வெளிநாட்டு வேலை - தவறா?

இந்த நாட்டில் படித்து வளர்ந்த மாணவனொருவன், வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது தவறா?

தவறு என்பவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அவர்களுடைய கருத்து - இந்த மண்ணின் வளங்கள் அனைத்தையும் பயன் படுத்தித் தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஒருவன், இந்த மண்ணின் வளத்தை மேன்மைப் படுத்தவே உழைக்க வேண்டும்; எடுப்பது மட்டும் இங்கே இருந்து எடுப்பேன். கொடுப்பது வேறொருவருக்குக் கொடுப்பேன் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்தக் கோணத்தில் பார்த்தால், இது சரியென்றே படுகிறது. ஆனால், அதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் அது வேறு விதமாகவும் படுகிறது.

மக்கட்தொகை ஒரு பிரச்சனை என்றிருந்த காலம் போய், இன்று அதுவே நம் வளம் என்றாகி வருகிறது. அதாவது, மனிதவளம்! திறமைமிகு இளைஞர்கள் நிறையப் பேர் இன்னும் தெருத் தெருவாய் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில துறைகளில் நுழைந்தால் மட்டுமே அவர்கள் திறமைக்கான சரியான அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கிறது. பண பலமோ அரசியல் பலமோ இல்லாத ஏழை இளைஞர்கள், "ஏன்டா இந்த தேசத்தில் பிறந்தோம்?" என்று வேதனையோடும் விரக்தியோடும் காலத்தைக் கழிக்கின்றனர். அவர்களுடைய திறமைக்கு வேறோர் இடத்தில் உரிய அங்கீகாரமும் சன்மானமும் கிடைத்தால் அதுவும் நமக்கு நல்லதுதானே. நாடு என்பது நிலப்பரப்பு மட்டும் இல்லையே. அங்கிருக்கும் மக்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் நாட்டுக்கு நல்லதுதானே.

அந்தப் பக்கம் பார்த்தால், அமெரிக்கா போன்ற நாடுகள் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு, மனிதவளப் பஞ்சத்தில் இருக்கின்றன. ஏகப் பட்ட வேலைகள் இருக்கின்றன. செய்ய ஆள் இல்லை. இருக்கிற ஆட்களுக்கு ஒழுங்காகச் செய்யத் தெரியவில்லை. அதாவது, அவர்கள் வீணாப் போனவர்கள் என்றில்லை. அவர்களுக்கென்று சில துறைகள் இருக்கின்றன. அதில் அவர்கள் கில்லாடிகளாக இருக்கலாம். அவர்களால் நன்றாகச் செய்ய முடியாத - அதையே நம்மவர்களால் சூப்பராகச் செய்ய முடிந்த - ஒரு லிஸ்ட் இருக்கிறது. அந்த வேலைகளைச் செய்ய நம்மவர்களை அனுப்பி வைப்பதன் மூலம், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளியைக் குறைக்கும் ஓர் உலகளாவியச் சமநிலையை எய்தவும் இது உதவும். ஆக, இங்கிருப்போர் அங்கு போய் வேலை பார்ப்பதில் மனிதவளம் மற்றும் பணம் இரண்டுமே பரவலாக்கப் படுகிறது. அது நல்லதுதானே.

நாடு என்ற முறையில், உடனடிக் குறுகிய நோக்கில் பார்த்தால் இது நமக்கு இழப்பு போலத் தோன்றினாலும், மனித குலத்தின் எதிர் காலத்துக்கு தொலைநோக்கில் இதுதான் நல்லது. பெற்றெடுத்தவர் கஞ்சி ஊற்ற முடியாத நிலையில் இருக்கும்போது அடுத்த வீட்டுக்காரன் அதிகப் படியாகவே அள்ளிக் கொடுக்க அழைத்தால் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? அள்ளிக் கொடுப்பதை வாங்கிக் கொண்டு இங்கிருப்பவர்களுக்கும் அதிகமாகப் பகிர்ந்து கொள்கிற மாதிரிச் சட்டங்களை வேண்டுமானால் விரிவு படுத்தலாம்.

என்னதான் சொன்னாலும், இங்கிருந்து அங்கே போவோரால் நாட்டுக்கான இழப்பு இழப்புதானே என்கிற கேள்வி எனக்குக் கேட்கிறது. இதற்குள் இன்னொரு சிக்கலைக் கொண்டு வர விரும்புகிறேன். இங்கே இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் எல்லோரும் சொல்வது - "என் திறமைக்கேற்ற இடத்தைத் தர மறுக்கிறார்கள்; ஏதாவதொரு வெளிநாட்டுக்குப் போனால் அதை என்னால் ஈடு கட்டிக் கொள்ள முடியும்!" என்பது. அவர்களுக்கு ஒரு வடிகாலாக இந்த வெளிநாட்டு வாய்ப்புகள் இருக்க முடியும்.

ஆதரிக்கும் எல்லோரும் சொல்வது - "திறமைப்படி வருவோர் தான் திறமைசாலி என்றில்லை; எங்களிடமும் நிறையத் திறமை இருக்கிறது; வாய்ப்புதான் இல்லை!" என்பது. இப்படி ஒரு சாரார் வெளியே செல்வதால், அவர்களுக்கான வாய்ப்பும் பிரகாசமாகிறது. அதாவது, வாய்ப்புக் கிட்டாதோருக்கு எளிதில் வாய்ப்புக் கிட்டுகிறது. நம்மை விட அதிகமான மதிப்பெண்கள் பெற்றோர் நாம் அடைந்த இடத்தை அடைய முடியாமல் போகிறபோது, வேறெங்காவது போய்ப் பிழைத்துக் கொண்டால் நல்லதுதானே. அதுவும் கூடாது என்று சொல்ல வேண்டியதில்லையே. 'நம்மிடம்தான் தேவைக்கும் மேல் திறமை குவிந்து கிடக்கிறதே; இவர்கள் போவதால் என்ன இழப்பு?' என்றும் பார்க்கலாமே.

இதில் ஒரேயொரு சிக்கல் என்னவென்றால், அப்படி வெளிநாடு செல்வோர் கண்டிப்பாக நம்மை விட மேலான ஒரு வாழ்க்கையே வாழ்வர். அது மேலும் உள்ளார்-இல்லார் இடைவெளியை அதிகப் படுத்தவே செய்யும். ஆனால், அதற்காக நம்மில் சிலர் இங்கிருப்பதை விட அதிகமான வாய்ப்பிருக்கிற ஒரு பூமியில் போய் நன்றாக இருப்பதை எதிர்க்க வேண்டியதில்லை. அவர்களும் வெளிநாடுகள் எல்லாம் சென்று திரும்பினால், மனிதரில் ஏற்றத் தாழ்வுகள் பார்ப்பது கேவலம் என்று புரிந்து கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அது நம் மண்ணின் கொள்கைக் கோளாறு. மேற்கு நாடுகளில் இந்தக் கோளாறு அதிகம் இல்லை. எனவே இதுவும் ஓர் எதிர்பாராத நல்லதாக முடிய வாய்ப்புள்ளது.

எனவே, இந்தியாவில் மீதமிருக்கும் எல்லோருக்கும் வேலை கிடைத்து, அதன் பின் ஆட்களுக்குப் பஞ்சம் வந்தால், அப்போதுதான் இங்கிருப்பவர்கள் வெளிநாட்டுக்குப் போவது தேசத் துரோகமாகும். எல்லோரும் இங்கிருந்து போராடுவதை விட எம்மில் சிலர் எங்காவது போய் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லதுதான். அதனால் நாங்களும் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் அதனினும் நல்லதே.

இது எல்லாவற்றுக்கும் மேல், இட நெருக்கடி குறையும். உலக மக்கட்தொகையில் பதினேழு விழுக்காட்டு மக்களுக்கு இரண்டு விழுக்காடு இடம் எப்படிச் சரியாகும்? ஆறில் ஒரு பங்கு மக்களுக்கு ஐம்பதில் ஒரு பங்கு நிலம் எப்படிச் சரியாகும்? ஓர் உலக மனிதனுக்கு இருபத்தியிரண்டு கிலோ மீட்டர் இடம் சொந்தமென்றால், ஏன் இந்திய மனிதன் மட்டும் இரண்டரை கிலோ மீட்டர் நிலத்தில் சிக்கிச் சிரமப் பட வேண்டும்? உலக மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 45 பேர். இந்தியாவில் அது 360 பேர். ஆஸ்திரேலியாவில் 3 பேர். கனடாவில் 4 பேர். ரஷ்யாவில் 8 பேர். இதற்கொரு காரணம் - நம் தட்ப வெப்பம். வாழ்வுக்கும் இனப்பெருக்கத்துக்கும் ஏதுவான தட்ப வெப்பம் வேறெங்கும் இவ்வளவு சூப்பராக இல்லை. காசுக்காகவும் மற்ற சுகங்களுக்காகவும் அதையும் தாங்கிக் கொள்கிறோம் என்று போவோரை ஏன் தடுக்க வேண்டும்? அதிலும் பல நன்மைகள் இருக்கின்றன என்கிற போது...

* 1998 நாட்குறிப்பில் இருந்து... எனவே, இன்றைய சூழ்நிலைக்கு ஏதாவது ஒத்து வராவிட்டால் கொஞ்சம் பொறுத்தருள்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்