ஆர் கே நாராயணின் வழிகாட்டி (THE GUIDE) - 2/3
தொடர்ச்சி...
பிரச்சனை எங்கே தொடங்குகிறது? அல்லது, அதன் பின்னணி என்ன? கையில் நிறையக் காசையும் மண்டையில் நிறைய சரக்கையும் வைத்திருக்கும் ஆராய்ச்சியாளனான மார்க்கோ, அவனுக்கேற்ற மாதிரியான ஒரு பெண்ணைத் தேடாமல் அழகைத் தேடித் போய் ரோசியை மணக்கிறான். பணமும் படிப்பும் வைத்திருக்கும் ஆண்கள் அழகு மட்டும் இருந்தால் போதும் என்று தனக்கு எவ்விதத்திலும் ஒத்து வராத பெண்ணிடம் போய் விழுவதும், அழகை வைத்திருக்கும் பெண்கள் அல்லது பெண் வீட்டுக்காரர்கள் பணம் மட்டும் இருந்தால் போதும் என்று தமக்கு எந்த வகையிலும் ஒத்து வராத ஆணிடமும் போய் விழுவதும், அப்படிப்பட்ட உறவுகள் பெரும்பாலான நேரங்களில் வேறு வழியில்லாமல் வாழ்ந்து மடிவதும், சில நேரங்களில் மணவாழ்க்கை சிதைந்து சின்னாபின்னப் படுவதும் நீண்ட காலமாகவே நடந்து வரும் இயல்பான ஒன்றுதான். இது நாராயண் காலத்திலேயே நடந்திருக்கிறது என்பது இந்த நூலைப் படித்த பின்பு புரிகிறது. மார்க்கோ மூளையை மட்டும் மூலதனமாகக் கொண்டு வாழ்பவன். அவன் பெண் எடுத்த இடம் - தேவதாசிக் குடும்பம். உடலையும் அழகையும் கலையையும் மூலதனமாகக் கொண்டு வாழ்பவர்கள். தன் ஒரு கை செய்கிற வேலை இன்னொரு கைக்குத் தெரியாத மாதிரியான கமுக்கமான வேலை அவனுடைய வேலை. பொது இடங்களில் தினம் ஒரு கூட்டம் என்று புதிது புதிதான சம்பந்தமில்லாத மனிதர்களின் கண் குளிருமளவுக்குக் கலையை அரங்கேற்றி அதில் வாங்கும் கைத்தட்டல்களிலும் பாராட்டுகளிலும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் வேலை அவளுடையது. இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்து வாரிக் கட்ட முடியும்?
நடனத்தையே உயிராகக் கொண்ட ரோசி, மார்க்கோவை மணந்து கொண்ட பின்பு அதை அப்படியே மறக்க வேண்டும். அதுதான் திருமணத்துக்கு முன்பு போட்ட உடன்படிக்கை. இப்படியொரு மாப்பிள்ளை நம் வீட்டில் வந்து பெண் எடுப்பது கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியாத அதிசயம்; அதற்காக எதையும் இழக்கலாம் என்று சுற்றத்தார் எல்லோரும் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அதன்படி வாழ முடியவில்லை அவளால். கலையின் மீதான காதல் அவ்வளவு எளிதில் அழித்து விட முடிந்ததல்லவே. அது மட்டுமல்ல, இப்படி உடன்படிக்கையோடு நடந்த எந்தத் திருமணத்திலும் அந்த உடன்படிக்கை கடைசிவரை கடைபிடிக்கப் படுவதும் இல்லை. அதெல்லாம் ஒரு மன திருப்திக்குப் பேசிக் கொள்ளலாம். அதன் படியே வாழ வேண்டும் என்றெல்லாம் எதிர் பார்ப்பது பைத்தியக்காரத்தனம். திருமணத்துக்கு முன்பு ஓர் ஆண் பெண்ணுக்கு மகானாகத் தெரிவதும் ஒரு பெண் ஆணுக்கு தேவதையாகத் தெரிவதும் இயல்பான ஒன்று. அந்த மரியாதை கண்ணை மூடி முழிப்பதற்குள் பஞ்சாய்ப் பறந்து விடும். பெருந்தலைவன்-மாமேதை-உலகமகா ஞானி என எவரைக் கட்டிய பெண்ணுக்கும் அது நேரும். அது போலவே பேரழகி-உலகையே உறங்க விடாமல் செய்த கனவுக்கன்னி-கலையரசி என்று எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நாயாய்ச் சுற்றிச் சுற்றி வந்து அத்தனையையும் இழந்து கட்டிக் கொண்டு வருகிற ஆணுக்கும் அது நேரும்.
தான் உண்டு தன் ஆராய்ச்சி உண்டு என்று வாழும் மார்க்கோவைப் போன்ற ஒருவனுடன் வாழ வேண்டும் என்றால், ஒன்று அவளும் அப்படிப்பட்ட ஆர்வங்கள் கொண்டவளாக இருக்க வேண்டும். அல்லது, கண்கண்ட தெய்வத்தையும் கண் காணாத தெய்வத்தையும் மட்டும் நாளைக்கு நான்கு முறை வணங்கி விட்டு மூன்று முறை சோறு பொங்கிப் போட்டு இதர எடுபிடி வேலைகள் அனைத்தையும் இரவுக்குள் செய்து முடித்துப் பின் தூங்கி முன்னெழும் கற்காலப் பெண்ணாக இருக்க வேண்டும். ரோசி அந்த இரண்டு வகையுமல்ல. அவளுக்கென்று ஒரு வாழ்க்கை கற்பனை பண்ணி வைத்திருந்தவள். அது மார்க்கோவுடன் இணைந்தால் கிடைக்காது என்று திருமணத்துக்கு முன்பே சரியாக உணரவில்லை. சரி ஆனது ஆகி விட்டது; ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று அப்படியே மிச்ச வாழ்க்கையையும் அரைமனதோடு ஓட்டி விட்டாலும் எந்தத் தொல்லையும் இல்லாமல் பிழைப்பு ஓடி விடும். ராஜு மாதிரி ஒருத்தன் வந்து உள்ளே நுழைகிற போதுதான் சிக்கல் அதிகமாகும். ஒரு பெண் விரும்பும் வாழ்க்கையை அவள் கணவனிடம் பெற முடியாத போது அதைக் கொடுக்கிற மாதிரி வருகிறவர்கள்தான் ராஜுக்கள். ஆணோ பெண்ணோ யாருமே தான் விரும்பிய படியெல்லாம் கனவு வாழ்க்கை வாழ முடியாது. அந்த நிதர்சனம் புரியாத பேதைகளை இப்படி எங்கிருந்தோ வருகிறவர்கள் ஏமாற்றிக் கவர்வது மிக எளிதான ஒன்று. அவர்கள் தனக்கு அளிக்கப் போவதாகச் சொல்லி ஏமாற்றியது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். பெண்களைக் கவர்வதற்காகவே ஆண்கள் பழகி வைத்துக் கொள்ளும் கலைகள் இவை என்பது இந்த உலகம் இருக்கும் வரை எந்தப் பெண்ணுக்கும் புரிபடவே புரிபடாது போலும் (ஆண்களிலும் இந்த வகை இருக்கிறார்கள் - "நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி!" என்று பேச்சு மட்டும் வாய் கிழியப் பேசிவிட்டு மிகச் சரியாக ஏமாறக் கூடாத நேரத்தில் ஏமாந்து தொலைபவர்கள்!). பக்கத்து வீட்டில் நடக்கிற போது பார்த்துச் சிறப்பாக வியாக்கியானம் பேசுகிறவர்கள் கூட, தனக்கு நடக்கும் போது பெரும்பாலும் விழுந்து விடுவார்கள். யாராக இருந்தாலும் அவர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு பாய்ந்து நிவர்த்தி செய்து விட்டால், அதன் பின்பு ஆக வேண்டிய காரியம் தானாக ஆகிவிடும்தானே.
அப்படித்தான் ராஜு நுழைகிறான். வலது மூளை-இடது மூளை என்று சொல்வார்களே. அதுதான். மார்க்கோ ஆராய்ச்சியும் வரலாறும் தன் ஆர்வம் என்று முடிவு செய்து கொண்டு வெள்ளைத் தாள்களில் கிறுக்கித் தள்ளிக் கொண்டிருப்பான். ரோசியோ கலை-நடனம்-பாம்பாட்டம் என்று கிறுக்காய்த் திரிவாள். இயல்பாகவே இவை இரண்டும் வெவ்வேறு துருவங்கள். ஒன்றை விரும்புபவர் இன்னொன்றை விரும்புவது மிக அபூர்வம். ஒருபுறம் மார்க்கோ அவளுடைய நடனத்தைக் குரங்குச் சேட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கையில், "தேவதை போல் உன்னை வைத்துக் காப்பாற்றுவேன். இந்தக் குரங்கிடம் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கிறாயே!" என்று வந்து ஆரம்பிப்பான் ராஜு. உண்மையாகவே கூட அப்படி உணரத்தான் செய்வான். அதெல்லாம் அவள் மீது ஏற்படுகிற ஆரம்பக் கவர்ச்சியில் தோன்றுவது. அதே ராஜு தனக்கு வேண்டியது ஆனபின் எப்படி மார்க்கோவை விடக் கேவலமான ஒரு வாழ்க்கையை அவளுக்குக் கொடுக்கிறான் என்பதுதான் கதையில் ஒளிந்திருக்கும் முக்கியமான கருத்து. "MEN USE LOVE FOR SEX AND WOMEN USE SEX FOR LOVE" என்கிற வாசகம் எனக்கு எப்போதும் மறக்காத இளமைக் காலத்து வாசகம். அதைத்தான் ராஜுவும் ரோசியும் செய்து கொள்வார்கள்.
ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு காட்சி அந்தப் படத்தையே முழுமையாக மறந்து விட்ட பின்பும் மனசில் நிற்கும். அது கதைகளுக்கும் உண்டு. இந்தக் கதையில் அப்படியான ஒரு காட்சி என்றால், முதல் முறை அவள் தங்கி இருக்கும் அறைக்குள் புகுந்து அவன் தாழ்ப்பாளைப் போட்டு விடும் காட்சி. அதை மிக எளிமையாக, சொற்களில் கண்ணியம் தவறாமல், ஆனால் மனதை விட்டு நீங்காத மாதிரி சிறப்பாக எழுதியிருப்பார். அத்தோடு முடிந்து விடும். அதுவே பயங்கர 'கிக்'காக இருக்கும். அதுவே வேறு சிலராக இருந்தால் (யார் என்று கேட்காதீர்கள்!) ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு நீலப் படம் போல நீளமாக விளக்கித் தள்ளியிருப்பார்கள். அங்குதான் இருக்கிறது தரமான எழுத்தாளர்களுக்கும் தறுதலை எழுத்தாளர்களுக்குமான வேறுபாடு. எல்லாத்தையும் சொல்லித்தான் விளக்க வேண்டும் என்பதில்லை அல்லவா!
ஒரு பெண்ணின் உளவியலை மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கும் ஆசிரியரை எப்படி விட்டு வைத்தார்கள் எம் பெண்ணியவாதிகள் என்று எண்ணிக் கொண்டே வாசித்து வந்தேன். ஆனால், அத்தனையையும் சொல்லிவிட்டு, இறுதியில் மார்க்கோவும் இல்லாமல் ராஜுவும் இல்லாமல் தன் சொந்தக் காலில் நின்றே எல்லாத்தையும் தாங்க ஆரம்பித்து விடுகிற மாதிரி ரோசியைக் காட்டுவதன் மூலம் பெண்ணியவாதிகளைப் பின்வாங்க வைத்து விடுகிறார். பெண்களை பலமானவர்களாகக் காட்டுவது எப்போதுமே பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தரும் ஒரு உத்திதான். அதை உத்தியாகச் செய்தாரா (அப்படியும் ஒரு கூட்டம் இருக்கிறது!) அல்லது அதுதான் உண்மை என்று சொல்கிறாரா என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை உண்மையிலும் உடன் ஓர் ஆண்மகன் இருக்கும் வரைதான் அவர்கள் ஏதோ சார்ந்து வாழ்வது போலவே காட்டிக் கொள்வார்கள். தானேதான் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று வந்து விட்டால் அவர்கள் வேகத்துக்கு யாரும் குறுக்கே வரமுடியாது. பெண்ணின் உளவியல் மட்டுமல்ல, ஆண்-பெண் உறவில் ஆணின் உளவியலும் மிகச் சிறப்பாக அலசப் பட்டிருக்கும்.
தன் மனைவியைத் தட்டிச் சென்று தன் மானத்தையே வாங்கியவன் என்றும் பாராமல் தன் நூல் வெளிவரும்போது, தன் ஆராய்ச்சிகளுக்கு உதவியாக குகைகள் அனைத்துக்கும் அழைத்துச் சென்றவன் என்ற ஒரே காரணத்துக்காக ராஜுவுக்கு அந்த நூலில் நன்றியும் சொல்லி அதில் ஒரு பிரதியை அவனுக்கு அனுப்பியும் வைக்கும் மார்க்கோவின் நேர்மை மிகவும் பிடித்திருந்தது. பொதுவாகவே மாற்றான் மனைவியைக் கவர்ந்து விட்டவனை வில்லனாகப் பார்ப்போர் ஒருபுறம் என்றால் அப்படிப் பட்டோரை நாயகனாகப் பார்ப்போரும் ஒருபுறம் உள்ளனர். இதில் மனைவியைப் பறிகொடுத்து விட்டு விழிக்கும் மார்க்கோ போன்ற கனவான்கள் கோமாளிகளாகத்தான் பார்க்கப் படுவார்கள் - சித்தரிக்கப் படுவார்கள். அவன் எதனால் தன் மனைவியை இழக்க நேரிடுகிறது என்று சொல்லும் அதே வேளையில் அவன் சாதாரணப் பட்ட ஆளில்லை என்பதையும் சொல்லத் தவறவில்லை ஆசிரியர்.
ரோசியும் மிக அற்புதமாக விளக்கப் பட்டிருப்பாள். அவளுடைய குழப்பங்கள் அனைத்தையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார் ஆசிரியர். தான் உயிரென நினைக்கும் ஒன்றை மதிக்காத தன் கணவனை விட தான் எதை விரும்பினாலும் அதற்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்து உடனிருப்பதாகச் சொல்லிக் கொண்டு பின்னால் சுற்றுபவன் எவ்வளவோ மேல் என்று முடிவுக்கு வருகையிலும் சரி, அவன் வலையில் விழுந்து எல்லாம் முடிந்து விட்ட பின்பும் தன் பழைய கணவனைப் பற்றிய ஆசைகளும் நினைவுகளும் வருகையிலும் சரி, இன்னொருவனோடு தகாத உறவை வளர்த்துக் கொண்டு அவன் முன்பே கணவனுக்குப் பாய்ந்து பாய்ந்து பணிவிடை செய்கையிலும் சரி, தன் கணவன் ஒரு வெற்றியாளனாக வெளிப்படுகையில் அவனோடு இருக்க முடியவில்லையே என்று ஏங்குகையிலும் சரி, திரும்பவும் அவனிடமே போய்க் காலில் விழுந்தாவது இணைந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகையிலும் சரி, ராஜுவின் திருட்டுத்தனங்கள் அனைத்தும் தெரிந்த பின்னும்-அவனோடு வாழ முடியாது என்று முடிவான பின்னும் அவனுக்குச் செய்ய வேண்டிய நன்றிக் கடனாக அவனைச் சட்டச் சிக்கல்களில் இருந்து விடுவிக்காமல் போக மாட்டேன் என்று சொல்கையிலும் சரி, ரோசியை மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
கலைத்துறையில் இருக்கும் பெண்களுக்கே உரித்தான சாபக்கேடு அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது போய்விடுவதுதான். காலையில் கட்டிலை விட்டு எழுவது முதல் இரவு வந்து சாயும் வரை செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் தீர்மானிப்பது வேறு யாராகவோ இருக்கும். தன் கலைப் பசிக்குத் தீனி போடலாம் என்று களத்துள் குதிக்கும் ரோசிக்கு அது தவிர எல்லாமே நடக்கும். ராஜுவின் வேறு பல பசிகளுக்குத்தான் இதில் அளவிலாத தீனி கிடைக்கும். அவளைக் கூண்டுக்கிளி போல அடைத்து வைத்துப் பணமும் புகழும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். அவளுடைய வேலை, அவன் சொல்லுகிற இடத்தில் சலங்கையைக் கட்டி ஆட்டம் போடுவது மட்டும்தான் என்று ஆகி விடும். அதில் வரும் அத்தனையையும் பயன்படுத்தி அரசியல்வாதிகள், காவற் துறையினர், வக்கீல்கள், ஊரில் இருக்கும் பெரிய மனுசன்கள் என்று எல்லோரையும் தன் வட்டத்துக்குள் கொண்டு வர ஆரம்பிப்பான் ராஜு. அவர்களும் அந்தக் காலத்திலேயே பசை இருக்கிற இடத்தில் ஒட்டிக் கொள்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். கடைசியில் இவன் தவறு செய்து மாட்டிக் கொள்ளும் போது அவனுடைய காவற் துறை நண்பர்கள் நைசாக விலகிச் செல்வதும் பழைய பழக்கம் என்பது வியப்பாக இருக்கிறது. அப்படியானால், அவர்களுக்கு வாங்கி ஊற்றும் சரக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கும் இதர பொழுதுபோக்குகளும் வேஸ்ட்தானா? எல்லாமே ஒரு அளவுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சனையில்லை. மிஞ்சினால் நஞ்சுதான். இதில் போகிற போக்கில் அரசியல்வாதிகள் அந்தக் காலத்திலேயே ஒரு மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதும் சொல்லப் படுகிறது.
வழி இன்னும் முடியவில்லை...

கருத்துகள்
கருத்துரையிடுக