தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிர்ச்சித் தோல்விகள்

தேர்தல் நேரம் என்பதால் அரசியல் சார்ந்த சிந்தனைகளையும் ஆராய்ச்சிகளையும் தவிர்ப்பது மிகவும் சிரமமாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தலும் நமக்கு மீண்டும் உயிர்த்தெழுப்பிக் கொண்டுவருகிற அரசியல் ஆர்வம் போலவே, ஒவ்வொரு தேர்தலும் எவரும் எதிர் பார்க்காத பல வியப்புகளையும் அதிர்ச்சிகளையும் வாரி இறைத்து விட்டுத்தான் செல்கிறது. அப்படி இதுவரை நடந்த ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் காணப்பட்ட அதிர்ச்சித் தோல்விகள் பற்றி ஒரு பார்வை பார்த்து வரலாம் என்று கிளம்பியதன் விளைவே இப்பதிவு.

விடுதலை பெற்ற இந்தியாவில் 1952-இல் நடைபெற்ற சென்னை மாகாண முதல் சட்டமன்றத் தேர்தலில், பிற்காலத்தில் முதலமைச்சர் ஆகும் அளவுக்குப் பெரிய ஆளான பக்தவச்சலம் பொன்னேரி தொகுதியில் தோல்வியைத் தழுவி இருக்கிறார். நம் காலத்தில் காங்கிரசில் இருந்து பாஜக போன ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தந்தை மோகன் குமாரமங்கலம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சேலம் நகரத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றிருக்கிறார். மோகன் குமாரமங்கலத்தின் தாய் ராதாபாய் சுப்பராயன் திருச்செங்கோட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். மங்களூர் மண்ணில் பிறந்து, சென்னையிலும் வெளிநாட்டிலும் படித்து, தமிழர் ப.சுப்பராயனை மணந்து (இவர் சென்னை மாகாண முதலமைச்சர் முதல் பல்வேறு மத்திய - மாநில அரசு உயர் பதவிகளில் இருந்தவர்), தமிழ் நாட்டில் அரசியல்வாதி ஆனவர் இவர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஏற்கனவே முதலமைச்சராக இருந்து திருவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி ராஜா தோல்வி பெற்றிருக்கிறார். இதே தேர்தலில் கோழிக்கோட்டில் போட்டியிட்ட இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தோழர் நம்பூதிரிபாடும் தோல்வியைத் தழுவினார் என்பதும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியது.

அடுத்து வந்த 1957 தேர்தலில், பிற்காலத்தில் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட என்.வி.நடராஜன் பேசின் ப்ரிட்ஜ் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார். அன்பில் தர்மலிங்கம் லால்குடியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். நெடுஞ்செழியன் சேலம்-1 தொகுதியில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். எஸ்.எஸ்.ராஜேந்திரன் தேனியில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவரின் அமைச்சரவையிலும் இருந்திருக்கிற க.ராஜாராம் திருமங்கலத்தில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். அதற்கு முன்பு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிற பி.டி.ராஜன் (பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் தந்தையார்) உத்தமபாளையத்தில் சுயேச்சையாக நின்று தோற்றிருக்கிறார். இப்படி சுயேச்சையாகத் தம் திராவிட இயக்க வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தாம் அடுத்து நாட்டைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் என்.சங்கரையா மதுரை கிழக்கில் நின்று தோற்றிருக்கிறார். தோழர் ஜீவா நாகப்பட்டினத்தில் நின்று தோற்றிருக்கிறார்.

அடுத்து வந்த 1962 தேர்தலில், திமுக தனிக்கட்சியாகக் களம் இறங்கி விட்டது. திமுக சார்பில் அதே பேசின் ப்ரிட்ஜில் போட்டியிட்டு என்.வி.நடராஜன் தோல்வியுற்றார். அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் நடேச முதலியாரிடம் தோல்வியுற்றார். முந்தைய காமராஜர் அமைச்சரவையில் இருந்த லூர்தம்மை சைமன் கொளச்சல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி பெறுகிறார். என்.சங்கரையா மீண்டும் அதே மதுரை கிழக்கு தொகுதியில் தோல்வி பெறுகிறார். அண்ணாதுரையிடமும் கருணாநிதியிடமும் அமைச்சராக இருந்து பின்னர் அதிமுகவில் சேர்ந்த சத்தியவாணிமுத்து பெரம்பூரில் திமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய சி.பா.ஆதித்தனார் திருச்செந்தூரில் தோல்வி பெறுகிறார்.

அடுத்து வந்த 1967 தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலத்தையே புரட்டிப்போட்ட முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, விருதுநகரில் காமராஜரும், மேலூர் தெற்கில் கக்கனும், திருப்பெரும்புதூரில் பக்தவச்சலமும், இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஷ்வர சேதுபதியும் தோற்கிறார்கள். கடவூரில் திமுகவின் அன்பில் தர்மலிங்கம் தோல்வி அடைகிறார்.

அண்ணாவுக்குப் பின் திமுகவை கருணாநிதி முழுமையாகக் கைப்பற்றியபின் நடந்த தேர்தலான 1971-இல் நிறுவனக் காங்கிரஸ் சார்பில் நின்ற நெடுமாறன் மதுரை மத்தியத் தொகுதியிலும், என்.எஸ்.வி.சித்தன் திருமங்கலத்திலும் தோற்கிறார்கள். மற்றபடி காங்கிரஸ் நிறையத் தோற்கிறது. அது ஓர் அதிர்ச்சி இல்லை என்றே ஆகிவிட்ட தேர்தல் அது.

1977 தேர்தல் திமுக உடைந்து அதிமுக உருவாகி ஆட்சியைப் பிடித்த தேர்தல். இதில் இப்போது அதிமுக வந்து விட்ட சத்தியவாணிமுத்து உளுந்தூர் பேட்டையில் தோல்வி பெறுகிறார். பொங்கலூரில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தோற்கிறார். திருமங்கலத்தில் என்.எஸ்.வி.சித்தன் மீண்டும் தோற்கிறார். மதுரை மேற்கில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கம் தோற்கிறார். அம்பாசமுத்திரத்தில் தோழர் நல்லகண்ணு தோற்றிருக்கிறார். சாத்தான்குளத்தில் சி.பா.ஆதித்தனார் தோற்றிருக்கிறார்.

1980-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து பெரும் வெற்றி பெற்றது. அதனால் உடனடியாகச் சட்டமன்றத் தேர்தல் வந்தால் வென்று ஆட்சி அமைத்து விடலாம் என்ற நப்பாசையில் தன்னோடு நல்லுறவில் இருந்த இந்திராவிடம் பேசி எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்து உடனடித் தேர்தலுக்கு ஏற்பாடு செய்கிறார் கருணாநிதி. கிடைத்ததோ பெரும் ஆப்பு. பேராசை பேராப்பு! நம்ம வாத்தியாரின் ஆட்சியை அநியாயமாகக் கலைத்து விட்டார்களே கயவர்கள் என்ற அனுதாபமும் கூட வேலை செய்திருக்க வேண்டும். காமராஜருக்குப் பின் இரண்டு முறை தொடர்ந்து வென்ற ஒரே தலைவர் என்ற பெருமை கிட்டியது எம்.ஜி.ஆருக்கு. திமுகவில் விருதுநகரில் காமராசரைத் தோற்கடித்த சீனிவாசன் தோற்றுப் போகிறார்; மதுரை மத்தியில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மீண்டும் தோற்கிறார்; மதுரை மேற்கில் பொன்.முத்துராமலிங்கம் தோற்கிறார். யாரிடம்? அதுதானே முக்கியம். எம்.ஜி.ஆரிடம்!  காங்கிரஸ்காரர்களில் பொங்கலூரில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தோற்கிறார்; சாத்தான்குளத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் தோற்கிறார். இந்த அலைக்கு நடுவிலும் அதிமுகவினரில் முனு ஆதி தாம்பரத்தில் தோற்கிறார். சென்னை திமுகவின் கோட்டை என்பதாலோ என்னவோ.

1984 தேர்தல் ஓரளவுக்கு எனக்கு விபரம் தெரிந்து விட்ட தேர்தல். வீட்டில் இடதுசாரிகள் அதிகம் என்பதால் திமுக கூட்டணியில் கருணாநிதியை மீண்டும் கொண்டு வந்து விட உழைத்துக் கொண்டிருந்தார்கள். அரசியல் நோக்கத் தொடங்கிய முதல் தேர்தலில் எம்.ஜி.ஆரை வெறுக்கும் கருணாநிதியை ஆதரிக்கும் சிறுவனாகத்தான் தொடங்கினேன். மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து தமிழக அரசியல் வரலாற்றிலேயே மூன்றாம் முறையாக வென்ற ஒரே தலைவர் என்ற சாதனை படைத்துவிட்டார். திமுகவில் நிறையப் பெருந்தோல்விகள். ஆற்காட்டில் ஆற்காட்டு வீராசாமி தோல்வி; அருப்புக்கோட்டையில் தங்கப்பாண்டியன் தோல்வி; பவானியில் என்.கே.கே. பெரியசாமி தோல்வி; ஈரோட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி; காட்பாடியில் துரைமுருகன் தோல்வி; ஒரத்தநாட்டில் எல்.கணேசன் தோல்வி; சேலம் இரண்டில் வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி; ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் தோல்வி; திருச்செந்தூரில் கே.பி.கந்தசாமி தோல்வி; திருச்சி இரண்டில் அன்பில் தர்மலிங்கம் தோல்வி என்று பல தோல்விகள். பெரம்பூரில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியவாணிமுத்து திமுகவின் இளைஞர் பரிதி இளம்வழுதியிடம் தோல்வி அடைகிறார். இங்கிருந்துதான் பரிதியின் அரசியல் வாழ்க்கை அமோகமாகத் தொடங்குகிறது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டானது. ஜெ அணி, ஜா அணி என்று. அதாவது, ஜெயலலிதா அணி - ஜானகி அணி. எம்.ஜி.ஆரின் மனைவி என்ற முறையில் ஜானகி பின்னால்தான் கட்சிக்காரர்களும் மக்களும் நிறையத் திரண்டிருப்பது போல் இருந்தது. ஆனால் நடந்ததோ தலைகீழ். அதிமுகவின் உடைவால் திமுக எளிதில் ஆட்சியைப் பிடித்தது. அதுதான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தன் பலத்தை நிரூபித்த கடைசித் தேர்தல். தனியாகப் போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்றார்கள். ஜெ அணி 27 தொகுதிகளில் வென்றது. எதிர்க்கட்சி ஆனது. ஆலங்குளத்தில் ஜெ அணி சார்பில் நின்ற கருப்பசாமிப் பாண்டியனும் ஜா அணி சார்பில் நின்ற ஆலடி அருணாவும் தோல்வி கண்டார்கள். இருவருமே பின்னர் திமுக வந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிட வேண்டியது. எம்.ஜி.ஆரின் தொகுதியான ஆண்டிபட்டியில் நின்ற ஜானகி மூன்றாம் இடத்துக்கு வந்து படுதோல்வி அடைந்தார். திமுகவின் சுகவனம் தோல்வியடைந்தார். பவானிசாகரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். மதுரை மத்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் (கா) சார்பில் போட்டியிட்டு ஐந்தாம் இடம் அடைந்தார் பழ. நெடுமாறன். பத்மநாபபுரம் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வேலாயுதம் என்பவர் நான்காம் இடம் வருகிறார். இவரே பின்னர் 1996-இல் இதே தொகுதி மூலம் தமிழகத்தின் முதல் பா.ஜ.க. உறுப்பினராக அவை செல்கிறார். பனமரத்துப்பட்டியில் ரங்கராஜன் குமாரமங்கலம் மூன்றாம் இடம் செல்கிறார். பெரியகுளத்தில் ஜா அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் மூன்றாம் இடம் செல்கிறார். சிவகங்கையில் சுதர்சன நாச்சியப்பன் இரண்டாம் இடம் வருகிறார். திருமங்கலத்தில் என்.எஸ்.வி.சித்தன் இரண்டாமிடம் பெறுகிறார். திருவரும்பூரில் ஜெ அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.சோமசுந்தரம் மூன்றாம் இடம் செல்கிறார். திருவையாறில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவாஜி கணேசன் தோல்வியுற்று இரண்டாம் இடம் பெறுகிறார். ஜெ அணியில் போட்டியிட்ட முனு ஆதி திருத்தணியில் இரண்டாமிடம் பெறுகிறார்.

ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின் நடைபெற்ற 1991 தேர்தலில் மொத்தத் தமிழகத்திலும் திமுக ஏழே ஏழு தொகுதிகளில்தான் வென்றது. திமுக கூட்டணியில் சிவாஜி கணேசன் தலைமையிலான ஜனதா தளமும் டி.ராஜேந்தர் தலைமையிலான தாயக மறுமலர்ச்சிக் கழகமும் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலோடே அழிந்தே போயின. இவர் அவர் என்று சொல்லவேண்டியதில்லை. திமுக கூட்டணியில் பெரும்பாலானோர் தோற்றுப் போயினர் என்று சொல்லிவிடலாந்தான். இருந்தாலும் சில முக்கியப் புள்ளிகளை மட்டும் பார்ப்போம். ஆத்தூரில் ஐ.பெரியசாமி, சேப்பாக்கத்தில் க.அன்பழகன், சிதம்பரத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், காட்பாடியில் துரைமுருகன், குத்தாலத்தில் கோ.சி.மணி, லால்குடியில் கே.என்.நேரு, மதுரை மேற்கில் பொன்.முத்துராமலிங்கம், பூங்காநகரில் ரகுமான்கான், புரசைவாக்கத்தில் ஆற்காடு வீராசாமி, சேலம் இரண்டில் வீரபாண்டி ஆறுமுகம், ஆயிரம் விளக்கில் ஸ்டாலின், திருவல்லிக்கேணியில் நாஞ்சில் மனோகரன், வெள்ளக்கோயிலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அப்படியான முக்கியப் புள்ளிகள். திமுகவின் முக்கியத் தலைவர்கள் எப்போதும் சென்னையிலேயே நிற்பதுதான் அப்போதைய வழக்கம். அதுதான் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. அப்படியிருந்தும் இந்தத் தேர்தலில் பல பெருந்தோல்விகள். பர்கூரில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்று டி.ராஜேந்தர் தோல்வியுற்றார். அப்போதெல்லாம் அவர் பெரும் போராளி. இப்போது போல் ஜோக்கர் அல்ல. அதே கட்சியில் நின்று பாளையங்கோட்டையில் கருப்பசாமிப் பாண்டியன் தோற்றார். மறந்து போன சுவையான வரலாறுகள்! சென்ற தேர்தலில் மொத்தத் தமிழகத்திலும் ஜா அணி தோற்றபோதும் தனி மனிதராக வென்று வந்த பி.எச். பாண்டியன் அதே சேரன்மாதேவியில் இம்முறை தோல்வி கண்டார். மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜி.கே.மணி இரண்டாமிடம் பெற்றார்.

1996 முக்கியமான தேர்தல். கிடைத்த மாபெரும் வாய்ப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவறாகப் பயன்படுத்தி ஆட்டமான ஆட்டம் ஆடி தமிழ்நாட்டையே சுடுகாடாக்கிய ஜெயலலிதாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்தது. குமரி அனந்தனும் அவர் போன்று சிலர் மட்டும் காங்கிரஸ் கட்சியில் மாட்டிக்கொண்டனர். சூடு சொரணை உள்ள மற்றவர்கள் எல்லாம் மூப்பனார் பின் அணி வகுத்து, திமுகவுடன் கூட்டணி அமைத்துக் களம் கண்டனர். இந்த மாபெரும் கூட்டணி காரணமாக, பெரும்பலத்தோடு திமுகவிலிருந்து வெளியேறிக் கட்சி ஆரம்பித்திருந்த வைகோவின் கனவுகள் அனைத்தும் சீட்டுக்கட்டாகச் சரிந்தன. "தமிழ்நாடு முழுக்க அதிமுக தோற்றாலும் பர்கூரில் ஜெயலலிதா தோற்க மாட்டார். காரணம் தமிழ்நாடு முழுக்க ஆட்டம் போட்டாலும் பர்கூருக்கு மட்டும் அந்த அளவுக்குச் செய்திருக்கிறார்" என்றார்கள். அதே பர்கூரில் யாருமே எதிர்பாராத விதத்தில் ஜெயலலிதா தோற்றார். சேப்பாக்கத்தில் கருணாநிதியை எதிர்த்து நின்ற நெல்லை கண்ணன் தோற்றார். சேரன்மாதேவியில் மீண்டும் சுயேச்சையாக நின்ற பி.எச்.பாண்டியன் மீண்டும் தோற்றார். அதிமுகவின் பெருந்தலைகளான செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்திலும், ஜெயக்குமார் ராயபுரத்திலும், செம்மலை சேலம் இரண்டிலும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சாத்தூரிலும், சேடபட்டி முத்தையா சேடபட்டியிலும், எஸ்.டி.எஸ். தஞ்சாவூரிலும், நெடுஞ்செழியன் தேனியிலும், கருப்பசாமிப்பாண்டியன் திருநெல்வேலியிலும், கண்ணப்பன் திருப்பத்தூரிலும் தோற்றார்கள். எங்கள் தொகுதியான விளாத்திகுளத்தில் நின்ற வைகோ அறுநூத்திச் சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். யாரிடம்? திமுகவோடு எந்தச் சம்பந்தமும் இல்லாத - திடீரென்று வந்து நின்ற ஒரு சிறுவனிடம். சிறுவன் பின்னர் அதிமுக போனார். பின்னர் திருட்டு - பித்தலாட்டம் போன்ற பல வழக்குகளில் காவற் துறையால் தேடப்பட்டுக் கைது செய்யப் பட்டவர் ஆனார். அன்று வைகோ மட்டும் வென்றிருந்தால் கூட மதிமுகவின் வரலாறு ஓரளவு மாறியிருக்கலாம். ஒரு திருடனிடம் தோல்வியுற்றோமே என்ற அவருடைய பல இரவுத் தூக்கங்கள் காக்கப்பட்டிருக்கலாம். இதெல்லாந்தானே அரசியல்!

ஓரளவுக்கு நல்லாட்சி கொடுத்திருந்த போதும் 2001 தேர்தலில் திமுக தோல்வியே கண்டது. அதற்குப் பல காரணங்கள். தென் தமிழகத்தில் சாதிய மோதல்கள் அதிகமாயின. கருணாநிதி எப்போதுமே சட்டம் ஒழுங்கைச் சரியாகக் காப்பாற்ற முடியாதவர் என்கிற கருத்து வலுத்தது. மூப்பனார் பிரதமர் ஆவதைக் கெடுத்ததன் மூலமும் டெல்லியில் நடத்திய பல சித்து விளையாட்டுகள் மூலமும் இவர் கதாநாயகனை விட வில்லன்னுக்குத்தான் பொருத்தமானவர் என்பது போன்ற பிம்பத்தை மீண்டும் வம்படியாக உருவாக்கிக் கொண்டார். பேச்சுக்கும் செயலுக்கும் எப்போதும் தொடர்பே இராது என்கிற மாதிரி பாஜகவோடு கூட்டணி வைத்தார். என்றென்றும் இவர் பின்னால் வரும் சிறுபான்மையினரும் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஜெயலலிதாவோடு சென்றன. சிரமப்பட்டுக் கொஞ்சம் நல்லவராக இருந்திருந்தால் அல்லது நடித்திருந்தால் கூட முற்றிலும் தவிர்க்கப் பட்டிருக்க முடிந்த வெற்றியை மீண்டும் அதிமுகவுக்கு அளித்து மாபெரும் வரலாற்றுத் தவறைச் செய்தார் தலீவர். திமுகவில் பல பெருந்தோல்விகள். ஆலங்குளத்தில் ஆலடி அருணா, அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன், அருப்புக்கோட்டையில் தங்கம் தென்னரசு, ஆத்தூரில் ஐ.பெரியசாமி, பர்கூரில் சுகவனம், ஈரோட்டில் என்.கே.கே. பெரியசாமி, லால்குடியில் கே.என்.நேரு, மதுரை மேற்கில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன், பூங்காநகரில் டி.ராஜேந்தர் (இப்போது கூட அவர் அவ்வளவு காமெடியன் ஆகவில்லை), ராமநாதபுரத்தில் ரகுமான்கான், தென்காசியில் கருப்பசாமிப்பாண்டியன், திருநெல்வேலியில் ஏ.எல்.சுப்பிரமணியன், தூத்துக்குடியில் என்.பெரியசாமி, வீரபாண்டியில் வீரபாண்டி ஆறுமுகம் என்று பல தோல்விகள். தி.நகரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாய் சுலோச்சனா சம்பத் தோற்றார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற கண்ணப்பன் இளையான்குடியில் தோற்றார். ஓட்டப்பிடாரத்திலும் வால்பாறையிலும் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இரண்டிலும் தோற்றார். பத்மநாபபுரத்தில் பாஜக உறுப்பினர் வேலாயுதம் தோற்றார். திருவொற்றியூரில் சுயேச்சையாகப் போட்டியிட்ட குமரி அனந்தன் தோற்றார்.

2006-இல் கூட்டணியின் முக்கியத்துவம் அறிந்து, காங்கிரஸ், பாமக, சிவப்புத் துண்டுத் தோழர்கள் என்று எல்லோரையும் இணைத்துக் கொண்டு மீண்டும் திமுக வந்தது. இம்முறை எம்முறையும் இல்லாத அளவுக்கு ஆட்டம் போட்டார்கள். வைகோவைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்து அதிமுக பக்கம் அனுப்பி, அவரையும் கட்சியையும் அழித்தார்கள். சன்.டி.வி.யின் வளர்ச்சி எல்லோருக்கும் கண்ணை உறுத்தும் அளவுக்குப் பெரிதாகி இருந்தது. இதில் அதிமுகவினர் பலர் பெருந்தோல்வி கண்டனர். கடலாடியில் சத்தியமூர்த்தி, கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம், காவேரிப்பட்டிணத்தில் கே.பி.முனுசாமி, வேதாரண்யத்தில் ஓ.எஸ். மணியன் ஆகியோர். "இவர்களெல்லாம் யாரென்றே எனக்குத் தெரியாது; இவர்களைப் பற்றி எல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?" என்கிறீர்களா? அதுதான் அதிமுக பாணி. அதிர்ச்சியூட்டும் வகையில் பூங்காநகரில் போட்டியிட்ட திமுகவின் ரகுமான்கான் தோல்வியுற்றார். தொண்டாமுத்தூரில் மதிமுக அவைத்தலைவர் கண்ணப்பனிடம் காங்கிரஸ் கட்சியின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தோல்வி கண்டார்.

ஆட்டமான ஆட்டம் ஆடினால் விட்டுவைக்கிற அளவுக்கு நல்லவர்களா என்ன நம் மக்கள்! எதற்கும் அளவு இருக்கிறதல்லவா!! அலைக்கற்றை ஊழல் மற்றும் ஈழப்பிரச்சனை காரணமாகத் திமுகவை வீட்டுக்கனுப்பி அதிமுகவை மீண்டும் கொண்டு வந்த தேர்தல் இது - 2011. எதிர்க்கட்சியாக இருக்கும் வாய்ப்பைக் கூட நேற்றுப் பிறந்த தேமுதிகவிடம் இழந்தது பாரம்பரியம் பேசும் திமுக. திமுக பல பெரும் தோல்விகளைக் கண்டது. வில்லிவாக்கத்தில் க.அன்பழகன், எழும்பூரில் பரிதி இளம்வழுதி, பாப்பிரெட்டிபட்டியில் முல்லைவேந்தன், கீழ்பெண்ணாத்தூரில் கு.பிச்சாண்டி, விழுப்புரத்தில் பொன்முடி, கோயம்புத்தூர் தெற்கில் பொங்கலூர் பழனிச்சாமி, திருச்சி மேற்கில் கே.என்.நேரு, திருச்சி கிழக்கில் அன்பில் பெரியசாமி, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, தூத்துக்குடியில் கீதா ஜீவன், தென்காசியில் கருப்பசாமிப்பாண்டியன் (இவர் தோற்றது ஜெயலலிதாவின் வாழ்நாள் அடிமையாகக் காட்டிக் கொள்ள விரும்பும் சரத்குமாரிடம்), ஆலங்குளத்தில் பூங்கோதை ஆலடி அருணா, அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன், கன்னியாகுமரியில் சுரேஷ் ராஜன் ஆகியோர். துணை முதல்வர் ஆகும் கனவில், மனைவியை நிறுத்துவது போல் நிறுத்தி, விண்ணப்பத்தில் கோளாறுகள் செய்து, பின்வாசல் வழியாக தகிடுதத்தம் பண்ணி வந்த தங்கபாலு மைலாப்பூரில் தோல்வியுற்றார். மேட்டூரில் பாமகவின் ஜி.கே.மணி தோற்றார். இருப்பது காங்கிரஸ் கட்சியில் என்றாலும் கருணாநிதியின் தலைசிறந்த அடிவருடிகளில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூரில் தோல்வியுற்றார். காங்கிரஸ் கட்சியின் பணம் காய்க்கும் மரங்களில் ஒருவரான வசந்த் குமார் (ஐயா குமரி அனந்தனின் தம்பியும் அக்கா தமிழிசையின் சித்தப்பாவுமானவர்) நாங்குநேரியில் தோற்றார்.

இந்தத் தேர்தல் இன்னும் எத்தனை அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் கொடுக்கப் போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்!

பின்குறிப்பு: இதில் சில பெயர்கள் எந்தத் தேர்தலில் எந்தக் கட்சியில் இருந்தார்கள், எத்தனை முறை இவர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் கட்சி மாறினார்கள் என்றெல்லாம் வரும் குழப்பங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க இயலாது! மன்னிக்கவும்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி