ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 1/4

தமிழின் தலைசிறந்த சிறுகதை-புதின எழுத்தாளர் என்றால் அது ஜெயகாந்தன் அவர்கள்தான் என்பது பெரும்பான்மை இலக்கியவாதிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட ஒன்று. வாசகராகவோ எழுத்தாளராகவோ தமிழ் இலக்கிய உலகுக்குள் நுழைய விரும்பும் எவரும் முதலில் படிக்க வேண்டியது அவருடைய எழுத்துக்களைத்தான். அப்படித்தான் நானும் அவரைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் அவருடைய கதைகள் அனைத்தையும் முடித்து விட்டு பின்னர் மற்றவர்களைப் படிக்கலாம் என்று திட்டம். ஞான பீட விருதுக்குப் பிந்தைய அவருடைய வாழ்க்கையில் சில வேண்டாத சர்ச்சைகளும் வந்து சென்று விட்டன. ஆனால் அவர் சர்ச்சைகளுக்குப் பழக்கப் படாதவர் அல்லர். அவர் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு உள்ளானவர். சர்ச்சைக்குரிய சமாச்சாரங்களை பயமின்றிப் பேசியதால்தான் கொடி கட்டிப் பறந்தார் என்றும் சொல்வார்கள். அப்படியான ஒரு கதைதான் இதுவும்.

கல்லூரிக் காலத்திலேயே அவருடனான பரிச்சயம் ஆரம்பித்து விட்டது. எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதலாண்டு இளங்கலை தமிழ்ப் பாடத்திட்டத்தில் "ஜெயகாந்தன் முன்னுரைகள்" என்ற நூல் இடம் பெற்றிருந்தது. அப்போதே அவர் பற்றியும் அவருடைய சர்ச்சைக்குரிய எழுத்துகள் பற்றியும் நிறையப் படித்துப் பேசி ஆராய்ந்து விட்டோம். அப்போதே அவருடைய முன்னுரைகளில் இருந்த பல பத்திகளை என் நாட்குறிப்பிலும் மனதிலும் ஏற்றி வைத்திருந்தேன். இந்த நூலின் முன்னுரையில் உள்ள கீழ்வரும் பத்தி அப்படிப் பதிந்து வைத்த ஒன்று.

"வாழ்க்கையின் முழு அர்த்தத்தோடு வாழ்கிற யாரும் 'எனக்கு இதுதான் லட்சியம்; இது ஒன்றுதான் லட்சியம்' என்று பிரகடனப் படுத்திக் கொள்ள முடியாது. அவரவர்க்கும் சில கொள்கைகள். சில விருப்பு வெறுப்புகள், சில 'கூடும்-கூடாது'கள் என்று இருக்கின்றன. அதற்கு ஒப்ப வாழ முயல்வதே அவரவர் வாழ்க்கையாய் இருக்கிறது. அதனால் இந்த வாழ்க்கையை லட்சியமற்ற வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இன்ன லட்சியத்துக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று எழுதி நெற்றியில் ஒட்டிக் கொண்டவர்களைத் தவிர எஞ்சிய மக்களெல்லாம் இந்த விதமாய்த்தான் வாழ்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே - இன்ன இலட்சியத்துக்காக நான் வாழ்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட லட்சியத்துக்குத் தாலி கட்டிக் கொண்டவர்களும் - அதற்கு மாறான லட்சியத்தில் தங்களைப் பிணித்துக் கொண்டவர்களை எதிர்ப்பதையும் ஆக்கிரமிப்பதையும் தங்களுடைய நடைமுறையாய்க் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரியாக - சமுதாய, அரசியல், மத நம்பிக்கை போன்ற லட்சியங்கள் ஏதுமில்லாத மற்ற மக்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தங்கள் வாழ்க்கைத் துணைகளிடமும் குழந்தைகளிடமும் தங்களுக்கு அடக்கமானவர்களிடமும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் 'கூடும் கூடாது'களையும் ஏன், சாதாரண ரசனைகளையும் கூட அழித்து ஒழிக்கிற ஆக்கிரமிப்பாளர்களாக இருப்பதை வாழ்க்கை நெடுகிலும் எல்லாரிடமும் நாம் காணலாம். கடைசியில், லட்சியவாதிகள் என்று தங்களைப் பிரகடனப் படுத்திக் கொண்டவர்களும் சரி, சாதாரண மனிதர்களும் சரி, இந்தப் பிறர் விஷயத்தில் தலையிடுவதையே தங்களது நடைமுறை வாழ்க்கையாகக் கொண்டிருப்பதன் மூலம் தங்களது லட்சியமே இதுதான் என்றாகிவிட்டதை உணராதவர்களாகி விடுகிறார்கள்." என்கிற வரிகளை இப்போதும் நான் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு - இந்தச் சோலியில் ஈடுபடுகையிலும் அதனால் பாதிக்கப் படுகையிலும்.

"பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்" என்கிற வரியும் அப்படிப் பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு வரி. இதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது?! இதில் ஏதோ ஒன்று ஒரு பக்கம் குறைகிற போதுதான் சகல பிரச்சனைகளும் வருகின்றன. "என் தயவு உனக்குத் தேவையில்லையா அப்படியானால்?" என்றும், "நேற்றுவரை என் பின்னால் வாலை ஆட்டிக் கொண்டு சுற்றி வந்தவன் இன்று எப்படி மாறிவிட்டாய்?" என்றும் கோபம் கொப்பளித்துக் குடும்பம் துண்டாகிறது. போகிற போக்கில் யாரும் யார் தயவிலும் இல்லை என்கிற காலம் வந்துவிடும். ஆனால், நாயாய்க் குழைந்து வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் இனம் மட்டும் அப்படியே தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.

கதை என்னவென்றால், நாடக நடிகையான கல்யாணிக்கும் பத்திரிகையாளனான ரங்காவுக்கும் காதல் ஏற்படுகிறது. முப்பத்தி மூன்று வயதாகியும் திருமணமாகாத நடிகை கல்யாணி. மனைவியை இழந்து குழந்தையை மாமியார் வீட்டில் வளர விட்டிருக்கும் முன்னனுபவசாலி ரங்கா. அதுதான் இந்தக் கதையின் கிக். ஓர் சராசரி இளைஞனும் இளைஞியும் காதலில் விழுந்தால் அது அவ்வளவு பெரிய பேசுபொருள் ஆகாது. இப்படி ஏதாவதொரு வகையில் ஏதோவொரு கோக்குமாக்கு இருந்தால்தானே காதல் சுவாரசியமாகும். ஏற்கனவே முறைப்படி நிச்சயிக்கப்பட்டு ஊருக்காகச் செய்து கொண்ட திருமணத்தில் கிடைக்காத அனுபவங்கள் இந்தக் காதலிலும் அதனைத் தொடர்ந்த மணவாழ்விலும் கிடைக்கிறது ரங்காவுக்கு. எவ்வளவோ கிளர்ச்சியடைந்து செய்து கொண்ட இரண்டாம் திருமணமும் நாட்கள் முப்பதும் அறுபதும் முடிந்த பின்பு சலிப்புத் தட்ட ஆரம்பிக்கிறது. 'இவள் என்னை உண்மையிலேயே விரும்புகிறாளா?', 'இவள் எனக்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருக்கிறாள்?' என்று லூசு மாதிரியான கேள்விகளால் ஆட்கொள்ளப் பட்டு அவளை விட்டு மெதுமெதுவாக விலகிப் போகிறான். அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்; அவன் இழுப்புக்கெல்லாம் உடன் போவேன் என்று நாயகி அளவிலாமல் விட்டுக் கொடுக்கிறாள். கடைசியில் நோய்வாய்ப் பட்டு நடக்கக் கூட முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறாள். அப்போது வந்து அவளோடு மீண்டும் சேர்ந்து விடுகிறான் ரங்கா. இதுதான் கதை. கதைச் சுருக்கங்கள் எப்போதும் ஒரு கதையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் சொல்லி விட முடியாது அல்லவா! ஆகவே, அவற்றை ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் பேசுவோம்.

ரங்கா பத்திரிகையாளன் என்பதை ஏற்கனவே சொன்னோம். எப்படிப் பட்ட பத்திரிகைக்காரன் என்றால், மிகவும் கறாரான பத்திரிகையாளன். சிறுகதை எழுத்தாளனாக வாழ்க்கையை ஆரம்பித்து, அதில் ஆர்வமிழந்து பின்னர் அரசியல் நிருபராக இருந்து, அதிலும் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்து வம்படியாகக் கலைத்துறையை விமர்சிக்கும் வேலைக்குள் பிடித்துத் தள்ளப் பட்டிருக்கும் பத்திரிகையாளன். நாடகங்களைத் தாறுமாறாக விளாசித் தள்ளுபவன் (அது தமிழகத்தில் சினிமாவை விட நாடகங்கள் அதிகம் இருந்த காலகட்டம் போல் தெரிகிறது!). யார் கண்ணுக்குமே தெரியாத மாதிரியான நுணுக்கமான விசயங்களை எல்லாம் நோண்டி நொங்கெடுத்து விமர்சிப்பவன். அதனால் நாடகத் துறையினருக்கு அவனைக் கண்டாலே பற்றிக் கொண்டு வரும். ஆனால் நேரில் பார்த்தால் அப்படித் தெரிய மாட்டான். மிகவும் மென்மையாக - இனிமையாகப் பேசுபவனாக இருப்பான். ஜெயகாந்தனே அப்படிப் பட்டவர் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். சாதாரணமாக அவரிடம் பழகுபவர்களிடம் அவருக்குள் இருக்கும் ஆக்ரோசமான முகம் தெரிவதில்லை என்பார்கள். அதைத்தான் ரங்கா மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் போலும். இதில் இதழியற் துறைக்குரிய பல விசயங்கள் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக, நாயகியின் துறை... நாடகத் துறை. நாடகத் துறையின் நுட்பங்களும் நிறைய விரிவாகப் பேசப் பட்டிருக்கிறது. அவர்கள் ஒப்பனை செய்து கொள்வது முதல் அவ்வப்போது கூட்டத்தை ஓர் ஓட்டை வழியாக எட்டிப் பார்த்துக் கொள்வது வரை அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து சுவாரசியங்களும் பேசப்பட்டிருக்கின்றன. ரங்கா அவன் துறையில் பெரிய இது என்றால் கல்யாணி இவளுடைய துறையில் பெரிய இது. சராசரி நடிகைகளைப் போலல்லாமல் வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவள். வயதை மறைக்க முயலாத, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாத, நிறைந்த மனமுதிர்ச்சி உடைய நடிகை. அவளே அந்த நாடகப் குழுவின் உரிமையாளர். அவளோடு உதவிக்காக அண்ணாசாமி என்கிற பெரியவர் இருக்கிறார். மிகவும் நாகரிகமானவர். ஆனால் அவரும் கல்யாணி மீது ஒருவிதமான ஆசை கொண்டிருப்பதைத் திடீரென்று ஒருநாள் வெளிப்படுத்தி விடுவது பெரும் அதிர்ச்சியாக இருக்கும். அதையும் கல்யாணி தவறாக எடுத்துக் கொள்ளாமல் சரியாகப் (!) புரிந்து கொள்வது அதைவிட அதிர்ச்சியாக இருக்கும். ஜெயகாந்தனின் இது போன்ற புரட்சிக் கருத்துகள்தான் அவருக்கு அப்படியொரு பெயரைக் கொடுத்திருக்க வேண்டும். அன்றைய சூழ்நிலையில் கல்யாணி போல் ஒரு பெண் நிதர்சனத்தில் சாத்தியமா என்பது தெரியவில்லை. இது போன்ற கதைகளைப் படித்து விட்டு, இப்படி இருந்தால்தானே ஆண்களுக்குப் பிடிக்கிறது என்று அதன் பின்பு வேண்டுமானால் நிறையப் பேர் அப்படி உருவாகி இருக்கலாம்.

ரங்கா தினமும் சைக்கிளில் அலுவலகம் சென்று வருவதும் பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு மாறுவதும் இந்தக் கதை எந்தக் காலகட்டத்தில் எழுதப் பட்டது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால் அவன் பீடி குடித்து சிகரெட்டுக்கு மாறுவது போல் காட்டவில்லை. அதனால் மோட்டார் சைக்கிளுக்கு முன்பே சென்னைக்கு சிகரெட் வந்து விட்டது தெரிகிறது. மனிதன் எந்த நேரமும் சிகரெட் அடித்துக் கொண்டே இருக்கிறான். வீட்டில் இருந்த படிக்கே அடிக்கிறான். கல்யாணி முன்பும் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் அடிக்கிறான். இது அப்போதே சென்னை எவ்வளவு முன்னுக்கு (!) வந்திருந்தது என்பதைக் காட்டுகிறது. இதற்குப் போட்டியாக கல்யாணி எந்த நேரமும் வெற்றிலை போடுபவளாகக் காட்டப் பட்டிருக்கிறாள். அதற்கு உறுதுணையாக அண்ணாசாமியும் ஒரு வெற்றிலைப் பேர்வழியாக இருக்கிறார். இப்போதைய சிகரெட் பெட்டிகள் போல அப்போதைய வெற்றிலைப் பெட்டிகள். அதே காலத்தைச் சேர்ந்த என் பாட்டிமார் இருவர் அது போல எந்த நேரமும் வெற்றிலைப் பெட்டியோடு இருந்திருக்கிறார்கள் (அப்படியெல்லாம் இன்னும் பெண்கள் சிகரெட் பெட்டிகள் வைத்துக் கொள்வதில்லையே என்று வம்புக்கு இழுக்காதீர்கள்!).

கல்யாணியிடம் காதலைச் சொல்லும் காட்சி தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் அண்ணாசாமி மிகவும் பெருமைப் படும் படிதான் நடந்து கொள்கிறார். அந்தக் காட்சியும் கூட தவறாக எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல என்றுதான் ஆசிரியர் சொல்ல முயன்றிருக்கிறார். "பெரிய மனுசன் என்றால் அதெல்லாம் இருக்கக் கூடாது என்று யார் சொன்னது?" என்று கேட்பதாக இருக்கிறது அந்தக் காட்சி (சொல்லப் போனால் பெரிய மனுசங்களுக்குத்தான் அதெல்லாம் அதிகம் என்று ஒருத்தர் முணுமுணுக்கிறார் சைடில்!). அவள் ரங்கா மீது கண் வைத்திருக்கிறாள் என்று அறிந்த நிமிடமே அந்தக் காதலுக்குத் தான் எப்படி உதவ முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிற கனவானாக இருக்கிறார். நம் எல்லோருக்குமே அவர் போன்ற நலம்விரும்பி ஒருவர் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இருக்கவும் செய்வார்கள். அவருடைய கோபம் பற்றிச் சொல்லியிருக்கும் விதம் சூப்பர். சான்றோர் கோபம் வந்த வேகத்தில் சென்று விடும் என்பது உண்மைதான். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டால் அதற்கான வேலை முடிந்ததாகி விடும்.

கதை சென்னையை மையமாக வைத்து நடைபெறுவதால் அன்றைய சென்னை பற்றியும் நிறையத் தெரிந்து கொள்ள முடிகிறது. மவுண்ட் ரோடு வழியே அடிக்கடி போக நேர்கிறது. சூளை என்று சொல்லப் படுவது சூளைமேடாக இருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன். அங்கிருக்கும் ஆதிகேசவலு நாயக்கர் தெருவைப் பார்க்க வேண்டும் என்றோர் ஆசை வருகிறது. எத்தனையோ வேறுபாடுகள் கொண்டிருப்பினும் அங்கே இருக்கும் எல்லோரும் ஒரே சாதி என்கிற ஒற்றை ஒற்றுமையில் ஒன்று பட்டு விடுகிறார்கள் என்கிற வரி, நம் மண்ணில் சாதி கொண்டிருக்கும் சக்தியை அப்பட்டமாகவும் அழுத்தந்திருத்தமாகவும் சொல்கிறது. இதைச் சென்னையின் சேரிகளிலும் பார்க்க முடியும். எங்கள் கிராமங்களிலும் பார்க்க முடியும். ஒரே சாதியினர் இருக்கும் கிராமங்களுக்கென்றே ஒரு தனித் தன்மை இன்றும் இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை சென்னைப் பெரும் பட்டிணத்தில் மாறாத ஒரே காட்சி - அதிகாலை, உச்சிவெயில், நடு இரவு என்று எல்லா நேரங்கெட்ட நேரங்களிலும் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு நிற்கிற அவலக் காட்சியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

நாடகம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது... :)

கருத்துகள்

 1. எனக்கும் மிகப் பிடித்தமானவர் ஜெயகாந்தன் தான்.
  பதிவு அருமை.
  அவருடைய டாகுமெண்டரி வீடியோ இது,
  சமயம் கிடைத்தா பாருங்களேன்,
  இதற்கு இசை இளையராஜா.
  http://www.youtube.com/watch?v=t2NR8bFmhpI&feature=relmfu

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Doha Talkies, மிக்க நன்றி, நண்பரே. எனக்கும் அவரைப் பிடிக்கும். கண்டிப்பாகப் பார்க்கிறேன். பார்த்தபின் கருத்தைப் பகிர்கிறேன். நன்றி.

   நீக்கு
  2. மிக்க நன்றி நண்பரே. இரவோடு இரவாக ஒரே வீச்சில் அத்தனை பாகங்களையும் பார்த்து விட்டேன். அதுவே ஓர் இடுகைக்கான சரக்குகளைக் கொண்டிருக்கிறது. விரைவில் அந்த இடுகையைப் போட்டு விடுகிறேன்.

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!