக்கிறது என்பதற்கான ஏற்கத் தக்க ஆன்மீக விளக்கம் கிடைக்காத போது என் பதில் எதிர் மறையாக உள்ளது. உங்கள் விளக்கம் என்னவாக இருந்தாலும், நான் உறுதியாக நினைப்பது என்னவென்றால், இந்த உலகம் இவ்வளவு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் வலிகளுக்கும் வன்முறைகளுக்கும் போர்களுக்கும் பசிக்கொடுமைக்கும் தகுதியானதில்லை. பிறந்த குழந்தை முதல் (இன்னும் சொல்லப் போனால் வயிற்றில் இருக்கும் கரு முதல்) பெண்கள் வரை - தள்ளாத முதியோர் வரை எல்லோருமே இவற்றை அனுபவிக்கிறார்கள் என்பது அதை விடக் கொடுமை.

சரியான தர்க்க விளக்கம் இல்லை எனும் போது, என் ஆத்திக நண்பர்கள் சொல்கிறார்கள் - அப்படியொரு விளக்கம் இல்லை என்பதற்காக கடவுள் இல்லை என்று ஆகிவிடாது. மற்றோர் எளிமையான பதில்க் கேள்வியும் கேட்கிறார்கள் - "நிரூபிக்கப் பட்ட விஷயங்களை மட்டும் தான் நீ நம்புவாயா?". அவ்வளவு எளிதாக இல்லாத இன்னொரு தொடர் கேள்வியும் கேட்கிறார்கள் - "உன் தந்தைதான் உண்மையில் உன் தந்தை என்று உனக்கு யார் நிரூபித்தார்கள்?". நம்பிக்கை என்பதன் பொருளே அதற்கு ஆதாரம் தேவையில்லை என்பதே (அல்லது அது இல்லை). அதுபோலவே, ஆன்மீக விளக்கம் இல்லை எனும்போது, என் நாத்திக நண்பர்கள் கேட்கிறார்கள் - எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் முட்டாளா நான் என்று. அவர்களும் மிக எளிமையான ஒரு கேள்வி கேட்கிறார்கள் - "நிரூபிக்கப் படாத எல்லாத்தையுமே நீ ஏற்றுக் கொள்வாயா?". என்ன சொல்வது? "ஆம்" என்றால் முட்டாள் என்பதை எளிதாக நிரூபிக்க வழி வகுத்து விடுவேன். "இல்லை" என்றால், அடுத்ததாக அவர்களிடமும் அவ்வளவாக எளிதாயில்லாத ஒரு தொடர் கேள்வி இருக்கிறது - "பின் கடவுளை மட்டும் ஏன் அப்படி நம்புகிறாய்?".

எந்தப் பக்கமும் நிபந்தனை அற்ற ஆதரவு கொடுக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் எனக்கில்லை. நான் ஒருவன் அப்படிச் செய்துவிட்டால், உலகமெலாம் இருக்கும் நாத்திகர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியான பதில்கள் கிடைக்கப் போவதில்லை அல்லது ஆத்திகர்களுக்கு இதை விடச் சிறப்பான ஆதாரங்கள் கிடைக்கப் போவதில்லை. பதில் கிடைக்காத கேள்விகள் இருக்கும் வரை நான் அந்தரத்தில் தான் நிற்பேன். அதில் எந்தச் சிரமும் இல்லை எனக்கு. இருந்தாலும், அது பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் முன்னெப்போதையும் விடக் கூடுதலான ஆர்வத்தோடு கலந்து கொள்கிறேன். பல புதுப் புது விஷயங்களைக் கொண்டு வருவதால், நாத்திகர்களிடம் ஆத்திகமும் ஆத்திகர்களிடம் நாத்திகமும் பேசப் பிடிக்கிறது. 

சரி. கடவுள் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். யார் அவர்? அவருடைய பெயர் என்ன? இயேசுவா, அல்லாவா, சிவனா, பெருமாளா, அல்லது வேறு ஏதாவது பெயரா? மேலே குறிப்பிட்டவர்களுள் ஒருவரை இதுதான் என் கடவுள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அப்படித்தான் என் பெற்றோர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்; அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். நான் நீங்களாக இருந்திருந்தால் அப்படிச் சொல்லியிருப்பேனா - உங்கள் ஊரில், உங்கள் பெற்றோருக்குப் பிறந்து, நீங்கள் வளர்ந்த சூழ்நிலையில் வளர்ந்திருந்தால்? இல்லை, நீங்கள் தான் என்னுடைய ஊரில், என்னுடைய பெற்றோருக்குப் பிறந்து, நான் வளர்ந்த சூழலில் வளர்ந்திருந்தால் அப்படியே சொல்லியிருப்பீர்களா? நீங்களோ நானோ உலகின் வேறு எங்கோ ஒரு மூலையில் பிறந்திருந்தால் இதையே சொல்லியிருப்போமா? சவுதி அரேபியாவிலோ ஐரோப்பாவிலோ ஆப்பிரிக்காவிலோ பிறந்திருந்தாலும் கூட இதையே சொல்லியிருப்போமா? 

அவருடைய உருவம் எப்படி இருக்கும்? பார்க்க மனிதர்கள் போல இருப்பாரா அல்லது வேறு எது போலாவது இருப்பாரா அல்லது உருவம் அற்றவரா? அவர் ஆணா பெண்ணா அல்லது வேறு ஏதாவதா?

இந்தக் கேள்வி கிட்டத்தட்ட சரியான பதிலுக்கு மிக அருகில் கொண்டு சென்று விட்டது போலத் தெரிகிறது - உலகத்தை யார் படைத்தது... இவ்வளவு விதமான உயிரினங்களோடும் இயற்கை வளங்களோடும் ஒருவரை ஒருவர் சார்ந்தும் அதிசயங்களோடும் கேள்விகளோடும் கூடிய இத்தனை மாபெரிய ஆனாலும் அனைத்துக்கும் இடையில் ஏதோவொரு கோர்வை இருப்பது போன்ற அமைப்பை யார் படைத்தது? ஆனால், அதே கேள்வி கொஞ்சம் சுளுக்கினால் நம்மை மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே அனுப்பி விடுகிறது - அப்படியானால் அதைப் படைத்தவரைப் படைத்தது யார்? அவர் தான்தோன்றியாக இருக்க முடியுமானால், உலகம் ஏன் அப்படி இருக்க முடியாது?! (இன்னொரு துணைக் கேள்வி - உலகமே ஏன் கடவுளாக இருக்க முடியாது?!) எவ்வளவு எளிதான ஆனாலும் சிக்கலான கேள்வி இது!

பெரும்பாலான புரட்சிக்காரர்கள் நாத்திகர்கள். அப்படியானால், அதிலிருந்து ஏதாவது முடிவு எடுத்துக் கொள்ள முடிகிறதா? என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தது இதுதான். நான் ஏதாவது சிக்கலில் இருக்கும்போது, கடவுளை நம்பினால், அவரிடம் சென்று முறையிட்டு அழுதுவிட்டு, அவர் அதைச் சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கையோடு பாரத்தை அவர் மேல் போட்டுவிட்டு, என் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன். அவருடைய இருப்பில் நம்பிக்கையில்லாத போது, பிரச்சனையைத் தீர்க்கும் வரை என்னால் தூங்க முடியாது. அது தீர்க்கப் படும் வரை எனக்குப் பிரச்சனையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்; ஏதாவதொரு தீர்வை நோக்கி உழைக்கச் சொல்லி என்னை நெருக்கடிக்குள்ளாக்கும். ஏனென்றால், எனக்குத் தெரியும் - எனக்காக யாரும் அதைத் தீர்த்து வைக்க மாட்டார்கள்; நான்தான் அதைச் செய்து கொள்ள வேண்டும் என்று.

எனவே, மன அமைதி வேண்டுமானால் எவரும் பார்த்திராத ஏதோவொரு சக்தியை நம்புங்கள். ஆனால், பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டுமானால், நீங்கள்தான் தீர்வுகளைத் தேடி ஓட வேண்டும். அதுதான் உங்களுக்கு நிரந்தரமான - நடைமுறைக்கு ஒத்து வரும் தீர்வுகளைத் தர முடியும். அதுதான் உங்கள் உண்மையான பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்க முடியும். ஆனால், இரண்டுக்கும் இடையிலான நடுப்பாதையையும் நாம் ஒதுக்கித் தள்ளி விட வேண்டியதில்லை. நம் கடமையைச் செய்து கொண்டே அவரிடம் அதிகம் எதிர் பார்க்காமல் கடவுளையும் நம்பலாம். அது இன்னும் கொஞ்சம் புத்திசாலித் தனமான ஆத்திகமாக இருக்கிறது. நம்பிக்கை எந்த விதமான சுயநலக் காரணங்களும் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு உலகியல் ஆசைகள் காரணமாக இருக்கக் கூடாது. அப்படித்தானே நம்முடைய பெரும்பாலான ஆன்மீகவாதிகள் ஆன்மிகம் பற்றிச் சொல்கிறார்கள்.

ஆனால், பெரும்பாலான சாமானியர்கள் (உங்களையும் என்னையும் போன்றவர்கள்) கடவுளை வணங்குவதன் காரணம் - அவர்தான் நாம் போய் முறையிட்டு அழும் போதெல்லாம் நம்மை நம் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறார் என்று நம்புகிறோம். நம்மிடம் இருக்கும் எல்லாமே அவரால் கொடுக்கப் பட்டவை என்று நம்புகிறோம். அதே நமக்கு, பிரச்சனைகள் தீர்க்கப் படாதபோது - கேட்டது கிடைக்காத போது, அதற்கேற்றாற்போல் ஒரு பதில் வைத்திருக்கிறோம். "ஏதோவொரு காரணத்துக்காக இதையெல்லாம் நான் அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்; எனவே, அப்படியே நடக்கட்டும்" என்போம். அதன் பொருள் என்னவென்றால், கடவுளின் தலையாய கடமை, என்னைப் பிரச்சனைகளில் இருந்து விடுவித்துக் கொண்டே இருப்பதோ நான் கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டே இருப்பதோ அல்ல. அவருடைய முடிவுகளை அவரே எடுக்கிறார். அப்படியானால், அதற்கென்று சில அடிப்படைகள் இருக்க வேண்டும். அந்த அடிப்படைகள், நான் கோயிலுக்கு - தேவாலயத்துக்கு - மசூதிக்கு வெளியே என்ன செய்கிறேன் என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப் படுவதாக இருந்தால், நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய் விடுமே.

நாத்திகர்கள் சொல்கிறார்கள், நம்பிக்கையற்றவர்கள் ஒருபோதும் எந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மற்ற மதங்களைச் சேர்ந்தோரைப் படுத்துவது காலம் காலமாக நடக்கிற அநியாயம். இந்தப் பூமிப் பந்தின் எதிர் காலம் எப்போதுமே நாத்திகர்களால் கேள்விக் குறியானது இல்லை. தம்முடைய மதம்தான் தலை சிறந்தது என்று நம்புபவர்களே அந்த அபாயத்துக்கு உரியவர்கள். மற்றொருடைய மதங்களை விடத் தன்னுடையதே உயர்ந்தது அல்லது சரியானது என்று நம்புபவர்களால் மட்டுமே அந்த நிலை உருவாகிறது!

நம்பிக்கை தவிர்த்து, வேறு என்னவெல்லாம் நாத்திகரையும் ஆத்திகரையும் வேறுபடுத்துகிறது?

பொதுவான ஒரு நம்பிக்கை என்னவென்றால், கடவுளை நம்புபவர்கள் கடவுள் பயத்தால் கட்டுப் படுத்தப் படுவார்கள்; ஆனால் நாத்திகர்களோ எதற்கும் அஞ்சுவதில்லை; எனவே, எந்தப் பாவத்தையும் துணிந்து செய்வர் என்பது. ஆனால், நான் கேட்பதும் பார்ப்பதும் அதை நிரூபிக்க வில்லை. எல்லாக் குற்றவாளிகளும் நாத்திகர் அல்லர். எல்லா அரசியல்வாதிகளும் நாத்திகர் அல்லர். வரி ஏய்ப்பு செய்வோர் எல்லோரும் நாத்திகர் அல்லர். பிழைப்புக்காக சக மனிதர்களை ஏமாற்றும் எல்லோரும் நாத்திகர் அல்லர். சமயச் சடங்குகளில் செலவிடப் படும் பணமெல்லாம் வெள்ளைப் பணம் அல்ல. சிறைகளில் வாழும் எல்லோரும் நாத்திகர் அல்லர்.

ஒருவர் கடவுளை நம்பிக் கொண்டே பாவங்கள் செய்ய முடியும். அவருடைய சிந்தனை ஓட்டம் மிக எளிமையானது - 'என்னை உருவாக்கியவர்; நான் கேட்பதெல்லாம் எனக்குக் கொடுப்பவர் என்பதற்காக நான் அவரை வணங்க வேண்டும். என் தாயோ தந்தையோ நான் பாவம் செய்தால் தண்டிப்பதில்லை (தாம் செய்வது பாவம் என்று உணரவாவது செய்வார்களா என்பது அடுத்த கேள்வி). நான் எவ்வளவு நல்லவன் அல்லது கெட்டவன் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு என்னை நானாக ஏற்றுக் கொள்வார்கள். கடவுளோடும் நான் அத்தகைய உறவுதான் வைத்திருக்கிறேன். கடவுள் எனக்கு நிபந்தனையற்ற காவலனாக இருக்க வேண்டும்; காவல்த்துறை போல் அல்ல. நான் கடவுளுக்குப் படைப்பதெல்லாம் என் பாவங்களை எல்லாம் மீறி அவர் எனக்குச் செய்யும் நல்லதுகளுக்கான பதில்.'.

நாத்திகர்கள் கடவுளுக்குப் பயப்படுவது இல்லையா? ஆம். பயப்படுவதில்லை. அவர்களுடைய பாவங்களுக்காக யாரும் கண்டிராத சக்தி ஒன்று அவர்களைத் தண்டிக்கும் என்றும் அவர்கள் நம்புவதில்லை. ஆனால், பாவங்கள் செய்யும்போது பாதிக்கப் பட்டவர்களிடம் மாட்டிக் கொண்டால் கொன்று விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கும் சமமான அளவு மனிதத் தன்மை உண்டு. அவர்களும் ஒரு விபத்தைப் பார்த்தால் அல்லது ஒருவர் அடி படுவதைப் பார்த்தால் கவலைப் படுவார்கள். கடவுளை நம்புகிறார்களா இல்லையா என்பதைத் தாண்டி அது ஓர் அடிப்படை மனிதக் குணம். அவ்வளவே.

இந்த நாட்டிலேயே அதிகமான கோயில்களையும் நாத்திகர்களையும் கொண்ட மண் நம்முடையது. சில தலைமுறைகளாக அவர்கள் இருவருமே இதே மண்ணில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ வீடுகளில் ஆத்திகர்களும் நாத்திகர்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நாத்திகம் என்கிற சிந்தனையால் ஈர்க்கப் பட்டு ஆனால் நம்பிக்கையின்மை மீதும் நம்பிக்கையில்லாத இன்னொரு சாராரும் இருக்கிறார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள். "அவர் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும், ஆனால் அவரையும் அவர் இருப்பையும் பற்றிய தேடல்களில் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. காலம் காலமாக நடந்து வருவது போல, என் பெற்றோர் அவர்கள் பெற்றோர் சொன்னதைக் கேட்டது போல், அவர்கள் பெற்றோர் அவர்கள் பெற்றோர் சொன்னதைக் கேட்டது போல, நான் என் பெற்றோர் சொன்னதைக் கேட்டு விட்டுப் போகிறேன்." என்பதே அவர்கள் நிலைப்பாடு. நல்ல நிலைப்பாடுதான் உண்மையில்!

இது எல்லாமே பெரியாரில்தான் தொடங்கியது. நம் மண்ணில் யாரும் செய்யத் துணியாததை அவர் செய்தார். கடவுள் இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திச் சொன்னார். கடவுள் சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் (சமயம் மற்றும் சடங்குகள்) கடுமையாக எதிர்த்தார். நம்பிக்கையின்மை என்பது நமக்குப் புதிதில்லை என்றாலும் அவருடைய அணுகுமுறை புதிது.

சனநாயகம் போலவே நாத்திகமும் ஒரு மேற்கத்தியச் சிந்தனை. மேற்கு நாடுகளில் நம் நாட்டை விட ஒப்பிட முடியாத அளவு நாத்திகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் (உலகின் பல்வேறு பகுதிகளில் நாத்திகர்களின் அடர்த்தி பற்றி அறிய கீழே உள்ள படத்தைப் பாருங்கள்). மேற்குலகம் கடைப் பிடிப்பதற்கும் அதன் பெருமையை விளக்கக் கடைகள் போடுவதற்கும் முன்பாகவே அது நம் மண்ணில் இருந்ததாகவும் பலர் சொல்கிறார்கள். அப்படித்தான் முனைவர். அமர்த்யா சென்னும் அவருடைய நூல் விவாதக்கார இந்தியரில் (THE ARGUMENTATIVE INDIAN) சொல்கிறார்.


ஆனால், பெரியாரின் அணுகுமுறையில் புதுமை என்னவென்றால், ஆத்திகம் என்பதே இல்லாத ஒன்றிற்காக ஏகப் பட்ட நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குவது என்று நாத்திகர்கள் அனைவரும் அப்படியிருக்கையில், கடவுளை மறுப்பதிலும் அதற்கான பிரசாரங்களிலும் அளவிலாத நேரத்தைச் செலவிட்டார் அவர். காலணிகளால் சிலைகளை அடித்து, "இதற்காகக் கடவுள் என்னைத் தண்டிப்பாரா?" என்று கேட்டார். ஆச்சர்யம் என்னவென்றால், கடவுள் தண்டிக்க வில்லை. இந்தப் புதுவிதமான நாத்திகம் அக்கால இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது - மாநிலம் முழுக்கப் பேரலைகளை உருவாக்கியது.

பெரியாரை வெறித்தனமாகப் பின் பற்றுவோரும் அதே அளவு வெறுப்போரும் என் நெருங்கிய வட்டாரத்திலேயே நிறைய இருக்கிறார்கள். அவர் சார்ந்த சமூகத்துக்கு அவர் கொண்டு வந்த மாற்றங்களுக்காக அவரே இதுவரை பிறந்த தமிழர்களிலேயே தலைசிறந்த தமிழர் என்கிறார்கள் சிலர் (கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த - அதற்கு முன்பு ஆந்திரத்தில் இருந்து கர்நாடகம் வந்த - ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தமிழரே அல்ல என்கின்றனர் வேறு சிலர்; எனவே அவர் தெலுங்கர் அல்லது கன்னடர்; தமிழர் அல்லர்!). தனிப்பட்ட பிரச்சனைகள் பல கொண்டிருந்த அவர், சிறுபான்மையாக இருந்த ஒரே காரணத்துக்காக பார்ப்பனர்களைக் கடுமையான சொற்களால் திட்டினார் என்று சொல்லி இன்னொரு சாரார் அவரை விமர்சிக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால், அவரளவுக்கு எவரும் கடவுளை வெறி கொண்டு எதிர்ப்பதிலும் நாத்திகத்தைப் பரப்புவதிலும் தன் விலைமதிப்பற்ற வாழ்க்கை முழுமையையும் அர்ப்பணித்ததில்லை என்பதால் இன்றைக்கும் இந்திய நாத்திகத்தின் அடையாளமாக இருப்பவர் அவரே. சமீப காலங்களில், பல வட இந்திய தலித் இயக்கங்களிலும் அவருடைய படம் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். அவருடைய பெரும்பாலான தொண்டர்கள் பின்னாளில் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து தம்மையும் பாழாக்கி அரசியலையும் பாழாக்கி விட்டார்கள். அவரோ பதவி பாழாக்கும் என்பதை அறிந்தே அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

அந்த நேரம் சமூக சூழ்நிலை எப்படியிருந்தது என்று தெரியவில்லை. ஆனால், பார்ப்பனத் தாக்குதலை மட்டும் தவிர்த்திருந்தால் சர்ச்சை குறைவானவராகவும் இன்னும் அதிகமாக ஏற்றுக் கொள்ளப் பட்டவராகவும் ஆகியிருப்பார் என நினைக்கிறேன். அவர் ஆரம்பித்த இயக்கத்தில் இருப்போர் இன்னும் நாத்திகர்களாகத்தான் இருக்கிறார்கள் (எண்ணிக்கையில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் பொது வாழ்க்கையில் அவர்களின் மற்ற நிலைப்பாடுகள் எவ்வளவு அற்பமாக ஆகியிருந்தாலும்). ஆனால், அதிலிருந்து கிளை விட்டு வளர்ந்தவர்கள் - தேர்தல் அரசியலில் நுழைந்தவர்கள் - உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோராகவும் இடத்துக்கும் நேரத்துக்கும் (தேர்தல் நேரம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை) ஏற்றபடி மாற்றி மாற்றிப் பேசுபவர்களாகவும் மாறி விட்டார்கள்.
பெரியார் மட்டுமின்றி இந்தியா முழுக்க ஏகப் பட்ட நாத்திகர்கள் இருந்தனர். காந்தி அவ்வளவு ஆன்மீக - மத ஈடுபாடு கொண்டிருந்தபோது நேரு தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்துக் கொண்டார். பகத் சிங் ஒரு நாத்திகர். விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் (இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர்) ஒரு நாத்திகர். நோபல் பரிசு பெற்ற மற்றொரு இந்தியர் அமர்த்யா சென் ஒரு நாத்திகர். நடிகர் கமல் ஒரு நாத்திகர். இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஒரு நாத்திகர். ஆனால், அந்த வரிசையில் ஒரு நம்பவே முடியாத மாதிரியான ஆளும் வருகிறார் - இந்து மகாசபாவின் தலைவராக இருந்த விநாயக் சாவர்கர் ஒரு நாத்திகர். பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் (தொண்டர்கள் எல்லோரும் என்று சொல்ல முடியாது) எல்லோருமே நாத்திகர்கள். தன் பிராமணப் பின்பெயரைப் பெருமையோடு பயன்படுத்தும் மணி சங்கர் ஐயர் ஒரு நாத்திகர்.

உளவியலின் தந்தை எனப்படும் சிக்மண்ட் பிராய்ட் ஒரு நாத்திகர். நம் காலத்தின் தலைசிறந்த இரு பணக்காரர்களான பில் கேட்சும் வாரன் பபேயும் நாத்திகர்கள். வங்க தேச எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தஸ்லிமா நஸ்ரின் ஒரு நாத்திகர். இதைச் சொன்னால் உலகத்தில் எவரும் ஆச்சர்யப் பட மாட்டார்கள் - கார்ல் மார்க்ஸ் ஒரு நாத்திகர். பிரித்தானிய அரசியலின் எதிர்காலமாக இருக்கும் மிலிபான்ட் சகோதரர்கள் இருவரும் நாத்திகர்கள்.

இதிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. பெரியாரையும் சிலரையும் தவிர்த்து பெரும்பாலான நம் நாத்திகர்கள் பிராமணர்கள். நாத்திகம் மேற்கத்தியச் சிந்தனைதான் என்றால் அதுவும் மற்ற பல மேற்கத்தியச் சிந்தனைகளைப் போன்றே அவர்கள் மூலமே இங்கு வந்திருக்கக் கூடும். மதம் அவர்களின் கண்டுபிடிப்பு என்றால் நாத்திகமும் அப்படியே இருக்கக் கூடும். ஒரு வகையில், அதுவும் ஒரு மதமே. கருப்பும் வெள்ளையும் நிறம்தான் என்றால், நாத்திகம் ஏன் ஒரு மதமாக இருக்கக் கூடாது? கடவுளை நெருங்கிச் செல்வோர், சில பெரும் ஏமாற்றங்கள் அடையும்போது, மற்றவர்களை விட அதிகமாகக் கோபப்பட்டு, கடவுளின் இருப்பையே கேள்வி கேட்பது இயல்பானதே. எந்த உறவுக்கும் கொடுக்கும் அதே விளக்கம்தான். ஒருவரோடு நெருங்கிப் பழகும் போதுதான் அவரோடு பிரச்சனைகளோ கருத்து மாறுதல்களோ வரும். ஒருத்தரோடு எந்தச் சோலியும் இல்லையென்றால் அவரோடு நமக்கேன் பிரச்சனைகள் வர வேண்டும்? எனவே, நாத்திகம் ஒரு பார்ப்பன எதிர்ப்புச் சிந்தனை அல்ல. பெரியார் இரண்டையும் கலந்ததால் அல்லது உலப்பியதால் (ஆதரவாளர்கள் கலந்தார் என்பார்கள்; எதிர்ப்பாளர்கள் உலப்பினார் என்பார்கள்) தமிழ்நாட்டில் தான் அது அப்படி ஆகிவிட்டது. நமக்கு எதிரான ஒருவர் என்ன கருத்துச் சொன்னாலும் அது நமக்குப் பிடிக்காமல் போவது இயற்கைதானே.
கேட்ஸ் மற்றும் பபேயின் கதைகளில் இருந்து கிடைக்கும் அடுத்த விஷயம், சமூக சேவை செய்வதற்கு ஒருவர் மத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை இரண்டும் இரு வேறு விஷயங்கள். இங்கே எது முக்கியம் என்றால் கருணை. கஷ்டத்தில் இருக்கும் ஒருவரைப் பார்த்து இரக்கப் படுவதற்கு ஒருவர் எதையுமே பின் பற்றுபவராக இருக்க வேண்டியதில்லை. அந்த வலியை அவர் அனுபவித்திருக்க வேண்டும் அல்லது உணர முடிய வேண்டும். அவ்வளவுதான். நீ என்னுடைய மதத்துக்கு மாறுவதாக இருந்தால் நான் உனக்கு இதெல்லாம் செய்வேன் என்று அரும் பெரும் காரியங்கள் எல்லாம் செய்வோரை விட இவர்கள் மேலானவர்களே. தன் மதத்தைக் காக்க அப்பாவி மக்களைக் கொன்று குவிப்போருக்கும் (நாம் வரலாற்றில் படித்த கதைகளையும் நவீன காலத் தீவிரவாதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இது பொருந்தும். மதவாதியாக இருப்பது எந்த வகையிலும் மனிதாபிமானியாக இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்காது.

சாவர்க்கர் ஒரு விதிவிலக்கு. ஒரே ஆள் மதவாதியாகவும் நாத்திகராகவும் இருக்க முடியுமா? முடியும். அதைத்தான் அவர் நிரூபித்து விட்டுப் போயிருக்கிறார். கடவுளின் இருப்பில் நம்பிக்கை இல்லாமலே இந்து மதத்தின் மீது தீராத வெறி கொண்டு இருக்க முடியும் என்று காட்டியிருக்கிறார். புத்த மதத்தைப் போலல்லாமல் இந்து மதத்தில் எல்லாமே கடவுளைச் சுற்றியே வருகிறது. புத்த மதம் கடவுளைப் பற்றிப் பேசுவதே இல்லை என்கிறார்கள். புத்தரை அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா அல்லது வேறு ஏதாவதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது நம்மை அடுத்த கேள்விக்கு அழைத்துச் செல்கிறது. ஒருவர் நாத்திகராக இருந்து கொண்டு ஆன்மீகவாதியாக இருக்க முடியுமா? முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆன்மிகம் என்பது கடவுளை வழிபடுவது அல்ல. தன்னுடைய ஆன்மாவோடு பணி புரிதல்தான் ஆன்மிகம். கடவுளின் துணையோடோ அது இல்லாமலோ. மற்றவர்களைப் போலவே நாத்திகர்களும் உடல் வேலைகள் செய்ய முடியும். ஏனென்றால் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே உடல் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே நாத்திகர்களும் சிந்தனை செய்ய முடியும். ஏனென்றால் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே உள்ளம் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே நாத்திகர்களும் ஆன்மீகவாதிகளாக இருக்க முடியும். ஏனென்றால் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே ஆன்மா இருக்கிறது. அவர்கள் அவர்களுடைய மதத்தையே பின் பற்றிக் கொள்ளலாம். அதாவது, நாத்திகம். புனித நூல்களால் அன்றி மனச் சாட்சியால் நிர்வகிக்கப் படுவது அவர்கள் மதம். பிரச்சனை எப்போது வருமென்றால், சுயநலமற்ற விதிமுறைகளைக் கொள்ளும் திறன் மனச்சாட்சிக்கு இல்லாமல் போகும்போது. அந்த வகையில், புனித நூல்கள் அவைகளின் பரிந்துரைகளில் தெளிவாக இருக்கின்றன. இதில் கவலைப் பட வைப்பது எதுவென்றால், சமீப காலங்களில் வந்து கொண்டிருக்கும் அவற்றுக்கான புதிய விளக்க உரைகள்.
அனுதினமும் சக மனிதர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிய நான் ஒரு சட்டம் படித்த வழக்கறிஞராக இருக்க வேண்டியதில்லை. இந்த நாட்டில் வாழ்வதற்கு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்து முடித்துக் கரைத்துக் குடிக்க வேண்டியதில்லை. என் வேலையைச் செய்து கொண்டு யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காமல் இருந்தாலே போதும். நான் ஒரு நல்ல - சட்டத்தை மதிக்கும் - குடிமகனாக இருக்க முடியும். அது போலவே, என் வேலையைச் செய்து கொண்டு யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காமல் இருந்தாலே போதும். இந்த பூமியில் நான் ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்து விட்டதாகி விடும். எனக்குச் சட்ட நூலும் தேவையில்லை - புனித நூலும் தேவையில்லை; அரசாங்களும் தேவையில்லை - மதமும் தேவையில்லை!

ஆனால், அரசாங்கங்களும் மதங்களும் அர்த்தமற்றவை என்று அர்த்தமில்லை. வலுவான மனச்சாட்சி கொண்டிருக்க முடியாதோருக்கு அவை வேண்டும். மனச்சாட்சியால் மட்டுமே ஆளப் பட முடியாத உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்களுக்கு அவை வேண்டும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நம்மைப் போன்றோருக்கு அவை வேண்டும். பெற்றோரிடம் - நலம் விரும்பிகளிடம் - வழக்கறிஞர்களிடம் - நமக்குக் கருத்துச் சொல்லக் கூடிய அளவு திறமை உள்ளோரிடம் நாம் கருத்துக் கேட்டுப் போகத்தானே செய்கிறோம். அது போலவே, உங்களையும் என்னையும் போன்ற சராசரிகளுக்காக அரசாங்கங்களும் மதங்களும் அறிஞர்களால் நிர்வகிக்கப் பட வேண்டும். பேராசை கொள்ளாமல் தத்தம் எல்லைகளுக்குள் இருந்து விட்டால் அவை இரண்டுமே பிரச்சனைகள் அற்றவையாக இருப்ப. அது இயலாதென்றால், வேறு வழியில்லை, நாத்திகம் தான் தீர்வு!

கருத்துகள்

 1. நன்றி சகோ. தங்கள் இடுகை படித்தேன். முதிர்ச்சியான கருத்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நேரம் கிடைக்கும் பொது எனது இடுகைகளை படிக்க அழைக்கிறேன்., கடவுள் குறித்த எனது வேறொரு வாதத்தை கூடி விரைவில் முன்வைக்க இருக்கிறேன்.... பார்க்கலாம் ..

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஷர்புதீன் அவர்களே. கண்டிப்பாகச் செய்கிறேன். படித்து விட்டு மேலும் உரையாடுவோம்.

  பதிலளிநீக்கு
 4. //காலணிகளால் சிலைகளை அடித்து, "இதற்காகக் கடவுள் என்னைத் தண்டிப்பாரா?" என்று கேட்டார்//
  திஸ் இஸ் சிக்.

  பொதுவாகவே இந்த ஆதிக்க நாத்திக விடயங்களைக் கண்டாலும் காணாதவள் போலப் போய்விடுவேன்.

  கோவிலுக்குப் போனதில்லை. ஓரிருமுறை பாட்டியுடன் அவருக்குத் துணையாகப் போய் இருக்கிறேன். யாராவது விபூதி / ஆஷ் ஃபிரைடே அன்று சாம்பல் ஏதாவது பூசிவிட்டால் அழிப்பதில்லை. றோட்டில் போய் வருகிறவனுடனேயே நாகரிகமாக நடக்கும் போது, பிரியத்துக்குரியவர்களுடன் கொஞ்சம் நாகரிகமாக ஏன் நடக்கக்கூடாது என்றதாலேயே அழிப்பதில்லை.

  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்வதில் செலவளிக்கும் நேரத்திற்கு நன்கு குறட்டை விட்டு தூங்கலாம் என்று சொல்லுவேன். இருந்தாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. இல்லை என்றாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.

  ஆஷ் கொண்டு வந்து கொடுத்த ஒரு ஆஞ்சனேயர் படம் என் அறைச் சுவற்றில் இருக்கிறது. அம்மா கொடுத்துவிட்ட பிள்ளையார் சிலையும் இருக்கிறது. அவற்றை வைத்த பின்னர் திரும்பி பார்த்திருக்கிறேனா என்று ஞாபகமில்லை.

  நானாக கோவிலுக்குப் போகப் போவதில்லை. போகிறவர்களை தடுக்கப்போவதுமில்லை. ஆனால், திருவிழா, திருப்பது கியூ என்று நாள் பூராக குழந்தைகளைக் காக்க வைக்கும் பெற்றோர்களை கட்டி வைத்து உதைக்கச் சொல்லும். திருமணத்திற்கு என்றாலும் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போய் இம்சிக்கும் பெற்றோர்களைக் கண்டாலே பத்திக்கொண்டு வரும்.

  எப்படி வேணுமானாலும் பக்தியை வைச்சுக்கொள். ஆனால் அது பப்ளிக் நியூசன் ஆக மாறாத வரை எனக்கு ஓக்கே என்பது தான் எனது கொள்கை.

  கன்னியாஸ்திரியாகப் போகப் போகிறேன் என்று இன்றும் சொல்லிக் கொண்டிருப்பேன். அது கடவுள் சேவைக்கு என்றில்லை. இந்த கொன்வென்டில் எல்லாம் அன்பு என்று போதிக்க வேண்டிய நன்ஸ் எல்லாம் ராட்சன் மாதிரி நடப்பதை மாற்ற வேண்டும் என்பதால்.

  மத்தவனுக்கு இடைஞ்சல் செய்யாதவையாகவே மதம் இருக்க வேண்டும் என்ற ஆசை. மற்றப் படி இவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை.

  மே பி, இளங்கன்று. பயமறியாதது.

  பதிலளிநீக்கு
 5. இன்று வரை எந்த அப்ளீகேஷனிலும் என் மதம் என்று எதையும் குறிப்பிட்டதில்லை. சில வேளைகளில் அதைப் போடாவிட்டால் ரிஜெக்ட் பண்ணுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை எழுத்தில் தா, அதற்கு அப்புறம் போடறேன் என்று கேட்டால் தர மறுக்கிறார்கள். அவர்களை சூ பண்ணுவோம் என்ற பயம் இருக்கிறது. அதனால் அடங்கிவிடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 6. எப்போது இன்ட்லியில் வோட்டு போட்டாலும் எதோ எரர் மெசேஜ் வருகிறதே.

  பதிலளிநீக்கு
 7. நன்றி அனா. நானுமே சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். முடியவில்லை. முயற்சிக்கிறேன். பார்க்கலாம். எந்தத் தீர்வும் சொல்ல முனைவதல்ல இந்த இடுகை. என் குழப்பங்களின் கூட்டுப் பொரியல். நாத்திகர்களின் கோணத்தில் இருந்து அவர்களின் பல நியாயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறேன். அவ்வளவே.

  நான் அதைவிட அதிகமாகக் கோயில்களுக்குச் செல்பவன். குடும்பத்தோடு! திருநீறு பூசிக் கொள்பவன். எந்தச் சடங்கையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்பவன் (பல நேரங்களில், நேர விரயம் கருதி, செயலால் உடன்பட்டு சிந்தனையால் முரண்படுபவன்!). அதையெல்லாம் எவ்வளவு ஈடுபாட்டோடு செய்கிறேன் என்பது வேறு கதை. முகமதியத் தெருவில் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோயிலிலும் தேவாலயத்திலும் கிரிக்கெட் ஆடி வளர்ந்த பாக்கியம் பெற்றவன். இன்னமும் அவர்கள் எல்லோரோடும் உறவு முறை சொல்லிப் பேசுபவன்.

  உங்கள் அளவுக்கு - மதத்தை மறுக்கக் கூடிய அளவுக்கு - இன்னும் தெம்பு வரவில்லை. நீங்கள் திருநீறை அழிக்க முயலாதது போல, நானும் இவ்வடையாளங்களை மறைக்க முயலாமல் இருந்து வருகிறேன்.

  இன்ட்லியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. கடவுள் இருக்கிறார் என்று ஒருத்தர் நம்புகிறார் என்பது ஒரு போதும் எனக்கு வியப்பை தந்ததில்லை, ஆனால், "கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை" அல்லது "கடவுள் இல்லை என்று நான் நம்புகிறேன்" என்பவர்களைப் பார்த்தால் தான் அதிசயமாய் இருக்கிறது. இது எப்படி இவர்களுக்குச் சாத்தியமாகிறது என்று!! சுப்பிரமணியம் சந்திரசேகர் நாத்தீகர் என்று சொன்ன நீங்கள், ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கையாளர் என்பதையும் கவனிக்க வேண்டும். சுப்பிரமணியம் சந்திரசேகர் சிறந்த இயற்பியலார் அவ்வளவுதான், அவருக்கு மருத்துவம் பற்றி அவ்வளவாகத் தெரியாமல் கூட இருக்கலாம். அதே போல ஆன்மீகமும் ஒரு விஞ்ஞானம், அறிவியலில் புலி என்பவர்கள் இந்த விஞ்ஞானத்தில் விஷயம் அவ்வளவாகத் தெரியாமலும் இருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 9. \\"நிரூபிக்கப் பட்ட விஷயங்களை மட்டும் தான் நீ நம்புவாயா?" "எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் முட்டாளா நான்?"\\ இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட, கணிதம், இயற்பியல், வேதியியல் விதிகள், சூத்திரங்கள், தியரிகள் இவற்றில் எத்தனை நீங்கள் தீர சரி பார்த்து ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? [எனக்கு நியூட்டனின் மூணு விதிகளுமே புரியாது, அப்புறம் மத்ததைப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை!]. எதை வைத்து அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கொஞ்சம் யோசியுங்களேன்!

  பதிலளிநீக்கு
 10. நன்றி ஜெயதேவ். உங்களைப் போலவே, இல்லை என்போருக்கு இருக்கிறது என்போரைப் பார்த்து எதைவைத்து இவர் இருக்கிறது என்று சொல்கிறார் என ஆச்சரியமாகத்தானே இருக்கும். ஐன்ஸ்டீன் பற்றிய கருத்து இந்த இடுகையின் இறுதியில் என் குழப்பத்தைக் கூட்டி அழகு சேர்க்கிறது. எனக்கும் கடவுள் இல்லை என்று சொல்ல ஆதாரம் இல்லை. இருக்கிறார் என்று சொல்லவும் ஆதாரமில்லை. நாம் அவரால் செய்ய முடியும் என்று நினைக்கிற எல்லாமே அவரால் முடியுமா என்கிற கேள்வி இருக்கிறது. உங்கள் பக்கம் வந்து நின்று சொல்ல வேண்டுமானால், கடவுளிடம் தவறான எதிர் பார்ப்புகள் வைத்துக் கொண்டே நம்மில் பலர் சாமி கும்பிடுகிறோம் என்றும் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 11. \\சரி. கடவுள் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். யார் அவர்? அவருடைய பெயர் என்ன? இயேசுவா, அல்லாவா, சிவனா, பெருமாளா, அல்லது வேறு ஏதாவது பெயரா?\\ முதலில் கடவுள் இருக்கிறாரா என்று முடிவு செய்யாமல் இதற்குத் தாவி பிரயோஜனமில்லை.

  \\அப்படியானால் அதைப் படைத்தவரைப் படைத்தது யார்? \\ அவர் இன்னொருத்தரால் படைக்கப் பட்டார் என்றால் அவர் கடவுளாகவே இருக்க முடியாது.

  \\அவர் தான்தோன்றியாக இருக்க முடியுமானால், \\ இறைவன் தோன்ற வில்லை, அவர் எப்போதும் இருக்கிறார்.

  \\உலகம் ஏன் அப்படி இருக்க முடியாது?! (இன்னொரு துணைக் கேள்வி - உலகமே ஏன் கடவுளாக இருக்க முடியாது?!) எவ்வளவு எளிதான ஆனாலும் சிக்கலான கேள்வி இது!\\உலகம் கல்லு மண்ணால் etc., ஆனது, அது எதுக்கும் புத்திசாலித் தனம் கிடையாது, மேலும் உலகத்தின் ஒழுங்கற்ற நிலை [entropy ] அதிகரித்துக் கொண்டே செல்கிறது [irreversibly]. அப்படியானால், அது தானாக இயங்க வில்லை இயக்குவிக்கப் படுகிறது, யார் பின்னல் இருந்து அதை இயக்குகிறார் என்பது தான் கேள்வி.

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் சொல்கிற மற்ற விதிகளுக்கும் இதற்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு என்னவென்றால், அவை ஒருவரால் நிரூபிக்கப் பட்டு பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை; அவற்றை இவ்வளவு பேர் தவறு என்று சொல்லிப் பதில் வாதங்கள் வைக்கவில்லை. ஆனால், நம்ம மேட்டரிலோ ஒருவராலும் நிரூபிக்கப் படாமல் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு பலரால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு குழப்ப நிலை தொடர்கிறது. யார் பேசினாலும் அதை உட்கார்ந்து கேட்டால் வரும் குழப்பம் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. \\இது எல்லாமே பெரியாரில்தான் தொடங்கியது. \\நீங்க கொஞ்சம் இந்த வீடியோக்களைப் பார்ப்பது பெரியாரைப் புரிந்து கொள்ள உதவும். முக்கியமாக, From 18th Video onwards!!

  http://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E

  பதிலளிநீக்கு
 14. \\ அவர்தான் நாம் போய் முறையிட்டு அழும் போதெல்லாம் நம்மை நம் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கிறார் என்று நம்புகிறோம்.\\ கடவுளை பலர் பல நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள், அதில் இதுவும் ஒன்று. இது அவ்வளவு சிறந்த நோக்கம் இல்லை என்றாலும், அப்படியாவது இறைவனிடம் வருகிறார்களே என்ற வகையில் நல்லதே.

  பதிலளிநீக்கு
 15. \\ஒருவர் கடவுளை நம்பிக் கொண்டே பாவங்கள் செய்ய முடியும்.\\ தனி மனித ஒழுக்கம், நேர்மை இவற்றில் நாத்தீககர்கள் ஆத்திகர்களை விட ஒரு படி மேல். I don't mean theists are bad, but on an average this is true. [வீரமணி போல, இயக்கத்தின் சொத்து தனக்குப் பின் தன் மகனுக்கே போக வேண்டும் என நினைக்கும் சில விதிவிலக்குகளும் உண்டு. ]

  பதிலளிநீக்கு
 16. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பதில்களில் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ளத் தக்க விஷயங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். முதல் பதில்தான் எனக்கு இடிக்கிறது. இது சார்ந்த சண்டைகள்தாம் என்னை ஆத்திகர்களைக் கண்டால் ஒவ்வாமை வர வைக்கிற அம்சம். மீண்டும் சொல்கிறேன் - இந்த விஷயத்தில் நீங்களும் உங்கள் வீட்டில் சொல்லிக் கொடுத்ததுதான் சரி என்று எண்ணுபவராக இருந்தால் இந்தக் குழப்பத்தில் அதுவே என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத முழு முதல் அம்சம். அதற்கும் ஒரு சுய பதில் உண்டு என்னிடம் - 'ஒருத்தரையே வெவ்வேறு குழுவினர் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறோம்'. ஆனால், அது எவ்வளவோ பிரச்சினைகளுக்கு வழி வகுப்பதால் இதெல்லாம் விட்டு விட்டுப் பேசாமல் வேலையைப் பார்ப்பவர்கள் யோக்கியமோ என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
 17. மிக்க நன்றி. கண்டிப்பாகச் செய்வேன்.

  பதிலளிநீக்கு
 18. \\ஒருவர் நாத்திகராக இருந்து கொண்டு ஆன்மீகவாதியாக இருக்க முடியுமா?\\ இது குழப்புது. ஆனா ஒன்னு, பகுத்தறிவு வாதி என்று சொல்லிக் கொண்டே மூட நம்பிக்கையையும் மூட்டை மூட்டையாக வைத்திருக்கவும் முடியும். மஞ்சள் துண்டை போட்டுக் கொள்வது, நினைவு நாட்களில் அண்ணா சமாதிக்குப் போய் மலர் வளையம் வைத்து, சமாதி மேல் மேல் பூவைத் தூவி கும்பிடுவது ,பெரியார் கொள்கைக்கு விரோதமாக அரசே சாராயம் விற்ப்பது, பெரியார் சிலைக்கு மாலை போடுவது, கர்ப்பூரம், தேங்காய் பழம்வைத்து கும்பிடுவது, தனக்குப் பின் தன்னுடைய மகனே திராவிடர் கழக தலைவராகி சொத்துக்களை அனுபவிக்க வேண்டும் என நினைப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்].

  பதிலளிநீக்கு
 19. எப்படியாவது இறைவனிடம் அவர்களை வர வைக்க வேண்டும் என்பது எதற்காக?

  பதிலளிநீக்கு
 20. சுவாரசியமாக இருக்கிறது. ஓர் ஆத்திகர் இப்படியோர் ஒப்புதல் அளிப்பது. :)

  பதிலளிநீக்கு
 21. ஒருத்தர் ஒரு கணிதப் புதிர் போடுகிறார். " நான்கு புள்ளிகளை வைத்து நான்கு சமபக்க முக்கோணங்களை ஏற்ப்படுத்த முடியுமா? " நானும் ஒரு பென்சிலும், பேப்பரும் எடுத்துக் கொண்டு எப்படி எப்படியெல்லாமோ வரைந்து பார்த்தேன், மூன்று முக்கோணங்கள் தான் வந்தது. கடைசியில் தோல்வியை ஒப்புக் கொண்டேன், அதற்க்கு விடை என்ன என்று கேட்டேன். மூன்று புள்ளிகளை சம பக்க முக்கோணம் அமைத்து நாலாவதை முதல் முக்கோணத்தின் மையத்தில் இருந்து செங்குத்தாக [vertically] [ பிரமிட் போல ] மேலே அமைத்தால் முடிந்தது, நான்கு சமபக்க முக்கோணங்கள்!! ஆக, எனது முந்தய அனுபவம், [அறிவிலித்தனம்] என்னை அந்தப் பேப்பரின் மேலேயே நான்கு புள்ளிகளை அமைக்குமாறு என்னை கட்டிப் போட்டு விட்டது, அதை விட்டு மேலே வந்து நான்காவது புள்ளியை அமைக்க விடவில்லை. நீங்கள் இந்தப் பதிவில் எழுப்பியுள்ள பல கேள்விகளும், இதே போலத்தான், இந்த உலக அனுபவம், உங்களை ஒரு எல்லைக்கு மேல் சிந்திக்க விட மாட்டேன்கிறது, அதில் இருந்து வெளியே வந்து யோசித்தால் எல்லா வற்றுக்கும் பதில் இருக்கிறது, நீங்கள் எடுத்த முடிவு நிச்சயம் தவறு என்று உணர்வீர்கள்.

  பதிலளிநீக்கு
 22. அதாவது, கடவுளின் இருப்பில் நம்பிக்கை இல்லாமல் ஆன்மீகத்தில் சொல்லப் படும் ஆன்மா சம்பந்தப் பட்ட மற்ற பணிகளை மட்டும் செய்யலாம். அதாவது, உருவ/பெயர் ஒருங்கிணைப்புகள் செய்யாமல் அதை அறிவியலாகவே பார்த்தல். தியானம் போன்ற மன ஒருங்கிணைப்பு வேலைகள் செய்யும் நாத்திகர்களைக் கண்டிருக்கிறேன். அது மட்டுமே ஆன்மிகம் அல்ல என்கிறீர்களா? மற்றபடி, பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் செய்யும் சேட்டைகள் மீது எனக்கும் கோபங்கள் உண்டு.

  பதிலளிநீக்கு
 23. \\எப்படியாவது இறைவனிடம் அவர்களை வர வைக்க வேண்டும் என்பது எதற்காக? \\ ஒன்னாம் வகுப்பில் சேர்ந்த மாணவன், படிப்படியா ஒரு நாள் பட்டதாரியாகி விட மாட்டானா! இன்றைக்கு பொருட் தேவைக்கோ, கஷ்டங்களைப் போக்க இறைவனிடம் வருபவர்கள், நிச்சயம் ஒருநாள் பலன் எதிர்பாராது, இறையன்பு [Unmotivated, unalloyed pure Love of God] ஒன்றே போதும் என்ற உயர்ந்த நிலைக்கு வந்து விடமாட்டார்களா!

  பதிலளிநீக்கு
 24. அருமை. இது எனக்கு நன்றாகப் புரிகிறது. தன்னால் தன் பழக்கப் பட்ட சிந்தனைப் பாதையில் சென்று புரிந்து கொள்ள முடியாததெல்லாம் இல்லை என்று சொல்லக் கூடாது என்கிறீர்கள். சரிதான். நான் முடிவு எதுவும் எடுக்க வில்லை - அதற்கு வாய்ப்பும் இல்லை. இதில் கொடுமை என்னவென்றால், நம்புவோர் எல்லோருமே நீங்கள் சொல்கிற மாதிரிச் சிந்தித்து நம்புவோர் இல்லை. அவர்களும் சொன்னதைக் கேட்டு அதை அப்படியே செய்வோரே. அது போலவே, நாத்திகர்கள் வைக்கும் வாதம் - அறிவியலால் நிரூபிக்கப் படாத எல்லாத்தையுமே அவை நிரூபிக்கப் படும் வரை மனிதன் கடவுளின் செயல் என்றே சொல்லியிருக்கிறான். பிரமிட் அமைத்து அறிவியல்க் காரணம் அறியாமல் பேப்பரிலேயே சாமி சாமி என்று எழுதக் கூடாது என்று அவர்கள் சொல்லக் கூடும்.

  பதிலளிநீக்கு
 25. நிரம்பவே பேசியிருக்கிறார்கள். ஆனால் கடவுள் என்று அதற்கு ஏற்றப்பட்டிருக்கும் தண்மைக்கும் அது இதுவரை வந்து, ஏனடா இப்படி துளைகிறீர்கள்? இதோ நான் இருக்கிறேன் என்று வந்திருக்கவேண்டும்.இல்லை.வேரு வேலைகளிப் பார்த்தால் உற்பத்தி மிளிரும்.திருவள்ளுவர் அரசனை, ஆண்டியை, பணக்காரனை, ஏழையை,வீரனை, கோழையை,கணவனை,மனைவியை,இப்படி எல்லாம் பேசியவர் கோயிலை காட்டவில்லை .தயவு செய்து கோயில் என்பது அரசன் வீடு என் நம்பி அமைதியுருங்கள் மக்களே!

  பதிலளிநீக்கு
 26. சரி. இங்குதான் நான் ஒரு புதுவித - குழப்பமான கருத்து வைத்திருக்கிறேன். நீங்கள் சொல்வது காசு வாங்கிக் கொண்டாவது நம் கட்சிக்கு வாக்களித்தால் அப்புறம் இவர்களைத் திருத்திக் கொள்ளலாம் என்பது போல. அதை விட எளிதானது - சொந்த புத்தி உள்ளோரை வழிக்குக் கொண்டு வருவது. அதாவது, நாத்திகரிடம் ஆன்மிகம் பேசுவது (இங்கே தி.க. நாத்திகர்களை விட்டு விடுங்கள்). ஏற்கனவே ஏதோ ஒன்றைச் சிந்தித்திருப்போர் அவர்கள். பேசுவது புரியும் சக்தி இருக்கும் அவர்களிடம். ஆனால், கொலைக் கேசில் மாட்டி விடக் கூடாது என்று கிடாய் வெட்டுபவன் ஆன்மீகத்துக்கு எதிரி. அவன் ஒருக்காலும் ஆன்மீகத்தின் பலனை அறுவடை செய்ய மாட்டான். அதற்குத் தயாராகவும் மாட்டான். இது மட்டுமல்ல. அது எளிய மக்களை மட்டும் கேவலப் படுத்துவது போல் இருக்கலாம் என்பதால் சொல்கிறேன். தன் ஆன்மீக ஞானத்தைப் பயன்படுத்தி தனக்குக் கிடைக்க வேண்டிய சொகுசு வாழ்க்கையை உறுதி செய்து கொள்வதற்காக உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்வோர் உருவாக்கிய சடங்குகளும் ஆன்மீகத்தின் எதிரிகளே. நாத்திகர்கள், தி.மு.க. பிடிக்காமல் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பவர்கள் போல. மதங்களின் பிரச்சினைகள் கண்டு மறு பக்கம் வெறுத்து ஓடியவர்கள். அவர்கள் எல்லோரிடமுமே கடவுள் எதிர்ப்பு என்பதை விட சமய - சடங்குகள் மீதான எதிர்ப்பு என்பதே அதிகம். நான் சொல்லுக்குச் சொல் வாதம் செய்கிற மாதிரிப் பேசாமல் இருக்கலாம். அதுவல்ல என் நோக்கமும். சிந்தனையைத் தீட்ட முயற்சிக்கிறேன். அவ்வளவே.

  பதிலளிநீக்கு
 27. தங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி 'இறைகற்பனைஇலான்' ஐயா!

  பதிலளிநீக்கு
 28. @ பாரதிராஜா ராமச்சந்திரபோஸ் - அருமையான பெயர் தோழரே !

  இந்தப் பதிவும் அருமையானது ஒன்று. குறிப்பாக

  //பல புதுப் புது விஷயங்களைக் கொண்டு வருவதால், நாத்திகர்களிடம் ஆத்திகமும் ஆத்திகர்களிடம் நாத்திகமும் பேசப் பிடிக்கிறது. //

  இந்த வரிகள் எனக்கும் உடன்பாடானவை.

  //மேலே குறிப்பிட்டவர்களுள் ஒருவரை இதுதான் என் கடவுள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அப்படித்தான் என் பெற்றோர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்; அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.//

  சொல்லிக் கொடுக்கப்பட்டதையே நாம் உண்மை என நம்புகின்றோம். அது உண்மை இல்லை என ஒருவேளைத் தெரிந்துவிட்டாலும் கூட, சொல்லிக் கொடுத்ததற்காகவேனும் அதனைக் காக்க நினைக்கின்றோம் .. இல்லை எனில் பெற்றோரை இழிவுப் படுத்தியதாக கருதிவிடுவார்களோ என்ற அச்சத்தினால்.

  // உலகமே ஏன் கடவுளாக இருக்க முடியாது? // இதேக் கேள்வி தான் எனக்கும் பல முறை எழுந்தது .. ஒரு படைப்பாளி என்பவர் மனித சாயலில் தான் இருக்க வேண்டுமா ? மனிதனை மட்டும் தான் மெச்ச வேண்டுமா ? ஒரு ஏலியன் கிரகத்தில் இருக்கும் கடவுள் ஏலியன் போல் அல்லவா இருக்கும் ...

  ஏன் மனிதர்களுக்கு மட்டும் வேதங்கள், தூதர்கள் அனுப்பினார் கடவுள். நாய் பூனை எருமை இவைக்கு எல்லாம் ஏன் அவற்றை சொல்லிக் கொடுக்கவில்லை. வேதம் இல்லை. தூதர் இல்லை. ஏன் கடவுள் ஓரவஞ்சனைக் காட்ட வேண்டும் எனவும் நினைத்தது உண்டு.

  //அவர்தான் நாம் போய் முறையிட்டு அழும் போதெல்லாம் நம்மை நம் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கிறார் என்று நம்புகிறோம். //

  அதே அதே ! ஆனால் பிரச்சனைகளை விடுவிப்பது இல்லை என்பது தான் உண்மை. குழம்பும் மனம் பாரத்தைக் கடவுளின் மேல் போடும் போது ரிலாக்ஸ் ஆகின்றது, பிரச்சனைக்கான வழிகளைக் கண்டுக் கொள்கின்றது. ஆனால் பிரச்சனையைத் தீர்த்தது கடவுள் என நினைத்துக் கொள்கின்றது. பிரச்சனையை கடவுளை நம்பாதோர் எப்படிக் கையாள்கின்றார்கள் என்பதையும் விரிவாக ஆராய வேண்டி உள்ளது ?

  //தம்முடைய மதம்தான் தலை சிறந்தது என்று நம்புபவர்களே அந்த அபாயத்துக்கு உரியவர்கள். மற்றொருடைய மதங்களை விடத் தன்னுடையதே உயர்ந்தது அல்லது சரியானது என்று நம்புபவர்களால் மட்டுமே அந்த நிலை உருவாகிறது!//

  அதே அதே ! ஆதிக்கம் செலுத்த முனையும் மதவாதிகளால், மதங்களாலேயே புதியப் பிரச்சனைகள் எழுகின்றன. உலகில் நடக்கும் CONFLICT ZONE -களை எல்லாம் வரைப்படத்தில் குறித்துவிட்டுப் பாருங்கள். அவற்றில் 90 சதவீதம் மதங்களால், மதவாதிகளால் எழுந்தவையே ! அவற்றை நீக்கி விட்டால். உலகம் என்பது உண்மையிலே அச்சுறுத்தலற்ற ஒரு பிரதேசமாக காட்சித் தருகின்றது அல்லவா ?

  //எத்தனையோ வீடுகளில் ஆத்திகர்களும் நாத்திகர்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.//

  முற்றிலும் உண்மை சகோ. எங்கள் வீடே உதாரணம்.

  பதிலளிநீக்கு
 29. http://www.facebook.com/media/set/?set=a.233592389988177.77556.100000122520560#!/photo.php?fbid=233592399988176&set=a.233592389988177.77556.100000122520560&type=1&theater pls visit the link

  பதிலளிநீக்கு
 30. மிக்க நன்றி இக்பால். அப்பாடா, கடைசியில் சொல்ல முனைந்த விஷயங்களை அப்படியே புரிந்து கொண்ட ஒருவர் கிடைத்து விட்டார் என்ற நிம்மதிப் பெருமூச்சு இப்போதுதான் வருகிறது. நானும் உங்களைச் சில காலமாக வாசித்து வருகிறேன். நினைத்ததைச் சொல்லும் உங்கள் துணிச்சல் வியக்க வைக்கிறது. தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 31. நன்றி தமிழ் தோழன். இணைப்பைச் சொடுக்கி அங்கே இருப்பது கண்டேன். நல்ல வாதங்கள்.

  பதிலளிநீக்கு
 32. //சாவர்க்கர் ஒரு விதிவிலக்கு. ஒரே ஆள் மதவாதியாகவும் நாத்திகராகவும் இருக்க முடியுமா? முடியும். அதைத்தான் அவர் நிரூபித்து விட்டுப் போயிருக்கிறார். கடவுளின் இருப்பில் நம்பிக்கை இல்லாமலே இந்து மதத்தின் மீது தீராத வெறி கொண்டு இருக்க முடியும் என்று காட்டியிருக்கிறார். //

  இதுக் குறித்த நானும் ஆராய முற்பட்டேன். ஒரு மனிதன் நாத்திகராகவும், மதவாதியாகவும் இருக்க முடியும் என்பதே உண்மை. உலகில் பல மதவாதிகள் நாத்திகர்களே !!! அவர்களுக்கு கடவுள் என்ற ஒன்று இல்லை என்பது நன்குத் தெரியும் .... இருப்பின் கலாச்சார, அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக அதனை வெளிப்படுத்துவது இல்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 33. மற்றொன்று நாத்திகம் என்பது வெளிநாட்டு இறக்குமதியாக நம்மால் முழுமையாக கருத இயலாது .. ஏனெனில் நாத்திக மதங்கள் - இயக்கங்கள் நம் நாட்டிலும் உருவாகியே இருந்தன.. சமணம், பௌத்தம், ஆஜீவகம் போன்றவை நாத்திக சமயங்களே.. இன்று சமணம், பௌத்தம் ஆத்திக சமயங்கள் போல காட்சித் தந்தாலும் அவை லிட்டரல் அர்த்தத்திலானது என எடுத்துக் கொள்ளலாம். ஒரு மனிதன் தெய்வநிலையை அடைகின்றான் எனக் கூறும் போது தெய்வம் ஆகின்றான் என்று அர்த்தமில்லை, ஆனால் தெய்வம் என்ற அர்த்தம் மேம்பட்டவன் என்ற பொருளில் வருகின்றது ... அவ்வளவே !!! சமண - பௌத்தங்கள் பல இடங்களில் corrupt ஆகியுள்ளன / ஆக்கப்பட்டுள்ளன என்பதுவே உண்மை ... ஆஜீவகம் இன்று வழக்கில் இல்லை.

  பதிலளிநீக்கு
 34. //அப்பாடா, கடைசியில் சொல்ல முனைந்த விஷயங்களை அப்படியே புரிந்து கொண்ட ஒருவர் கிடைத்து விட்டார் என்ற நிம்மதிப் பெருமூச்சு இப்போதுதான் வருகிறது.//

  @ பாரதிராஜா - இப்படியான சிந்தனைகள் தான் உலகில் பலருக்கு இருக்கின்றன .. ஆனால் பகிர்ந்துக் கொள்ளவும், ஓரேக் கூரையில் செயல்படவும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விட்டது

  பதிலளிநீக்கு
 35. மீண்டும் வருகை தந்ததற்கு நன்றி இக்பால். உண்மை. சமண - பௌத்த மதங்கள் இறைவனை முன்னிறுத்துபவை அல்ல. அப்படிச் செயல்பட்டவர்களையே / செயல்படச் சொன்னவர்களையே இறைவன் என்று ஆக்கிவிட்டதுதான் காலத்தின் கோலம்.

  பதிலளிநீக்கு
 36. எனது எண்ண ஒட்டங்களோடி நெருங்கிய மிக அருமையான article. எனக்கு விவரிப்பதர்க்கு வார்தைகள் இல்லை.

  kannan from abu dhabi.
  http://samykannan.blogspot.com/

  பதிலளிநீக்கு
 37. மகிழ்ச்சி அளிக்கிறது கண்ணன் அவர்களே. மிக்க நன்றி. உங்கள் பதிவையும் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 38. //குறைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். முடியவில்லை. முயற்சிக்கிறேன். பார்க்கலாம். //
  ஹி ஹி. எழுதக் கூடாதுன்னு இல்லை. எழுதறதால் மனசு ஆறுதல் குறையும் என்றாலும் பல தடவைகள் பீப்பி எகிறுவதும் நடக்கும். எதுக்கு வில்லங்கம்னு ஒரு ஸேஃப் சைட்ல இருக்கறது தேன்.

  //என் குழப்பங்களின் கூட்டுப் பொரியல். //
  =))

  //முகமதியத் தெருவில் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோயிலிலும் தேவாலயத்திலும் கிரிக்கெட் ஆடி வளர்ந்த பாக்கியம் பெற்றவன். இன்னமும் அவர்கள் எல்லோரோடும் உறவு முறை சொல்லிப் பேசுபவன்.//
  கண் மூடி கற்பனை பண்ணிப் பார்க்கும் போதே இதமாக இருக்கிறது.

  //உங்கள் அளவுக்கு - மதத்தை மறுக்கக் கூடிய அளவுக்கு - இன்னும் தெம்பு வரவில்லை. //
  மதத்தை மறுக்கிறேன் என்றில்லை. அது பாட்டிற்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்று விட்டு வைச்சிருக்கிறேன். உட்கார்ந்து மதம் என்றால் என்ன என்று யோசிப்பதில்லை. முடிவில்லா சர்ச்சையில் எதற்கு நேர விரயம் என்று நினைப்பேன். அவ்வளவு தான். மதம் பற்றி மட்டும் என்றுமே பேசுவதில்லை என்று ஒரு சின்ன குறிக்கோள். மத்த படி ஒன்றுமில்லை.

  இன்ட்லி பிரச்சினை ஓக்கே. இப்போ. எல்லாப்பதிவுக்கும் வாக்கு போட்டுட்டு வந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 39. மிக மிக நன்றி அனா. மீண்டும் வந்து, வாசித்து, கருத்துச் சொல்லி, வாக்களித்து, அப்பப்பா... பாரதி கண்ட புதுமைப் பெண்ணம்மா நீ. :)

  பதிலளிநீக்கு
 40. சாதியும் மதமும் சமயுமும் காணா
  ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

  சாதியும் மதமும் சமயமும் பொய் என
  ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


  Utube videos:
  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  www.youtube.com/watch?v=FOF51gv5uCo


  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  பதிலளிநீக்கு
 41. நன்றி ஐயா. கண்டிப்பாகச் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 42. பிடித்த வரிகள்:

  நாத்திகர்களிடம் ஆத்திகமும் ஆத்திகர்களிடம் நாத்திகமும் பேசப் பிடிக்கிறது.

  பிரச்சினைகள் தீர்க்கப் பட வேண்டுமானால், நீங்கள்தான் தீர்வுகளைத் தேடி ஓட வேண்டும்.

  நல்ல கருத்துகள். நன்றி

  பதிலளிநீக்கு
 43. மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து வாருங்கள். நிறையப் பேசுவோம்.

  பதிலளிநீக்கு
 44. "சனநாயகம் போலவே நாத்திகமும் ஒரு மேற்கத்தியச் சிந்தனை".- Disagree. Please check the history of athiesm in India. Maybe you will find out that it is 2000 years old

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Yes. I have heard that. Dr. Amartya Sen talks about it at length in his book "The Argumentative Indian". That way, even Democracy was there in India even before the western civilization. I should have said, "western influence" instead of "western concept". "மேற்கத்தியச் சிந்தனை" என்பதை விட "மேற்கத்தியத் தாக்கம்" பெட்டராக இருந்திருக்கும், இல்லையா?!

   நீக்கு
 45. "சனநாயகம் போலவே நாத்திகமும் ஒரு மேற்கத்தியச் சிந்தனை." Disagree, please check history of Athiesm in India, maybe you will find it is if not 1000's 100's of years old "(Buddha?). They also say some section of hinduism is actually athiest

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Yeah, I have heard this one, too. One school of thought says, unlike other religions, Hinduism has given some space for atheists within the religion itself. They even say, our religious epics have the strongest arguments for as well as against atheism.

   நீக்கு
 46. "சாவர்க்கர் ஒரு விதிவிலக்கு. ஒரே ஆள் மதவாதியாகவும் நாத்திகராகவும் இருக்க முடியுமா?"
  Possibble - Take myself

  I am a declared athiest, but my one month old daughter name is "Meenakshi" Eventhough as an Athiest I should not but I strongly oppose conversion to Christianity (eventhough I converted once upon a time) from Hinduism, and an active patron of "Saiva" samayam, Ramalinga Adigalar...and other Tamil-Hindu values, processes most of them but I despise.

  I named my daughter Meenakshi because I live in North America.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Wow. So, I have my second example for Atheist Hinduist. Yes, there are many varieties within atheists also. There are atheists who criticize only the Hinduism (most of our fellows fall in this category). There are neutral atheists. They just don't believe in God irrespective of whichever religion he/she (the God) belongs to. Yeah, even I wonder why some people ridicule everything that a religion has taught. I understand there are some basic things that have marred the equality of our land, which have to be dealt with ruthlessly. But, that doesn't mean, you can reject the whole philosophy, right?

   நீக்கு
 47. In those times (Ancient and Medieval) rulers "devised" or "organised" religion to control population which otherwise requires heavy investment in Policing and social security. The rulers may or may not be believers in GOD but they sure believed in "religion" as a tool. If you see history great (not to me) emperors equated themselves with god (this is written in history) they proclaimed "divinity" or sent by god. So that they are placed their powers are not questioned. See the roman emperors, (there are lots including Tamil)...The above point can be interlaced with another point..."Various Kings, Queens, Princes were turned into "Deities" by poets....for e.g. "Murugan" he might have been young and brave ruler and then "deified" by poets, his subjects.....same thing with Sivan (see different names in different places)....these people were made "into" gods or any good ruler is termed as an "avatar" of one single god (like Sivan or Parvati)...how many times have we heard "..கடுவுள் மாதிரி வந்து என்ன காப்பதினீங்க !..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. This is an interesting perspective. The rulers always do that. They tell us not to believe in God and then they secretly offer prayers in some temples to stay in power. They tell us not to learn Hindi and send their wards to learn it so that they could manage when they go to Delhi through back doors.

   Your point on God and king being equal also is true. Koyil is Ko's il. Ko could mean either God or king. It's not just the kings and queens, even the local leaders and guards like Ayyanar and Karuppasamy became Gods.

   Thanks for your time and all your thought provoking comments. Let's keep talking. :)

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்