த ஜங்கிள் புக் (THE JUNGLE BOOK)

சிறுவயது முதலே திரைப்படங்களே அதிகம் பார்ப்பதில்லை. அதிலும் ஆங்கிலப் படங்கள் பக்கம் மழைக்கும் ஒதுங்கியதில்லை. சமீபத்தில்தான் ஓரளவு ஆங்கிலப் படங்களும் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் வான்வழிப் பயணங்களின் போது பொழுது போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று பார்த்த சில படங்கள்தாம். இப்போது வந்திருக்கும் ஆங்கிலப் படங்களில் த ஜங்கிள் புக்(தமிழில் ‘காட்டு நூல்’ என்று வைத்துக் கொள்ளலாம்) நன்றாக இருக்கிறது என்று ஆங்காங்கே பேச்சு. அதுவும் குடும்பப் படம் என்று வேறு கேள்வி. ஆங்கிலப் படங்களில் குடும்பப் படம் என்றாலே அதில் முக்கால்வாசிக்கும் மேல் குழந்தைகளுக்கான படங்களாகத்தான் இருக்கும் போல. குடும்பம் என்றால் குழந்தைகளும் அடக்கம். அவர்களும் சேர்ந்து பார்க்கிற மாதிரியான படங்கள் என்றால் அவர்களுக்காகவே எடுக்கப்படும் படங்கள் மட்டுமே! எப்புடி ஐடியா?! பெரியவர்களுக்காக எடுக்கப் படும் பெரும்பாலான படங்கள் குழந்தைகளும் காண முடியாது என்பதால், குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்களையே எல்லோருக்குமானதாக ஆக்கிவிடுகிறார்கள். குழந்தைகளுக்குள் பெரிய ஆட்களுக்கான சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள், பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணர மட்டும் வாய்ப்புக் கொடுக்கிறார்கள் போல. நல்ல ஆளுகப்பா நீங்க! வேற வழி! குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு குடும்பத்தோடு பார்க்கவும் ஏதாவது இருக்க வேண்டுமே!

பதினேழாண்டு காலப் பெங்களூர் வாழ்வில் மொத்தத்துக்கும் பத்துத் திரையரங்கங்களில் கூடப் படம் பார்த்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அதிலும் சில அரங்கங்களில் மட்டுமே ஒன்றுக்கும் மேலான படங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அப்படியான ஓர் அரங்கம் – தாவரக்கரை லட்சுமி திரையரங்கம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்துக்கு முந்தைய வாழ்வில் அதன் அருகில் ஒரு சில ஆண்டுகள் நண்பர்களோடு குடியிருந்திருக்கிறேன். அப்போது ஓரிரு முறை அங்கே சென்று சில படங்கள் பார்த்திருக்கிறேன். அவற்றுள் நன்றாக நினைவில் இருக்கும் படங்கள் இரண்டு. ஒன்று – ‘மின்னலே’. இன்னொன்று – ‘ஆட்டோகிராப்’. ஆட்டோகிராப்தான் மிக அழுத்தமாக மனதில் பதிந்திருப்பது. அப்படியான நினைவுகள் நிறைந்த தெருக்கள் வழியாக, அதே திரையரங்கத்துக்கு இம்முறை இரண்டு குழந்தைகளும் மனைவியும் உட்பட்ட குடும்பத்தோடு கிளம்பிச் சென்றேன். அதுவும் எப்போதும் இல்லாத மாதிரியாக ஓர் ஆங்கிலப் படம் பார்க்க. நினைவுகளைக் கடந்து போய், சீட்டுகளை வாங்கிக் கொண்டு, அதன்பின் அது முப்பரிமாணப் படம் (3D) என்பதால் அதற்குரிய கண்ணாடிகளையும் வாங்கிக் கொண்டு, உள்ளே போய் அமர்ந்தோம்.

‘த ஜங்கிள் புக்’ (‘THE JUNGLE BOOK’) ஏற்கனவே நூல் வடிவில் வந்து விட்ட கதைகளின் தொகுப்பு. நான் படித்ததில்லை. மகள் படித்து விட்டாள். அதனால் அவளுக்கு ஓரளவுக்கு அது பற்றிய பின்னணி தெரிந்திருந்தது. அந்த நூலையும் ஆசிரியரையும் பற்றிய பின்னணி கதையை விடக் கூடுதல் சுவையானவை. கதையின் ஆசிரியர் ஆங்கிலேயரான ருத்யார்ட் கிப்ளிங் ஆங்கிலேயர்களின் இந்தியாவில் பிறந்தவர். அதனால் கதை முழுக்க இந்தியக் காடுகளில் நிகழ்வதாகவும் இந்தியத் தாக்கம் நிறைந்ததாகவும்  காண முடிகிறது. பல பாத்திரங்களின் பெயர்கள் இந்தியப் பெயர்களைப் போல உள்ளன. பாலு, பகீரா, ரக்ஷா, ஷேர் கான் என்று. கடைசியில் வரும் காட்சியில் வரும் குரங்குகளின் மாளிகை இந்தியக் கோவில் வடிவத்தில் இருக்கிறது. குரங்குகளின் கூட்டம் ‘பந்தர் லோக்’ என்ற இந்திச் சொல்லால் அழைக்கப்படுகிறது. படத்தில் வரும் ஒரே மனிதப் பாத்திரமான மோக்ளி கூட இந்தியச் சிறுவன்தான். இந்தக் கதைகள் யாவும் கிப்ளிங், பின்னர் ஆறு வயதில் இறந்து விட்ட தன் மகளுக்காக எழுதியவையாம். இது ஏற்கனவே ஒருமுறை படமாக்கப் பட்டு விட்டதாம். இது இரண்டாம் முறையாக இன்னும் புதுமைப் படுத்தி எடுக்கப் பட்டிருப்பதாம். நல்லது!

விலங்குகள் மட்டும் வாழும் காட்டுக்குள், ஒநாய்களோடு சேர்ந்து ‘மனிதக் குட்டி’ (‘MAN CUB’) ஒன்றும் ஓநாயாகவே வளர்கிறது. ‘குழந்தை’ (‘CHILD’) அல்லது சிறுவன் (‘BOY’) என்று சொல்லாமல் ‘மனிதக் குட்டி’ என்று குழந்தைகளுக்காக விலங்குகளின் மொழியில் சொல்வதே நம்மை விலங்குகளின் உலகுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. ஓநாய்களைப் போலவே ஊளையிடுதலைக் காட்டுவதன் மூலம் அவன் எவ்வளவு ஓநாயாகவே வளர்ந்திருக்கிறான் என்று நமக்குத் தொடக்கத்திலேயே காட்டி விடுகிறார்கள். அவன் பிறந்த காலத்தில் பிறந்த ஓநாய்க் குட்டிகள் எல்லாம் ஓநாய்கள் ஆகிவிட்ட போதும் அவன் இன்னும் சிறுவனாகவே இருக்கிறான் என்ற அறிமுகம், ஒவ்வொரு விலங்கினத்துக்கும் இருக்கும் அவர்களுக்கே உரிய வாழ்-வட்டத்தை (LIFECYCLE) நினைவுபடுத்துகிறது. ஓநாய் இனத்தில் உள்ள ஒரு பெண் ஓநாய் அவனைத் தன் மகன் போலவே பாவித்து வளர்க்கிறது.

நாம் கேள்விப்பட்டபடி காட்டரசன் சிங்கம் அல்ல இந்தப்படத்தில். அந்தப் பொறுப்பு புலிக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஷேர் கான் எனப்படும் புலியார்தான் அவர். அவரே வில்லனும். கொடுங்கோபக்காரர்.

கோடை காலத்தில் நீர் வற்றும் போது மொத்தக் காட்டிலும் ஒரேயோர் இடத்தில் மட்டும் நீர் கிடைக்கும். அந்த நேரத்தில் ஒரு பாறை வெளியில் தெரிய ஆரம்பிக்கும். அந்தப் பாறை தெரிய ஆரம்பித்து விட்டால், விலங்குகளுக்குள் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் (‘WATER TRUCE’) ஏற்படுகிறது. எல்லோரும் ஒன்று கூடும் இடத்தில் யாரும் யாரையும் தாக்கக் கூடாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எல்லோரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்கிறார்கள். காட்டரசன் ஷேர் கானும் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறார். அம்முறை புதிதாக ஒரு வாசம் வருகிறதே என்று ஓநாய்களின் அருகில் போய் இருக்கும் மனிதக் குட்டியான மோக்ளியைப் பார்த்துக் கோபம் கொள்கிறார். அதற்குக் காரணம், அவர் மனிதர்கள் மீது வைத்திருக்கும் பழைய பகை.

அந்தப் பகைக்கான காரணம் என்னவென்றும் சொல்லப்படுகிறது. மோக்ளியின் தந்தை குழந்தையான மோக்ளியோடு காட்டுக்குள் பயணம் வரும்போது ஷேர் கான் பார்த்து விடுகிறார். அவர் தற்காத்துக் கொள்வதற்காக ஷேர் கானைத் தாக்க முயலும் போது, அதே காரணத்துக்காக ஷேர் கான் மோக்ளியின் தந்தையைக் கொன்று போட்டு விடுகிறார். அந்த இடத்தில் குழந்தை மோக்ளி இருந்ததைக் கவனிக்காமல் சென்று விடுவதால் அவன் பிழைத்து விடுகிறான். இதைப் பார்க்கிற பகீரா (கருஞ்சிறுத்தை) அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போய் ஓநாய் இனத்தில் சேர்த்து அவர்களில் ஒருவனாகவே வளர்க்கப் படுகிறான். காட்டுக்கு முதல் எதிரியே மனிதர்கள்தாம் (அதுவும் சரிதானே!) என்று எண்ணும் ஷேர் கான், அதனால்தான் பின்னர் மோக்ளியைக் காணும்போது, “காட்டுக்குள் மனிதனுக்கு என்ன வேலை?” என்று கடும் கோபம் கொள்கிறார். ஓநாயர்கள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அடங்க மறுக்கிறார். கோடை காலம் முடிந்து நீர் மட்டம் அதிகமாகி, ‘நீர் உடன்பாட்டுப் பாறை’ மறையும் போது, அவன் அவர்களின் இனத்தோடு சேர்த்து வைக்கப்படா விட்டால் தாமே கொன்று போட்டு விட நேரிடும் என்று கடுமையாக எச்சரித்து விடுகிறார்.

நேரம் வந்ததும் ‘மனிதக் குட்டியின்’ பாதுகாப்பு கருதி, பகீரா அவனை ‘மனிதக் கிராமத்தில்’ (‘MAN VILLAGE’) சேர்த்து விடலாம் என்று அழைத்துச் செல்கிறார். மோக்ளி இவ்வளவு காலம் தான் வாழ்ந்த மண்ணையும் தன் உடன் வாழ்ந்த ஓநாயர்களையும் பிரிந்து செல்லும் காட்சியில் நமக்கும் மனம் வலிக்கத்தான் செய்கிறது. போகிற வழியிலும் பல திருப்பங்கள் – சிக்கல்கள்.

ஆங்கிலப் படம் என்பதால் விலங்குகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே பேசுகின்றன. ஆனால் மனிதனுக்கு முந்தைய இனமான குரங்குகள் மட்டும் ஆங்கிலம் தெரியாதவையாக இருக்கின்றன.

மலைச்சரிவு மிக பயங்கரமாகவும் அழகாகவும் படம் பிடிக்கப் பட்டிருக்கிறது.

காட்டின் சட்டம் (‘LAW OF THE JUNGLE’) என்று ஓநாயர்கள் ஓதும் தத்துவம் அருமையாக இருக்கிறது. அது ஆங்கிலத்தில் இப்படிப் போகிறது:
Now this is the law of the jungle, as old and as true as the sky, And the wolf that shall keep it may prosper, but the wolf that shall break it must die. As the creeper that girdles the tree trunk, the law runneth forward and back, For the strength of the pack is the wolf, and the strength of the wolf is the pack.

அதன் பொருளைத் தமிழில் இப்படிக் கொள்ளலாம்:
“இதுதான் காட்டின் விதி. இது வானம் அளவுக்குப் பழமையானதும் உண்மையானதும் ஆகும். அதைக் காக்கும் ஓநாய் வளரும். அதை உடைக்கும் ஓநாய் செத்தழியும். அடிமரத்தைச் சுற்றி வளர்கிற கொடியைப் போலே, இந்தச் சட்டம் முன்னும் பின்னும் பின்னி ஓடுகிறது. ஏனென்றால் மொத்த ஓநாய்க் கூட்டத்தின் பலமே ஒவ்வொரு தனி ஓநாயின் பலம்; ஒவ்வொரு தனி ஓநாயின் பலமே மொத்த ஓநாய்க் கூட்டத்தின் பலம்.”

இதைக் கேட்கும் போதெல்லாம் ஒருவிதமாகப் புல்லரித்தது. இந்த ஒற்றுமை மனித இனங்களில் எத்தனை இனங்களில் இருக்கிறது என்று எண்ணி அந்த ஓநாய்களின் ஞானத்தின் மீது பொறாமை வந்தது.

மோக்ளியின் நாடு திரும்பலின் போது வருகிற கரடி பாத்திரத்தின் பெயர் பாலு. பாலு நல்லவர். ஆனால் பெரும் சோம்பேறி. மோக்ளி மூளையைப் பயன்படுத்திப் பல வேலைகளை எளிதாகச் செய்ய முடிவதைக் கண்டு அவனைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முயல்கிறார். நாட்டுக்குள் வந்தால் பெரிய முதலாளி ஆகிவிடுவார். ஏற்கனவே நிறைய பாலுக்கள் இங்கே இருக்கிறார்கள் ஐயா! நீங்கள் காட்டுக்குள்ளேயே இருங்கள்!! பாலு மோக்ளியை ஏதாவது பாடு எனும் போது பையன் பாவமாக, ‘காட்டின் சட்டத்தை’ ஓதத் தொடங்குவான். “அது பாட்டல்ல, பிரச்சாரம்!” (“THAT’S NOT A SONG, IT’S A PROPOGANDA”) என்று சொல்லும் போது அரங்கம் குலுங்கிச் சிரிக்கிறது. மூன்றரை வயது மகன் அந்தக் கடைசிச் சொல்லை மட்டும் உள்வாங்கி “ப்ரப்பகாண்டா” என்று கத்தியபோது அருகில் இருந்தவர்கள் திரும்பி வேடிக்கை பார்த்தார்கள்.

காட்டில் வாழும் காலம் முழுக்கவே மோக்ளி மூளையைப் பயன்படுத்தி தந்திரமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பான். அவற்றால் பலரும் பயன் பெறுவார்கள். ஆனாலும் பகீரா அவனை “இது போன்று மனிதத் தந்திரங்களை இங்கே பயன்படுத்தாதே!” என்று கண்டித்துக் கொண்டே இருப்பார். விலங்குகளில் இருந்து மனிதர்களைப் பெரிதாக வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான கூறு இதுதானே! அடுத்தது, மனிதர்களின் தீயைப் பயன்படுத்தும் ஆற்றல் விலங்குகளுக்கு மனிதர்களின் மீது மரியாதையும் அச்சத்தையும் கொடுக்கிறது. தீயை எப்போதும் எல்லோரும் ‘சிவப்புப் பூ’ (‘RED FLOWER’) என்றே சொல்கிறார்கள். “சிவப்புப் பூவை மட்டும் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து விட்டால், நீ உணவுச் சங்கிலியின் உச்சிக்குப் போய்விடுவாய்” என்று குரங்குகள் மோக்ளியிடம் சொல்லும் போது, அது நமக்குள் எவ்வளவோ சிந்தனைகளைக் கிளறுகிறது. தீ என்றால் தீ மட்டுமில்லை. துப்பாக்கி முதற்கொண்டு அதன் பின்பு மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்கள் அனைத்தும் அதில் அடங்கும்தானே! அவை கொண்டுதானே அத்தனை விலங்குகளையும் காடுகளையும் மனிதன் அழித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான்! அதை உணர்த்தும் பொருட்டே படத்தின் முடிவிலும் ஏகப்பட்ட தீ மூட்டப்பட்டு இருக்கிறது. அதை உணர்ந்துதான் ஷேர் கானும் கூட மனிதர்கள் மீது வெறுப்பு கொள்கிறார். வில்லனாக இருந்தாலும் அவருடைய நியாயம் நமக்குப் புரிகிறது. வில்லன்களின் நியாயம் புரிந்தே பழகிவிட்டவர்கள் அல்லவா நாம்!

அதை நிரூபிக்கும் விதமாக மோக்ளி ஷேர் கானுக்கு எதிராகத் தீயைக் கையில் எடுக்கும் போது, மிரண்டு போய் எல்லோரையும் பார்த்து ஷேர் கான் கத்துவார் – “சொன்னேனே, கேட்டீர்களா? இப்போது தீயைக் கையில் எடுத்து விட்டான் பாருங்கள்! காட்டை அழித்து விட்டுத்தான் போவான்!” என்று. உடனே அவன் காட்டின் மீதான தன் நன்றியை நிரூபிக்கத் தீயைத் தண்ணீருக்குள் வீசுவான். அப்போது வில்லனுக்கே உரிய பாணியில் ஷேர் கான், நிராயுதபாணி ஆகிவிட்ட மோக்ளியின் முட்டாத்தனத்தைக் கண்டு சிரிப்பார். அப்போது மொத்தக் காடும் மோக்ளிக்கு ஆதரவாகத் திரும்பும். மூண்ட பெருந்தீக்கு நடுவில் நடைபெறும் நீண்ட சண்டையில் ஷேர் கானை வீழ்த்தி மோக்ளி வெற்றி பெறுவான். அது மனித இனத்தின் வெற்றி என்று கொள்ளலாமா? தெரியவில்லை! மூட்டப்பட்ட தீயை யானைகள் எல்லாம் சேர்ந்து காட்டாற்று நீரைத் திசை மாற்றி விட்டு அணைக்கும். மனிதனைக் காக்கவும் விலங்குகள் தேவை என்று சொல்கிறார்களோ?!

இவ்வளவு கனமான கருத்துகள் நிறைந்த படத்தில், மொத்தப் படமும் சொல்ல முயன்ற எல்லாக் கருத்துக்களையும் நான் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. புரிந்தவை சில; புரியாதவை பல என்றே எண்ணுகிறேன். அப்படிப் புரிந்தவற்றிலும் எல்லாம் இங்கே சொல்லி விட்டேனா என்றும் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஒருமுறை பார்த்து விட்டு, புதிய புரிதல்களையும் சேர்த்து எழுதலாம். நீங்களும் பார்த்து விட்டு வந்து உங்கள் புரிதல்களையும் எழுதுங்கள்.

பின்குறிப்பு: ஆங்கிலப் படத்துக்குத் தமிழில் விமர்சனம் எழுதியிருக்கிறாயே என்று கேட்பவர்களுக்காகவும் தமிழ் தெரியாத நண்பர்களுக்காகவும் விரைவில் இதையே ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க முயல்வோம்! எட்டு வயது மகள் அவளுடைய பாணியில் அவளுடைய விமர்சனத்தை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறாள். மூன்றரை வயது மகனுக்கு அவனுக்குப் பிடித்த புலியாரை வில்லனாகக் காட்டியிருப்பதால் படம் பிடிக்காமல் போய்விட்டது. பிடித்திருந்தாலும் விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்னும் எழுதப் படிக்கத் தொடங்கவில்லையாதலால் இன்னும் கொஞ்ச காலம் கொடுத்தருள்வீராக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்