கல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்!

நண்பர் சரவணக்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பி நம் நாட்டின் இன்றைய கல்விக் கொள்கைகள் மற்றும் கொள்ளைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். எழுதலாம். அது பற்றி எழுத எனக்கிருக்கும் தகுதிகள் யாவை என்று யோசித்துப் பார்த்தேன். நானும் இந்த நாட்டில் அதன் சராசரிக் கல்வி நிலைக்கு மேலாக ஒரு படிப்பு படித்திருக்கிறேன். என்னைச் சுற்றி நிறையப் படித்தவர்களும் அதே அளவிலான படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதனால் படிப்பின் அருமை பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாம் பிரிவினரைப் போல படிக்காது போயிருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று பல முறை யோசித்திருக்கிறேன். என்னுடையது மட்டுமல்ல என் குடும்பத்தின் நிலைமையும் சேர்த்துப் பலவிதமாகக் கற்பனைகள் செய்திருக்கிறேன். ஊரில் கடை வைத்துப் பிழைப்பது முதல் கூலி வேலை பார்ப்பது வரை அனைத்து விதமான பாத்திரங்களிலும் என்னை வைத்துப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தொழில் என்று எத்தனையோ வேறுபட்ட தொழில்கள் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். அப்படி ஒரு கட்டத்தில் ஆசிரியர் வேலைதான் அரும் பெரும் பணி என்றெண்ணி அதுவாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன். கல்வித் துறையில் நுழைந்து நிறையப் புரட்சிகள் செய்ய வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறேன். பிற்காலத்தில் குண்டக்க மண்டக்கச் சம்பாதித்தால் நிறையப் பள்ளிகளும் கல்லூரிகளும் கட்ட வேண்டும் என்று இன்றும் கூட நினைக்கிறேன். ஆனால், இப்போது கல்வித் தந்தை என்று சொல்லிக் கொண்டு வரும் பல மொகரைகளைப் பார்த்தால் அந்த ஆசை கூடிய சீக்கிரம் போய் விடுமோ என்றும் ஒரு பயம் வருகிறது. சில நேரங்களில் கல்வி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் கூட ஆசைப் பட்டிருக்கிறேன். பள்ளிக் காலத்தில் ஒரு முறை தமிழ்ப் பாடத்தில் "நான் அமைச்சர் ஆனால்..." என்றொரு தலைப்பில் கட்டுரை எழுத நேர்ந்தது. அப்போது நான் கல்வி அமைச்சர் ஆனால் என்னவெல்லாம் செய்வேன் என்று எழுதியிருந்தது தமிழ் ஆசிரியைக்கு தலை வெடிக்கும் அளவுக்குக் கோபம் வர வைத்து, அதனால் என்னுடைய விடைத் தாளை மட்டும் அவர் போய் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து, என்னை மட்டும் நேரடியாகத் தலைமை ஆசிரியரிடம் வாங்கிக் கொள்ளச் சொன்னார். அதைப் படித்த அவரும் கடும் கோபம் கொண்டு, என்னை அழைத்து, "கையில் ஒரு பேனாவும் பேப்பரும் கிடைத்து விட்டால் உலகத்தில் இருக்கிற எல்லோரையும் தூக்கில் போட்டு விடுவீர்களோ?!" என்று கேட்டு, மிகக் கடுமையாகக் கண்டித்தனுப்பினார். அதற்குக் காரணம் - என்னுடைய ஆதங்கங்களை மிகக் கடுமையாக வெளிப்படுத்தி இருந்தேன். அதில் சில தலைமை ஆசிரியரையும் வேலையை விட்டுத் தூக்கி வீசுவேன் என்கிற ரீதியில் இருந்ததால் அது தனிப்பட்ட முறையில் அவரையும் வம்பிக்கிழுத்து விட்டது. அதற்குப் பின்பு பள்ளித் தேர்வுகளில் மட்டும் அது போல எழுதுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

அப்போது எனக்கிருந்த ஆதங்கங்கள் அனைத்தும் இப்போது எனக்கு நினைவில் இல்லை. அவற்றுள் முக்கியமான சில மட்டும் இதோ...
1. புரிகிற மாதிரிப் பாடம் நடத்தத் தெரியாத ஆசிரியர்களை வீட்டுக்கனுப்பி விடுவேன்.
2. அறிவியற் பாடங்கள் அனைத்தும் முறையான செயல் விளக்கங்களோடு இருக்க வேண்டும்.
3. மாணவர்களுக்குள் பாரபட்சம் காட்டக் கூடாது.

முதல் இரண்டை விட்டு விடலாம். மூன்றாவதுதான் இன்றைக்கும் நமக்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது. அதைத் தீர்ப்பதுதான் சமச்சீர்க் கல்வியின் நோக்கம் என்பது என் இப்போதைய புரிதல். அது சரியா என்று முதலில் புரிந்து கொண்டு வருகிறேன். பின்னர் நம் உரையாடலைத் தொடரலாம்.

நான் படித்த நேரத்தில் எங்கள் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த திருமதி. வசந்தி தேவி அவர்களுடைய பேட்டி ஒன்று படித்தேன். "இப்போது பிரச்சனைக்குள்ளாகி இருப்பதன் பெயர் சமச்சீர்க் கல்வியே அல்ல. வெறும் பொதுப் பாடத் திட்டம் மட்டுமே. சமச்சீர்க் கல்வி என்பது வசதிகள், வாய்ப்புகள், கட்டணம் என அனைத்தும் சமமாகக் கொண்டிருக்க வேண்டும்!" என்று கூறுகிறார். அருமையான கருத்து. இதை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் எல்லோருக்கும் இந்தப் புரிதலாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால், வழக்கம் போல இதிலும் அரசியல் மற்றும் இனக் காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. எல்லாக் கட்டுரைகளும் தீர்ப்பு சொல்ல வேண்டும்; கட்டுரை எழுதும் எல்லோருக்கும் தீர்ப்பு சொல்லும் தகுதி இருக்க வேண்டும் என்கிற எழுதப் படா விதிகள் எல்லாம் பழைய பாணி ஆகி விட்டன. ஒரு பிரச்சனையைப் பற்றிய பல்வேறு விதமான பார்வைகளை ஓரிடத்தில் குவித்து எல்லோரும் காண்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பது கூட நல்ல எழுத்தாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே இதை ஆரம்பிக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு எடுபடுகிறது என்று.

நாம் எல்லோரும் ஆசைப் பட்ட படி ஆட்சி மாற்றம் நடந்ததும் நடந்த முதற் சில மாற்றங்களில் ஒன்று - சமச்சீர்க் கல்விக்கு அடிக்கப் பட்ட ஆப்பு. இப்போது வந்திருப்பவர் தனக்கோ தன் கட்சிக்கோ கொள்கை என்று எதுவும் வைத்துக் கொள்ளப் பிடிக்காதவர். அதிக பட்சம் அவருடைய அரசின் கொள்கை முடிவுகள் பின்வரும் சிலவற்றைப் பொறுத்தே அமையும் - 1. முந்தைய நாள் இரவில் கனவில் வந்தவை, 2. சோதிடர், தோழி, உறவினர் முதலான தன்னைச் சுற்றியிருக்கும் சிலர் சொல்பவை, 3. இதற்கு முன்பு இருந்தவர் என்னவெல்லாம் செய்தாரோ அதற்கு நேர் எதிரான - தலை கீழான எல்லாம். இப்படிப் பட்ட ஒருவர் சொல்வதை வைத்து எதையும் முடிவு செய்வதற்கில்லை. அப்படி ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் அவர் செய்த அறிவிப்புகளில் ஒன்று - பெரிதும் சாடப் படுவது - கல்வியாளர்கள் என்று சொல்லி நிபுணர் குழுவில் சேர்க்கப் பட்டுள்ள சில கல்வி வியாபாரிகளின் பெயர்கள். அவர்கள் இருவரையும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்ட முடியாது எனினும், கல்வியைப் பற்றி எந்த முன் அறிவும் அனுபவமும் இன்றி அதை ஒரு நல்ல வியாபாரமாகவே மட்டும் பார்ப்போர் இப்படி இந்தத் துறைக்குள் வந்தது கல்விக்கு நல்லதா என்றால், கண்டிப்பாக இல்லை. எதற்காக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இதை அனுமதித்தன. இதில் ஏதும் நியாயம் இருக்கிறதா? இருக்கலாம். அவற்றில் ஒன்று - கல்விக் கூடங்களைக் கட்டி நடத்துவது மதுபானக் கடைகளை நடத்தும் அளவுக்கு எளிதான வேலை இல்லை என்பதால் முதலாவதைத் தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு இரண்டாவதைத் தானே எடுத்து நடத்த முடிவு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன்.

இப்போது வந்திருப்பவரை ஆதரிப்போரும் அவர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்போர். இதற்கு முந்தையவரைக் கண் மூடித் தனமாக எதிர்ப்போர். நானுமே கூட அந்த அளவு அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டவன்தான். எல்லோரையும் போல அவரைப் பெயர் சொல்லிக் கூடக் கூப்பிட விரும்பாமல் கலைஞர் என்று அழைத்து, பின்னர் அவரை அப்படி மரியாதையாகக் கூப்பிடுவோர் அனைவர் மீதுமே ஒருவித அருவருப்பு அடைந்து, இப்போது அவரைக் கருணாநிதி என்றோ தெட்சிணாமூர்த்தி என்றோ கூப்பிடுவோர் மீது கூட அந்த அருவருப்பு வர ஆரம்பித்து விட்டது. அவரும் ஒரு மகானாக நம் வரலாற்றில் சொல்லப் பட்டு விடக் கூடாது என்று ஜெ.வை விட அதிகம் பிடிவாதமாக இருக்கிறேன் நான். ஆனால், அதற்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. சமச்சீர்க் கல்வி என்கிற அருந்திட்டத்தை அறிமுகப் படுத்த விரும்பியவர் சந்தடி சாக்கில் தன்னையும் கம்பன், வள்ளுவனுக்கு இணையாகக் காட்டிக் கொள்ள முயன்றது நம் சாபக் கேடு. அவரும் அரசியல் இல்லாமல் இதைச் செய்திருந்தால் அதை ஆதரிப்போருக்கு இன்று வேலை இன்னும் சிறிது எளிதாக இருந்திருக்கும். அப்படியிருந்தாலும் இப்போது வந்திருப்பவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளாமல் இருந்திருப்பாரா என்று சொல்வதற்கில்லை.

சமச்சீர்க் கல்வி சமூக நீதியின் அங்கம் - நம் அரசியற் சட்டம் விரும்பிய மாதிரி எல்லோருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதே அதன் இறுதி நோக்கம் என்கிறார்கள் ஆன்றோர். இதனால் இது உயர்சாதியினருக்கு எதிரானதாக வந்து முடியும் என்று கருதி அவர்கள் அனைவரும் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். "அதெப்படி எல்லோருக்கும் எல்லாம் சமமாக முடியும்? வேற்றுமை என்பது இயற்கை. அதற்கு எதிராக எதுவும் செய்யக் கூடாது!" என்கிறார்கள். "இயற்கையான எல்லாத்தையும் மாற்றவே கூடாதா? சமம் என்ற சொல்லே உங்களுக்குப் பிடிக்காதா? காடுகளில் போல, ஏமாற்றிப் பிழைப்பவனை அடித்துப் பிடுங்கித் தின்பதும் இயற்கை. அதை மட்டும் நாம் சட்டம் போட்டுத் தடுப்பதில்லையா?" என்று பதிற் கேள்வி கேட்கிறார்கள் சமூக நீதிப் போராளிகள். இதற்குள்ளும் சாதி வந்து விட்ட இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி அணுகுவது என்றே எனக்குக் குழப்பமாகி உள்ளது.

இதை எதிர்ப்போர் கேட்கும் கேள்வி - "உனக்கு நல்ல கல்விக்கான வாய்ப்புக் கிட்ட வில்லை. இன்று உன் பிள்ளைக்கு அது கிடைக்கிறது. அது வேண்டாம் என்று சொல்லி உன் பிள்ளையையும் நீ படித்தது போலவே ஓர் ஓட்டைப் பள்ளிக் கூடத்தில் போய்ச் சேர்ப்பாயா?". இப்படிக் கேட்டால்தான் நமக்குச் சில விஷயங்கள் சரியாக உரைக்கின்றன. பொதுவாக எதைப் பேசச் சொன்னாலும் வாய் கிழிய நாக்கை நீட்டிப் பேசி விடுவோம். தனிப்பட்ட முறையில் அது உன்னையும் பாதிக்கும் என்று ஒரு பிட்டைப் போட்டால் கப் சிப்பென்று அமைதியாகி விடுவோம். இந்தக் கேள்வி என்னையும் அமைதியாக்குகிறது. என் பிள்ளையாவது என்னை விடச் சிறப்பான வாய்ப்புப் பெற்று என்னை விட மேலான நிலையில் இருக்கும் ஆட்களின் பிள்ளைகளுக்கு இணையாக வளர வேண்டும் என்பது எல்லா நல்ல தகப்பனும் படும் நியாயமான ஆசைதானே. ஆனால், இப்படிப் பேசும் எவருமே தன் பிள்ளை - தன் வாழ்க்கை தவிர்த்து வெளியில் ஓர் அடி கூட எடுத்து வைத்துப் பார்க்கத் தயாரில்லை. அது ஓரிரு பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருப்போருக்குச் சரியாக இருக்கலாம். ஓர் அரசாங்கத்துக்கு? அரசாங்கத்துக்கு எல்லாப் பிள்ளைகளும் ஒன்றே. ஏனென்றால், எல்லாப் பிள்ளைகளின் பெற்றோருக்கும் ஒரே ஓட்டுதான். எல்லோரும் சமமாக இருப்பதற்கான சூழ்நிலையையே ஏற்படுத்தித் தர வேண்டும். அது இயற்கைக்கு எதிரானது என்பதில் சுயநலம் இருக்கும் அளவுக்கு பொது நலம் இருப்பது போலத் தெரியவில்லை எனக்கு.

அடுத்ததாக, இப்போதைக்கு பொதுப்பாடத் திட்டம் என்பது என் பிள்ளையை ஓட்டைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கச் சொல்வதாக இல்லை. "எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்; ஆனால், உன் பிள்ளை அளவுக்கு மிஞ்சிய திறமைசாலியாக இருந்தால், மற்ற எல்லாப் பிள்ளைகளுக்கும் எவ்வளவு முடிகிறதோ அதே அளவு கொஞ்சம் குறைவான சுமையைச் சுமக்க வேண்டும்!" என்றுதான் சொல்கின்றன. அது ஏன் எனக்குப் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்று புரியவில்லை. யாராவது விளக்கினால் புரிய வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு நினைப்பது - அது நல்லதுதானே. மொத்தத்தில் கல்வியைச் சுமை குறைந்ததாக ஆக்குவது நல்லதே. குறைவான சுமை ஒருபோதும் தரமான கல்விக்கு இடையூறாக இராது. இருப்பதை இன்னும் ஆழமாகப் படிக்கலாம். அதற்கும் மேல் என் பிள்ளைக்குச் சுமையைக் கூட்டிக் கொள்ள விரும்பினால் வேறு விதங்களில் பள்ளிக்கு வெளியில் அதைச் செய்து கொள்ளலாம். அதை யாரும் சட்டம் போட்டுத் தடுக்க மாட்டார்கள். முழுக்க முழுக்கப் பரிபூரணமான சமச்சீர்க் கல்வியே வந்து விட்டாலும் இது போன்ற ஏற்றத் தாழ்வுகளைக் களையவே முடியாது. அதைக் குறைக்கும் முயற்சிதான் இது. அதை ஏன் வெறுக்க வேண்டும்?

மொத்தத்தில் இது ஒரு பரந்த பகுதி. முதலில் தனியார்மயமாக்கல் சரியா தவறாவில் ஆரம்பிக்க வேண்டும்.

சரி - எப்போது? "அரசாங்கமே எல்லாத்தையும் செய்ய முடியாது. ஐம்பத்தெட்டு வயது வரை வேலை உறுதி என்று ஆகி விட்டால், பயம் இல்லாமல் போய் விடுகிறது. வேலையை முறையாகச் செய்யாமல் சம்பளம் மட்டும் கேட்டு ஆண்டுக்கு ஒருமுறை வீதிக்கு வந்து விடுவார்கள்!" என்கிற மாதிரியான சூழ்நிலையில். ஏன் அரசாங்கம் எல்லாத்தையும் செய்ய முடியாது? சனநாயகம் அப்படி ஓர் அமைப்பு. யார் வாக்களிக்க வேண்டுமோ அவர்களையே வேலை செய்யச் சொல்லி அழுத்த முடியாது. அப்புறம் அவர்கள் ஓட்டை மாற்றிப் போட்டு விடுவார்கள். அவர்களுக்கு வேலை செய்யச் சொல்லாத - சம்பளத்தை மட்டும் கூட்டிக் கூட்டிக் கொடுக்கும் அரசாங்கத்தைத்தான் பிடிக்கும். எனவே, தனியார்மயமாக்கி விட்டால் அவர்கள் முறையாக எல்லாத்தையும் நோட்டம் விட்டு ஒழுங்காக வேலை செய்வோருக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுத்து மற்றவர்களுக்கு சரியான பாதையைக் காட்டி தரத்தைப் பராமரிப்பார்கள். தரம் காத்தால் மட்டுமே கூட்டம் வரும். கூட்டம் வந்தால் மட்டுமே வியாபாரம் ஓடும் என்கிற ஒரு பயம் இருக்கும். அதனால்தான் நம் தனியார் பள்ளிகளில் இருக்கும் தரம் அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளில் தரம் நிரம்பவும் சீரழிந்திருப்பதற்கு இன்னொரு காரணம் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் சரியில்லாமல் இருந்தது. நல்ல சமூகத்துக்குத்தான் நல்ல அரசாங்கம் கிடைக்கும். எனவே, நமக்கு அது அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அந்த வகையில் பார்த்தால் தனியார்மயம் நமக்கு நல்லதே.

தவறு - எப்போது? மேற்சொன்ன நியாயமான காரணங்களுக்காக ஆக்கப் படும் தனியார்மயம் தறி கெட்டுப் போகும் போது. அதாவது, 'தனியார்மயம் ஆக்கிவிட்டால் நமக்கு அங்கு வேலையே இல்லை; அதன் பின்பு கொள்ளையடித்து ஊர் ஊராக இடம் வாங்கிப் போடுவது மட்டுமே நம் வேலை!' என்று ஒதுங்கிக் கொள்வது. இப்போது என்ன நடக்கிறது என்றால், கொடுக்கிற காசை வாங்கிக் கொண்டு அல்லது அமைச்சர்கள் மற்றும் பாராட்டு விழாக்களில் சிங்கி அடிப்பவர்கள் என்று கேட்கிற எல்லோருக்கும் அங்கீகாரம் வழங்கப் படுகிறது. அங்கு கட்டடம் இருக்கிறதா? அதற்குள் வகுப்பறைகள் இருக்கின்றனவா? ஆய்வுக் கூடங்கள் இருக்கின்றனவா? நூலகம் இருக்கிறதா? உள்ளே தண்ணீர் வருகிறதா? கழிப்பறை இருக்கிறதா? என்று எதையுமே பார்ப்பதில்லை. அவை இயங்க ஆரம்பித்த பின்பும் அவற்றின் செயல்பாடுகள் முறையாக இருக்கின்றனவா அல்லது தில்லாலங்கடி வேலைகள் நடக்கின்றனவா என்று முறையான ஆய்வுகள் செய்வதில்லை. இதனால் சிலர் மட்டும் தரத்தை மேம்படுத்தி வியாபாரம் முறையாகச் செய்ய, மற்றோர் எல்லாம் கோடானுகோடி மக்கட் தொகை கொண்ட நாட்டில் - எல்லோரும் தம் பிள்ளையைப் பொறியாளர் ஆக்க ஆசைப்படும் நாட்டில் - எப்படியிருந்தாலும் வியாபாரம் நடக்கும் என்கிற தெனாவெட்டில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஓட்டுகிறார்கள். அவர்கள் நினைப்பது படியே படிப்பு வராத பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் காசைக் கொண்டு வந்து கொட்டி வியாபாரத்தைக் கீழே விழ விடாமல் காப்பாற்றி விடுகிறார்கள். இது நாட்டுக்கு நல்லதா?

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். பள்ளிகளில் தனியார் பள்ளிகள் பல மடங்கு மேல் என்பது போல், கலை-அறிவியற் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகள் பல மடங்கு மேல் என்பது போல், பொறியியற் கல்லூரிகளில் சொல்ல முடிவதில்லை. காரணம்? இதுதான் பெருமளவில் வியாபாரமாகச் செய்யப் படுவது. தறிகெட்ட வியாபாரமாக! அரசியல் பிழைப்போருக்கு அள்ளிக் கொட்டும் பொன் முட்டை வாத்துகளாக! அது தடுத்து நிறுத்தப்பட்டே ஆக வேண்டும்.

அடுத்ததாக, எல்லோருக்கும் கல்வி - அதுவும் இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி என்பது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் நெடுநாட் பேராசைகளில் ஒன்று. அது சாத்தியமா? சாத்தியம். கொள்ளையடிப்பது தவிரக் கூடுதலாகவும் சில ஆசைகள் கொண்ட அரசாங்கம் இருந்தால் சாத்தியம். அது சாத்தியமா? எனக்கு மனநிலை சரியாக இருக்கிறது என்று நம்புவதால் அதற்கான சாத்தியம் இல்லை என்றே எண்ணுகிறேன். அதற்குத் தனியார்மயம் வழி வகுக்குமா? கண்டிப்பாக இல்லை. தனியார்மயம் என்பதே இலவசத்துக்கும் கட்டாயத்துக்கும் இடம் இல்லாதது. "கட்டாயமாக இத்தனை இலட்சம் கட்டி உன் பிள்ளையை என் பள்ளியில் நீ படிக்க வைக்க வேண்டும்!" என்று சொல்வது மண்டைக் கோளாறு உள்ளவன் பேசுவது போல இருக்கிறதல்லவா?! இலவசக் கல்வியும் கட்டாயக் கல்வியும் நனவாக வேண்டும் என்றால் அரசாங்கம் கல்வியின் மீது கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். அப்படி எல்லாம் அரசுமயம் ஆக வேண்டும் என்றால், நாற்காலியைத் தேய்க்கும் வாத்தியார்களுக்கும் சரியான நடத்தை வழிமுறைகள் இருந்தாக வேண்டும். அப்படியானால், தனியார்மயம் தவிர்த்து வேறு வழிகள் இருக்கின்றனவா? கண்டிப்பாக இருக்க வேண்டும். நடக்கச் சோம்பல் பட்டவன் சித்தப்பன் வீட்டில் பெண் எடுக்கிற கதைதான் தனியார்மயமாக்கல். எதையும் கஷ்டப்பட்டுச் சரி செய்ய மேல் வலித்துக் கொண்டு கண்ணைச் சிமிட்டும் நேரத்தில் தனியார்மயமாக்கி விட்டால் தன் கடமை முடிந்து விடும் என்கிற பொறுப்பின்மைதான் காரணம்.

அப்படியான வழிகள் யாவை? நான் நினைக்கிற ஒன்று - பள்ளி மற்றும் பெற்றோர் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது. தனியார் நிறுவனங்கள் போல செயல்திறன் மற்றும் படிக்கிற பிள்ளைகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் பள்ளிகளில் பணி புரிவோருக்கு ஊதியம் முதலானவற்றை முடிவு செய்வது. அத்தோடு, பெற்றோரின் கருத்துக்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் என்ன செய்தாலும் செய்யா விட்டாலும் வேலையும் ஊதியமும் மட்டும் கண்டிப்பாக உண்டு என்கிற பாதுகாப்பு உணர்வை அசைத்தால் ஒழிய நேர்மையான - சமூகத்துக்கு பயந்து உழைக்கும் ஆட்களை நாம் உருவாக்கவே முடியாது. இதைக் கேட்டவுடன் உங்களுக்கு சிரிப்பு வரும். "இந்தச் சின்னப் பசங்களே இப்படித்தான். நடக்கிறதைப் பற்றிப் பேச மாட்டான்கள்!" என்று கூடச் சொல்லத் தோன்றும். ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இந்த இரண்டுமே இன்று தனியார் நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கிற ஒன்று. எனக்குக் கொடுக்கப் பட்ட வேலையை நான் சரியாகச் செய்யா விட்டால் எனக்கு நாளை காலை அலுவலகத்தின் உள்ளே நுழைகிற வசதி கூட இல்லாமல் செய்து விடுவார்கள். என் வாடிக்கையர் என் சேவையில் குறை கண்டு விட்டால் அதை விட வேகமாக வெளியே பிடித்துத் தள்ளப் படுவேன். அந்த பயம்தான் பிறப்பால் சோம்பேறியான என்னையும் கூட கடின உழைப்பாளி என்று பெயரெடுக்க வைத்தது. அந்த பயம் ஒன்றுதான் இந்த மண்ணில் பிறந்த சோம்பேறிகள் அனைவரையும் ஒழுங்காக வேலை பார்க்க வைக்க வல்லது. கொடுமை என்னவென்றால், அரசு வேலையானது பிறப்பால் சுறுசுறுப்பானவர்வர்களையும் கூட சோம்பேறிகளாக்கி விடுகிறது. எனவே, நமக்குத் தேவை - பெற்றோரை வாடிக்கையராகப் பார்க்கும் பார்வை. காசு வசூல் பண்ணும் போது மட்டும் அல்லாமல், தேர்வு முடிவுகள் வந்த பின்பும் - ஆசிரியப் பதவி உயர்வுகளுக்கு முன்பும் - கருத்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!

இதில் செய்ய வேண்டிய இன்னொரு காரியம் - பல நாடுகளில் உள்ளது போல, இந்தப் பகுதியில் இருக்கும் எல்லோர் பிள்ளைகளையும் இந்தப் பகுதியில் இருக்கும் இந்தப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்றும் உறுதியாகச் சொல்லி விட வேண்டும். அதுதான் எல்லாப் பகுதியிலும் இருக்கும் பெரும்புள்ளிகளின் புண்ணியத்தில் தரத்தை மேம்படுத்த உதவும். சமச்சீர்க் கல்வியை எதிர்ப்போர் வைக்கும் ஒரு பெரும் குற்றச்சாட்டு - சமச்சீர்க் கல்வி என்பது கீழே கிடப்போரை மேலே எடுத்துச் செல்லாது. மேலே போய்க் கொண்டிருப்போரையும் கீழே பிடித்து இழுத்துப் போடும் என்பது. அதுவும் சரிதான். பொதுவுடைமை நாடுகள் செய்தது போல, பணத்தைப் பொதுவுடைமை ஆக்காமல் பசியை மட்டும் பொதுவுடைமை ஆக்கி விடக் கூடாது. எங்கே கிடந்தாலும் எல்லோரும் ஒரே இடத்தில் கிடப்போம் என்பதில் ஒரு நல்லது இருக்கிறது. அதன் பின்பு மேலே இருந்து கீழே விழுந்தவர்களின் பெற்றோர் என்ன செய்தாலும் அது எல்லோருக்கும் நல்லதாக இருக்கும். அவர்களுக்கே தெரியாமல் எல்லோரும் எல்லோருக்குமாகச் சிந்திக்கும் நல்லது நடக்கும். அப்படி இல்லையேல், இப்போது போல், மேலே இருப்போர் மேலே மேலே கீழே இருப்போர் கீழே கீழே என்றுதான் தொடர வேண்டுமோ என்றும் பயமாக இருக்கிறது.

இதில் இன்னொன்று வேறு வந்து சேர்ந்து கொள்கிறது. தாய்மொழி வழிக் கல்வியா வந்தவன் கொண்டு வந்த வழிக் கல்வியா என்பது. கடைசிவரை கல்வி என்பது தமிழில் மட்டுமே என்று படித்து வந்தவன் என்ற முறையில் நம் அமைப்பின் ஏற்றத் தாழ்வை மிகக் கடுமையாகச் சபித்தவர்களில் நானும் ஒருவன். ஆங்கில வழி கற்று வரும் ஒருவன் முதல் நாளில் சாதிக்க முடிந்ததை நான் சாதிக்கப் பல ஆண்டுகள் ஆகின்றன. நம்மில் பலருக்குக் கடைசி வரை அது முடியாமலே கூடப் போய் விடுகிறது. நானும் சிறு வயதில் இருந்தே ஆங்கிலத்தில் கற்றிருந்தால் அவர்களுக்குச் சமமாக இருந்திருக்க முடியும். சமமாக இல்லையெனினும் குறைந்த பட்சம் இன்னும் கொஞ்சம் அருகில் போயிருக்க முடியும். ஏனென்றால், அவர்கள் வீட்டிலும் ஆங்கிலம் பேசி வந்திருந்தால், அதை எப்படிச் சரி செய்வது? அதற்குமா தடைச் சட்டம் போட முடியும்? அல்லது, முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய், என் பெற்றோருக்கும் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்க முடியுமா?

முழுக்க முழுக்கத் தாய்மொழி வழிக் கல்வி என்றால், அது இந்தியா முழுக்க நடைமுறைப் படுத்தப் பட வேண்டும். இல்லாவிட்டால், மற்ற இந்தியர்களுக்கு மத்தியில் சீனாக்காரன் - ஜப்பான்காரன் போல நாமும் பேந்தப் பேந்த முழிக்க வேண்டியதுதான். அப்புறம் பெங்களூர் வந்து களவாண்டுதான் பிழைப்பு நடத்த முடியும். பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவோரை நம்பிப் பிழைப்பு நடத்தும் நாம் ஆங்கிலம் சற்றும் இல்லாமல் நாக்குக் கூட வழிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் உலக அரங்கில் இன்று நம் ஒரே பலம் என்று இருப்பது நம் ஆங்கில அறிவு மட்டுமே. அப்படியே இந்தியா முழுக்க தாய்மொழி வழிக் கல்வி என்று ஆனாலும் வீட்டில் ஆங்கிலம் பேசி வளர்ந்த பிள்ளைகள் நம்மைப் போல நடுத்தட்டு - ஈயத் தட்டு மக்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள். அதை எப்படிச் சமாளிப்பதாக உத்தேசம்?

இந்த விஷயத்தில், நான் கல்வி அமைச்சர் கட்டுரை எழுதிய காலத்தில் இருந்து நினைப்பது இதுதான் - முதல் வகுப்பு முதலே இரண்டு மொழிகளிலுமே எல்லாத்தையும் படிப்பது. அதாவது, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலும் கூட இரு மொழிகளிலுமே படிப்பது. கொஞ்சம் கூடுதல் சுமை போலத் தெரியும். அதை ஒட்டு மொத்தச் சுமையைக் குறைப்பதன் மூலம் சரிக்கட்டலாம். இந்தச் சிந்தனையை நான் கல்வி அமைச்சர் ஆனாலே நடைமுறைப் படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை, அது நடந்தால் அல்லது இது பலம் படைத்தவர்களின் காதுகளுக்குக் கொண்டு செல்லப் பட முடியும் என்றால் அது நம் பிள்ளைகளுக்குக் கடலளவு பயன் தரும்.

கல்வி உரிமைச் சட்டம் (RIGHT TO EDUCATION) என்றொன்று வந்திருக்கிறதே அது பற்றியும் பேசி விடுவோம். இன்னும் இவருக்கு வாய் கிழிய வில்லையா என்று நாம் ஆச்சரியப்படும் கபில் சிபல், பேச்சைக் குறைத்து வேலையைக் கவனித்தால் இன்னும் கொஞ்சம் நல்ல பெயர் எடுக்கலாம் என்பதை எனக்கு உணர்த்திய செயல் இதுதான். இது நடைமுறைக்கு வரும்போது என்னவெல்லாம் சிக்கல் வரும் என்று தெரியவில்லை. ஆனாலும், இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம். இது நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே நம் ஆசை. இடைப்பட்ட காலத்தில், ஊழல் உரிமைச் சட்டம் (RIGHT TO CORRUPTION) என்று ஏதேனும் கொண்டு வரத் திட்டமிட்டு, மனிதர் வெட்டிப் பேச்சுகள் பேசுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டால் சிக்கல்தான். அல்லது, இதனால் பாதிக்கப் படும் கல்வி வியாபாரி யாராவது வந்து, "உங்கள் அடுத்த தேர்தல் செலவைப் பார்த்துக் கொள்கிறேன்!" என்று சொல்லி விட்டாலும் சிக்கல். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

இதுவரை எத்தனையோ குழுக்கள் வைத்து ஆய்வுகள் நடத்தி விட்டோம். இது செயல்பாட்டுக்கான நேரம். ஒரு கல்வியாளருக்குரிய அளவு இந்த விஷயத்தில் நமக்கு ஞானம் இல்லை என்றபோதும், இது ஒரு நல்ல முயற்சி என்பது புரிகிறது. இது ஆரம்பம். இதில் இருக்கும் குறைகளைக் களைய வழி காண வேண்டுமே ஒழிய, அவற்றைச் சுட்டிக் காட்டி மொத்த முன்னேற்றத்தையும் முடக்கிப் போட முயலக் கூடாது. அதுதான் இங்கே நடக்கிறதோ என்றோர் ஐயம் உண்டாகிறது. இன்னொன்று, காலம் காலமாகவே நம் அரசாங்கங்கள் அனைத்துமே சில வியாபாரிகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நல்ல வேளையாக, கல்வி வியாபாரிகள் அந்த அளவுக்குப் பெரியவர்கள் ஆக வில்லை இன்னும். இப்போதே இதைச் செய்து விட்டால் எளிது. அவர்களும் தேர்தல் செலவைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டால், அப்புறம் குப்பன்-சுப்பன்களின் பேரன்கள் பாடு பெரும்பாடுதான்.

அவர்களைப் பொருத்த மட்டில் சமச்சீர்க் கல்வி வந்தால் அவர்களின் வியாபாரத்துக்குப் பெருத்த அடி விழும். அதை அவர்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று நாம்தான் அவர்களை விட உரக்கப் பேசிக் காரியம் சாதிக்க வேண்டும். மற்றபடி, பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ள உள்நோக்கமுடைய பாடங்கள் நீக்கப் படுதல் - நீக்கப் பட்ட பாடங்கள் மறுயிணைப்பு செய்யப் படுதல் போன்றவையெல்லாம் சமச்சீர்க் கல்விக்குச் சம்பந்தமில்லாதவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது கறுப்புப் பெயிண்ட் அடித்த பேருந்துகளைக் கொளுத்த வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது. பெயிண்ட் நிறத்தை மாற்றுவதைப் பற்றிப் பேச வேண்டுமே ஒழிய பேருந்தைக் கொளுத்துவது பற்றி அல்ல.

இந்த நாட்டில் நிறையப் பேருக்குப் பிடிக்காத சொற்களில் ஒன்று - சமம். குழந்தை பிறக்கும் மருத்துவமனை முதல் இறந்தோரை எரிக்கும் சுடுகாடு வரை, அதை எதிலும் ஏற்க முடியாது நம்மவர்களால். மொத்தத்தில் இந்த இடியாப்பச் சிக்கலின் மூலம் எதுவென்றால், அது ஒரு சமூகமாக நாம் எவ்வளவு முதிர்ச்சி அடைந்திருக்கிறோம் அல்லது நல்லவர்களாக இருக்கிறோம் என்பதிலேயே இருக்கிறது. என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் அடிப்படையில் கோளாறு இருக்கும் வரை மேற்படைகளில் கொண்டு வரப்படும் உறுதி அடிப்படையையும் சேர்த்தே ஆட்டும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்