இறுதிச் சுற்று

நீண்ட காலத்துக்குப் பின் மாதவன் நடித்து வெளிவந்திருக்கும் ‘இறுதிச் சுற்று’ பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது நேற்று. ‘அலை பாயுதே’ நடிக்கும் போதே அவர் கொஞ்சம் தாமதமாக வந்திருப்பது போல் பேசப்பட்டது. இப்போது அவருக்கும் வயது கிட்டத்தட்ட ஐம்பதைக் கடந்திருக்க வேண்டும். அதையும் கருத்தில் கொண்டே அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகி அவரை “கெழம்”, “கெழம்” என்று திட்டுவதன் மூலம் மாதவனை அவருடைய பழைய துறுதுறு இளைஞன் அடைப்புக்குள் இருந்து வெளியே கொண்டு வந்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது. தோற்றத்திலும் இதுவரை அவரை நாம் பார்த்திராத மாதிரியாக – நீண்ட தலைமுடி தாடியோடு காட்டியிருக்கிறார்கள். மாதவனுக்கு இப்போதுதான் தமிழ்த் திரையில் ஆட்டம் தொடங்கப் போகிறது என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் பெரும் எதிர்பார்ப்புடனே பார்க்கத் தொடங்கினேன்.

நல்ல படந்தான். விளையாட்டு சார்ந்த படங்கள் அதிகம் தமிழில் வந்ததில்லை என்பதால் இது அத்தகைய படங்களிலேயே சிறந்த படமாக இருக்கும் என்கிறார்கள். இருக்கலாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து இது போன்ற படங்கள் நிறைய வெளிவந்தால் இதை விடச் சிறப்பான படங்கள் கூடிய விரைவிலேயே நிறைய வரலாம். இப்போதே விளையாட்டு சார்ந்த கதைகளைத் தூக்கிக் கொண்டு பல நாளைய இயக்குனர்கள் ஏகப்பட்ட படிகளை ஏறி-இறங்கிக் கொண்டிருப்பார்கள் சென்னையில். அதுவும் குத்துச்சண்டை என்பது நமக்குச் சற்றும் தொடர்பில்லாதது என்பதால் அந்த அளவுக்குத் தாக்கத்தை உண்டுபண்ணவில்லையோ என்றும் ஒருபுறம் தோன்றுகிறது. இதே போன்ற கதை கிரிக்கெட் சார்ந்து வந்திருந்தால் அதன் வீச்சு இதைவிடப் பலமடங்கு இருந்திருக்கலாம். அதே வேளையில் படத்தின் முக்கியமான கருத்துகளில் அதுவும் ஒன்று. அரசியலும் மற்ற லீலைகளும் இல்லாமல் இருந்திருந்தால் நம் குத்துச்சண்டை வீராங்கனைகளும் பல உலகளாவிய வெற்றிகளைக் குவித்திருப்பார்கள்; குத்துச்சண்டை மட்டுமல்ல, அது போன்று பல விளையாட்டுகள் நலிந்து கிடப்பதற்கு நம் இரத்தத்திலேயே ஊறிக் கிடக்கும் பல கோளாறுகள்தாம் காரணம் என்பதே அந்தக் கருத்து.

இந்தியாவில் பணம் கொழிக்கும் எல்லாத் துறைகளிலும் அரசியலும் வந்து விடும். திரைப்படம், விளையாட்டு ஆகிய இரண்டும் இதில் முதன்மையானவை. அதுவும் பெண்கள் சார்ந்த விளையாட்டு என்றால் திரைத்துறைக்கு இணையாக ‘மற்ற’ சிக்கல்களும் அளவிலாமல் கூடிவிடும். பெண்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சியாளராக வரும் மாதவன், விளையாட்டில் இருக்கும் அரசியலால் தனக்கு வந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் வாய்ப்பையும் அத்தோடு சேர்த்துத் தன் மனைவியையும் வேறொருவனிடம் இழந்து, அதன் பின்னர் கைக்காசையெல்லாம் இழந்து சாதிக்கத் துடிக்கும் அளவுக்குத் தொழிலில் ஈடுபாடு கொண்டவராகக் காட்டப்படுகிறார்.

இளம்பெண்களோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தாலே தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் கூடிவிடுவதும் பொறுக்கிப் பட்டம் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் கூடிவிடுவதும் இயல்பானதுதானே. அதுவும் மனைவியை இழந்து வாழ்கிறவன் என்றால் அது மிகவும் எளிது. அப்படி ஒருமுறை பலிகடா ஆக்கப்பட்டு, அரியானாவில் இருந்து சென்னைக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். தன் தொழில் மீதான அளவு கடந்த பற்று மற்றும் வெறி காரணமாக அதற்கெல்லாம் மேலே சென்று தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டுகிறார். இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால் நம்மைத் தரைமட்டமாக்க அவர்கள் எந்தக் கீழ்நிலைக்கும் தாழ்வார்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்தியிருக்கும் படம். ஊழலாலும் அரசியலாலும் புழுத்துப் போன அதிகாரிகளை ஒவ்வொரு நாளும் நேரில் பார்த்து வாழ்கிற நமக்கு இது எதுவுமே மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் போல் இல்லை. நடப்பதைத்தானே சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இவை பற்றியெல்லாம் கேள்வியே படாத – தெரியவே வராத ஒரு சாராரும் இருக்கலாம். அவர்களுக்கு வேண்டுமானால் இவற்றைப் பாருக்கும் போது இது ஒரு படமாகப் படலாம்.

“கதாபாத்திரங்களின் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே” என்று தொடங்கும் படம், “இத்திரைப்படம் பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு” என்று முடிகிறது. “குத்துச்சண்டை ஊருக்குள் வந்து ஐந்தாவது ஆண்டிலேயே நம் பெண் ஒருவர் உலக அளவில் வெற்றி பெற்று வந்தார்” என்றும் சொல்லி முடிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சொல்ல விரும்பியிருப்பது தெளிவான ஒரு கருத்துதான். இந்த நாட்டில் திறமைக்குப் பஞ்சமில்லை; அவற்றைத் தேடி அடையாளம் காண வேண்டும்; அதுவும் நம் தேடல் சென்றடையாத மூலைமுடுக்குகளில்தாம் அளவிலாத் திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன; அப்படி அடையாளம் கண்டபின்பும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களைத் தம் பிழைப்புக்காகவும் சுகபோகங்களுக்காகவும் அழித்து விடாமல் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே அது.

குத்துச்சண்டை பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் செய்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியும். அதில் வரும் காட்சிகளும் வசனங்களும் அதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த உழைப்புதான் நல்ல படங்களை சராசரிப் படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது. அப்படியான உழைப்பைப் பலர் அறியாத ஒரு துறையில் போய்ப் போடுவது என்பது அதனினும் சிரமம் – பாராட்டுக்குரியது.

நாயகியை விட அவருடைய அக்கா அழகாக இருக்கிறார். அவருக்குப் பயிற்சி அளிக்க வரும் மாதவன்தான் அவளைத் தூக்கித் தூர வீசிவிட்டு நாயகிக்குள் ஒளிந்திருக்கும் திறமையை அடையாளம் காண்கிறார். எந்தத் துறையிலும் விற்பன்னனாக இருப்பவனின் முதற் திறமை, அந்தத் தொழில் சார்ந்த திறமையை-தரத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடிதலே. காலங்காலமாக விவசாயம் செய்கிற ஒருவரிடம் போய்க் கேட்டால், எந்த மண்ணுக்கு எந்தப் பயிர் சரியாக வரும் என்பதை மிக எளிதாகச் சொல்லி விடுவார். அது போல! அப்படித்தான் வாழ்க்கையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஆட்டம் போட்டுக் கொண்டு, வாய்க்கொழுப்பாகப் பேசிக்கொண்டு அலைகிற மீன்காரியான நாயகிக்குள் இருக்கும் திறமையை மாதவன் சரியாக அடையாளம் காண்கிறார். அவளுடைய அக்காவோ குத்துச்சண்டை விளையாட்டைத் தன் முழுநேரப் பொறுப்பாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். ஆனாலும் அவள் ஏன் வெல்ல முடியாமல் போகிறது என்பதற்குக் காரணமாகச் சொல்லப்படும் கருத்து சுவையானது. அவள் காவற்துறையில் வேலை வாங்குவதற்காகக் குத்துச்சண்டை ஆட வருகிறாள். அதனால்தான் அவளுக்குக் குத்துச்சண்டை மீது முழு ஆர்வம் வரவில்லை என்கிறார்கள். அதுவும் சரிதானே! நம்முடைய தொழில்களில் கூட குடும்ப சூழ்நிலையால் அல்லது சம்பாதிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட வேலைக்கு வருகிறவன் சாதிப்பதைவிட, இந்த வேலையிலேயே கிறுக்காக இருப்பவன் வந்து சாதிப்பதுதானே அதிகம்!

படத்தின் முதிர்ச்சி அதன் இயல்புத்தன்மையில் உள்ளது. திரைப்படம் என்றாலே இருக்கும் மசாலாத்தனம் இல்லாமல் இருக்கிறது. நாயகியின் அம்மா வடநாட்டுக்காரர் என்பதைக் காட்டுவதற்காக ஓரிரு இடங்களில் இடத்துக்குப் பொருத்தமில்லாமல் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்தி வசனங்கள் கொஞ்சம் பிசிறு போல் இருக்கின்றன. அது ஒன்றுதான் உறுத்துகிற மாதிரி இருந்த கோளாறு. படம் முடிவை நெருங்கும் போது நம்மையும் உணர்ச்சி தொற்றிக்கொள்கிறது.

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் வயதான நிர்வாகி நாயகியிடம் தவறாக நடந்து கொள்ள முயல்வதும், அப்போது காறித் துப்பிவிட்டு வருகிற இளம்பெண்ணான நாயகி அதே போல வயதான மாதவன் மீது காதல் கொள்வதும் சரியாகப் பிரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. முதலில் பயிற்சியின்போது கூட, பயிற்சியாளர் என்ற முறையில் மாதவன் தன்னை நெருங்குவதைக்கூட அனுமதிக்க மறுக்கும் அதே பெண்தான் பின்னர் அப்படி மாறுகிறாள். “எனக்கு உங்க அப்பா வயசு!” என்று சொல்லும் போது கூட, “எனக்கு எங்கப்பன் வயசுல ஆயிரம் பேரத் தெரியும். அத்தனை பேர்ட்டயுமா ஐ லவ் யூ சொல்றேன்?!” என்று கேட்டுத் திணறடிக்கிறார். அது கடைசிவரை மாதவனும் ஏற்றுக் கொண்ட காதலாகவோ அப்படி இல்லை என்று மறுத்ததாகவோ சொல்லாமலே அழகாக முடிகிறது. மாதவனுக்கு அவளிடம் அவளுடைய திறமைதான் ஈர்க்கிறது. அவளுக்கோ முதலில் பிடிக்காமல் இருந்த மாதவன் மீதே ஈர்ப்பு வந்து விடுகிறது. மாதவன் அவளுடைய திறமைக்காக அவளுடைய மற்ற தொல்லைகளைத் தாங்கிக் கொள்வது போல (அதுவும் முழுமையாகத் தாங்கிக் கொள்கிறார் என்று சொல்ல முடியாது) அவளோ மாதவனுக்காக எல்லாத்தையும் தாங்கிக் கொள்கிறாள்.

முதலில் மீன்காரியாக இருக்கும் நாயகி மாதவனைப் பார்த்து, “இவனுக்குத் தல தனுஷுன்னு நெனைப்பு” என்று சொல்லும் போது, ‘இதைக் கேட்கும் நமக்கே இம்புட்டு இடிக்குதே, மாதவனுக்கு எம்புட்டு இடிச்சிருக்கும்’னு நிறையவே பீலிங் ஆகிவிட்டது. அதுதானே திரைத்துறை! ‘அதையே ஒரு மேற்தட்டுக் கல்லூரி மாணவி சொன்னால்தானே வருத்தப்பட வேண்டும்? மீன்காரிதானே சொன்னாள்?!’ என்றுகூட அவர் சிரித்துக் கடந்திருக்கலாம். மாதவன் மீது காதல் வந்ததும், பர்சுக்குள் இருக்கும் தனுஷ் படத்தை எடுத்து வீசிவிட்டு மாதவன் படத்தைச் செருகும் காட்சியை தனுஷ் பார்த்திருந்தால் கண்டிப்பாகக் கவலைப்பட்டிருக்க மாட்டார்; பெரும் மகிழ்ச்சிதான் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். ரஜினி மகளை மணம் முடித்தபோது - கமல் மகளோடு கட்டி உருண்டு நடித்தபோது - தேசிய விருதுகள் வாங்கியபோது அடைந்த அளவுக்கு இன்பம் இந்தக் காட்சியிலும் அடைந்திருப்பார் என்றே நினைக்கிறேன்! என்ன நாஞ் சொல்றது?! ;)

சகோதரப் பொறாமை என்பது நம் ஊரில் எந்த அளவுக்குப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ அதே அளவு புரிந்து கொள்ளப்படாமலும் இருக்கிறது. அக்கா-தங்கை நடுவில் வரும் அந்தப் பொறாமை பற்றியும் மிக நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். வாயும் வயிறும் வெவ்வேறு என்று ஆகிவிட்ட பின்பு பொறாமைக்கு இடம், பொருள், ஏவல்தான் உண்டா என்ன? அதே அக்கா பின்னர் ஓரிடத்தில் தங்கையின் வெற்றிக்காகத் துடிக்கவும் தொடங்கி விடுகிறார். அது கொஞ்சம் நம் மரமண்டைக்குப் பிடிபட மறுக்கிறது. அப்படியொரு பொறாமைக்காரியால் அவ்வளவு எளிதாக மனம் மாற முடியுமா என்று தெரியவில்லை.

நமக்கு ஆங்கிலப் படங்கள் அதிகம் பார்த்துப் பழக்கம் இல்லை. பார்த்த மிகச் சில படங்களில் ‘கோச் கார்டர்’ என்பதும் ஒன்று. மிகச் சில இடங்களில் மாதவனின் செயல்பாடுகள் கோச் கார்டரை நினைவுபடுத்துவதாக இருந்தன. மிக மிகக் குறைவான இடங்களில்தாம். அதனால் அங்கிருந்து சுட்டார்கள் என்றெல்லாம் பழி போடுவதற்கில்லை.

நடிகர் சங்கத் தேர்தலில் முட்டிக் கொண்டு நின்ற நாசரும் ராதாரவியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எப்போதும் போல் நன்றாகவே செய்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது அவர்கள் இருவரும் எப்போதோ அதைவிட்டு வெளியே வந்து விட்டார்கள் போல்தான் தெரிகிறது. நமக்குத்தான் எல்லாமே அவர்களைவிட உணர்ச்சிமயம் ஆகிவிடுகின்றன.


படம் பார்த்த பின்பு தெரிந்து கொண்ட சில தகவல்கள் மேலும் சுவையூட்டுகின்றன. இதை இயக்கியிருப்பவர் ஒரு பெண் இயக்குனர். அதனால்தான் பெண்கள் குத்துச்சண்டையைத் தேர்ந்தெடுத்திருப்பது இயல்பாகவே நன்றாக அமைந்து விட்டதோ! கவிஞர் தாமரையின் பாடல்கள் போல, இவருடைய இயக்கமும் பெண்ணின் உணர்ச்சிகளை ஆண்களைவிட நன்றாகச் சொல்லியிருப்பது போல் இப்போது படுகிறது. அதுவும் அவர் மணிரத்னத்திடம் பயிற்சி பெற்று வந்தவர் என்பதால் சோடை போக வாய்ப்புக் குறைவுதானே! அடுத்த தகவல், நாயகி உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கனையாம். அப்பிடிப் போடு! இதைவிட வேறென்ன வேண்டும்?! ஆனால் அவர் நடிப்பிலும் இவ்வளவு தெறிக்க விட முடியும் என்பது பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தது வேண்டுமானால், அவர் நடிக்கவில்லை - அப்படியே வாழ்ந்தார் என்று பீலா விட்டுக் கொள்ளலாம். அந்த மீன்காரியாக நடித்ததும் ‘நச்’சென்று இருந்ததே. அதற்கென்ன சொல்ல?! கடைசித் தகவல் – இது பல ஆண்டு கால உழைப்பில் உருவான படமாம். அதன் விளைவைப் படத்தில் நன்றாகவே காணமுடிகிறது. செமக் குத்து!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்