ஆர் கே நாராயணின் வழிகாட்டி (THE GUIDE) - 1/3

ஆரோக்கியமான உணவைத் தேடித் தேடி உண்போர் ஒரு ரகம் என்றால் கண்டதையும் தின்று பொழுதைக் கழிப்போர் இன்னொரு ரகம். இரண்டாம் ரகத்தினர் சோறை விட நொறுக்கித் தீனி அதிகம் தின்போர். அது போலவே வாசிப்பிலும் இதைத்தான் வாசிக்க வேண்டும் என்று தரமான இலக்கியங்களையும் நூற்களையும் மட்டும் தேடித் தேடி வாசிப்போர் ஒரு ரகம் என்றால் கையில் சிக்குபவை அனைத்தையும் விழுந்து விழுந்து வாசிப்போர் ஒரு ரகம். எதையும் தேடிச் சென்று போய் வாங்கி வாசிக்கும் பழக்கம் இரண்டாம் ரகத்தினருக்குக் கிடையாது. நொறுக்குத் தீனி தின்போர் போல நொறுக்கு வாசகர்கள். நொறுக்குத் தீனி வாங்கித் தின்கும் போது கிடைக்கும் பழைய பத்திரிகையையும் விட்டு வைக்காதவர்கள். இது ஒன்றும் நொறுக்குத் தீனி தின்பது போலக் கெட்ட பழக்கம் இல்லை என நினைக்கிறேன். ஏனென்றால் நானும் இந்த ரகம்தான். தீவிர வாசிப்பு என்பது ஒரு போதும் இருந்ததில்லை. சிக்கியதைத் தீவிரமாக வாசித்துத் தீர்த்து விடுகிற பழக்கம் இருந்தது. தீவிர வாசகர்களைக் கண்டு பொறாமைப் படுவது மட்டும் தீவிரமாக இருந்ததுண்டு.

முன்பொரு முறை அலுவலகச் சந்திப்பு ஒன்றில் ஒருவர் இன்னொருவரிடம் "உன் முக்கியப் பொழுதுபோக்கு எது?" என்று கேட்ட போது அந்த இன்னொருவர் "வாசிப்பு!" என்றார். "கதைகளா? கட்டுரைகளா? புனைவிலக்கியமா? மற்றவையா? எந்த மாதிரி நூல்கள்?" என்ற அடுத்த கேள்விக்கு, "இரண்டும்! ஒன்று மாற்றி ஒன்று!" என்று பதில் சொன்னார். அப்போது ஒரு பொறி தட்டியது (பொறி மட்டும்தான் தட்டியது!). 'நாமும் தீவிரமாக வாசிக்க ஆரம்பிக்கும் காலத்தில் இந்த நுணுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடவே ஒரு தமிழ் ஓர் ஆங்கிலம் என்றும் மாற்றி மாற்றிப் படிக்க வேண்டும்!' என்று பதிந்து வைத்துக் கொண்டேன். அதன் ஒரு சிறிய பங்குதான் ஒரு தமிழ் ஓர் ஆங்கிலம் என்று பதிவிடும் பழக்கம் கூட. கொஞ்சம் ஆட்கள் வந்து போகும் கடையிலும் ஆளே இல்லாத கடையிலும் மாறி மாறி டீ ஆற்றுவதன் இரகசியம் இதுதான்.

தீவிர வாசிப்பு என்று சொல்ல முடியாது என்றாலும், சிங்கப்பூரில் இருக்கும் நூலகங்களின் புண்ணியத்தில் ஓரளவு பரவாயில்லாத வாசிப்பு ஆரம்பித்திருக்கிறது. தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று, புனைவிலக்கியம் ஒன்று, மற்றது ஒன்று என்று ஒரு சுற்று முடித்து விட்டேன். ஆங்கில வாசிப்பு என்பது காலம் போன காலத்தில் ஆரம்பித்த பழக்கம் என்பதால், முதலில் எளிதான நடை உள்ள புனைவிலக்கியங்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து யோசித்ததில் உருவான திட்டம் - முதலில் இந்தியர்களின் ஆங்கிலப் படைப்புகளைப் படித்து முடித்தல் என்பது. இந்தியராகப் பிறந்து ஆங்கிலத்தில் எழுதிய-எழுதும் முக்கியமான ஆட்கள் என்று பார்த்தால் ஒரு பத்துப் பேர் வருகிறார்கள். அதில் முதல் சிலரில் ஒருவரும் ஏற்கனவே மால்குடி தினங்கள் (MALGUDI DAYS) மூலம் நமக்கு அறிமுகமானவருமான நம்ம ஊர் ஐயா - ஆர் கே நாராயண்.

ஆர் கே நாராயண் பற்றி ஏழாம் வகுப்பில் ஏதோ படித்த நினைவு. அதன் பிறகு அவ்வப்போது கேள்விப் படுவதுண்டு. அதன் பின்பு வலையுலகில் நடக்கும் விவாதங்களில் ஒன்றில் அவர் பற்றிய விவாதம் ஒன்றும் படிக்க நேர்ந்தது. அவர் எழுதிய அதே மேட்டரைத் தன் தாய் மொழியில் எழுதியிருந்தால் அவரை மதித்திருப்பேன் என்று ஒரு மொழிப் பக்தர் எழுதியிருந்ததும் நினைவிருக்கிறது. அதில் கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இதே கதை கன்னட எழுத்தாளர் குவெம்புவுக்கும் உண்டு. ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த அவரை யாரோ ஒருவர் நிறுத்தி, "இதையெல்லாம் ஏன் உங்கள் தாய் மொழியில் எழுதக் கூடாது?!" என்று கேட்டு, அதில் அவர் மனம் மாறி அன்று முதல் கன்னடத்தில் எழுதியதால்தான் கன்னட இலக்கிய உலகுக்கு அப்பேற்பட்ட எழுத்தாளர் கிடைத்தார் - கன்னடத்துக்கு அத்தனை ஞானபீட விருது கிடைத்தது (அவரால் ஒன்றுதான் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு உருவான பல பேரெழுத்தாளர்களுக்கு அவர்தான் அடித்தளமாகவும் உத்வேகமாகவும் அத்தனையுமாகவும் இருந்தார்!). அதனால்தான் இந்தியாவுக்கு இன்னோர் இலக்கிய நோபல் பரிசு கிடைக்காமல் போய்விட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை வைத்துப் பார்க்கையில், ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தால் குவெம்புவும் குறைந்த பட்சம் நம்மவர் போல உலகெங்கும் அறியப் பட்ட - பேசப் பட்ட ஓர் எழுத்தாளர் ஆகியிருப்பார். அல்லது, நம்மவர் அவர் போலத் தன் தாய்மொழியான தமிழில் எழுதியிருந்தால் அப்போதே நமக்கொரு ஞானபீட விருதும் அதைக் கண்டு துடித்தெழுந்து எழுதத் தொடங்கியவர்களால் இன்னும் நான்கைந்து ஞானபீட விருதுகளும் கிடைத்திருக்கலாம். ஒருவேளை, தமிழரின் வாழ்வைத் தமிழர்க்குச் சொல்வதில் சிறப்பென்ன இருக்கிறது என்று அவரை நாம் அங்கீகரிக்காமலே போயிருந்தால்?! அந்த வகையில் அவருடைய சாதனை சாதாரணப் பட்டதல்ல. ஆங்கில எழுத்துலகமே வரி வரியாகப் பிரித்து மேய்ந்து ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நம் வாழ்வை உலக மயமாக்கிய பெருமை அவரையே சேரும். அதன் பிறகு ஆங்கிலத்தில் புனைகதைகள் எழுதிய ஏகப்பட்ட இந்தியர்களுக்கு அவர் ஒரு முன்னோடியாக இருந்தார் என்ற பெருமையும் கிட்டியிராது.

சரி, கதைக்கு வருவோம். மால்குடியில் பிறந்து வளர்ந்த ராஜுதான் கதாநாயகன். கதாநாயகன் என்றால் அவன்தான் கதையில் வரும் பாத்திரங்களிலேயே நல்லவன் என்றோ வல்லவன் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஓரளவு நல்லவன்தான்; வல்லவன்தான். ஆனால் அது மட்டுமே அவனைக் கதாநாயகனாக்கி விடவில்லை. மால்குடி என்ற சிறுநகரத்தில் சாதாரணப் பட்ட கடை வியாபாரிக்கு மகனாகப் பிறந்து வாய்த் திறமையால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக மாறி, அப்படி சுற்றுலா வரும் ஒரு மாற்றானின் மனைவியைக் கவர்ந்து, அவர்கள் குடும்பத்தை இரண்டாக்கி, அதில் இவன் ஒரு குடும்பம் உருவாக்கி, அதையும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் எல்லாத்தையும் இழந்து தெருவில் வந்து நிற்கும் வேளையில், இடங்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டி வேலை செய்து கொண்டிருந்தவன் எப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டும் வேலையான சாமியார் வேலையைச் செய்யும் அளவுக்கு உருவெடுக்கிறான் என்பதுதான் கதை. ஆக, புரட்டுக்காரர்கள் சாமியார் ஆவது புதுக்கதை அல்ல. அவர்களை நம்பி ஏமாறும் கோமாளிகளின் கதையும் புதிதல்ல. ஒரே ஒரு வேறுபாடு - அப்போது கிராமத்துப் பாமர மக்கள் மட்டும் ஏமாந்தார்கள்; இப்போது படித்த பட்டணத்துப் பாமரர்களும் ஏமாறுகிறார்கள்.

ஒவ்வொரு குழுவிலும் ராஜு போல ஒரு சவடால்ப் பேர்வழி இருக்கத்தான் செய்கிறான். வாயிலேயே வடை சுட்டு வருமானம் பார்க்கும் ஆட்கள். அவர்களுக்குக் கொஞ்சம் மூளையும் ஓரளவுக்கு வேலை செய்யும். அங்குமிங்கும் பிட் பேப்பர்கள் படித்து வளர்த்த மூளை. அதை விட விபரமானவர்கள் அதிகம் பேசாததால் இவர்கள்தான் வெளியுலகில் அதிகம் அறிவாளிகளாக ஏற்றுக் கொள்ளப் படுபவர்கள். காரியம் சாதிப்பதில் இவர்களுக்கு இணை இவர்களே (வாயே திறக்காமல் காரியம் சாதிப்பவர்கள் ஒரு க்ரூப் இருக்கிறார்கள். அவர்கள் வேறு விதம்!). ராஜு போன்றவர்கள் எந்த இடத்திலும் எளிதில் நண்பர்களை உருவாக்கி விடுவார்கள். அவரவர்க்கு ஏற்ற மாதிரி அவரவர் சுவை உணர்ந்து விசயங்களைப் பேசி எளிதில் பிறர் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். எல்லோரையும் போல இவர்களும் சில விசயங்களில் மட்டுமே கை தேர்ந்தவர்களாகவும் சில விசயங்களில் சுட்டுப் போட்டாலும் சோபிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். ஆசிரியர் சொல்வது போல எதையுமே தெரியாது என்று சொல்லத் தெரியாதவர்கள். தவறாகவேனும் ஏதாவது சொல்வார்களே ஒழிய தெரியாது என்று சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்போதும் சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும். அவர்களுக்கு அப்படி இல்லாவிட்டாலும் கூட சுற்றி இருப்போருக்குக் கண்டிப்பாக இருக்கும். அதற்காகவே சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். இது போன்றவர்களைத் தண்டிக்க விரும்பி அத்துவானக் காட்டில் தூக்கிப் போட்டாலும் அங்கே சில நண்பர்களைப் பிடித்து விடுவார்கள். ஆட்களே இல்லாத இடமாக இருந்தால் சில விலங்குகளையாவது வளைத்துப் போட்டு விடுவார்கள். அதைத்தான் சிறைக்குள் அடைத்து வைக்கும்போது கூட ராஜு செய்வான். எமகாதகப் பயபிள்ளை!

மால்குடி என்பது உண்மையில் எந்த ஊர் என்று நாராயண் ஒரு போதும் தெளிவாகப் பதில் சொல்லவில்லை. அது ஒரு கற்பனைக் கிராமம் என்றே அவர் சொல்லி வந்தார். லால்குடிக்குத் தொடர்புடைய நண்பன் ஒருவன் சொன்னான் - மைசூரும் லால்குடியும் இணைந்ததுதான் மால்குடி என்று. பெயர்க்காரணமும் நம்புகிற மாதிரியாக இருக்கின்றது. ஆசிரியரின் மால்குடி பற்றிய வர்ணனைகள் கூடக் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கின்றன. லால்குடி போன்று சிறுநகரத்துக்கு உரிய பல பண்புகளைக் கொண்டிருக்கிறது மால்குடி. மைசூர் போல மலை, ஆறு, சுற்றிப் பார்க்கும் இடங்கள், பெரிய ஓட்டல்கள் என்று மாநகருக்கு உரிய பண்புகளும் கொண்டிருக்கிறது. மொழி என்று பார்த்தால், முழுக்க முழுக்கத் தமிழே தென்படுகிறது. ராஜு கூடத் தமிழன்தான். மற்ற ஊர்கள் அனைத்தும் சென்னை, திருச்சி என்று தமிழ்நாட்டு ஊர்களாகவே இருக்கின்றன. பெங்களூரோ மங்களூரோ பற்றி ஒரு வார்த்தை கூட வரவில்லை.

வெள்ளைக்காரர்களைப் பொருத்த மட்டில் இந்தியாவில் இருக்கும் இரயில் நிலையங்களிலேயே பிரபலமானது மால்குடி இரயில் நிலையம்தான். மைசூர் இரயில் நிலையத்தைப் பார்த்து விட்டு, "இது அப்படி இல்லையே!" என்று சொல்லித் திரும்பியவர்கள் எல்லோரும் லால்குடி இரயில் நிலையத்தைப் பார்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. லால்குடித் தொடர்பு கொண்ட நண்பன், வட இந்தியத் தோழி ஒருத்தியை லால்குடிக்கு அழைத்துச் சென்று அதுதான் மால்குடி நிலையம் என்று காட்டி வந்தது நினைவிருக்கிறது. அவளும் பார்த்து விட்டு வந்த பின்பு அப்படித்தான் இருப்பது போல ஒத்து ஊதினாள். இந்தக் கதையைப் படித்த பின்பு எனக்கும் அதைப் போய்ப் பார்த்து வர வேண்டும் என்ற ஓர் ஆசை வந்திருக்கிறது. அப்படியே அந்த இரயில் நிலையத்துக்குள் இருக்கும் கடையில் போய், "இந்தக் கடையை ஒரு காலத்தில் ராஜு என்பவர் நடத்திய கதை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டு விட்டும் வர வேண்டும். :)

காதற் கதைகள் எப்போதுமே சிலிர்ப்புதான். அதிலும் கள்ளக்காதற் கதைகள் கூடுதல் சிலிர்ப்பு. காலமெலாம் அது போன்ற கதைகள் மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டு சென்றதற்கான எண்ணிலடங்கா ஆதாரங்கள் இருக்கின்றன. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே மொழியான தமிழின் யாப்பிலக்கணத்தில் கூட ஒவ்வாக் காமங்களான ஒருதலைக் காமத்தையும் பொருந்தாக் காமத்தையும் கைக்கிளை-பெருந்திணை என்று பெயர் வைத்து விளக்கியிருக்கிறார்கள். மோகமுள் புதினமாகட்டும், முதல் மரியாதை படமாகட்டும் (இது முழுமையாக அந்த வகைகளில் வராது!) இதற்கென்று ஒரு மவுசு இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. ஜெயகாந்தனின் கதைகளும் பாலச்சந்தரின் படங்களும் பிரபலமானதற்குக் கூட அது ஒரு காரணம் என்பார்கள். அந்த வகையில் இந்தப் புதினம் அவ்வளவு பிரபலமானதற்கும் முதல் முறையாக ஓர் ஆங்கிலப் புதினம் இந்தியாவில் சாகித்ய அகாடமி விருது பெற்றதற்கும் அது ஒரு பலமான அடித்தளம் போல்தான் தெரிகிறது. ஆயினும், அது மட்டுமே காரணம் என்று சிறுமைப் படுத்துவதற்கில்லை.

வழி இன்னும் முடியவில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்