ஆர் கே நாராயணின் வழிகாட்டி (THE GUIDE) - 3/3


தொடர்ச்சி...

ஒரு பெண்ணுக்குப் பின்னால் கிறுக்காகி ஓட ஆரம்பித்தால் ஒருவனுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சாணக்கியரே விலாவாரியாகச் சொல்லி விட்டார். இதனால் சாம்ராஜ்யங்களே சரிந்த கதையெல்லாம் அதற்கு முன்பே நிறைய வந்து விட்டன. அதையே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு எழுத்தாளரும் தத்தம் காலத்துக்கு ஏற்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை அய்யாவும் அவருடைய காலத்துக்கு ஏற்பச் சொல்லி விட்டார். தொழிலில் முற்றிலும் ஆர்வம் இழந்து கடைப் பக்கமே வருவதை மறந்து விடுகிறான் ராஜு. இதைப் பயன் படுத்திக் கொண்டு அவன் வேலைக்கு வைத்திருந்த ஆள், கடையையே முழுசாக முழுங்கி விடுகிறான். இந்த வேலை அந்த வேலை என்றில்லை; எல்லா வேலையிலும் இது நடக்கத்தான் செய்கிறது. ஏதோவொரு விசயத்தில் கிறுக்காகி விட்டால் அதற்குக் குறுக்கே எது வந்தாலும் அதை இழக்கவும் அழிக்கவும் தயங்காததுதான் மனிதப் புத்தி. அது இந்த விசயத்தில் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்யும். எத்தனை பேருடைய வாழ்க்கை நமக்கு இந்தப் பாடத்தை நினைவு படுத்தினாலும் விழுபவர் விழுந்து கொண்டேதான் இருக்கிறார்கள். முந்தைய நாள் வரை விபரமாகப் பேசுபவர்கள் கூட மறுநாள் காலையில் இந்த விசயத்தில் எளிதில் விழுந்து விடுகிறார்கள். இது அப்படியான ஒரு விசயம். உலகம் இருக்கிறவரை இதுவும் நடந்து கொண்டேதான் இருக்கும் என்றே படுகிறது.

ரோசியின் மீதான கவர்ச்சியால் ராஜு இழக்கும் பலவற்றில் அவனுடைய அருமையான தாயும் ஒன்று. தாய்-மகன் உறவு என்பதே மிக பலமானது. அதுவும் தந்தையை இழந்து விட்ட ஒற்றை மகன் தாயோடு இருக்கும் காலங்களில் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத் தாய்களுமே தன மகனை மணம் முடித்துக் கொடுக்கும் நாளோடு மறந்து விட வேண்டும்தான் (!) என்றாலும், இப்படி இன்னொருத்தனின் மனைவியைக் கவர்ந்து வந்த மகனை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க முடியாது. தாய் மீது பெரிதாக வெறுப்பு வரவில்லை. ஆனால் இப்படிப் புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்ற கோபம் வருகிறது. அவள் பிரிந்து போகக் கூடாது என்று மனமார ஆசைப் படுகிறான். ஆனால் அதற்காக ரோசியை விட்டு விட முடியாது என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறான். தாயா தாரமா (ராஜுவின் கதையில் அப்படிக் கூடச் கொள்ள முடியாது!). என்று வருகையில் தள்ளிக் கொண்டு வந்த தாரம்தான் என்று முடிவெடுக்கிறான்.

தஞ்சாவூர்ப் பக்கமிருந்து தன் தங்கையின் மகன் செய்து கொண்டிருக்கும் அட்டூழியங்களைக் கேள்விப் பட்டுத் தட்டிக் கேட்க வருகிற தன் தாய்மாமனை என்றுமில்லாத மாதிரியாக எதிர்த்துப் பேசுகிறான்; மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறான்; இதற்கு எல்லாத்துக்கும் காரணம் இவள்தானே என்று ரோசி மீது கோபம் கொள்கின்றனர் அவர்கள். உண்மை அதுவல்ல. ரோசி மீதான அவனுடைய பித்துதான் காரணமே ஒழிய அவள் எப்படிக் காரணமாக முடியும்? அவளுக்கு வேண்டியது நாட்டியம் ஆட வசதியான சூழல் மட்டுமே. ஆட மட்டும் அனுமதி கிடைக்கும் என்றால் அது நரகமாக இருந்தால் கூட ஓகே என்றுதான் அவள் வருகிறாள். இதில் மனதை மிக ஆழமாகத் தொடுகிற ஒரு விசயம் - அவனுடைய தாய்மாமன் தன் தங்கையின் மீது வைத்திருக்கும் பாசம். அத்தனை வயதான பின்பும் தன் தங்கையைத் தன் இடத்துக்கு அழைத்துச் சென்று ராணி மாதிரி வைத்துக் காக்க முடியும் என்று அவர் பேசும் வசனங்கள் நம் மண்ணின் மணத்தை நுட்பமாகப் பதிவு செய்திருக்கின்றன. இப்போதெல்லாம் இப்படி அண்ணன்மார் யாராவது இருக்கிறார்களாப்பா!?

ரோசிக்கு எந்த வகையிலும் மார்க்கோவின் நினைவு வந்து விடக் கூடாது என்பதில் படுகவனமாக நடந்து கொள்ளும் ராஜு, மார்க்கோவிடம் இருந்து வரும் ஒரு கடிதத்தில் ரோசியின் கையெழுத்தைப் போட்டு ஒரு பித்தலாட்டம் செய்து வகையாக மாட்டிக் கொள்வான். அப்போது மார்க்கோ அவனைக் கம்பி என்ன வைத்து விடுவான். அத்தோடு ரோசிக்கும் ராஜுவுக்குமான உறவு பாடையேறி விடும். சிறைக்குச் செல்லும் ராஜு அங்கும் அவன் திருவிளையாடல்களை நிகழ்த்தி அங்கிருக்கும் சக சிறைவாசிகளின் மத்தியிலும் சிறை அலுவலர்கள் மத்தியிலும் ஒரு நாயகனாக உருவெடுத்து விடுவான். யாராக இருந்தாலும் தன்னைச் சுற்றி இருப்போருக்கு மனம் மகிழ்கிற மாதிரி நடந்து கொள்ளத் தெரிந்து விட்டால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம். அதைத்தான் ராஜு அருமையாகச் செய்வான். இந்த இடைவெளியில் எவர் இல்லாமலும் என் வண்டியை ஓட்ட முடியும் என்று நிரூபிக்கும் விதமாக ரோசி அடித்துப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பாள்.

இரண்டாண்டு காலச் சிறைத் தண்டனையை முடித்துக் கொண்டு வெளிவரும் ராஜு மால்குடிக்கு வராமல் வேறோர் ஊருக்குப் போய் இறங்குவான் (இந்தக் காட்சியில் இருந்துதான் கதை தொடங்கும். இதுவரை பேசியதெல்லாம் அவன் வேலன் என்ற கிராமவாசியிடம் சொல்வது போலவும் நினைத்துப் பார்ப்பது போலவும் வரும் காட்சிகள்!). அவனுடைய சாந்தம் நிறைந்த முகமும் அவன் மால்குடி நிலையத்தில் கடை வைத்திருந்த காலத்தில் எங்கே கிடந்த பழைய நூல்களைப் படித்து வளர்த்துக் கொண்ட அறிவும் அப்போது அவனுக்குக் கை கொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல், சிறை வாழ்க்கை யாரைச் சும்மா விட்டது?! அவனை ஒரு ஞானியாகவே ஆக்கி வழியனுப்பி வைக்கும்.

சாதாரணமான ஒரு சந்திப்பில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி வேலன் என்பவனிடம் ஏதோவொன்றைத் தத்துவார்த்தமாகச் சொல்லப் போய், அதில் அவனுக்குச் சில எதிர் பாராத நன்மைகள் கிடைத்து, அதிலிருந்து ராஜுவை ஒரு மகானாகப் பார்க்க ஆரம்பித்து விடுவான். ஊரையே அழைத்து வந்து மகானை அறிமுகப் படுத்தி வைப்பான். ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட இப்படி ஒரு வழி இருக்கிறதா என்று அந்த மரியாதையில் ஏமாந்து தன்னை ஓர் உண்மையான சாமியாராகவே உருமாற்றிக் கொள்வான் ராஜு. இது அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தம் சகல பிரச்சனைகளுக்கும் சாமியாரிடம் தீர்வு இருக்கிறது என்று நம்பி வரும் கிராமத்து மக்களின் நம்பிக்கையைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, வசமாக மாட்டிக் கொள்ளும் ராஜு, தப்ப நினைத்தாலும் முடியாத அளவுக்கு எந்நேரமும் மக்கள் சூழ்ந்த ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வான்.

பிரச்சனைகளுக்கெல்லாம் உச்ச கட்டமாக மழை பொய்த்துப் போகையில், மக்கள் அவனிடம் தீர்வு கேட்டு வருவார்கள். "பரிசுத்தமான மகான் ஒருவன் உண்ணாமல் தின்னாமல் இறைவனிடம் வேண்டி மந்திரம் ஓதினால் சாமானிய மக்களின் எந்தப் பிரச்சனையும் தீர்ந்து விடும்!" என்று முன்பொரு முறை அவனே சொன்ன வசனம் ஒன்று அவனுக்கே ஆப்பாக வந்து முடியும். "சாமி, நீங்கள் அதைச் செய்து எங்களுக்கு இந்தப் பஞ்சத்தில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுங்கள்!" என்று வந்து நிற்பார்கள். "சும்மா ஒரு பிட்டைப் போட்டேன்!" என்று சொல்லவா முடியும்?! சாமியும் செஞ்சோற்றுக் கடனுக்காக வேறு வழியில்லாமல் உண்ணாமல் தின்னாமல் விரதம் இருந்து கால் கடுக்க ஆற்று மணலில் நின்று வானத்தைப் பார்த்து வசனங்கள் சொல்லிப் பார்ப்பார். மழை மட்டும் வரவே வராது. இத்தனை நாட்களுக்குள் வந்து விடும் வந்து விடும் என்று எதிர் பார்த்து மக்கள் ஏமாறப் போகும் நிலையில், "இதோ வந்து விட்டது!" என்று சொல்லிச் சரிந்து விடுவார். அத்தோடு கதை முடியும். உண்மையிலேயே மழை வந்ததா-இல்லையா-அவர் பிழைத்தாரா-செத்தாரா என்பது தெளிவாகச் சொல்லப் படவில்லை. நாம்தான் புரிந்து கொள்ள வேண்டுமாம். நமக்கேது அந்த அளவுக்கு இருக்கிறது?!

இதில் ஒரு சாமியார் எப்படி உருவாகிறார் அல்லது உருவாக்கப் படுகிறார் என்பது மிக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கும். அவர் ஒருவழியாக எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்ட சாமியார் என்று ஆன பின்பு, அவர் இப்படியொரு விரதத்தில் இருக்கிறார் என்று தெரியும் போது சுற்றி உள்ள கிராமத்து மக்களெல்லாம் வண்டி வண்டியாகப் பார்க்க வருவார்கள். அப்படியே மெதுவாக பத்திரிகையாளர்கள் எல்லாம் வந்து குவிய ஆரம்பிப்பார்கள். இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்து சந்தித்துச் செல்வார். இப்படியாகப் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குள் அவர் புகழின் உச்சத்தையே அடைவார். இது அவருக்கு இரண்டாவது முறை. முன்பொரு முறை ரோசியை வைத்து அடைந்தவரை, இம்முறை ஓர் ஊரே சேர்ந்து அடைய வைத்து விடும். அரசாங்கமே அவருடைய உயிர் நாட்டுக்கு முக்கியம் என்று அறிக்கை விட ஆரம்பித்து விடும் அளவுக்குப் பெரிய அப்பாட்டக்கர் ஆகி விடுவார்.

பாத்திரங்களின் பெயர்கள் யோசித்து வைக்கப் பட்டிருக்கின்றன. மால்குடி போன்ற சிறுநகரத்தில் பிறந்து வளர்ந்தவன் ராஜு என்றும், கிராமத்துப் பாத்திரத்துக்கு வேலன் என்றும், நாட்டியக்காரிக்கு ரோசி என்றும் பெயரிட்டிருப்பதும், ரோசி நாட்டியத்தில் பெரிய ஆளாக உருவெடுக்க வேண்டும் என்றால் அந்தப் பெயர் ஒத்துவராது என்று முடிவு செய்து நளினி என்று மாற்றிக் கொள்வதும் கதையில் வரும் நுணுக்கமான சுவாரசியங்கள். இது ஒரு சிறு துளியே. இது போன்ற நுணுக்கங்கள் கதை முழுக்க நிறைய இருக்கின்றன.

ஏற்கனவே மால்குடி தினங்கள் (MALGUDI DAYS) படித்த போதே உறுதி செய்து கொண்டதுதான் எனினும், திரும்பவும் ஒருமுறை சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் முதன் முதலில் கதைகள் படிக்க ஆரம்பிப்போர் இவருடைய கதைகளில் ஆரம்பிப்பது நல்ல திட்டம். இந்தியச் சூழலில் சொல்லப்பட்டிருப்பது மட்டுமல்ல; இந்தியர்களுக்கு ஏற்ற மாதிரியான எளிமையான நடையும் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் வாசியுங்கள்.

வழி முடிகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்