விசாரணை
சமீபத்தில் வந்த திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்டது ‘விசாரணை’.
படத்தின் முதற் சில விளம்பரங்களைப் பார்த்த போதே அது ஒரு செமப் படமாக இருக்கும்
என்று தோன்றியது. அதுவும் வெற்றிமாறனின் படம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.
இதுவரை அவர் எடுத்த படங்கள் அனைத்துமே அவருடைய பெயருக்கென்று சில எதிர்பார்ப்புகளை
உருவாகியிருக்கின்றன. இந்தப் படமும் அதை உறுதிப் படுத்தியிருக்கிறது. கச்சிதமான
நடிகர் தேர்வும், அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வெளிக் கொணரும் இயல்பான
காட்சியமைப்புகளுமே வெற்றிமாறனின் வெற்றிச் சூத்திரங்கள்.
அவருடைய முதற்படமான ‘பொல்லாதவன்’ பார்க்கவில்லை. அடுத்து வந்த ‘ஆடுகளம்’
பார்த்தேன். மிகவும் பிடித்தது. தேசிய விருது பெற்றதற்காக மட்டமல்ல. கோழிச்சண்டை
என் சிறு வயதில் நான் கண்ட அனுபவம். அதுவும் தென் தமிழகத்துப் பின்னணியிலேயே
காட்டியிருந்தது நம்மை மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே அழைத்துச் சென்றதால் மிகவும்
சொக்க வைத்து விட்டது. அதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், வெற்றிமாறனுக்குச்
சற்றும் தொடர்பில்லாத களம் அது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த பாரதிராஜாவும்
இளையராஜாவும் தம் இயல்பான படைப்புகள் மூலம் கிராமத்து மக்களின் வாழ்க்கையைத்
தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுவதோ – இசையாக வடித்துக் கொடுப்பதோ பெரிதில்லை.
பிறப்பில் இருந்து பெருநகரங்களில் வாழ்ந்த வெற்றிமாறனும் ரகுமானும் அப்பணிகளைச்
செய்வதை பெரும் சிறப்பு. சில நேரங்களில் அவர்களை விடவும் நேர்த்தியாகச் செய்து
விடுதல் நம்மை அசத்தித்தான் விடுகிறது.
பொல்லாதவனுக்கும் ஆடுகளத்துக்கும் எப்படி எந்தத் தொடர்பும் இல்லாமல்
இருந்ததோ அது போலவே அவருடைய அடுத்த படம் முற்றிலும் மாறுபட்ட பின்னணியில் வரும்
என்று எதிர்பார்த்தபடியே ‘விசாரணை’ வந்திருக்கிறது. பாலா, சங்கர் போன்றவர்கள்
தலைசிறந்த இயக்குனர்களாகக் கொண்டாடப்படும் போதும் அவர்களுக்கென்று எளிதில் கணிக்க
முடிகிற பாணிகள் உருவாகியிருப்பது அவர்களின் உயரத்தைச் சற்று குறைத்து விடுவது போல
ஆகி விடாமல், வெற்றி மாறன் என்றால் அவருடைய களம் இதுவாகத்தான் இருக்கும் யாரும்
கணிக்க முடியாத மாதிரி வளர்ந்து வருகிறார்.
முந்தைய இரண்டு படங்களிலும் தனுஷை நடிக்க வைத்தவர், இந்தப் படத்தில்
அவரைத் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார். இடையில் இருவரும் கூட்டுச் சேர்ந்து ‘காக்கா
முட்டை’ என்றொரு தலைசிறந்த படத்தைத் தயாரித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக அவருடைய திரைப்பட வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க தனுஷின் துணையோடுதான்
அமைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ‘ஆடுகளம்’ தனுஷுக்கு ஒரு பெரும் திருப்புமுனை.
சகோதரர் செல்வராகவனைப் போல இன்னொரு சகோதரராக வெற்றிமாறன் கிடைத்தது அவருக்கும்
பெரும் பலந்தான். இந்தப் படத்தில் ஏன் தனுஷ் நடிக்கவில்லை என்கிற கேள்வி
யாருக்கும் வரவில்லை என்றே நினைக்கிறேன். வந்திருந்தாலும் அது நியாயமானதே.
அவருக்குச் சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார் என்பது
ஒருபுறம். அவ்வளவு ‘பெரிய்ய’ நாயகன் இந்தக் கதைக்கு வேண்டியதில்லை என்பது இன்னொரு
காரணமாக இருக்கலாம். இப்போதைய போக்கைக் கவனித்தால் இந்தக் கூட்டணி தமிழ்த்
திரையுலகுக்கு இன்னும் நிறையக் கொடுக்கப் போகிறது என்பதும் தெரிகிறது.
திரைப்படம் அதிகம் பார்ப்பதில்லை என்பதால் பார்க்கிற படங்கள் நல்ல படங்களாக
இருக்க வேண்டும் என்று மிகவும் கவனமாகவே இருப்பேன். அதற்கு இப்போது ஓர் எளிய வழி
இருக்கிறது. IMDB-இல் போய், திரைப்படங்களின் மதிப்பெண்களைப் பார்த்து பட்டியலின் மேல்
உள்ள படங்களைத் ‘தெரிந்து’ – ‘தெரிந்து’ கொள்ளலாம். ஒரேயொரு சிக்கல் – அது
உண்மையிலேயே முறையான மதிப்பெண்களா என்பது சந்தேகந்தான். புதிய படங்களுக்குச் சற்று
கூடுதலாகவே மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டிருப்பது போற் தெரிகிறது. சில
விதிவிலக்குகள் தவிர்த்துப் பழைய படங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது
போலவும் தெரிகிறது. ஆங்கிலத்திலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றாலும் தமிழில்
இது மிகவும் அதிகம்.
ஆங்கிலத்தில் காலங்காலமாக முதலில் இருந்த ‘GODFATHER’ படத்தைத்
திடீரென்று காளான் போல முளைத்த ‘SHAWSHANK REDEMPTION’ முந்தியதைத் தாங்கிக்
கொள்ள முடியாமல் கொதித்துப் போனார்கள் அவர்கள். அதற்குப் பின் ஒரு கதை
இருப்பதாகவும் சொல்கிறார்கள். அறிவை வளர்த்துக் கொள்வதை விட மதிப்பெண்கள்
வாங்குவதில் கவனம் செலுத்தும் குழந்தைகள் போல, மக்களுக்கு நல்லது செய்து பெயர்
வாங்குவதை விட நேரடியாகக் குறுக்கு வழிகளில் பெயரை மட்டும் வாங்குகிற வழிகள்
அறிந்து அதற்கேற்றபடி விளம்பர உத்திகளைக் கையாளும் அரசியல்வாதிகளைப் போல, திரைத்துறையிலும்
அந்தப் பழக்கம் வந்து விட்டது. காலம் அப்படி! யாரையும் சொல்ல முடியாது.
வெள்ளைக்காரர்கள் திரைப்படங்களையும் அவ்வளவு சீரியசாக எடுத்துக்
கொள்கிறார்கள். திரைப்படங்கள் மீது அவர்களைவிடப் பல மடங்கு வெறி கொண்டு அலைகிற
போதும் அவற்றை அவர்களைப் போல சீரியசாக எடுத்துக் கொள்ளும் போக்கு நம்முடைய
பெரும்பாலான திரைப்பட ரசிகர்களிடம் இல்லை. அதனால் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது வெளிவரும்
படங்களைப் பார்த்து விட்டு அவை பிடித்திருந்தால் ஒன்பது அல்லது பத்து மதிப்பெண்கள்
அள்ளிக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். அது போலவே பிடிக்காவிட்டால்
ஒன்று அல்லது இரண்டு போன்று குறைவான மதிப்பெண்கள் கொடுக்கவும் தயங்குவதில்லை என்று
நினைக்கிறேன்.
சிறிது காலம் முன்பு பார்த்த போது, ‘தனி ஒருவன்’ பட்டியலின் உச்சியில்
இருந்தது. அது ஒரு நல்ல படம் என்றுதான் கேள்விப் பட்டேன். ஆனால் அதுவே இதுவரை வந்த
தமிழ்ப் படங்களிலேயே சிறந்த படம் என்று சான்றிதழ் கொடுப்பது சரியென்று படவில்லை.
அதனால் அந்தப் பட்டியலை முழுதும் நம்ப முடியவில்லை. நண்பர் ஒருவர், ‘இரத்தக்
கண்ணீர்’ உலகத் திரைப்படங்களிலேயே சிறந்த படமாகப் போற்றப்பட்ட ஒன்று என்றார்.
ஆனால் அந்தப் படத்தை இந்தப் பட்டியலில் எங்குமே காண முடியவில்லை. இப்போது
திடீரென்று ‘தனி ஒருவன்’ இரண்டு இடங்கள் கீழே போய்விட்டது. ‘அன்பே சிவம்’
முதலிடத்திலும் ‘விசாரணை’ இரண்டாமிடத்திலும் உள்ளன. ‘அன்பே சிவம்’ நல்ல படந்தான்
என்றாலும் அதுதான் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே சிறந்ததா என்றும் நம்ப
முடியவில்லை. இப்படி சோடாப்புட்டி போல் பொங்குவதும் அடங்குவதுமான ஒரு பட்டியலை எவ்வளவு
நம்புவது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட ஏதோவொன்று
இருப்பது பரவாயில்லைதானே! இதுவே இன்னும் சில ஆண்டுகளில் சீரியஸ் ரசிகர்கள்
மென்மேலும் பயன்படுத்தக் தொடங்கும் போது இன்னும் சிறப்படையலாம்.
சரி, வெட்டிக்கதை நிறையப் பேசியாயிற்று. ‘விசாரணை’-க்கு வருவோம்.
பட்டியலின் உச்சியில் இருக்கிற ‘அன்பே சிவம்’ பார்த்தாயிற்று என்பதால் அடுத்துப்
பார்க்க வேண்டியிருந்தது ‘விசாரணை’-யே. அதையும் பார்த்து விடுவோம் இப்போது.
“நம் காலத்தில் உள்ள பொதுவான சூழலை வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்
இந்தப் படம் குறிப்பிட்ட எவரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல’ என்பது போன்ற
முன்மொழியோடு தொடங்குகிறது படம். ஆந்திராவில் – குண்டூரில் தமிழர் ஒருவரின் மளிகைக்
கடை. அங்கே பணிபுரிகிற நம் தெக்கத்திப் பையன் ஒருவன்தான் நாயகன். இது நாயகன்
சார்ந்த படமல்ல என்பதால் அவனைப் பற்றி நிறையப் பேச வேண்டியதில்லை. அவனைப் போல
மேலும் பல தமிழ்ப் பையன்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் ஒரே தவறு
வசதியின்மை காரணமாக, கிடைக்கும் கொஞ்சநஞ்சப் பணத்திலும் சிறிது சேமிக்க வேண்டும்
என்று எண்ணி, வீடெல்லாம் பிடிக்காமல் பூங்கா பொது இடங்களிலேயே தூங்கி எழுந்து
வாழ்கிறார்கள். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் திருட்டு வழக்கு ஒன்றை
முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஆந்திரக் காவற்துறை இவர்களைப் பிடித்து
பலிகடா ஆக்கப் பார்க்கிறது.
முதற்பாதி முழுவதும் செய்யாத குற்றத்தை ஒத்துக் கொள்ள வைக்க
எப்படியெல்லாம் காவற்துறை நடந்து கொள்ளும் என்பதை மெதுவாக நம்மால் உள்வாங்கிக்
கொள்ள முடிகிற வேகத்தில் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் நம் மனதைப்
பிழிந்தெடுக்கிறது. ‘பரவாயில்லை, தமிழ்நாட்டுக் காவற்துறையைப் பகைத்துக் கொள்ளாமல்,
ஆந்திரக் காவற்துறையைக் குறிவைத்து எடுத்திருக்கிறாரே, விபரந்தான் வெற்றிமாறன்!’
என்று எண்ணும் போது தமிழகக் காவற்துறை காட்சிக்குள் வருகிறது. அதற்குப் பின்பு தமிழகக்
காவற்துறை செய்யும் அட்டூழியங்கள் அதைவிடக் கொடூரமானவை. படத்தின் தொடக்கக்
காட்சியில் வந்த சமுத்திரக்கனி மீண்டும் வருகிறார். ‘என்னடா இது! இந்தப்
படத்துக்காக சமுத்திரக்கனி தேசிய விருதெல்லாம் வாங்குனார்னு சொன்னாய்ங்க! ஆள் ஒரு
காட்சில வந்துட்டுப் போய்ட்டாப்ல, அதுக்குப் பெறகு ஆளவே காணோம்!’ என்று யோசித்துக்
கொண்டிருக்கும் நமக்கு அவருடைய மறுவருகை படத்தின் மீது ஆர்வத்தை எகிற வைக்கிறது.
இடைவேளையின் போதுதான் மீண்டும் வருகிறார். அதற்குப் பின்புதான் உண்மையில் ஆட்டமே
தொடங்குகிறது. இது இருவேறு கதைகளின் ஒட்டுவேலை என்று சொல்லலாம்.
சமுத்திரக்கனி முதற்காட்சியில் - அதிகாலையில் நாயகன் வேலை பார்க்கும்
மளிகைக் கடையில் ‘தம்’ வாங்க வருகிறார். காவற்துறை ஆள் என்பது புரிபடுகிறது.
தமிழகக் காவற்துறைத் துணை ஆணையர் ஒருவரின் ஆணைக்கிணங்க, முக்கியப் புள்ளிகளோடு
தொடர்புடைய ஒருத்தனை ஆந்திராவில் இருந்து ‘திருட்டுத்தனமாகக்’ கடத்தி வருவதற்காக வருகிறார்.
அதற்கிடையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் நால்வரும் படும் பாடுகள்
காட்டப்படுகின்றன. விதவிதமாக அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள். பல நேரங்களின்
காணச் சகியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளத்தான் செய்ய வேண்டியுள்ளது. புதிதாகத்
தென்னை மட்டைகளைக் கொண்டு வந்து இவர்களை அடிப்பதற்காகவே அவற்றைச் சீவி, கைப்பிடி
வைத்துத் தயார் செய்யும் காட்சி, வன்முறைக்குப் பழக்கப்படாத எவரையும் உலுக்கத்தான்
செய்யும்.
யாரோ பெத்துப் போடும் பிள்ளைகள், கஞ்சிக்குக் கூட வழியில்லாமல்
தமக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பொருட்டு மொழி தெரியாத ஊர்களுக்குப்
பிழைக்கப் போகும்போது, இப்படியெல்லாம் மாட்டிக் கொண்டு செய்யாத தவறுக்காகத்
துன்பங்களுக்கு உள்ளாவது எவ்வளவு கொடுமையான அனுபவம்! இது எல்லார் பெத்துப் போடும்
பிள்ளைகளுக்கும் கிடைக்கும் அனுபவம் இல்லை. அப்படி யாரோ பெற்ற பிள்ளைகளையும்
அடித்துத் துன்புறுத்தும் உரிமையை காவற்துறைக்குக் கொடுத்திருக்கும் சட்டம்
எவ்வளவு கொடுமையானது! அப்படியான நாடு எவ்வளவு கொடூரமானது! மனிதன் மனிதனுக்குரிய
கண்ணியத்தோடு வாழக்கூட முடியாத இது போன்ற அடிப்படைப் பிரச்சனைகளைக் கூடக் களையாமல்
வல்லரசுப் பேச்சுகள் எல்லாம் பேசிக் கொண்டிருகிறோமே! அதெல்லாம் யாருக்காக? இந்தச்
சிந்தனைகளை நம்மிடம் கிளறி விடுவதுதான் படத்தின் நோக்கம். எத்தனை பேருக்குக்
கிளறியது என்று தெரியவில்லை.
அத்தனையையும் அனுபவித்து விட்டுக் கடைசியில் நீதிமன்றத்தில்
நிறுத்தப்படும்போது, உண்மையைச் சொன்னால் தப்பிவிட வாய்ப்பிருக்கிறது என்று நாயகன் துணிந்து
உண்மை சொல்வதும், எங்கே திரும்பவும் இவர்களிடம் மாட்டிக் கொண்டால் நொங்கு எடுத்து
விடுவார்களோ என்று பயந்து மற்றவர்கள் மிரள்வதும், பின்னர் அவர்களும் துணிந்து
உண்மையைச் சொல்லி விடுவதும், நிலவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு நீதிபதி நீதியின்
பக்கம் நிற்பதும், காவற்துறை ஆய்வாளராக வரும் மோசக்காரனின் பழைய வரலாறு தெரிந்து, நீதிபதி
அவனைச் சரியாகக் கண்டித்து ஓரங்கட்டுவதும் நல்ல காட்சிகள். இது நீதித்துறையில்
நிலைத்திருக்கும் கொஞ்சநஞ்ச நியாய உணர்வையும் காவற்துறையைவிட நீதித்துறை
பரவாயில்லை என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது (புரியுது! சல்மான் கானின்
நீதிபதியையும் குமாரசாமி போன்றவர்களையும் நினைவுக்கு வருவதைக் கட்டுப்படுத்திக்
கொள்ளுங்கள்!).
மாட்டிக்கொண்டு முழிக்கும் இளைஞர்கள் பேசும் மொழி புரியாமல், “மொழி
பெயர்க்க யாரும் இருக்கிறார்களா?” என்று நீதிபதி கேட்கும் போது, காவற்துறை ஆளே
ஒருவர் தான் மொழிபெயர்த்து உதவ முடியும் என்று முன்வரும் போது, நமக்கு மனம்
பதைக்கிறது. அதைப் புரிந்து கொண்டு நீதிபதி அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வேறு
யாராவது வேண்டும் என்று கேட்பார். அப்போதுதான் வேறு ஒரு வழக்குக்காக அடுத்த
அறையில் இருக்கும் சமுத்திரக்கனி அழைத்து வரப்படுவார். அப்போது அங்கே வருகிற
சமுத்திரக்கனி, மொழிபெயர்ப்பு மட்டும் செய்யாமல், அடுத்த படிக்குப் போய், தனக்கு
அவர்களைத் தெரியும் என்று முதற்காட்சியில் மளிகைக் கடையில் நாயகனைப் பார்த்ததை
நினைவு கூர்ந்து சான்றிதழ் கொடுத்துக் காப்பாற்றுவார். இந்த உதவியால் பயன் பெற்று
விடுதலை அடைந்து வெளியே வருபவர்கள், அவருக்காக எதுவும் செய்யத் தயாராக
இருப்பார்கள். அவர்களைச் சரியாகத் தன்னுடைய கடத்தல் வேலைக்குப் பயன்படுத்திக்
கொள்வார் இவர். நாமும் நல்லவராக இருக்கிறார்; அப்படியானால் அவர் செய்யும் கடத்தல்
நல்லதுக்காகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொள்கிறோம்.
கடத்தலையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து, அதே வண்டியில் அப்படியே
சென்னைவரை அழைத்து வந்து, அதில் ஒருத்தன் மட்டும் இடையில் இறங்கிக் கொள்ள, மீதி
மூவரும் அவருடனேயே காவல் நிலையம் வரை வருவார்கள். இந்த வழியில் இறங்கிப் போனவர்தான்
இந்தக் கதையைப் பின்னர் ‘லாக்கப்’ என்ற பெயரில் ஒரு புதினமாக உலகுக்குச் சொன்ன
எழுத்தாளர் சந்திரகுமார். கதையின் முடிவில் அது சொல்லப் பட்டிருக்கிறது. அவரை
வெனிஸ் திரைப்பட விழாவுக்கு அழைத்துச் சென்று பேச வைத்து மரியாதையும்
செய்திருக்கிறார்கள். இது போன்ற முதிர்ந்த போக்கு இன்னும் நிறைய வரவேண்டும்.
அதற்கு வெற்றிமாறன் போன்றவர்கள் வழிகாட்டிகள். சந்திரகுமார் ஓர் ஆட்டோ ஓட்டுனராக -இடதுசாரியாக,
கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். அவரோடு சேர்த்துத் தா.பாண்டியனையும் வேறு
காட்டுகிறார்கள். அதை அவருக்குச் செய்த அவமானமாக எடுத்துக் கொள்பவர்கள், இந்தச்
சிறிய தவறுக்காக வெற்றிமாறனை மன்னிப்பார்களாக!
மீதமிருக்கும் மூவர் காவல் நிலையத்தில் அன்றைய எடுபிடி வேலைகளுக்காகப்
பயன்படுத்திக் கொள்ளப்படுவர். வேலையை முடித்துவிட்டு அவர்கள் இடத்தைக் காலி
செய்திருந்தால் பிரச்சனையில்லை. சமுத்திரக்கனிக்காக அவர்கள் கடத்திக் கொண்டு வந்தவன்
அடுத்து என்ன துன்பத்துக்கு உள்ளாகப் போகிறான் என்று இவர்களுக்குத் தெரிய
வருகிறது. தம்மால்தாமே அவர் இந்த நிலைமைக்கு ஆளாகிறார் என்ற குற்ற உணர்ச்சியால்
அவருக்கு உதவ முயன்று சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரின்
தணிக்கையாளர் (ஆடிட்டர்) என்பதால் இவனை வைத்து அவரின் கதையை முடிக்க முதலமைச்சரே
கட்டளையிட்டிருப்பார். தணிக்கையாளராக நடித்திருக்கும் கிஷோர் அருமையாகச்
செய்திருக்கிறார். பெரிய இடத்துத் தொடர்புடையவர்களின் பேச்சும்-தெனாவெட்டும், அதே
நேரத்தில் பயமும், பின்னர் அவர் சற்றும் எதிர்பாராத முறையில் சமுத்திரக்கனியாலும்
காவலர்களாலும் அடிக்கப்படும் போது காட்டும் உணர்ச்சிகளும் மிக அழகாகச்
செய்திருக்கிறார்.
முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரின் தொடர்புடைய வழக்கு
என்பதால் மிதமிஞ்சிய இரகசியம் காக்கப்பட வேண்டிய வழக்கு எடுபிடி வேலைக்கு வந்த இவர்களுக்கெல்லாம்
தெரிய வந்து விடுவதில் பயம் கொள்கிற காவற்துறை, இவர்களின் கதையை முடித்து விட
வேண்டும் என்று முடிவு செய்கிறது. தன்னால்தானே இவர்கள் இப்படி மாட்டிக்
கொண்டார்கள் என்று கவலைப்படும் சமுத்திரக்கனி அவர்களைக் காப்பாற்ற
முயற்சிக்கிறார். அவர்களுக்காகப் பேசுகிறார். அது அவருக்கே சிக்கலாக முடிகிறது.
இப்படியே போனால் அவரே தமக்குப் பெரும் பிரச்சனையாக முடியலாம் என்று பயந்த
காவற்துறை, அவரையும் சேர்த்தே போட்டு விடுகிறது. இதை எப்படிப் பின்னர் வெளியில்
செய்தியாக்க வேண்டும் என்பது முதற்கொண்டு காவற்துறை பேசுவதெல்லாம் அப்படியே நம்
சமகாலச் சூழலின் உண்மை நிலவரம்.
மனச்சாட்சியைத் தலைதூக்க விட்டாலே மனிதற்குச் சிக்கல்தான் என்று
நினைவு படுத்தும் வகையில் பல காட்சிகள். அப்படியான மனச்சாட்சியும், அதே வேளையில் உயர்
அதிகாரிகள் எதிர்பார்ப்பிற்கிணங்க கொடுக்கப்படும் வேலைகளைக் கச்சிதமாக முடித்துக்
கொடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடும் உள்ள அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின்
நடிப்பு அருமை. கைதிகளாக வரும் அப்பாவி இளைஞர்கள் நால்வர் உட்பட எல்லோருமே
நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடல் கூட இல்லாமல், ஓரிரு காதற்
காட்சிகளை மட்டும் வைத்து, சற்றும் மசாலா இல்லாமல், இப்படியொரு வெற்றிப்படம்
கொடுக்க முடிகிற இயக்குனர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் தமிழில்?!
இத்தனைக்கும் நடுவில் ஆந்திராவில் கடைக்கு வேலைக்குப் போன பையன் அங்கே
இருக்கும் அழகான தெலுங்குப் பெண் ஒருத்தியைக் காதலிப்பதும், இருவருமே
ஒருத்தருக்கொருத்தரின் மொழி கூடத் தெரியாத போதும் அவரவர் மொழியிலேயே பேசிக்
காதலிக்க முடிவதும், அதை வழவழவென்று இழுக்காமல், ஆம்பூர் பிரியாணி போல அளவான
மசாலாவோடு அழகாக ஒரு சில நிமிடங்களிலேயே முடித்து விடுவதும் நன்றாகவே இருக்கிறது.
மக்கள் பிரச்சனைகளைக் களைய வேண்டிய காவற்துறை எப்படி ஆட்சியில்
இருக்கும் கட்சிக்குக் கைக்கூலியாகச் செயல்படும் என்பதும், அதிகாரத்தில்
இருப்பவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரை எப்படியெல்லாம் குறி வைத்துத்
தாக்குதல் நடத்துவார்கள் என்பதும், பெரிய இடத்து விவகாரங்களில் தலையிட்டு உதவும்
அதிகாரிகள் எப்படிக் கோடிகள் பெறுவர் என்பதும், எவ்வளவுதான் சுகபோகமாக வாழ
முடிந்தாலும் பெரிய இடத்துச் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு விட்டால் ஆடிட்டர்
போன்ற பணிகளில் உள்ளவர்கள் என்ன நிலைக்கு ஆளாவார்கள் என்பதும் நாமும் நம் காலத்தில்
பார்ப்பவைதானே! கே.கே.வாக நடித்திருக்கும் கிஷோர், ஏனோ கலைஞர் தொலைகாட்சி
சரத்குமாரையும் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவையும் சம்பந்தமே இல்லாமல் நினைவு
படுத்தினார் என்பதையும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆழ்ந்த படிப்பில்-வாசிப்பில் ஆர்வமில்லாது, அறிவீனத்தாலும் அடிமை
உணர்வாலும் திரைப்பட மோகத்தாலும் அழிந்து நசுங்கும் மக்களுக்கு இது போன்ற
திரைப்படங்கள் பெரும் அறிவூற்றாக இருந்து உதவும். அதற்கும் அவற்றை உட்கார்ந்து
பார்க்கிற அளவுக்காவது பொறுமை இருக்க வேண்டும் நமக்கு. அப்படி எல்லோரையும் பார்க்க
வைக்க வேண்டும் என்றால் அதற்கென்று நிறைய மசாலா சேர்க்க வேண்டும். மசாலா
கூடிவிட்டால் கருத்து நீர்த்துவிடும். இத்தனை சிக்கல்களுக்கும் நடுவில் இப்படியான
ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் வெற்றிமாறனுக்கு நம் நன்றியையும் பாராட்டையும்
சொல்லித்தான் ஆகவேண்டும். இதன் மூலம் உங்கள் மீதான எங்கள் எதிர்பார்ப்பை இன்னும்
ஒரு படி கூட்டியிருக்கிறீர்கள், வெற்றி! அடுத்த படத்தில் அது இன்னும் பல மடங்கு
பாயும் என்று நம்புவோம்!!
கருத்துகள்
கருத்துரையிடுக