எர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: சந்திரகாந்தன்) - 2/2


"துப்பாக்கி இல்லாமல் புரட்சி நடத்தவே முடியாது." என்று இளமைக் காலத்தில் சே சொன்னதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக ஆயுதங்கள் ஏந்தி ஆக வேண்டும். ஆயுதத்தை மட்டும் நம்பி இறங்க முடியாது. பல தந்திரங்களும் மூளை உழைப்பும் கூடச் செய்தாக வேண்டும். சனநாயகத்தில் துப்பாக்கி இல்லாமலும் புரட்சிகள் செய்ய முடியும் என நினைக்கிறேன். கத்தியின்றி இரத்தமின்றிச் செய்யப்படும் புரட்சிகள், புரட்சிகள் என அழைக்கப் படாமல் இருக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும். சனநாயகத்தில் இருக்கும் சர்வாதிகாரிகளை எப்படி வெல்வது? துப்பாக்கி எடுத்துத்தானே முடியும்?

"சிறு பிள்ளைப் பிராயம் தொட்டே நாடு சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் எர்னஸ்டோ. அவரைச் சுற்றியுள்ள யதார்த்தத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விழைந்தார். அந்த அறிவு புத்தகங்களின் மூலம் பெறப்பட்டதாக இல்லாமல், யதார்த்தத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தலைநகரில் மட்டுமின்றி, தூரத்து மாநிலங்களிலும் வாழும் மக்கள் எத்தகைய வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ள அவர் மிகவும் ஆர்வம் காட்டினார். அர்ஜண்டைன் விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், இந்தியர்கள் எங்ஙனம் வாழ்கிறார்கள் என்று அறிய விரும்பினார். மொத்தத்தில் தமது தாய் நாட்டைத் தரிசிக்கவும், அதன் பம்பாஸ் புல்வெளி, மழைத் தொடர்கள், பருத்தியும், பராகுவேயன் தேயிலையான மேட்டும் விளைகிற வடக்கு உஷ்ணப் பிரதேசம் ஆகிய பகுதிகளைக் கண்ணாரக் கண்டு களிக்கவும் அவர் விரும்பினார். ஆனால் ஒருமுறை பார்வையிட்ட பிறகு, இது பற்றாது, பிற லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பார்வையிடுவது, அந்த நாடுகளது மக்களின் பயம், நம்பிக்கை, வாழ்க்கை ஆகியன பற்றி அறிந்து கொள்வதும் அவசியம் என்று அவர் கண்டு கொண்டார். அப்போதுதான் தன்னை இடை விடாமல் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு - இந்தக் கண்டத்தில் வாழும் மக்களது வாழ்க்கையை இன்னும் சிறப்புடையதாக்குவது எங்ஙனம்? ஏழ்மை, நோய் ஆகியவற்றின் பிடியிலிருந்து அவர்களை நில உடைமையாளர்கள், முதலாளிகள், வெளிநாட்டு ஏக போகங்களின் அடக்குமுறைத் தளையிலிருந்து விடுவிப்பது எங்ஙனம் என்ற கேள்விகளுக்கு - உண்மையான பதிலைக் கண்டறிய முடியும் என்று அவர் கருதினார்." என்றொரு நீண்ட பத்தி அவருடைய ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் பற்றிச் சொல்கிறது.

தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்வோர் தவிர்த்து, தான் சார்ந்த சமூகத்தைத் தன் குடும்பமாக்கி வாழ விழைவோர் யாராக இருந்தாலும் இந்த ஊர் சுற்றல் வேலையைச் செய்தே ஆக வேண்டும். கலைஞர்கள், படைப்பாளிகள், சமூகப் பணியில் ஈடுபடுவோர், அரசியலாளர்கள் ஆகிய அனைவருமே மக்களோடு மக்களாகப் போய்ப் பார்த்தால் ஒழிய உண்மை நிலவரம் முழுமையாகப் புரிபடாது. எங்கள் பணியில் "GO SEE YOURSELF" என்றொரு நுட்பம் உண்டு. அதாவது, "நீயே சென்று பார்" என்று பொருள். எவ்வளவுதான் நூல்களைப் படித்தாலும் அறிக்கைகளை வாசித்தாலும் அது உண்மை நிலவரத்தை உணர்த்தாது என்பதாலேயே அப்படிச் சொல்லப் படுகிறது. அதனால்தான், முன்பெல்லாம் "உன்னோடு பஸ்ஸில் செல்பவனுக்கு ஓட்டுப் போடு. அவனுக்குத்தான் உன் வாழ்க்கை தெரியும்!" என்று நம்ம ஊரில் சொல்வார்கள். இப்போதெல்லாம் பஸ்ஸில் செல்லக் கூடியவராக இருந்தால் அந்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் நம்ம மக்கள். "அவனுக்கே பஸ் காசு இல்லாதவன் நமக்கு எப்படித் தண்ணி வாங்கி ஊத்த முடியும்?!" என்று தப்பி ஓடி விடுவார்கள். இப்படிச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இறங்கி விட்டால், தனக்கென்று ஒரு தொழில் வைத்துக் கொள்ள முடியாது. சவுகரியங்கள் - சுகங்கள் பார்க்க முடியாது. எதுவும் வேளா வேளைக்கு நடக்காது. இதையெல்லாம் தாங்கித்தான் - தாண்டித்தான் புரட்சியாளர்கள் உருவாக முடியும். சுய வளர்ச்சிக்காக இதையெல்லாம் தாங்குவோர் இருக்கிறார்கள். தன் சமூக வளர்ச்சிக்காக? "ஏய்... போங்கப்பா... போய் ஆகுற வேலையைப் பாருங்க!" என்கிறீர்களா?!

"வானுயர்ந்த மலைகள், ஆழம் காணப்படாத பெருங்கடல்கள் இவற்றோடு ஒப்பிடுகிறபோது துரும்பெனத் தோன்றுகிற நம்மைப் போன்ற மனிதர்களால்தான் இந்த நகரமும் பிரம்மாண்டமான படிக்கட்டும் நிர்மாணிக்கப் பட்டது என்பதை நினைத்துப் பார்க்கும் போது வித்தியாசமான உணர்ச்சிக்கும் புதிதாக ஒன்றைக் கண்டறிந்த ஆனந்தக் களிப்புக்கும் ஆளாக நேர்கிறது. வானுயர்ந்த மலைகளையும் ஆழம் காணப்படாத பெருங்கடல்களையும் எப்போதும் மனிதன் வென்று வந்திருக்கிறான். ஜெட் விமானத்தின் மீது ஏறி உயர்ந்த வானத்தில் பறக்கவும், பிரபஞ்ச வெளியில் கிரகங்களிடையே தோன்றவும், சந்திர மண்டலத்தில் கால் பதித்து நடை பழகவும், அணுவின் உட்கருவைச் சிதைக்கவும் வல்லமை பெற்றவர்களாய் விளங்குகிற இன்றைய மனிதர்களான என்னையும் உங்களையும்..." என்று சோவியத் எழுத்தாளர் எஸ். எஸ். ஸிபிர்னோவ் பெரு நாடு பற்றி எழுதியபோது எழுதியதாக ஒரு பத்தி வருகிறது. இது பற்றி நானும் பல முறை எண்ணி வியந்திருக்கிறேன். ஒரு மனிதன் இந்த அண்ட சராசரத்தில் எவ்வளவு சிறிய துகள்? இருப்பினும் என்னவெல்லாம் செய்ய முடிகிறது அவனால்? முடியாதது என்று எதுவுமே இல்லை என்கிற அளவு ஆகி விட்டது. அப்படி முடியாது என்று சொல்லப் படுகிறவையும் இப்போதைக்கு முடியாதவை என்றே சொல்ல வேண்டும்.

"மனிதனின் பலஹீனங்கள் என்று சொல்லப் படுகிற அனைத்திலும் அவர் புகையிலை, புத்தகங்கள், செஸ் என்ற மூன்று பலஹீனங்கள் மட்டுமே உடையவராய் இருந்தார்." என்று மியல் கூறுவதாக ஒரு குறிப்பு. இங்கே இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசியாக வேண்டும். என் நண்பன் நாதன் அடிக்கடிச் சொல்வான். "படிப்பதை மட்டும் ஒரு கெட்ட பழக்கம் போல் பழகிக் கொள்ள வேண்டும்!" என்று. அதாவது, அந்த அளவுக்கு அடிமையாகிக் கொள்ள வேண்டுமாம். நல்ல பழக்கங்களுக்குத்தான் அடிமையாக்கும் திறமை இல்லையே! அவன் சொன்னது கல்லூரியில் படிக்கும் காலத்தில். பாடப் புத்தகங்கள் படிப்பது பற்றி. அதையே பொதுவாகப் புத்தகங்களுக்கு என்று வைத்துக் கொள்வோம். தீவிர வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனின் மூளையை மிகப் பெரிய அளவில் விரிவு படுத்த முடியும். அதுவும் பொது வாழ்க்கையில் இறங்குவோருக்கு மிக முக்கியம். அடுத்தது செஸ் பற்றி. சிறு வயதில் அது விளையாண்டால் புத்தி வளரும் என்று கேள்விப் பட்டு மிகவும் முயன்று பார்த்தேன். என்னவோ அதில் மனம் ஈடுபடவே மறுக்கிறது. மூளையை அந்த அளவு கசக்கப் பிடிக்காதது ஒரு காரணம். அதுவும் ஒரு விளையாட்டுக்காக என்கிறபோது சுத்தமாகப் பிடிக்கவில்லை. விளையாட்டு என்பதே மகிழ்வாய்ப் பொழுது போக்க என்று போகையில் அதிலும் மூளையைக் களைப்படைய வைப்பதில் பிரியமில்லை. இன்னொன்று அதில் வீணாகும் நேரம். மணிக்கணக்காக விழுங்கி விடுகிறது. திரைப்படம் பார்க்கப் பிடிக்காமல் போன ஒரே காரணம் அதுதான். அந்த நேரத்தில் நன்றாகத் தூங்கினால் கூட உடலும் உள்ளமும் புத்தணர்ச்சியோடு எழ வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. ஆர்வம் வராததால் இவ்வளவு வீண் விளக்கங்கள் கொடுப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

"புரட்சிகர அரசியல்வாதிகள் துறவிகள் போல் வாழ வேண்டும் என்று சே அடிக்கடி கூறுவார். அதிகாரிகளில் பலர் - குறிப்பாக அதிகச் சம்பளம் வாங்குவோர் - சொத்து சேர்ப்பதிலும், அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து அபகரிப்புச் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், ஆடம்பரமான பங்களாக்களில் வாழ்ந்து குடித்துச் சீர்கெட்டுப் போவதிலும் தங்களது நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிற எங்களது நாட்டில் அவரது முக்கியத்துவம் வாய்ந்ததுதான்." என்று மியல் கூறுவதாக ஒரு கூற்று வருகிறது. அடப்பாவிகளா! அங்கேயுமா? இந்த வார்த்தைகள் அனைத்தும் அப்படியே எங்கள் அதிகாரிகளைச் சொல்வது போல் இருக்கின்றனவே. ஒருவேளை இப்போதுதான் அவர்கள் சில தலைமுறைகளுக்கு முன்பு இருந்த மாதிரி ஆகியிருக்கிறோம் போல்த் தெரிகிறது. அப்படியானால், இன்னும் சில தலைமுறைகள் தாண்டி அவர்கள் போல நாமும் உருப்படலாம். சே சொன்னதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. புரட்சிக்காரர் என்போர் அனைவரும் மிகவும் மாடர்னான ஆசாமிகள் போலத் தோன்றலாம். முக்கியமாகக் கைகளில் மாடர்ன் துப்பாக்கிகள் வைத்திருப்பதால். ஆனால், அவர்களும் துறவிகள் போல் வாழ்வோரே. நம் நாட்டில் கூட பொதுவுடைமைவாதிகள் பற்றி வலதுசாரிச் சூழலில் வளர்ந்தோர் பலரிடம் சரியான கருத்து இல்லை. கொள்கையால் எதிரெதிர்த் துருவங்களாக இருப்பதால் வலதுசாரிகளால் அவர்கள் தவறாகவே சித்தரிக்கப் பட்டு விட்டார்கள். உண்மை என்னவென்றால் வாழ்க்கை முறையில் இடதுசாரிகள் வலதுசாரிகளுக்குப் பிடித்த துறவிகள் போல வாழ்வோர். அவர்களிலும் நிறையத் திருமணம் செய்து கொள்ளாமலே வாழும் தியாகிகள் இருக்கிறார்கள். சமூகப் பணிகளுக்காகக் குடும்பங்களைத் துறந்தவர்கள் இருக்கிறார்கள். காலமெலாம் கந்தல்த் துணிகளையே கட்டி அழிந்தோர் இருக்கிறார்கள். துறவிகளுக்கு சமாதி நிலை அடைவது போல இவர்களுக்கு சமூக மாற்றம் தவிர மனதில் எதுவுமே ஓடுவதில்லை.

"குவேராவைப் பொருத்தவரை, அவரிடம் சொல் ஒன்று செயல் ஒன்று என்பதே கிடையாது. எந்த நிலையிலும், தன்னால் இயலாத ஒரு காரியத்தை - அல்லது தான் செய்யத் தயாராகாத ஒரு காரியத்தை - யாரேனும் செய்யட்டும் என்று அவர் ஒருபோதும் கூறியதே இல்லை. கொள்கை ரீதியான விவாதங்களைப் போலவே நடைமுறை உதாரணமும் முக்கியத்துவம் உடையது என்று அவர் நம்பினார். எங்கள் நாடுகளில் தனிப்பட்ட முன்னுதாரணம் பிரம்மாண்டமான அளவுக்கு விளைவுகள் ஏற்படுத்தும். நாங்கள் ஏராளமான தத்துவ ஆசிரியர்களை - குறிப்பாக வாய்ச்சொல் வீரர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் சொன்னதைச் செய்து காட்டும் மனிதர்கள் சிலரைத்தான் சந்தித்திருக்கிறோம். சே, சொன்னதைச் செய்து காட்டுபவர். சியாரா மாய்ஸ்ட்ராவில் அவர் சண்டை மட்டும் போடவில்லை; காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்; பதுங்கு குழிகள் தோண்டினார்; பட்டறைகள் அமைத்தார்; முதுகில் சுமைகள் தூக்கினார். குழுத்தலைவரின் சுமையை மட்டுமல்லாது சாதாரண வீரனொருவனின் பூட்சைக்கூட அவர் சுமந்தார். தொழில்முறை அமைச்சராக இருந்தபோதும் அவர் அங்ஙனம்தான் நடந்து கொண்டார். கட்டுமானப் பணிகள் நடந்த இடங்களில் வேலை பார்த்தார்; கப்பலில் இருந்து சாமான்களை இறக்க உதவு புரிந்தார். ட்ராக்டர் ஓட்டினார்; கரும்பு வெட்டினார்." என்றும் சேயின் குணாதிசயங்கள் பற்றி மியல் கூறுகிறார்.

இதில் எனக்கு முக்கியமாகப் பட்டவை சில. ஒன்று - தன்னால் முடியாததை இன்னொருவரைச் செய்யச் சொல்லக் கூடாது. ஓர் அணியாக வேலை செய்யும்போது ஒருவரால் முடியாதது இன்னொருவருக்கு முடியும்; ஒருவரால் முடிந்தது இன்னொருவருக்கு முடியாது. அதுதான் அணியின் பலமே. தனித் தனியாகச் செய்ய முடியாததை எல்லோருமாக இணைந்து செய்தால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் எவராலும் முடியாத வேலைகளைத் தான் செய்யாமல் இன்னொருவரிடம் திணிப்பது நல்ல தலைமைப் பண்புக்கு அடையாளமே அல்ல. இன்று பணியிடங்களில் இந்த மாதிரி வேலைகளைச் செய்வோர்தான் எளிதில் அணியின் ஒத்துழைப்பை இழக்கிறார்கள். இன்னொன்று - களப்பணி ஆற்றும் தலைவர்களுக்கு எப்போதுமே அணியினரிடம் மரியாதை இருக்கிறது. அது தவறு என்றுகூட நிறையக் கருத்துகள் சொல்லப் படுகின்றன. அந்த நேரத்தை வியூகம் அமைப்பதில் செலவிட்டால் மேலும் பெரிதான வெற்றிகள் பெறலாம் என்று சொல்கிறார்கள். அது பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால், வியூகம் மட்டுமே அமைத்துக் கொண்டிருக்கும் தலைவர்களுக்குப் போலி மரியாதை கிடைக்கிறதே ஒழிய அணியினர் அவர்கள் மீது அபிமானம் கொள்வதில்லை. எவ்வளவுதான் சாதித்தாலும் தன்னோடு வந்தமர்ந்து தன் வேலையையும் செய்யும் தலைவர்களையே அவர்கள் விரும்புகிறார்கள். இதுவும் ஒருவித வியூகம்தான். அணியின் உற்சாகத்துக்காகச் செய்ய வேண்டிய நுட்பமான விஷயங்கள் இவை.

"தென் அமெரிக்காவில், பசிபிக் சமுத்திரக்கரை வழியே பயணம் செய்தபோது கண்ணுற்ற தாமிரச் சுரங்கங்களும், தொழுநோயாளிகள் காலனிகளும், இந்தியர்களது குடியிருப்புக்களும்தான் அவரை மாற்றின. இந்த மாபெரும் கண்டத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும், இந்தியர்களும் மீளவே முடியாத வறுமையிலும், தரித்திரத்திலும் ஒருபுறம் உழன்று கொண்டிருந்தனர்; இன்னொரு பக்கத்தில் இவர்களைச் சுரண்டி, கொள்ளையடித்து, ஏமாற்றி சேர்த்த செல்வத்தை இரக்கமில்லாத, பணவெறி பிடித்த சிலர் தண்ணீரைப் போல் செலவழித்துக் கொண்டிருந்தனர். ஏன் இந்த முரண்பாடு என்ற கேள்வியே அவரிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது." என்ற வரிகள் காந்தி மதுரைப் பக்கம் பயணிக்கும்போது நம் விவசாயிகளைக் கண்டு தன் நாகரிக உடைகளைத் தூக்கி வீச முடிவு செய்த கதை நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் அப்படியே நம்ம ஊரில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நடந்தால் அந்த மண்ணில் புரட்சி வரும் என்று கொள்ளலாமா? ஆனால், இங்கொரு சே தோன்ற வேண்டுமே. தோன்றி விட்டாரா அவர்? எங்கே இருக்கிறார்? இல்லை, அப்படியொரு புரட்சியாளனைப் பெரும் தகுதி நமக்கு இல்லையா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

"மெக்சிகோ நகரில் எனது மகள் பிறந்தபோது அவளைப் பெருவியன் என்றோ அர்ஜெண்டைன் என்றோ நாங்கள் பதிந்திருக்க வேண்டும். மெக்சிகோவில் தற்காலிகமாக வசித்த நாங்கள் அப்படிப் பதிவதுதான் பொருத்தமானது. நாங்கள் தோல்வியுற்று நாட்டிற்கு வெளியே வாழ்ந்த கசப்பான நேரத்தில் எங்களுக்கு இடமளித்து ஆதரவு காட்டிய மெக்சிகன் மக்களுக்கு மரியாதை செய்யும் முகமாகவும் அவர்களைப் போற்றும் பொருட்டும் நாங்கள் எங்கள் குழந்தையை மெக்சிகன் என்றே பதிவு செய்தோம்" என்று 1959-இல் சியம்பரி என்ற மெக்சிகோப் பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது சே கூறியதாக வருகிறது. இது அப்படியே ஒரு புரட்சியாளனுக்கே உரிய சிந்தனை. சாமானியர்கள் இப்படி யோசிப்பதே இல்லை. நம்ம ஊரில் வாழ வந்த மற்றவர்கள் இதைச் செய்யும்போது நமக்குப் பெருமையாகிறது. இதை நம்மவர்கள் வெளியூரில் போய்ச் செய்தால் கோபம் வருகிறது. அடையாளத்தை இழத்தல் என்பதற்கு அப்பாற்பட்டு, இது ஒருவித நன்றி செலுத்துதல். பயந்து போய்ச் செய்தல் வேறு இருக்கிறது. அது பற்றிச் சொல்லவில்லை.

"தமது தாய் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த ஏனைய அகதிகளிலிருந்து வேறுபாட்டு விளங்கிய இந்த அர்ஜெண்டைன் மருத்துவர் அர்ஜெண்டைனாவைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், முழு லத்தீன் அமெரிக்கா பற்றிச் சிந்தித்து, லத்தீன் அமெரிக்காவை அமெரிக்க ஐக்கிய நாடுகளது அடிமையாய் பிணைத்திருக்கும் சங்கிலியின் 'பலஹீனமான கண்ணியைக்' கண்டறிய முயன்றார்." என்றொரு பத்தி வருகிறது. அடப்பாவி நீங்கதானா அதுக்கெல்லாம் காரணம்? எவ்வளவு காலமாக இந்த உலகின் பிரச்சனைகளுக்குக் காரணமான நாடாக இருக்கப் போகிறார்களோ இவர்கள் தெரியவில்லை. இன்னொன்று - தன் வீடு, தன் வீதி என்ற சிந்தனைகளை எல்லாம் தாண்டி வருவது மட்டுமல்ல, தன் நாடு என்கிற சிந்தனையையும் தாண்ட வேண்டும் ஒரு நல்ல மனிதாபிமானி. அப்படி இருந்திருக்கிறார் சே.

"1956-இல் நாம் சுதந்திரம் பெறுவோம்; அல்லது தியாகிகள் ஆவோம்" என்று பாடிஸ்டாவை எதிர்த்து நியூயார்க்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது பிடல் கூறினாராம். என்ன சொல்ல? இப்படித்தான் சுதந்திரப் போர்கள் அனைத்துமே நடத்தப் பட வேண்டும் போல்த் தெரிகிறது.

"அவரது வழிநடப்போர் மாணவர்களாகவும், இளம் தொழிலாளர்களாகவும், அலுவலக ஊழியர்களாகவும், கைத்தொழிலாளர்களாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த மேல்வகுப்பு மாணவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது; தெளிவான திட்டம் கிடையாது. அவர்கள் 'தாய்நாட்டின் மீது நேசம், பாடிஸ்டாவின் மீது வெறுப்பு' என்ற மதிப்பு மிக்க குணாம்சத்தைப் பெற்றிருந்தார்கள்." என்றொரு பத்தி வருகிறது. உண்மை. இவர்களெல்லாம் சேர்ந்தால்தான் போராட்டம் நடத்த முடியும். உலகப் போராட்டங்கள் அனைத்திலுமே இவர்கள் எல்லோரும் இருப்பார்கள். அதுபோலவே அவர்கள் எல்லோருமே எல்லாக் கொள்கைகளையும் கரைத்துக் குடித்த பேரறிவாளர்களாக இருக்க முடிவதும் இல்லை. அவரவருக்கென்று வேலைகள் இருக்கும். அது போக மீதி நேரங்களில் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள். தன்னைச் சுற்றி இருக்கிற - தான் அறிவாளி என்று நினைக்கிற ஆட்களின் பக்கம் சேர்ந்து அவர்களால் முடிந்ததைச் செய்வர். எல்லோருமே அரசியல் அனுபவம் பெற்று விட்டுத்தான் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றால் அந்த இடத்தில் ஒருக்காலும் புரட்சி நடக்கவே நடக்காது.

"பிடல்தான் இந்த இளைஞர்களின் உண்மையான நாயகன். அவரது வழிநடப்போரைப் போலவே அவரும் இளைஞர். அவர் திறமையான பேச்சாளி, கம்பீரமான தோற்றமுடையவர்; மிகுந்த தைரியமுடையவர்; இரும்பொத்த இதயம் கொண்டவர். அவர் கியூபாவின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தார். சமகாலக் கியூபன் அரசியலின் குழப்பங்கள் ஊடே அவர் தனது பாதையைத் தவறின்றி வகுக்க வல்லவராய் இருந்தார், எந்த எந்தத் தீமைகள் களைந்தெறியப் பட வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார். அவற்றைப் பற்றிய தனது உறுதியான கருத்துக்களை நீதிமன்றத்தில், 'வரலாறு எனக்குத் தீர்ப்பளிக்கும்' என்ற உரையில் எடுத்துக் கூறினார்." என்று பிடல் பற்றி ஒரு பத்தி வருகிறது. புரட்சிகளை வழி நடத்திய எல்லாத் தலைவர்களுமே பெரும்பாலும் பெரும் பெரும் பேச்சாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதில் எனக்குத் தெரிந்து ஒரு விதிவிலக்கு என்றால் பிரபாகரன். அப்படியானால் அவருடைய சிந்தனையும் செயல்பாடும் அதையும் மறக்கடிக்கும் அளவுக்கு பலமாக இருந்திருக்க வேண்டும்.

"எனக்கு முதன்முதலாகப் புரட்சிக்காரர்களின் தலைவரோடு பழக்கம் ஏற்பட்டபோது - சாகசம் புரிய வேண்டும் என்கிற உத்வேகத்தால் நான் அவர்பால் ஈர்க்கப் பட்டேன் - வெற்றி கிட்டுமா என்ற ஐயம் எனக்குள் இருக்கவே செய்தது. ஆனாலும் அந்த நேரத்தில் நான், உன்னதமான இலட்சியங்களின் பெயரால் இன்னொரு தேசத்தின் மண்ணில் இறந்து போவது ஒன்றும் தவறான காரியமில்லை என்று நினைத்துக் கொண்டேன்." என்று சே சொன்னதாக ஒரு பத்தி. சாகசங்களில் பெரிதாக ஆர்வம் இல்லாத ஆள் நான். அந்த அளவுக்கு தைரியம் இல்லை என்று சொல்ல வேண்டும். ஆனால் இது போன்ற ஆட்கள் நிறைய நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். பயத்தை மட்டும் தொலைத்து விட்டால் இந்த உலகம் இன்னும் எவ்வளவோ கிளர்சியூட்டுவதாக இருக்கும் என்பது நன்றாகவே புரிகிறது. அதுவும் இறப்பை இவ்வளவு சாதாரணமாக ஏற்றுக் கொள்வதென்பது என்னால் கற்பனையே பண்ணிப் பார்க்க முடியாதது. ஒருவேளை, அந்த அளவு உள்ளக் குமுறலும் அதற்கேற்ற சுற்றமும் அமைந்தால் அதெல்லாம் வந்து விடுமோ என்னவோ?

குவேராவின் அணியிலிருந்து போராடிய கேப்டன் மார்சியல் ஓரோஸ்கா எழுதுகிறார்: "அவரிடம் ஏகப்பட்ட புத்தகங்கள் இருந்தன. அவர் அதிகப் புத்தகங்கள் படித்தார். எந்த நிமிடத்தையும் வீணாக்க மாட்டார். படிப்பதற்காகவோ அல்லது டைரியில் குறிப்பு எழுதுவதற்காகவோ அவர் அடிக்கடி தூக்கத்தைத் தியாகம் செய்வார். அதிகாலையில் எழுந்து விடுவாரானால் உடனே படிக்கத் துவங்கி விடுவார். அந்த நாள் படிப்போடு துவங்கும். அடிக்கடி முகாம் விளக்கின் வெளிச்சத்தில் அவர் இரவுகளில் நெடுநேரம் படித்துக் கொண்டிருப்பார். அவருக்கு அற்புதமான கண்ணோட்டம் இருந்தது.". படிப்பது பற்றி ஏற்கனவே பேசி விட்டோம். எல்லாத் துறைகளிலுமே நிறையப் படிப்போருக்கென்று ஒரு பலம் உண்டு. புரட்சியாளர்களும் நிறையப் படித்துப் படித்துத்தான் தம்மை வலுவாக்கிக் கொள்கிறார்கள். எல்லாப் புரட்சியாளர்களும் அப்படி இருப்பதில்லை. ஆனால் புரட்சித் தலைவர்களாக ('புரட்சித் தலைவர்' என்ற சொற்களுக்குத் தமிழ் நாட்டில் வேறு பொருள் என்று தெரிந்தும் இப்படி எழுதத் துணிந்ததற்கு என்னை நீங்கள் பாராட்ட வேண்டும்!) இருப்பவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களையும் அவர்களின் மூளையையும் நம்பித்தானே அத்தனை பேர் உயிரைக் கூட மறந்து விட்டு வருகிறார்கள். அதற்கான பொறுப்புணர்ச்சி அவர்களுக்கு வேண்டுமல்லவா!

"இந்த அசாதாரணப் புரட்சிக்காரர் அவர்களிடமிருந்து வேறு பட்டவராக இருந்த போதும், வித்தியாசமான அர்ஜெண்டைன் மொழி பேசியபோதும், குவாஜிரோக்கள் அவரை மதித்தனர். உலகின் எந்தப் பாகத்திலும் போற்றப் படுகிற மானுடக் குணங்களான - எளிமை, துணிச்சல், நேர்மை ஆகிய குணங்களால் அவர் பல விவசாயிகளைக் கவர்ந்தார்." என்று சே பற்றி ஒரு சிறு பத்தி வருகிறது. எல்லாப் பண்பாட்டிலுமே அடுத்தவரை ஒரு மாதிரியாகப் பார்க்கிற பழக்கம் இருக்கத்தான் செய்யும் என நினைக்கிறேன். அதையும் மீறி அவரைத் தம்முள் ஒருவராகப் பார்க்க வைத்தது எதுவென்றால், அது அவருடைய மேற்சொல்லப் பட்ட குணங்களாகவே இருக்க வேண்டும். தமக்காகப் போராட வந்திருக்கும் ஒருவன் சாதாரணப் பட்ட ஆளாக இருந்தால் கூட மதியாமல் விட வாய்ப்புண்டு. அல்லது பண்பாளனாக மட்டும் இருந்தால் கூட அதற்கு வாய்ப்புண்டு. அறிவாளியும் பண்பாளனும் செயல்வீரனுமாக இருக்கிற ஒருவனை அவ்வளவு எளிதில் அப்படியெல்லாம் உதாசீனப் படுத்த முடியுமா என்ன? அது யாருடைய இழப்பு?

"சிலருக்கு குதிரை மாமிசம் உண்ணுவது தர்ம சங்கடமாக இருந்திருக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு அது வயிற்றைப் புண்ணாக்கும் ஒரு காரியம். அவர்கள் தங்களை நரமாமிசம் உண்ணுபவர்களாகக் கருதினார்கள். மனிதனின் நீண்டகால நண்பனைத் தின்ன வேண்டியிருக்கிறதே என்று அவர்கள் வருந்தினார்கள்." என்று சே நினைவு கூர்வதாக ஒரு பத்தி. தன்னோடு உடன் வருகிற - தனக்குப் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுகிற ஒரு விலங்கை உணவுக்குப் பயன்படுத்துதல் பாவம் என்கிற மனோபாவம் தென் அமெரிக்க நாடுகளில் கூட இருந்திருக்கிறது. எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கிற விவசாயிகள் மாடு இறந்தால் அதைக் கறி வைத்துச் சாப்பிட மாட்டார்கள். அதை முறைப்படி அடக்கம் தான் செய்வார்கள். பொதுவாகவே மாட்டுக் கறியே சாப்பிடுவதில்லை. அதற்குக் காரணம் இந்த உணர்வாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

"'பார்புடோக்களை' (தாடிக்காரர்கள்) - பிளேடு கிடைக்காத காரணத்தால் முகத்தை மழித்துக் கொள்ளாத பிடலின் ஆட்களை இப்படித்தான் விவசாயிகள் அழைத்தனர்..." என்றொரு வரி வருகிறது. ஓ, இதுதான் காரணமா? நம்ம ஊரில் கூட திராவிட இயக்க காலங்களில் தாடி வைத்தால் புரட்சியாளன் என்கிற ஓர் உணர்வு இருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவும் துறவிமார்களைப் போன்ற வாழ்க்கை என்று சொல்லத்தக்க ஒரு விஷயம்தானே.

"இந்த நிகழ்ச்சியின்போது எங்களது வழிகாட்டியான இலிஜியா மென்டோசாவை நாங்கள் இழந்தோம். கையில் கைத்துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அவர் எதிரிகளை நோக்கி ஓடியபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்து போனார். அவர் மூட நம்பிக்கைகளை உடையவர். ஒரு தாயத்து அணிந்திருப்பார். துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அவர் ஓடுகிறபோது நாங்கள் 'எச்சரிக்கை' என்று குரல் கொடுத்தோம். அதற்கு அவர் 'எனது குரு என்னைக் காப்பார்!' என்று பதில் சொன்னார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் எந்திரத் துப்பாக்கியின் குண்டுகளுக்குப் பலியாகி இரண்டு துண்டுகளாகக் கிடந்தார்." என்று 'கியூபா: புரட்சிகர யுத்தத்தின் கதை' என்ற நூலில் சே நினைவு கூர்வதாக ஒரு பத்தி வருகிறது. இறைவனை வணங்கி விட்டு வண்டியை எடுப்பவர்களும் விபத்தில் இறக்கத்தான் செய்கிறார்கள். இறைவனைக் காணப் போவோரே வழியில் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இதையெல்லாம் கொண்டு இறைவன் இல்லையென்று சொல்வதற்கில்லை என்றாலும், இது போன்ற நம்பிக்கைகள் மனதுக்கு நல்லதே ஒழிய அவற்றில் பெரிதாக வேறு பலன்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

* பாதியில் விடப்பட்ட பல நூல்களில் இதுவும் ஒன்று. மொத்த நூலையும் முடித்திருந்தால் ஒரே இடுகையில் எல்லாத்தையும் எழுத முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. கண்டிப்பாக மீண்டுமொருமுறை ஆரம்பத்தில் இருந்து படித்து முடிக்க வேண்டும்.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி