தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் - என் தனிப்பட்ட நிலைப்பாடுகள்

எனக்கு விபரம் தெரிந்து அரசியல் கவனிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து, ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் இவர்கள் வென்றால் நல்லது அல்லது இவர்கள் தோற்றால் நல்லது என்று கணக்குகள் போட்டு வருகிறேன். எந்தக் காலத்திலும் இந்தக் கட்சிதான் எங்கள் கட்சி, அதனால் அவர்கள்தாம் வெல்ல வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததாக எனக்குத் தெரியவில்லை. மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை. நிலைப்பாடு எடுப்பதில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிப்பிட்ட பாணி இருக்கிறது; சில அடிப்படைக் காரணங்கள் – உள் நோக்கங்கள் இருக்கின்றன. அப்படி நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது ஊழலின்மைக்கு. அதற்கடுத்தபடியாக மக்களுக்கான செயல்பாடு. அதன்பின்தான் கொள்கை, கோட்பாடு, சாதி-மத-இன-மொழிச் சார்புகள் போன்ற மற்ற காரணிகள் எல்லாம். யாருக்கு எப்படியோ எனக்கு என்ன தோன்றியது என்பதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்தக் கட்டுரை. எனவே மொத்தக் கட்டுரையும் உங்களுக்கு உடன்பாடாக இருக்கப் போவதில்லை. கண்டிப்பாகப் பல முரண்பாடுகள் வரும். கவனம்!

ஊழல் செய்யாமல் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அது நல்லாட்சி ஆகி விடுமா? ஊழல் அரசியலில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று என்றெல்லாம் பேசுபவர்களின் நியாயம் எனக்குப் பெரும்பாலும் புரிபடுவதில்லை. அதற்குக் காரணம் இடதுசாரிப் பின்னணியில் பிறந்து வளர்ந்தது கூட இருக்கலாம். மற்ற விசயங்களில் எப்படியோ ஊழல் விசயத்தில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் இடதுசாரிகள்தாம் இன்றும் மேலானவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களின் எதிரிகளே ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் (இந்த இடத்தில் தா.பா. போல விதிவிலக்கான பெட்டிவாங்கிகளைக் கொண்டு வந்து நிறுத்தி உரையாடலைத் திசை திருப்பும் வேலைகள் செய்வோர் ஆட்டையில் இருந்து விலகிக் கொள்ளலாம்). காவலாளி வேலைக்கு வருபவர் களவாணியாக இருக்கக் கூடாது என்பது எவ்வளவு அடிப்படையோ அவ்வளவு அடிப்படையான ஒன்று, பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது. நான் இங்கே நேர்மை என்று சொல்வது, கொள்கை ரீதியாக என் கருத்துக்கு உடன்படாதவர்கள் – என் கருத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், அரசியல் நேர்மை அற்றவர்கள் என்பது போன்ற பொருளில் அல்ல. அதைவிட அடிப்படையான ஒன்று, மக்கள் பணத்தைத் திருடித் தின்கிற ஈனப் புத்தி – பிச்சைக்காரத்தனம் இல்லாமல் இருக்க வேண்டும். பிழைப்பு நடத்துவதற்காக அரசியலுக்கு வரக்கூடாது. அவ்வளவுதான். எல்லோரும் அப்படித்தானே இருக்கிறார்கள் எனும் போதுதான், இருப்பதில் பரவாயில்லாத திருடனின் பக்கம் நிற்க வேண்டியதாகி விடுகிறது.

அரசியல் என்பது முழுக்க முழுக்கச் சமரசங்களும் சந்தர்ப்பவாதங்களும் நிறைந்தது என்கிற அடிப்படையைப் புரிந்து வைத்துக் கொண்டுதான் மற்ற கோளாறுகளைப் பற்றிப் பேச வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு எல்லாம் செய்த ஆகப்பெரிய மொள்ளமாறியைப் பற்றிப் பேசும் போது, கீழே கிடந்த ஒத்த ரூபாயை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்ட இன்னொருத்தரைக் காட்டி, “இவன் மட்டும் யோக்கியமா?” என்று பேசுவது முறையான வாதமாகாது. “எல்லோரும் திருடர்கள், அதனால் நான் இருப்பதிலேயே பெரிய திருடனுக்குத்தான் போடுவேன்” என்று பேசுவதை விட, “இருக்கிற திருடர்களில் இவன் பரவாயில்லாத திருடனாக இருக்கிறான். அதனால் வேறு வழியில்லாமல் இம்முறை இவனுக்குப் போடுகிறேன். இப்படியே போனால் அடுத்தடுத்த முறைகளில் இவனை விட உருப்படியானவர்கள் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. அப்போது இவனைத் தூக்கித் தூர வீசிவிட்டு அவர்களில் ஒருவரை ஆதரிப்பேன்” என்பதே நேர்மையான வாதமாக இருக்க முடியும். அதன் அடிப்படையில் அமைந்தவையே என் விருப்பு-வெறுப்புகள் அனைத்தும். அப்படி ஒவ்வொரு தேர்தலிலும் என் விருப்பு-வெறுப்புகள் எப்படி இருந்தன – எதன் அடிப்படையில் அப்படி இருந்தன என்று பார்வையிடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எளிய மக்களின் மத்தியில் வளர்ந்ததால், என்னைச் சுற்றி இருந்த எல்லாச் சிறுவர்களுக்கும் எம்.ஜி.ஆர். என்றால் உயிர். சுவர்களில் கரிக்கட்டை வைத்துத் தன் பெயரை எழுதியவர்களை விட “எம்.ஜி.ஆர். வாழ்க!” என்று எழுதிய நண்பர்களே என் சுற்றத்தில் நிறைய இருந்தார்கள். இலவசச் சத்துணவு கொடுப்பவர் என்று கடவுளுக்கு நிகராகப் போற்றுவர். கிட்டத்தட்ட எல்லா வீட்டிலுமே எம்.ஜி.ஆர். படம் இருக்கும். கருணாநிதி என்றால் பெயரைக் கேட்டாலே நஞ்சாக இருக்கும் அவர்களுக்கு. “மக்காச்சோளம் போட்டவன்!” என்று சிறியவர்களும் பெரியோரும் கடுமையாகத் திட்டுவார்கள். வீட்டில் நிறைய இடதுசாரிகள். எம். கல்யாணசுந்தரம் முதலான இடதுசாரிகள்தாம் கருணாநிதிக்கு ஆப்படிப்பதற்காக எம்.ஜி.ஆரைத் தூண்டிவிட்டு, உடன் இருந்து கட்சி ஆரம்பிக்க வைத்து, கொடி முதற்கொண்டு டிசைன் போட்டுக் கொடுத்தவர்கள் என்று வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் அரசியல் நோக்க ஆரம்பித்த காலத்தில் வீட்டில் யாருக்கும் எம்.ஜி.ஆர். மீது பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை. ‘அரசியற் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய மாதிரியான எந்தக் கொள்கையும் இல்லாமல், தன் சினிமாக் கவர்ச்சியை மட்டும் வைத்துப் படிக்காத பாட்டாளி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வியாபாரி’ என்கிற மாதிரித்தான் சொல்லிக்கொடுத்தோ – சொல்லிக் கொடுக்காமலேயோ என் மனதில் பதிந்து விட்டது அந்தச் சிறிய வயதில். அந்தக் கருத்தில் இன்றுவரை பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை. அதே வேளையில், தந்திரத்தால் வீழ்த்தப்பட்ட சம்பத்தையும் நெடுஞ்செழியனையும் மேலும் பலரையும் பார்த்துப் பரிதாபப்பட்டவர்கள் தம் கையில் எடுத்த கருவிதான் எம்.ஜி.ஆர். கொள்கை என்று சொல்லிக் கொண்டு ஒரு பெரும் அறிஞன் திருட்டு அரசியல் செய்வதை விட, கொள்கையே இல்லாமல் வெறும் கவர்ச்சியை வைத்துக் கொண்டு குறைவாகத் திருடுபவன் பரவாயில்லை, அந்த வகையில் எம்.ஜி.ஆர். பரவாயில்லை என்பதும் புரிந்துவிட்டது. இது பின்னர் வந்த புரிதல். ஆனால் அந்தச் சின்ன வயதில், எம்.ஜி.ஆர். முட்டாள்களின் தலைவர்; கருணாநிதிதான் அறிவாளிகளின் தலைவர்; முட்டாள்களே நிறைந்த தமிழ்ச் சமூகத்தில் எம்.ஜி.ஆர். வெல்வது இயல்பானதே என்று எண்ணிக் கொள்வேன். அரசியலின் மிகச் சில அடிப்படையான சில விசயங்களைத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாத அந்த வயதிலும் (வாக்களிக்கும் உரிமை இருந்தும் அஞ்சு வயசுப் பையன் நமக்கிருக்கிற அறிவு கூட இல்லாமல் இத்தனை பெரியவர்கள் இருக்கிறார்களே என்றும் திமிர் பட்டுக்கொள்வேன்), எம்.ஜி.ஆர். இருக்கும் வரை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகுதான் தமிழர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றுதான் எண்ணினேன். எம்.ஜி.ஆர். மறைவும் அதைத் தொடர்ந்து அரங்கேறிய நாடகங்களும் சிறுவனான என் அரசியல் அறிவை இன்னும் சிறிது (சிறிதுதான்) கூர்மைப் படுத்தின எனலாம்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜா அணி, ஜெ அணி என்று. ஜானகி அணி, ஜெயலலிதா அணி. தமிழகமெங்கும் மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆரின் மனைவி என்பதால் ஜானகி அம்மையாருக்கே ஆதரவு அதிகம் இருப்பதாகச் சொன்னார்கள். கட்சிக்காரர்களும் நிறையப் பேர் அவர் பக்கம் இருந்தார்கள். ஆனால் பின்னர் தேர்தலில் நடந்ததோ வேறு.

அப்போதுதான் அரசியற் கட்சியும் ஓர் உடையும் திண்மப் பொருள் என்கிற விவகாரம் முதன்முறையாகப் புரிய வருகிறது. இப்போதும் நினைவிருக்கிறது. இரவு ஏழரை-எட்டு மணி இருக்கும். வீட்டுக்கருகில் சிறுவர்கள் அசிங்கம் பண்ணும் ஓரிடத்தில் நண்பன் பாதுசா டவுசரை அவிழ்த்து அமரும் போது கேட்கிறான் - “கட்சி ஒடையிறதுன்னா என்னப்பா?”. அப்போதிருந்த எல்லா நண்பர்களின் தந்தையையும் போலவே அவனுடைய தந்தையாரும் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர். அவர்களுடைய வீட்டில் எல்லோருமே எம்.ஜி.ஆர். கட்சிதான் (பேசும்போது கூட, இப்படித்தான் கேட்டுக் கொள்வோம் – “நீ எம்.ஜி.ஆர். கட்சியா? கருணாநிதி கட்சியா??”; திமுக-அதிமுகவெல்லாம் கிடையாது; எம்மக்களை திமுக-அதிமுக போன்ற சொற்களைப் பயன்படுத்தி விபரமாகப் பேச வைக்க எவ்வளவு பாடு பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்; கடைசிவரை முடியாமல்தான் போயிற்று!). எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா அணியில் சேர்ந்தார்கள். ‘அப்பிடி வா வழிக்கு’ என்று அவனிடம் நம் அரசியல் ஞானத்தையெல்லாம் கொட்டிப் பரப்பினேன்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிந்தைய முதல் தேர்தல் 1989-இல் நடந்தது. மார்க்சியப் பொதுவுடைமை இயக்கம் திமுகவோடு நின்றது. எங்கள் வீட்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி. அக்கட்சி ஜெயலலிதா அணியோடு நின்றது. வீட்டில் ஜெயலலிதா அணிக்கே வேலை செய்தார்கள். நானும் ஆளோடு ஆளாகப் போய் என் வயதுக்கு ஏற்ற மாதிரியான எடுபிடி வேலைகள் பார்த்தேன். ஆனால் மனதுக்குள் அறிவாளிகளின் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்னும் சொல்லப்போனால் தனிமனிதக் கவர்ச்சியை வைத்துக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். மீதான வெறுப்பு, அதைவிடப் பல மடங்கு கூடுதலாகவே ஜெயலலிதா மேல் இருந்தது. எம்.ஜி.ஆருக்கு இருந்த அனுபவமும் கூட இவருக்கு அரசியலில் இல்லை என்கிற காரணம் வேறு. திருடர்கள் அதிகம் இராத (அப்போது) காங்கிரசும் நிறைய வென்றால் நல்லது என்று ஆசைப்பட்டேன். இரண்டுமே நடந்தது. "நாஞ் செத்தாத்தாண்டா ஒனக்கு இனி நாற்காலி" என்ற எம்.ஜி.ஆர். மறைந்து, அவருடைய கட்சி இரண்டாக உடைந்து தனித்தனியாகப் போட்டியிட்டதால், திமுக எளிதாக வென்றது. அப்போது நமக்குத் தலீவர் எம்மாம் பெரிய அப்பாட்டக்கர் என்று தெரியாததால் அவர் மீது ஒரு கரிசனம். அது எவ்ளோ பெரிய தவறுன்னு புரியவே நீண்ட காலம் ஆச்சு. மூப்பனார் காலத்துக் காங்கிரஸ் கட்சியிலும் நாகரீகமான தலைவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்களையும் நிறையப் பேரைப் பிடிக்கும். ஆசைப்பட்ட படியே காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் தனியாக வென்று காட்டியது அவர்கள் பலத்தை. அத்தோடு முடிந்தது அவர்களின் வாழ்வு. எல்லோரும் பெரிதாக எதிர்பார்த்த ஜானகி அணி, சேரன்மாதேவியில் பி.எச்.பாண்டியன் நீங்கலாக, ஜானகியம்மாள் உட்பட எல்லா இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆரின் தொகுதியான ஆண்டிபட்டியில் அவரே மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். பெரிதாக எதிர்பாராத ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்று அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். பின்னர் அலசியதில் புரிப்பட்ட அதற்கான முக்கியக் காரணம், அவரிடம் வந்தவர்களில் நிறையப் பேர் களப்பணி நன்றாகச் செய்தார்கள் – பணம் செலவழித்தார்கள் என்பது. அப்போதெல்லாம் தேர்தல் முடிவுகள் வானொலியில் கேட்போம். வாக்கு எண்ணிக்கை ஓரிரு நாட்கள் ஓடும். வீடும் கடைகளும் திருவிழா போல இருக்கும். ஆசைப்பட்டபடியே திமுக ஆட்சி அமைந்தது மட்டுமில்லை. செயல்பாடும் ஓரளவு நன்றாகவே இருந்தது. அமைச்சர்கள் நிறையப்பேர் விபரமானவர்கள் போல இருந்தார்கள். ஓரளவு நன்றாகவே நடைபெற்ற ஆட்சியைப் பின்னணியில் பல வேலைகள் செய்து விடுதலைப் புலிகள் ஆதரவு ஆட்சி என்று சொல்லிக் கலைத்துப் போட்டார்கள்.

ஒழுங்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஓர் ஆட்சியைக் கலைத்து விட்டார்களே என்ற கரிசனத்தால், 1991-இல் கலைக்கப்பட்ட திமுக ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என்று ஆசைப் பட்டேன். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவும் ஜானகியும் சந்தித்து, ஜெயலலிதாவே எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று ஒத்துக்கொண்டு கட்சியை ஒன்றாக இணைத்தார்கள். இதில் அதிமுக மீண்டும் பலம் பெற்றது. ஜெ அணியும் ஜா அணியும் பெற்ற வாக்குகளைச் சேர்த்தாலே வெல்லும் பலம் கிட்டிய புதிய அதிமுக, காங்கிரஸ் கட்சியோடும் கூட்டணி போட்டது. இது திமுகவின் சோலியை முடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராஜீவ் காந்தி வேறு தமிழகத்திலேயே கொல்லப்பட்டார். அதை அடுத்து உருவான அனுதாப அலையில், விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பு திமுக மேல் வர, கருணாநிதிதான் அத்தனைக்கும் காரணம் என்பது போலப் பேசி, திமுகவுக்கு எம்.ஜி.ஆர். காலத்திலேயே கிட்டியிராத மாதிரியான வரலாறு காணாத தோல்வியைக் கொடுத்தார்கள். சரியான நேரத்தில் காங்கிரஸ் கட்சியைத் தொற்றிக் கொண்டதால் அதிமுக வரலாறு காணாத வெற்றி கண்டது. எது நடந்தால், தமிழர்கள் ஐந்தறிவு படைத்த மிருகங்களினும் கீழானவர்கள் ஆகிவிடுவார்கள் என்று எண்ணினேனோ அதுவே நடந்தது. தமிழக அரசியலின் அதலபாதாள வீழ்ச்சி என்று அதைத்தான் எண்ணினேன். எத்தனையோ பெரும் பெரும் தலைவர்கள் இருந்த மண்ணில், எந்தத் தகுதியும் இல்லாமல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அதன்பின் அரசியல் மீதே ஒரு மிக மிக இழிவான பார்வை வந்து விட்டது. வென்று சிறிது காலத்திலேயே காங்கிரஸ் கட்சிதான் தன்னால் பயனடைந்தது என்கிற மாதிரிப் பேசி அவமானப் படுத்தி விரட்டிவிட்டார். அதன் பின்பு ஐந்தாண்டு காலம் இந்திய வரலாற்றிலேயே கண்டிராத மாதிரியான காட்டாட்சி (இதை விட மோசமான சொல் ஒன்று சிக்கும் வரை இதையே வைத்துக் கொள்வோம்) நடைபெற்றது. சோ இராமசாமிக்கே கோபம் வருகிற அளவுக்குன்னாப்  பாத்துக்குங்களேன்! அந்த ஆட்சியைப் பார்க்காததால் இன்றைய இளைய தலைமுறைக்கு ஜெயலலிதாவின் முழுரூபமும் தெரியவில்லை. அதைப் பார்த்த – அதனால் பாதிக்கப்பட்ட பெருசுகளே எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு அறிவில்லாமல் பேசுதுகளே, சின்னப் பசங்கள என்னத்தச் சொல்ல!

மொத்தத் தமிழகமும் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பி வெறி கொண்டிருந்தது. அதிமுக கட்சிக்காரர்களே நிறையப் பேர் தன்னை அப்படி அடையாளப் படுத்திக் கொள்ள வெட்கப்பட்டார்கள். தமிழகக் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் வெடித்தது. மூப்பனார் உட்படக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவர்கள் அதிமுகவோடு மீண்டும் கூட்டணி வைக்கக் கூடாது என்றார்கள். 1996-இல் “எங்களுக்குக் குழி போயஸ் தோட்டத்துலதான் வெட்டியிருக்கு”-ன்னு டெல்லிக் காங்கிரஸ் பிடிவாதமான முடிவெடுத்தது. தமிழிசையின் தந்தை குமரி அனந்தனும் அவர் மாதிரி ஒன்றுக்கும் ஆகாத நாலஞ்சு பேரும் தவிர்த்து, மொத்தக் காங்கிரஸ் கட்சியும் மூப்பனார் பின்னால் வந்தது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி பிறந்தது. சிதம்பரமும் மூப்பனார் பின்னால் வந்தார். ஜெயலலிதாவைக் கடுமையாக எதிர்த்தவர்களில் சிதம்பரமும் ஒருவர். அதற்காகவே அவரைப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. இன்றுவரை அவர் அதில் உறுதியாக இருக்கிறார். “உலக அரசியலிலேயே இதைவிட உத்தமமான தலைவியை நான் பார்த்ததில்லை” என்று இன்று ஜெயலலிதாவைப் பார்த்துச் சொல்லும் சோ இராமசாமிதான் திமுகவையும் தமாகாவையும் இணைத்து, ரஜினிகாந்தை அழைத்து வந்து ஆதரவு கொடுக்க வைத்து, மாபெரும் அரசியல் மாற்றத்துக்கான வித்தைப் போட்டார். ரஜினிகாந்த்தும் ஜெயலலிதா கட்சியின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர். அதற்குச் சில ஆண்டுகள் முன்பே திமுக உடைந்து, மதிமுக மலர்ந்திருந்தது. திமுக பொதுக்குழுவிலும் பாதிக்கு மேல் கலந்து கொண்டார்கள். வைகோவின் ‘போட்டி திமுக’ பொதுக்குழுவிலும் பாதிக்கு மேல் கலந்து கொண்டார்கள். இறுதியில் திறமையான ஆட்டக்காரர் வென்றார். மதில்மேல் பூனையாக இருந்தவர்கள் எல்லாம் பொத்துப் பொத்தென்று போய் திமுக பக்கமே மீண்டும் விழுந்தார்கள். அதிமுகவுக்கு எதிரான வெறுப்பை இரண்டாகப் பிரித்து விடக் கூடாது என்று வாக்களித்த மக்கள் மதிமுகவை மண்ணோடு மண்ணாக மட்க வைத்து விட்டார்கள். இப்போதும் கருணாநிதி மீது வெறுப்பு வந்திருக்கவில்லை; வைகோ மீதும் பெரிதாகப் பிடிப்பு ஏற்பட்டிருக்கவில்லை (பிற்காலத்தில் கருணாநிதியை விட வைகோ எவ்வளவோ பரவாயில்லை என்று மனம் மாறிவிட்டது வேறு கதை). அதனால் திமுக-தமாகா அணி வென்று காட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எல்லோரையும் போலவே நானும் ஆசைப்பட்டேன். அதுவே நடக்கவும் செய்தது. சென்ற முறை வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா இம்முறை வரலாறு காணாத தோல்வியைக் கண்டார். அவர் உட்பட அத்தனை பேரும் படுதோல்வி கண்டார்கள். தமிழகம் முழுக்க மொத்த அதிமுகவும் தோற்றாலும் பர்கூரில் அவர் தோற்க மாட்டார் என்று எல்லோரும் சொன்னார்கள். தமிழகம் முழுக்க ஆட்டம் போட்டாலும், அந்த அளவுக்குத் தன் சொந்தத் தொகுதிக்குச் செய்திருக்கிறார் என்றார்கள். பர்கூர் மக்களோ தமிழகத்தின் பக்கம் நின்று அவரையும் தோற்கடித்தார்கள். மொத்தத் தமிழகமும் திரும்பவும் மூச்சு விட ஆரம்பித்தது. அத்தோடு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்று எல்லோரும் மங்களம் பாடினார்கள். காலம் அதையும் கேலி செய்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று அடுத்துப் பார்ப்போம்.

இம்முறையும் திமுகவின் ஆட்சி ஓரளவு நன்றாகவே இருந்தது. தென்தமிழகத்தில் ஒரு பெரும் குறையாக மக்கள் பேசிக்கொண்டது – “எப்போதும் கருணாநிதி ஆட்சி வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விடும்; இப்போதும் அப்படியே; எங்கு பார்த்தாலும் சாதிக் கலவரங்கள்; ஆனால் இந்த ஆள் எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கிறார்” என்பது. சொல்கிற மாதிரியே காவற்துறை செயலிழந்து கிடந்தது. என் பகுதியில் குறிப்பாக, தேவமாருக்குக் கருணாநிதி எதிரானவர்; ஜெயலலிதாதான் அவர்கள் என்ன செய்தாலும் உடன் நிற்பவர் என்கிற கருத்து உருவாகியிருந்தது. பின்னணியில் பல வேலைகள் செய்து, கள்ளர்-மறவர்-அகமுடையோர் என்று பிரிந்திருந்த முக்குலத்தோர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அந்தக் குடையை சசிகலா வழியாக ஜெயலலிதா கையில் கொடுத்தார் சசிகலாவின் கணவர் நடராஜன். இதனால் ஒரு கூட்டம் மனதுக்குள் சாதியை வைத்துக் கொண்டு மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சிக்காக உழைக்க ஆரம்பித்தது. இது போலவே, கவுண்டர்-வன்னியர் பகுதிகளிலும் ஜெயலலிதா ஆதரவு மீண்டும் சிறிது சிறிதாக வலுத்தது. தனிப்பட்ட முறையில் மீண்டும் திமுகதான் வெல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த போதும், கொஞ்சம் சர்க்காரியா கமிஷன் முதலான பழைய வரலாறெல்லாம் படித்து, தலீவர் எம்மாம்பெரிய அப்பாட்டக்கர் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டேன். அதிலும் டெல்லியில் அவர் ஆடிய பல சித்து விளையாட்டுகளைப் பார்த்த போது கொஞ்சம் அருவருப்பே வந்து விட்டது (முக்கியமாக மூப்பனார் பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோது கூட இருந்தே கழுத்தறுத்த சம்பவம்). அதனால் பழைய அளவுக்கு அவர் மீது ஈடுபாடு இல்லை இப்போது. ஆனால் இருப்பதில் அவர்தான் சரியான ஆள் என்கிற மாதிரி எண்ணம். தமாகாவும் எதிர்க்கட்சியாகி அமர்ந்து, பெரும்பாலும் நட்புணர்வோடு நடந்து கொண்டது. சிற்சில தீவிர காங்கிரஸ்காரர்கள் மட்டும் முறையான எதிர்க்கட்சியாகச் செயல்பட விரும்பி, அவ்வப்போது சங்கடத்தைக் கொடுத்தனர். ஆனாலும் எனக்கு விபரம் தெரிந்து அரசியல் நோக்க ஆரம்பித்த பின்பு தமிழக அரசியலின் பொற்காலம் என்றால் அது 1996-98 காலந்தான். தமிழகத்திலும் ஓரளவு நல்லாட்சி. நாகரீகமான எதிர்க்கட்சி. மத்தியிலும் நல்ல செல்வாக்கு என்று இருந்தது. அது அப்படியே தொடர்ந்திருந்தால் இன்று தமிழகம் அரசியல் முதிர்ச்சியில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கும். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். என்னுடைய திண்ணமான எண்ணம் – அந்த ஒருநாள் கருணாநிதி கருணாநிதியாக இராமல் பெருந்தன்மையோடு மூப்பனாரைப் பிரதமர் ஆக விட்டிருந்தால் எல்லாம் நல்லபடி ஆகியிருக்கும். எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பார்க்கும் அந்தப் பிறவிப் புத்தி தமாகாவை அன்றோடு அழித்தது தமிழகத்தில். ஒரு நல்ல பங்காளியை நாசம் பண்ணியதால், அத்தோடு பலமான கூட்டணியையும் அதன் முக்கிய பயனாளியான திமுகவையும் அது பலவீனப்படுத்தியது.

2001 தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி உடைந்து பலவீனமடைந்து கிடந்த நேரத்தில், சிறந்த ஆலோசகர்களின் உதவியோடு ஜெயலலிதா மெகா கூட்டணி ஒன்றை உருவாக்கினார். அதிமுக எளிதாக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி மீது இருந்த மரியாதை எல்லாம் மண்ணாய்ப் போய்விட்ட போதும், முந்தைய திமுக ஆட்சி அதற்கு முந்தைய அதிமுகவின் ஆட்சியை விடப் பலமடங்கு நல்லாட்சி என்பதால் மீண்டும் திமுகவே வரவேண்டும் என்று எண்ணினேன். அது மட்டுமில்லை, அவ்வளவு குற்றங்களையும் கொடூரங்களையும் செய்து தண்டிக்கப்பட்ட அதிமுகவை அப்படியே அழித்து ஒழித்து விடுவதுதான் தமிழகத்துக்கு நல்லது என்றும் நம்பினேன். அவ்வளவு பெரிய அநியாயம் செய்த ஒருவரை ஐந்தே ஆண்டுகளுக்குள் மறந்து மன்னித்து விடுவது எவ்வளவு பெரிய குற்றம்? அதையும் செய்தார்கள் நம் மக்கள். மீண்டும் சொல்லொனாத் துன்பமுற்றேன். இப்போது கல்லூரிப் படிப்பு முடித்து பணி நிமித்தமாக பெங்களூர் வந்து விட்டேன். இங்கே இருப்பவர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே மிகவும் கேவலமாக இருந்தது. பிகாரி நண்பன் ஒருவன், “தமிழ்நாடு பிகாரைப் போல ஆகிவிட்டதே!” என்றான். ‘இனிமேல் தமிழ் நாட்டுப் பக்கமே போகக் கூடாது. என்ன மாதிரியான ஆட்டுமந்தைக் கூட்டங்கள்!’ என்று வெறுப்பாயிற்று. ஆனால் வியப்படையும் விதத்தில் அதிமுகவின் இந்த ஆட்சி ஊழல் இல்லாமல் நல்ல முறையில் இருந்தது. இரண்டாம் முறை கிடைத்திருக்கும் வாய்ப்பையும் நாசம் செய்து கொள்ளும் அளவுக்கா விபரம் இல்லாதவராக இருக்க முடியும்! ஆனால் ஆணவம், அடிமைத்தனம், குண்டக்க மண்டக்க ஏதாவது செய்தல், நாலு நாளைக்கு ஒருமுறை அமைச்சர்களை மாற்றுதல் போன்ற அடிப்படையான பல பண்புகளில் மாற்றமில்லாமல் இருந்தது. இந்த ஐந்தாண்டுகளில் தலீவர் மீதான அருவருப்பு கூடிக்கொண்டே வந்தது. அவர் டெல்லியில் செய்த பேரங்களும் முக்கியமான மக்கள் பிரச்சனைகள் பற்றி அவர் பேட்டியளிக்கிற விதமும் அவருடைய அடிவருடிகளுக்குச் சாணக்கியரை நினைவூட்டின. நமக்கோ மனிதருக்குள் இருக்கும் சின்னத்தனங்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டின. அதே வேளையில் சட்டம்-ஒழுங்குக்கு ஜெயலலிதா கொடுக்கும் முக்கியத்துவம், சசிகலா குடும்பம் தவிர்த்து கட்சிக்காரர்கள் எவரையும் ஆட்டம் போடவிடாமல் பார்த்துக் கொண்டது, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடிக்க விரும்பாத பண்புகள் போன்றவை மக்களிடம் அவரை மேலும் பிரபலப்படுத்தின. இந்த ஐந்தாண்டுகளில்தாம் அவர் எம்.ஜி.ஆரைப் பிடிக்காத பலருக்கும் கூடப் பிடித்த ஒருவரானார். நிர்வாகமே தெரியாதவர் என்கிற நிலை மாறி, உடன் இருப்பவை அனைத்தும் குப்பைகளாக இருந்தாலும் தனியொருவராக அவற்றை எல்லாம் ஈடுகட்டும் விதமாக ஆட்சி செய்து நல்ல நிர்வாகி என்றும் பெயர் எடுத்தார். அது மட்டுமில்லை. உடன் இருப்பவை அனைத்தும் மக்குகள் என்பதால் அதிகாரிகள் திறம்படச் செயல்பட முடிந்தது. அதுவே ஒரு பலமானது. எவ்வளவுதான் இருந்தாலும், அவர் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவரல்ல; தனக்காகத்தான் அரசியல், மக்கள், நாடு எல்லாம் என்கிற மனப்பாங்கு உடையவராகவே இருந்தார். ஆனாலும் இம்முறை அவர் ஆட்சி புரிந்த விதம் பெரும்பான்மை மக்களுக்கு நன்மை பயப்பதாகவே இருந்தது. அதனால் எனக்கும் ஓரளவு அதிமுக மீது பழைய வெறுப்போடு கலந்த புதிய நல்லெண்ணமும் வந்து விட்டது.

அதனால் அடுத்து வந்த 2006 தேர்தலில் மீண்டும் எப்படியாவது அதிமுகவே வந்து விட்டால் நல்லது என்று எண்ணினேன். ஒரு காலத்தில் தமிழக அரசியலின் தரத்தையே தரைமட்டத்துக்கும் கீழே கொண்டு சென்று விட்டாரே என்று எண்ணிய ஜெயலலிதாவை இன்று பிடிக்க ஆரம்பித்ததின் பின்னணியில் அவருடைய நற்பண்புகளை விட அவருக்கு எதிராக இருக்கும் தலீவரின் இழிபண்புகளே முக்கியக் காரணம் என்பதை உணர்வீர்களாக! எல்லாத்திலும் ஆதாயக் கணக்குப் பார்க்கும் கருணாநிதி மீது மிதமிஞ்சிய வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்தத் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளின் போது கூடவே இருந்த வைகோவைக் கழுத்தறுத்தார்கள். அந்தக் கோபத்தில் அவர் போய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ள மரியாதையையும் இழந்தார். ஆனால் அவருக்கும் வேறு வழியில்லை. கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் இப்படி எதாவது செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை. கருணாநிதியைக் கடவுளாகப் பார்க்கும் அரசு ஊழியர்கள், ஜெயலலிதாவைத் தமக்கு எமனாகப் பார்த்தார்கள். காரணம், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டங்களை முரட்டுத் தனமாக நசுக்கினார் ஜெயலலிதா. சிறுபான்மையினருக்கு எதிராகச் சட்டங்களை இயற்றி அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. பாஜகவுடன் கூட்டணி எல்லாம் வைத்துக் கொண்டவர் என்றாலும் தமக்கு இந்த அளவு தீங்கு விளைவிக்க மாட்டார் கருணாநிதி என்று சிறுபான்மையினர் நம்பினர். தாழ்த்தப்பட்ட மக்கள் ஜெயலலிதா எந்தக் காலத்திலும் தமக்கு முற்றிலும் எதிரானவர் என்பதைப் புரிந்து கொண்டனர். இந்த அரசு ஊழியர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் கூட்டணி, இந்தத் தேர்தலில் அதிமுகவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக உழைத்தது. இவை எல்லாவற்றையும் விட, ‘எல்லோருக்கும் வண்ணத் தொலைகாட்சி’ என்ற ஓர் ஒற்றை அறிவிப்பில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக நான் உணர்ந்தேன். எனக்குச் சற்றும் விருப்பமில்லாத திமுகவின் வெற்றி தவிர்க்க முடியாததாக நடந்து தீர்ந்தது. மீண்டும் ஒரு பெரும் மனமுடைவு!

அதன் பின்பு திமுக செய்த ஆட்சி, 1991-96 காலத்தில் அதிமுக ஆட்சியை விடவும் கொடூரமானதோ என்று என்னும் அளவுக்குப் பயங்கரமானதாக இருந்தது. கருணாநிதியின் மொத்தக் குடும்பமும் கட்சிக்குள் வந்து கோலோச்சியது. இன்று பயந்தாங்கொள்ளி போல ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் அழகிரியை, அவருடைய அல்லக்கைகள் அஞ்சாநெஞ்சர் என்று சொல்லிக் கொண்டாடினார்கள். எந்த அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத அவரை மத்திய அமைச்சர் ஆக்கினார் கருணாநிதி. திருச்சி சிவாவின் வாய்ப்பைப் பறித்து மகள் கனிமொழியை மேலவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பினார். ஒவ்வொரு அமைச்சரும் ஆட்டமான ஆட்டம் போட்டார்கள். டெல்லியில் அலைக்கற்றை ஊழல் முதல் மாநிலத்தில் எண்ணிலடங்கா ஊழல்கள். ஈழப் பிரச்சனையின் போது மிக இழிவான நாடகங்கள் நடத்தினார். ஒரு காலத்தில் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக காங்கிரஸ் கட்சியை ஆட்டிப்படைத்த அவர்தான் இப்போது விடாப்பிடியாக அதே காங்கிரசைத் தொற்றிக் கொண்டு விட மறுத்தார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்தும் மிரட்டியும் வாக்குகளை வாங்கினார்கள். இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட முடியாதா என்று கொதித்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். இம்முறை திமுகக்காரர்கள் தம்மை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளக் கூச்சப் பட்டார்கள். அந்த அளவுக்கு ஆட்டம். அதிகாரப் பயன்பாட்டில் முறைகேடுகள். அப்போதும் சிலர் தலீவருக்கு வயதாகி விட்டதால்தான் கட்டுப்படுத்த முடியவில்லை; இல்லையேல் அவர் நேர்மையின் சிகரம் என்றெல்லாம் புலம்பித் திரிந்தார்கள். அவர்கள்தாம் இந்தத் தேர்தலில் கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க உழைக்கப் போகிறவர்கள்.

அதனால் வேறு வழியில்லாமல், மீண்டும் ஜெயலலிதா வென்று வந்து விட்டால் நல்லது என்று எண்ணத் தொடங்கினோம். ஐந்தாண்டு காலம் பதவி இல்லாமல் சீரழிந்து கிடந்தும் கூட, அதற்கான வாய்ப்புக் கூடி வரும் வேளையில் அதைக் கெடுத்துக் கொள்ளும் விதமாக ஏதேதோ செய்து சொதப்பினார் ஜெயலலிதா. என்ன காரணம் என்றே யாராலும் புரிந்து கொள்ள முடியாத மாதிரி அதுவரை உடனேயே கிடந்து கத்திக் கொண்டிருந்த வைகோவைக் கழுத்தறுத்து வெளியனுப்பினார். அந்த நிமிடம் வைகோ கோபித்துக் கொண்டு திமுக போயிருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. மூன்றாம் அணி அமைக்கும் வாய்ப்பு அருமையாகக் கூடி வந்தது. விஜயகாந்தே வைகோவின் பேச்சைக் கேட்கத் தயாராக இருந்தார். ஆனால் வைகோவோ தேர்தலையே புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்து விட்டதாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். நமக்கோ மண்டை காய்ந்தது. அவமானப் படுத்துவோரைக் கூட வீழ்த்த விரும்பாத ஒரு மனிதன் வாழவே தகுதியில்லாதவன் அல்லவா என்றெல்லாம் பேசினோம். ஆனால், மூன்றாம் அணி அமைத்திருந்தால் ஜெயலலிதாவுக்கு அத்தோடு முடிவு கட்டியிருக்கலாம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். அவர்களோ தமிழ்நாட்டுக்கே அத்தோடு முடிவு கட்டியிருப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும் அதற்கு வாய்ப்புக் கொடுத்து விடக் கூடாது என்று எண்ணி அவர் எடுத்த முடிவு சரிதான் என்று அதற்குப் பின்னால் புரிந்தது. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துப் பெரும் வெற்றி கண்டார்கள். திமுக நாம் ஆசைப்பட்டபடி மீண்டுமொரு வரலாறு காணாத தோல்வி கண்டது. எதிர்க்கட்சி வாய்ப்பைக் கூட நேற்றுப் பிறந்த விஜயகாந்த் கட்சியிடம் இழந்தது. அதிமுக இன்னும் கொஞ்சம் தோற்று, விஜயகாந்தை நம்பிக் கூட்டணி ஆட்சி அமைக்கிற மாதிரி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய ஆணவத்துக்குக் கடிவாளம் போட ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால் இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்றே பட்டது. திமுகவுக்கும் அத்தகைய அடி தேவைப்பட்டது.


அதன் பின்பு நடந்ததை நாம் அறிவோம். விஜயகாந்தோடும் மோதல். கொஞ்ச காலத்திலேயே கூட்டணி உடைந்தது. பெங்களூரில் இழுத்தடிக்கப்பட்ட பழைய வழக்கு, முடிவுக்கு வந்து தண்டனையில் முடிந்தது. வழக்கிலேயே கவனம் முழுக்க இருந்ததால் ஆட்சியில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை. இடையில் தலைமைக் கூன்பாண்டியர் பன்னீர் செல்வம் மீண்டும் முதலமைச்சர் ஆனார். சென்ற அதிமுக ஆட்சியில் இருந்த அளவுக்குக் கூட செயல்பாடுகள் இல்லை. சென்ற முறை போல ஊழல் குறைவான ஆட்சியும் அல்ல இது. சென்ற திமுக ஆட்சியிடம் இருந்து பல தவறான பாடங்களைப் படித்துக் கொண்டு (நிரந்தர விசுவாசிகளைச் சம்பாதிக்கவும் அடுத்து வரும் தேர்தலில் தாராளமாகச் செலவழிக்கவும், அமைச்சர்களையும் கட்சிக்காரர்களையும் கொள்ளை அடிக்க அனுமதிக்க வேண்டும் போன்றவை), செயல்பாடுகளே இல்லாத – ஊழல் மலிந்த ஆட்சி ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. அதற்குத் தண்டனையாக அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இம்முறை. ஆனால் அதற்காக அவ்விடத்தில் மீண்டும் திமுகவை அமர விடலாமா என்கிற கேள்வி பதில் சொல்ல முடியாததாக பயமுறுத்தி நிற்கிறது. நல்ல வேளையாக, இம்முறை மூன்றாம்-நான்காம்-ஐந்தாம்-ஆறாம் ஆப்சன்கள் எல்லாம் நமக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கான வெற்றி வாய்ப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தத் தேர்தலில் எனக்கிருக்கும் ஒரு பேராசை இதுதான் – இவ்விரு கட்சிகளில் ஒன்று வென்றாலும் பரவாயில்லை; மற்றொன்று மூன்றாம் இடத்துக்குப் போக வேண்டும்; அத்தோடு அழிய வேண்டும். அதுவும் நடக்கப் போவதில்லை போலத்தான் தெரிகிறது. அடுத்ததாக, குறைந்த பட்சம், எவர் வென்றாலும் அவர்களுக்குக் கடிவாளம் போட, உடன் இருந்தே தினம் தினம் சித்திரவதை செய்து கொல்ல, கூட்டணி ஆட்சி அமைகிற விதத்தில் தொங்கு மன்றம் வர வேண்டும். சித்திரவதை செய்து கொல்வதில் மதிமுக, தமிழக இடதுசாரிகள், விசி, தமாகா, பாஜக போன்றவர்கள் வல்லவர்கள் போல் இல்லை. அது விஜயகாந்த் மற்றும் ராமதாசுக்கு எளிதில் கைவரக்கூடியது. யார் மூலமோ அது நடந்தால் நல்லது. பார்க்கலாம், என்னதான் நடக்கிறதென்று!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்