தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 1/6

வார இதழ்களில் வரும் ஓரிரு கதைகள் தவிர்த்து முழுமையாகச் சிறுகதைகள் அடங்கிய நூல் என்று படிக்க ஆரம்பித்தது தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி ஆகியோருடையவற்றையே. பள்ளிக்கூடத்தில் படித்த நூல்களைப் போலவே அவற்றில் எவ்வளவைப் புரிந்து படித்தேன் - எவ்வளவைச் சம்பிரதாயமாகப் படித்தேன் - எவ்வளவை அவர்களுடனான உறவின் காரணமாகப் படித்தேன் என்பதெல்லாம் வேறு கதை. அவர்கள் என் உறவுக்காரர்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதுவதே கூட ஒருவிதமான அசௌகரியமாகவே இருக்கிறது. கூட்டம் சேர்ப்பதற்காகவோ நானும் அவர்களுடைய ஆள் என்று காட்டிப் பெருமைப் பட்டுக் கொள்ளவோ விருப்பம் அதிகமில்லை (எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்வது எப்போதும் உண்டு!). நானும் பேனாப் பிடித்து எழுதுகிறவன் என்று ஆன பின்பு முகவரியை வைத்து அரசியல் செய்யும் ஆளாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறேன். ஆனால், அவர்களுடைய எழுத்துக்கள் என்னை நிறையப் பாதித்திருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களின் எழுத்துக்களை விட எழுத்தாளர் என்கிற அவர்களின் அடையாளம் என் இளமைக்காலத்தை நிறையச் செதுக்கியது என்பதை என்றும் மறுக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ஊருக்கு வந்து செல்லும் போது வீட்டில் விட்டுச் செல்லும் நூல்களை அதிகம் படித்தது நானாகத்தான் இருக்கும். படிப்பதற்குப் புதிதாக எதுவும் இல்லை என்றாகிற போதெல்லாம் அவர்களுடைய நூல்களில் ஒன்றை எடுத்து வாசித்துச் செல்வது வழக்கமாகி இருந்தது.

'வாளின் தனிமை'யை இத்தோடு மூன்று முறை படித்து விட்டேன். கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறை கூடப் படித்த நினைவில்லை. எல்லாம் அதற்கு முன்பு படித்ததுதான். "கிரேன்களில் உயரும் சிலைகள்" என்று முன்னுரையில் இருந்த வரி ஒன்று முதல் முறை படித்ததில் இருந்து இன்றுவரை நினைவில் அடிக்கடி வந்து சென்று கொண்டே இருக்கிறது.  அரைக்காற் சட்டை போட்டு அலைந்து கொண்டிருந்த அன்று முதல் வேறு விதமான அரைக்காற் சட்டை போட்டுக் கொண்டு அலையும் இன்று வரை அதன் உள்ளிருக்கும் பொருள் முழுமையாகப் புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துப் பார்த்துக் கொள்கிறேன். ஓசியிலேயே படித்துப் பழகியவை என்பதால் இவர்களுடைய நூல்களை ஒருபோதும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க எண்ணம் வருவதில்லை. இம்முறை சிங்கப்பூரில் நூலகத்தில் அவருடைய பெயரோடும் அவருடைய கதைகளில் வரும் எம் கிராமியத்தை அப்படியே காட்டும் விதமான படத்தோடும் இந்த நூலைப் பார்த்தவுடன் அப்படியே அலேக்காகத் தூக்கி வந்து விட்டேன். சொந்த மண்ணை விட்டு இவ்வளவு தொலைவு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஓரிடத்தில் நம்முடைய ஆள் ஒருவருடைய நூல் இருப்பதைப் பார்த்ததும் அவர்களை நேரில் பார்த்திருந்தால் கூட வந்திராத மாதிரியான ஓர் இழுப்பை உணர்ந்து உடனடியாகக் கையில் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ்ச்செல்வன் என்றால் அவருடைய ஆளுமை இதுதான் - அவர் இப்படித்தான் என்றொரு பிம்பம் இருக்கிறதல்லவா! அது எது - எத்தகையது? அவர் ஓர் எழுத்தாளர். அப்டின்னா? கதை எழுதுவார்; கட்டுரை எழுதுவார்; அரசியல் பேசுவார்; அது மட்டுமா? எழுதுவதை விட அதிகம் செயல்படுபவர்; சமூகப் போராளி... இப்படியான ஒரு பிம்பம். அது அப்படியே இருக்கட்டும். அது வெளியுலகம் அவரைப் பற்றி வைத்திருக்கும் பிம்பம். அவரைப் பற்றி உறவுக்காரர்கள் எங்களிடம் ஒரு பிம்பம் இருக்கிறது. சொந்தபந்தம் - கலியாணம் - காதுகுத்து... இதெல்லாம் முக்கியமில்லை; அவருக்கு அவர் எழுத்து; அவர் அரசியல்; அவர் இயக்கம் இவைதான் வாழ்க்கை... இப்படியான ஒரு பிம்பம். அதுவும் கூட அப்படியே இருக்கட்டும். இவற்றையெல்லாம் விட எது முக்கியம் என்றால், அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் - தன் வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக் கட்டமைக்கிறார் என்பதை சுருக்கமாகப் பேசி விடுவது இத்தருணத்தில் மிக முக்கியமாக இருக்கிறது. அது அடியோடு தவறாகிப் போகவும் வாய்ப்பிருக்கிறது எனினும் இன்று அது பற்றிப் பேசிவிட வேண்டும் என்று உறுதியாக உணர்கிறேன்.

தான் ஓர் எழுத்தாளனா அல்லது செயலாளனா என்கிற குழப்பம் அவருடைய வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் வந்து சென்றிருக்க வேண்டும் அல்லது இன்று வரை வந்து வந்து சென்று கொண்டிருக்க வேண்டும். அவரே கூட அது பற்றிச் சில இடங்களில் பேசியிருப்பதாக நினைவு. சுந்தர ராமசாமி தன்னைப் பார்க்கும் போதெல்லாம் 'தலைவரே' என்று கிண்டல் செய்வார் என்றும் அரசியல்ப் பணிகளையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு பேசாமல் உட்கார்ந்து எழுதும் வேலையைப் பாரும் என்று அறிவுரை சொல்வார் என்றும் சுந்தர ராமசாமியின் நினைவுரையில் அவர் பேசியதாக நினைவு. அப்படியானால் இவருக்கு எது ஒத்துவரும் என்று மற்றவர்களாவது அவரைக் குழப்பியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம் குறைந்த பட்சம். எழுத்தார்வமும் சமூக அக்கறையும் ஒருங்கே கொண்ட எல்லோருக்குமே இந்தக் குழப்பம் வந்தே தீரும் என்றே எண்ணுகிறேன் (இது இருப்பவருக்கு அதுவும் இருக்க வேண்டும் என்பதோ அது இருப்பவருக்கு இதுவும் இருக்க வேண்டும் என்பதோ கட்டாயமில்லை என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றெண்ணுகிறேன்!).

தனிப்பட்ட முறையில் இதை நானும் முடிந்த அளவு உற்று நோக்கிப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். "இதைப் புரிந்து கொண்டு நீ என்ன இரும்படிக்கப் போகிறாய்?" என்கிறீர்களா? நமக்கும் கொள்கைகள்-கோட்பாடுகள்-ஆசைகள் இருக்கத்தானே செய்கின்றன. இன்றைக்கில்லாவிட்டால் என்றாவது ஒருநாள் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாமலா போய் விடப் போகிறது? 'முடியும்!' என்பதைக் காட்டுவதைத்தானே தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் வாழ்க்கை நமக்குச் செய்து கொண்டிருக்கிறது. அவர் மட்டுமல்ல; எழுதக் கூடிய-பேசக் கூடிய எல்லோரையுமே அவர்கள் பேனாவையும் வாயையும்  மூடிய பின்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று உற்றுக் கவனிக்கத் தூண்டும் கெட்ட புத்தி ஒன்று உங்களில் பலரைப் போலவே எனக்கும் ஒட்டிக் கொண்டுள்ளது. அதன் விளைவுதான் இதெல்லாம். அதன் படி பார்த்தால் அவருடைய எழுத்துக்களை விட அவருடைய வாழ்க்கையும் செயல்பாடுகளும் அதிகம் பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

"34 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 32 கதைகள் எழுதியிருக்கிறேன்!" என்று வேறோர் இடத்தில் அவர் சொல்லிப் படித்ததாகவும் நினைவு. தான் எவ்வளவு பெரிய எழுத்தாளன் என்பதை எழுதிய நூல்களின் எண்ணிக்கையில் காட்ட வேண்டும் என்கிற கணக்குகளுக்குள் மாட்டாமல் தப்பி இயங்கிக் கொண்டிருப்பது நம்மைப் போன்ற அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகும் வரலாறு. உண்மையான சமூக ஆர்வலனுக்கு 'சும்மா மூலையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருப்பது எப்படிப் பெரிய சாதனையாகும்? அத்தோடு சேர்த்து ஏதாவது களப்பணியும் செய்தால் நன்றாக இருக்குமே!' என்று தோன்ற வேண்டும் என்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். ஆனால், "எழுத்து மட்டும்தான் எனக்கு வரும்; அதை உருப்படியாகச் செய்தாலே போதும்!" என்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் சரியாகத்தான் படுகிறது. தெருக்களில் திரியும் நேரத்தில் கூட ரெண்டு நூல்களை எழுதி முடித்தால் களப்பணியை விட அதிகம் சாதிக்கும் வாய்ப்பும் ஆற்றலும் அதற்கிருக்கிறது என்று கொடுக்கப் படும் விளக்கங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கனவாகவே உள்ளன. தன்னை விடத் தன் எழுத்துக்கள் ஆற்றல் மிக்கவை என்று எண்ணுபவர்கள் அப்படியே இருந்து விடுவதே நல்லது. அந்த வகையில் தமிழ்ச்செல்வன் போன்று களப் பணியில் இறங்குபவர்கள், ஒன்றை இழந்து மற்றொன்றைத் தேர்ந்தெடுத்து இருப்பவர்கள். அல்லது, தன் பெரிய பலம் எது என்று அறிந்து அதற்கேற்ற படி வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்டவர்கள்.

அவர் இப்படி இயக்க வேலைகளில் அதிகம் ஈடுபட்டதால் நாம் இழந்த சிறுகதைகளின் எண்ணிக்கை என்னவென்று தெரியவில்லை. எழுதியிருப்பவை அனைத்தும் ஒரே நூலுக்குள் அடங்கி உள்ளன. அந்த நூலுக்குள் இருக்கும் அவருடைய கதைகளில் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்தால், கரிசல் மண்ணின் கிராமம் நிறைய இருக்கிறது (அவருடைய இளமைக் காலத்து மேட்டுப்பட்டி நிறைய இருக்கிறது!); அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயமும் தீப்பெட்டிக் கம்பெனிகளும் பட்டாசுத் தொழிற்சாலைகளும் நிறைய இருக்கிறது; ஆண்-பெண் உறவின் நுட்பங்கள் இருக்கின்றன; நூலின் அட்டையில் சொல்லப் பட்டிருப்பது போல, பெண்களின் உலகமும் குழந்தைகளின் உலகமும் அவருடைய உலகில் சரியான இடம் பிடித்து சம்மணம் போட்டு அமர்ந்திருக்கின்றன; சாதியத்துக்கு எதிரான இடதுசாரிச் சிந்தனை இருக்கிறது; அவருடைய பட்டாளத்து வாழ்க்கையனுபவம் இருக்கிறது; அவருடைய தபால் நிலைய வாழ்க்கையனுபவம் இருக்கிறது; அவருடைய அறிவொளி இயக்க அனுபவம் இருக்கிறது; இது போக இதர சில 'இன்ன பிற'க்களும் இருக்கின்றன.

தமிழ்ச்செல்வன் என்ற எழுத்தாளர் வெளியில் நன்றாக அறியப்பட்டது எப்போதிருந்து? எனக்கு விபரம் தெரிந்த வகையில், பூ படம் வெளி வந்த பின்புதான் சாமானியர்களிடமும் அவரைப் பற்றி எளிதில் அடையாளம் சொல்லிப் பேச முடிந்தது. அதற்குச் சற்று முன்பே 'வெயில்' வந்திருந்ததால் 'வெயிலோடு போய்' என்ற பெயரை விட்டு விட்டு 'பூ' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள். இப்படிப் பெயரை மாற்றுவதில் (எழுத்தாளர்கள் பெயரை மாற்றிக் கொள்வதும் இதில் அடங்கும்!) எனக்கு எப்போதுமே ஓர் ஒவ்வாமை உண்டு. ஆனால், வெயில் கதை உருவாவதற்குப் பல ஆண்டுகள் முன்னால் உருவான இந்தக் கதையை எளிதில் யாரும் 'அதைப் பார்த்து எடுத்திருக்கிறார்கள்!' என்று சொல்லிவிடக் கூடாது என்ற சாக்கிரதை உணர்வோடு செய்திருக்கிறார்கள். ஆனால், 'வெயிலோடு போய்' என்ற பெயரையே வைத்திருந்தால்தான் அந்தக் கதைக்கான மற்றும் அதன் படைப்பாளிக்கான முழு அங்கீகாரம் அல்லது கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்பது என் எண்ணம். அந்தப் படம் எடுக்கத் தொடங்கும் முன்பே, அந்தக் கதையைப் படமாக்கும் நாள்தான் தான் சினிமாவுக்கு வந்ததற்கான - இயக்குனரானதற்கான காரணமே நிறைவடைந்ததாகத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று இயக்குனர் சசி சொன்ன நாள் முதல் அந்தக் கதையைத் தனியாக மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன அளவுக்கு அந்தக் கதை இருக்கிறது என்றாலும், தனிப்பட்ட முறையில் காதல் உணர்வுகளால் கசக்கப் பட்ட அனுபவம் எல்லாம் ஏதும் இல்லாத ஒரு வீணாப்போன டிக்கெட் நான் என்பதால், அதை விடப் பல கதைகள் ஓங்கி அறைந்தது போல உணர்கிறேன்.

திரைப்படங்கள் ஆனாலும் சரி, கதைகளானாலும் சரி, அவற்றைப் பார்த்து / படித்து முடித்த மறுநாள் கேட்டாலே கதை மறந்து போய்விடும். நினைவு வைத்திருந்து பேசும் அளவுக்கு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் என் வாழ்வில் இன்னும் வரவில்லை. வராமலே போகவும் செய்யலாம். "நம் எவரின் எழுத்துக்களையும்விட வாழ்க்கை நுட்பமானதாகவும் புதிர்கள், எதிர்பாராத்திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது" என்கிற அவரின் முன்னுரை வரியே அதற்குப் பதிலாக இருக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் மறக்கக் கூடாத பல விசயங்களையே வாரங்களிலோ வருடங்களிலோ மறந்து விடுகிறோம். இதில் கதைகளைப் படிப்பதும் அவற்றைப் பற்றிப் பேசுவதற்காக நினைவு வைத்துக் கொண்டு திரிவதும் பெரிய ஆடம்பரமாகத் தெரிகிறதப்பா எனக்கு.  இதுவரை படித்திருக்கும் சொற்பச் சிறுகதைகளில் எந்தக் கதையின் கருவும் இன்றுவரை நினைவில் இல்லை. ஆகவே இந்த நூலில் படித்த கதைகளும் அடுத்த வாரம் இதே நாள் கேட்டால் கூட முழுக்க மறந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. சில கதைகளில் சில வரிகள் நினைவிருப்பதுண்டு. 'கிரேன்களில் உயரும் சிலைகள்' போல "சுப்பையாவின் வாள் 'கிர் கிர்' என்றது" என்கிற வரி அடிக்கடி நினைவுக்கு வரும்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், மொத்தப் புத்தகத்திலும் 'வார்த்தை' என்கிற சிறுகதைதான் மனதை மிகப் பெரும் அளவில் வாட்டி எடுத்ததாக இருந்தது. அந்தக் கதை எனக்குக் குறிப்பாகப் பிடித்ததன் காரணம், நான் இதுவரை ஏற்றுக் கொண்ட மற்ற எல்லாப் பாத்திரங்களையும் விடத் தந்தை என்ற பாத்திரத்தில்தான் எல்லா வகையிலும் உயர்ந்த - முற்றிலும் பொறுப்பான ஓர் ஆளாக இருக்கிறேன் என்பதாகக் கூட இருக்கலாம். அப்படி ஆனதற்குப் பின்னணியில் இருக்கும் என் வாழ்க்கையனுபவங்கள் கூட ஒரு காரணமாயிருக்கலாம். எந்தப் படைப்பிலும் பிடிப்பது-பிடிக்காதது எல்லாமே தீர்மானிக்கப் படுவது நம் சொந்தக் கதையையும் அவற்றின் பின்னணிகளையும் வைத்துத்தானே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிது சொந்தக் கதையும் பேசி விடுகிறேன்.

தொடரும்...

கருத்துகள்

 1. உங்கள் எழுத்தின் வேகம் கட்டுப்பாடற்று செலவதாக உணர்கிறேன்.கருத்தை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா, நல்ல பின்னூட்டம். நன்றி. இரண்டு-மூன்று முறை வாசித்துப் பார்த்து எங்கே கோளாறு என்று புரிந்து கொண்டு அடுத்த சில இடுகைகளில் சரி செய்ய முயல்கிறேன். அதன் பின்பு எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள். திருந்தினால் நல்லது. இல்லையேல் நாய் வால் என்று விட்டு விடுங்கள். :)

   நீக்கு
 2. பாரதி..உன் கட்டுரை வாசிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.என் வாழ்க்கையில் எல்லாமே நானே தேர்வு செய்து கொண்டதல்ல.எல்லார் வாழ்க்கையும் அப்படித்தான்.என்றாலும் சில முடிவுகளை நான் துணிச்சலாக எடுத்தேன்.35000 சம்பளம் தரும் வேலையை ஒருநாள் தூக்கி எறிந்தேன்.எழுதவேண்டும் என்பதற்காக.ஆனால் வாழ்க்கை எழுதுவதைவிட வேறு சில முக்கியமான பணிகள் இருப்பதாகத் திசை மாற்றி விட்டது.ஒன்றும் வருத்தமில்லை.செய்கிற வேலை எதுவானாலும் அதில் கரைந்து வேலை செய்ய வேண்டும்.விரும்பி ஏற்று வேலை செய்ய வேண்டும் என நினைப்பேன்.களத்தில் கற்றதை எழுத உட்காரத்தான் வேண்டும்.ஓடும் வரை ஓடலாம்.ஓட முடியாதபோது எழுதலாம்.சமீபத்தில் மறைந்த நீல் ஆம்ஸ்ட்யராங் சொன்ன ஒரு வாசகம் எனக்குப் பிடித்திருந்தது “ மனித வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுடைய இதயமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் துடிக்கும்.நான் ஒரு துடிப்பைக்கூட வீணாக்க விரும்பவில்லை.”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சித்தப்பா,

   உங்கள் கருத்துரை கண்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு கருத்தும் இந்த இடத்தில் கண்டிப்பாகச் சொல்லியிருக்க வேண்டியதுதான். இது போன்ற இடங்களில்தான் அவற்றைச் சொல்ல வேண்டியதே இருக்கிறது, இல்லையா?! :)

   இதைத் தொடராக எழுதிக் கொண்டிருக்கிறேன். குறைந்த பட்சம் மூன்று பாகங்களாவது வரும் என்று எண்ணுகிறேன். இயன்றால் வந்து வாசித்துச் செல்லுங்கள். கருத்துரை அளிக்கும் அளவுக்கு நேரம் இல்லா விட்டாலும் கூட. மிக்க நன்றி!

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!