கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 11/12
மட்பாண்டன்களோடு... மகளுடன்... |
தொடரும் வியப்புகள்...
கோணங்கி இலண்டன் பயணம் முடித்து வந்து அந்த அருங்காட்சியகத்தின் பிரம்மாண்டம் பற்றி சிலாகித்துச் சொன்ன நினைவு அரைகுறையாக இருக்கிறது. அது அருங்காட்சியகமா நூலகமா இரண்டுமா என்று தெளிவாக நினைவில்லை. உண்மையாகவே பயங்கரப் பிரம்மாண்டம்தான். எவ்வளவோ பொருட்கள் - சாமான்கள். எல்லோருடைய கலாச்சாரத்தையும் நாங்கள்தான் காப்போம் என்று பிடிவாதமாக வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் பெரும் கற்சிலைகள், மட்பாண்டங்கள், மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள், ஓவியங்கள், எகிப்திய மம்மிகள், எலும்புக் கூடுகள், இறந்து புதைக்கப் பட்ட மனிதனின் எலும்புத் துண்டுகள் என்று அத்தனையும் அடக்கம். அதில் வெள்ளையர்கள் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற வைர கிரீடமும் இருக்குமா என்று தேடித் பார்த்துப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன் - அது வேறு ஏதோவோர் இடத்தில் வைக்கப் பட்டிருக்கிறது என்று.
அருங்காட்சியகம் பற்றி எழுதுவதை விட அங்கு எடுத்த படங்களைப் போடுவதே அதிகம்அழகாய் இருக்கும் என்பதால் இந்தப் பாகத்தில், கையில் இருக்கும் படங்கள் சிலவற்றைப் போட்டு ஒப்பேத்தி விடலாம் என நினைக்கிறேன்.
விகாரமான விலங்குத் தலை மனிதச் சிலைகளோடு மனைவி... |
பல வகையான ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. பல வகை என்றால்? எனக்குத் தெரிந்து இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, காண்பதை அப்படியே தத்ரூபமாக வரைதல். அது மனிதர்கள் தோற்றத்தால் எப்படி இருந்தார்கள் - எத்தகைய உடை அணிந்தார்கள் - அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தன - அவர்கள் வாழ்ந்த சூழல் எப்படி இருந்தது - அதாவது அவர்களுடைய கட்டடக் கலை, தெருக்கள், கிராம/நகர அமைப்புகள் எப்படி இருந்தன - ஓரளவுக்கு அவர்களுடைய பண்பாடு எத்தகையது என்பனவற்றை அறிந்து கொள்ள உதவுபவை. இந்தப் படம் அப்படியான ஒன்று என்று நினைக்கிறேன். பழைய கிரேக்கர்களினுடையதைப் போல் இருக்கிறது ("ஈஸ்ட்மென்ட் கலர் என்றாலே அது கிரேக்கர்கள்தானா?!" என்கிறீர்களா?). படத்தில் இருக்கும் பெண்ணை வைத்துச் சொல்வதானால், குறைந்த பட்சம் ஏதோவோர் ஐரோப்பியக் கூட்டம் பற்றியதாகவாவது இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் கிழக்கு என்றாலே இந்தியா-சீனா என்பது போல், மேற்கு என்றாலே கிரேக்கம்தானே! :)
ஓவியத்தின் முன் ஓவியங்கள்! |
இது இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்றதாக இருக்க வேண்டும் |
பல பயமுறுத்தும் ஐட்டங்களும் இருந்தன. இறந்த மனிதனின் எலும்புகளைப் பொருக்கி ஒரு தினுசாக அடுக்கி வைத்திருந்தார்கள். இன்னும் ஐம்பது-அறுபது வருடங்கள் கழித்து நம்ம கதையும் இதுதான் என்று மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துவதாக இருந்தது. சிலருக்கு இவற்றையெல்லாம் பார்த்தால் சின்ன வயதில் கேள்விப் பட்ட சில பேய்க் கதைகள் நினைவுக்கு வரலாம். அதுவே மனித குல ஆராய்ச்சியாளர்களுக்கு இது வேறு பல வகைகளில் பயன்படும் என நினைக்கிறேன். எந்தப் பகுதியைச் சேர்ந்த எலும்பு என்பதைப் பொருத்து, ஒவ்வொரு எலும்பின் நீள-அகலங்கள் கூட மனித குலத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும் அறிவியல் ரீதியாக அவற்றை எதிர் காலத்துக்குப் பயன் படுத்திக் கொள்ளவும் உதவலாம். குரங்கிலிருந்து மனிதனானவன் அடுத்து என்ன ஆவான் என்று கணக்குப் போடவோ குரங்குக்கும் மனிதனுக்கும் எந்த உறவும் இல்லை என்று நிரூபிக்கவோ உதவலாம்.
இந்தப் படம்தான் பார்த்ததிலேயே பயங்கரம். இது எரிக்கப் பட்ட மனிதனுடையதாகவோ புதைக்கப் பட்ட மனிதனுடையதாகவோ இருக்க வாய்ப்பில்லை. மேலே மண் விழாத படி ஏதோவொரு தாழி மாதிரியான அமைப்பினுள் வைத்து அப்படியே மூடி விடப் பட்ட ஒரு பிணத்தை அப்படியே அலேக்காகத் தூக்கிவந்து வைத்திருக்க வேண்டும். இந்தத் தாழி விவகாரத்தில் நமக்குக் கொஞ்சம் முன்னனுபவம் இருப்பதால் இது கூடுதல் கவன ஈர்ப்பு செய்தது. தென் தமிழகத்தில் திருநெல்வேலி அருகில் ஆதிச்சநல்லூரில் அடிக்கடி இது போல ஏதோவொன்றைத் தோண்டி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அது போலவே எங்கள் ஊர் நாகலாபுரத்திலும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு ஒரு முறை அவ்வப்போது ஒரு தாழி சிக்கும். உழுது கொண்டிருக்கும் விவசாயி ஏதோ ஒன்று ஏர்க்கலப்பையை இடிக்கிறதே என்று பார்ப்பார். உள்ளே ஒரு பெரிய தாழி இருக்கும். அதைத் தோண்டி எடுத்துப் பார்த்தால் உள்ளே எலும்புகளும் படத்தில் காட்டப் பட்டுள்ளது போல வேறு பல சாமான்களும் கிடக்கும். உடனே அகழ்வாராய்ச்சியாளர்கள் வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போவார்கள். அதன் பெயர் முதுமக்கள் தாழி என்று கதைகளும் சொல்லிச் செல்வார்கள். இதைப் பார்த்த போது அந்த நினைவுதான் வந்தது.
குழந்தை மம்மியாக இருக்க வேண்டும்! |
அண்ணல் நோக்கினார்... அவள் வேறெங்கோ நோக்கினாள்! |
அடுத்த பாகத்தில் மொத்தமாக வீடு திரும்பி விடலாம்.
வியப்புகள் ..விந்தை....அருமையான பதிவு
பதிலளிநீக்கு@கோவை நேரம், நன்றி, நண்பரே!
பதிலளிநீக்கு