தமிழ்நாடு: அல்லவை 10!

தமிழ்நாடு: டாப் 10 எழுதியபோது அதற்கடுத்த வாரம் தமிழகத்தின் பத்துப் பிரச்சனைகள் பற்றியும் எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். அதற்கு தமிழ்நாடு: வீக் 10 என்று பெயரிடலாம் என்றும் எண்ணியிருந்தேன். அதே வேளையில் ஆங்கிலம் கலந்த தலைப்பை முழுமையாகத் தமிழ் படுத்த வேண்டும் என்ற கவலையும் ஒருபுறம் வாட்டிக் கொண்டிருந்தது. அதனால் தொடர்ந்து டாப் 10 - வீக் 10 மாதிரியே எதுகை மோனையோடு தமிழ்ச் சொற்களும் தேடிக் கொண்டிருந்தேன். இன்னா நாற்பது - இனியவை நாற்பது பாணியில் இன்னா பத்து - இனியவை பத்து என்றிடலாம் என்றோர் எண்ணம் தோன்றியது. அதன் பின் நல்லவை பத்து - அல்லவை பத்து அதைவிட நன்றாக இருப்பது போலொரு எண்ணவோட்டம். எனவே, அதையே இருமனதாகத் தேர்ந்தெடுத்து விட்டேன். இதைவிட இன்னா-இனியவை இணை பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினால் சொல்லுங்கள். அப்படியே மாற்றி விடுவோம். 

இடையில் வந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட், தமிழக சட்டசபைத் தேர்தல் வெப்பம் மற்றும் அலுவலக வேலைகள் காரணமாகத் தாமதம் ஆகிவிட்டது. டாப் 10 பற்றி எழுதும் போது எவ்வளவு பெருமைப் பட்டேனோ அதே அளவு – அளவிலாத சிறுமைப் பட்டு இதை எழுதுகிறேன். பெருமையை மட்டும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு சிறுமைகளை மறைக்கிற – கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமல் நியாயப் படுத்துகிற சின்னத்தனம் என்றும் உருப்படுவதற்கான வழியில்லை என்பதை முழுமையாக உணர்ந்து எழுதுகிறேன். இதோ இவைதான் நான் தமிழனாகப் பிறந்ததற்காக நொந்து நூலாகி வெளியில் சொல்லவே வெட்கப் படும் பத்து விஷயங்கள்:

1. நம் அரசியல்:
இது பற்றிப் பேச இதைவிடச் சிறந்த தருணம் இருக்க முடியுமா? எத்தனை சின்னத்தனங்கள் மொத்தமாய் ஊர்வலம் வருகின்றன? எதைப் பற்றிப் பேசுவதென்றே தெரியவில்லை. அவ்வளவு குழப்பம். காமராஜர் போன்ற ஒரு மகான் அமர்ந்த இருக்கையில் எப்படி எப்படிப் பட்டோரேல்லாம் வந்து இருந்து நாறடித்து விட்டுப் போய் விட்டார்கள்?! அதெப்படி இப்படித் திடீரென ஓர் இனத்தின் சுவையே மாறிவிடும்? இதற்கெல்லாம் நான் ஒரே காரணம் என நினைப்பது நாம் உணர்ச்சிக்குக் கொடுத்திருக்கும் இடம். எல்லா இடத்திலும் உணர்ச்சிதான் நம் முடிவுகளை முடிவு செய்கிறது. அறிவுக்குப் பெரும்பாலும் ஓய்வு கொடுத்து விட்டுத்தான் நம் அறிவார்ந்த விவாதங்களே நடத்தப் படுகின்றன.

நன்றாகப் பேசுவோர் – நன்றாக எழுதுவோர் எல்லாம் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நம்பியதும் அது முதல் முறை பொய்ப்பிக்கப் பட்டவுடன் சுதாரித்துக் கொள்ளாததும் எவ்வளவு பெரிய தவறுகள்? பேச்சும் எழுத்தும் கூடப் பரவாயில்லை. நன்றாக நடிப்போரையும் நாட்டைக் கொடுத்துத்தான் கவுரவிக்கிறோம். அதுவும் நன்றாக நடிப்போர் என்று சொல்ல முடியாது. நல்லவர் போல் நடிப்போர்! ஓர் அரசியல் தலைவன் சாவுக்குத் தீக்குளிப்பவர்களின் – தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை இங்களவுக்கு எங்கும் இல்லை என நினைக்கிறேன். என் காசை எனக்குக் கொடுக்கிறார்கள் என்பது கூடப் புரியாமல் யாரோ தன் சொந்தக் காசை இழப்பது போல அவர்களுக்காகப் பேசும் அறியாமையைக் கண்டால் எனக்கு அப்படி வரும்.

சரி, தலைவன்/ தலைவிதான் இப்படியென்றால், அதற்கடுத்த வரிசையில் உள்ள ஆட்களாவது உருப்படியா என்றால், எல்லாம் ஆகக் கழிசடைகள். வால்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை புற்றுநோய் பிடித்ததுபோல் ஆகிவிட்டது நம் அரசியல். எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பெரும்பாலான கட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன. நாடு முழுக்கவே அரசியலில் தரம் தாழ்ந்து விட்டது என்றபோதிலும் நாம்தான் அனைத்து விதமான ஈனத்தனங்களுக்கும் முன்னோடியாக இருக்கிறோம். இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழலை நம்மவர்கள்தான் செய்திருக்கிறார்கள். அதில் கொடுமை என்னவென்றால் அதையும் சிலர் மானங்கெட்டுப் போய்ப் பெருமையாய்ப் பேசுகிறார்கள் – நியாயப் படுத்துகிறார்கள்.

அடுத்த கொடுமை என்னவென்றால், அப்படி நியாயப் படுத்துவோர் யார் என்று பார்த்தால், ஏதோவொரு வகையில் அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தின் ஆட்சியில் பயன் பெற்றிருப்பார்கள். அந்த ஒரே காரணத்துக்காக சாகும்வரை அந்தக் கட்சித் தலைவன்/ தலைவிக்கு சிங்கி அடிப்பார்கள். மற்ற எந்த விஷயத்தில் அந்தத் தலை எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டாலும், அதுதான் இந்தியாவில் தோன்றிய தலைகளிலேயே சிறந்த தலை - காந்தியை விடப் பெரிய தலை என்றெல்லாம் வாதிடுவார்கள். இப்படிச் சட்ட திட்டங்களால் பயன் பெற்றுக் குருடானவர்களைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். வேறு சிலரோ ஏதோவொரு தவறான வருமானத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் போதும்; தலையைக் கடவுள் முதலாக என்னென்னவோ சொல்லி மொழியையே நாற வைப்பார்கள்.

ஒரு முறை மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையிலான நூற்றிச் சொச்ச கிலோ மீட்டர் தொலைவில் தங்கள் தலை வருகிறதென்று எழுதிப் போட்டிருந்ததை எல்லாம் பார்த்து விட்டு எனக்குக் கிறுக்கே பிடித்துவிடும் போல் ஆகி விட்டது. தமிழில் இருக்கிற அத்தனை நல்ல சொற்களையும் கெட்ட வார்த்தைகளாக்கி விட்டனர் பாவிகள். ஒரு சிலர் திருடராயிருந்தாலும் திறமைசாலிகள். வேறு சிலரோ எந்தத் தகுதியுமற்ற வீணாய்ப் போனவர்கள். வேறு எந்த மாநிலத்திலும் அப்படி ஓர் ஆளை அரசியலிலேயே இருக்க விட்டிருக்க மாட்டார்கள். இனம் புரியாத கவர்ச்சி என்பது எல்லா ஊரிலும் இளைஞர்களுக்கு மட்டும்தான் இருக்கும். நம்ம ஊரில்தான் எல்லாப் பருவத்தினரும் அப்படிப்பட்ட எல்லையில்லாத கொள்ளைப் பிரியம் (கொள்ளைக்காரர்கள் மீது வைப்பதால் அதை அப்படிச் சொல்லவில்லை!) கொண்டுள்ளனர்.

கொலையும் கற்பழிப்பும் என் வீட்டில் நடக்காத வரை அதை நான் ஆதரிப்பேன் என்கிற அளவுக்கு சுயநல மனோபாவம் நம் அளவுக்கு எங்கும் இல்லை. தவறை யார் செய்தாலும் தவறு என்று சொல்ல முடியாதவர்கள் பிள்ளைகளை எப்படி ஒழுங்காக வளர்ப்பார்கள் என்று தெரியவில்லை. குற்றவாளி நிரூபிக்கப் படாதவரை நிரபராதி என்பது உலக நியாயம். குற்றம் ஊரறிய வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்ட பின்பும் அவரை நல்லவர் என்பதும் – மதிப்பீடு செய்யவே மறுப்பதும் நமக்கே உரிய நற்குணங்கள். குடும்பத்துக்கும் கூத்தியாளுக்கும் வேறு விதமான உறவினருக்கும் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுக்கும் நாகரிகம் வேறெங்கும் இந்த அளவு தலை விரித்து ஆடியதில்லை இதுவரை. நம்மைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொண்டு ஆரம்பித்தால் உண்டு. தமிழ்நாட்டைவிட அதிகமாக ஓட்டுக்குக் காசு கொடுக்கும் அவலம் எங்காவது இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள். உலக வரலாற்றில் எங்காவது தொலைக்காட்சிப் பெட்டியும் மின்விசிறியும் கொடுத்து ஓட்டுக் கேட்கும் கேலிக் கூத்து பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?

நம் மண் மீது நம் அளவுக்கு அக்கறை கொண்டவர் வேற்றுக் கிரகத்தவராக இருந்தாலும் நம்மை ஆள்வதில் தப்பில்லை. ஆனால், நம்மிடமுள்ள ஆட்கள் எல்லோரையும்விட எல்லா வகையிலும் சிறந்த ஆளாக இருந்தால் அதில் அர்த்தம் இருக்கிறது. எதற்கென்றே தெரியாமல் மண்டையில் இருக்கும் களிமண்ணைக் குழைத்து பொம்மை செய்து பேசினால் அதெப்படி புத்தி உள்ள எவருக்கும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இருக்கும்? நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஓர் இனம் எப்படித் தன் விடுதலை பற்றிச் சிந்திக்காமலே இருக்க முடியும். துளி கூட அறிவில்லாத சில மக்கு மண்டையர்கள்கூட ஒரு நேரத்தில் பொறுமை இழந்து மாற்றத்துக்குப் போராட ஆரம்பிக்கிறார்கள். உலகத்திலேயே நாங்கதான் பெரிய பருப்பு என்று பெருமைப் படும் ஓர் இனம் எப்படி அப்படி இருக்க முடியும்?

நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்டும் ஆர்வத்தைக் கூட – சம்பந்தம் செய்வதில் காட்டும் கவனத்தைக் கூடத் தம் நாட்டை ஆளப்போவோரைத் தேர்ந்தெடுப்பதில் காட்டாதது எனக்குப் பெரும் ஏமாற்றத்தையும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளையும் உண்டு பண்ணுகின்றன. அதற்கெல்லாம் காரணம் நாம் அடிப்படையிலேயே கொஞ்சம் தரங்கெட்ட கூட்டமோ என்றும் அடிக்கடித் தோன்றும்.

2. சினிமாப் பித்து:
மேலே பேசியதும் இதுவும் நிறையத் தொடர்புடைய விஷயங்கள். கலையை ரசிக்கும் நல்ல மனோபாவம் நம்மிடம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது என்பது பெருமைப் பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், ஒரு கலைஞனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை கொஞ்சம் ஓவர் அல்லவா? சினிமா நடிகர் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைப்பது முதல் அவர்களுக்காக விரலை வெட்டிக் கொள்தல், சண்டைகள் போட்டு உயிர்களை மாய்த்துக் கொள்தல், கோயில் கட்டுதல், மன்றம் என்று ஒன்று வைத்துக் கொண்டு பண்ணும் அட்டூழியங்கள், நியாயமான விமர்சனங்களைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்துச் செய்யும் அடாவடிகள், கூலி வேலையில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாக்காரன் படக் கட்-அவுட்கள் வைப்பதில் அழித்தல், கணவன்-மனைவி உறவில் கூட சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து உருவாக்கிக் கொண்ட எதிர்பார்ப்புகளோடு ஏமாந்து கொள்தல், ‘அவர் யாருக்குச் சொல்கிறாரோ அவருக்குதான் ஓட்டுப் போடுவேன்’ என்ற பைத்தியக்காரத்தனம், தனக்குப் பிடித்த நடிகன்-நடிகையையெல்லாம் வருங்கால முதல்வர் என்று நோட்டீஸ் அடித்து வாழ்த்துதல் என கோபமும் சிரிப்பும் ஒருங்கே வரவைக்கும் எத்தனையோ கேலிக் கூத்துகள்.

இவையெல்லாவற்றையும் விடப் பெரும் வேதனை – கடந்த நாற்பத்தைந்து ஆண்டு காலமாக சினிமாக்காரர்களுக்கு மட்டுமே (ஏதோவொரு வகையில் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்கள்) நம்மை ஆளும் உரிமையை அளித்திருக்கும் அறிவீனம். இந்தியாவில் ஒரு மாநிலம் காட்ட முடியுமா இது போல? இதற்குக் கூட சில படித்த முட்டாள்கள் விளக்கம் வைத்திருக்கிறார்கள். சினிமாக்காரர்களும் நம்மில் ஓர் அங்கமே என்கிறார்கள். யார் இல்லை என்றது? அவர்கள் வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படும் அதீத மரியாதையில் ஓர் அடிப்படைக் கோளாறு இருக்கிறது என்பது மட்டுமே நம் குற்றச்சாட்டு. நிறையப் பேருக்கு ஒழுங்காகப் பேசவே தெரியவில்லை. சினிமாவில் பேசிய வசனங்களையும் வாயசைத்த பாடல்களையும் மட்டுமே காரணமாக வைத்து அவர்கள் மீது வெறித்தனமான அன்பு காட்டுகிறார்கள். சினிமாவில் வருவது போலவே உண்மையிலும் அவர்கள் பெரும் அறிவாளிகள் என்று நினைத்து விடுகிறார்கள்.

பத்துப் பதினைந்து வருடம் பழகிய நண்பர்களைக் கூட சினிமா பற்றிய வாக்குவாதங்களில் எதிரிகளாக்கி விடுகிறார்கள். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிறுக்குத்தனத்தின் உச்சத்தில் இருந்தோம். யாரோ ஒருத்தர் ஏதோவொரு மூலையில் இருந்து தலைவனின் படத்தை விமர்சித்தால் “இரத்த ஆறு ஓடும்” என்று எங்கோவொரு மூலையில் இருந்து மூளை கலங்கிய ஒருத்தன் நோட்டீஸ் அடித்து ஒட்டுவான். பத்திரிகைகளிலும் சேனல்களிலும் குறிப்பிட்ட நடிகரின் படங்களை உண்மையிலேயே குப்பையாக இருந்தாலும் குப்பை என்று சொல்லப் பயப்படுவார்கள். நல்ல வேளை ஓரளவுக்கு அதற்கெல்லாம் முடிவு வந்து விட்டது இப்போது. ஆனால், இன்னமும் சினிமாக்காரர்கள் கோட்டையைக் கோடம்பாக்கத்துக்கு அருகில் இருக்கிற இடம் போல நினைத்துக் கொண்டு ஆசைப் படுவது கொஞ்சம் மன உளைச்சலையும் எரிச்சலையும் உண்டு பண்ணுகிறது.

அடுத்து, உலகின் எந்த மூலையிலாவது ஒரு நடிகைக்காக கோயில் கட்டிய கேவலம் உண்டா என்று விசாரித்துப் பாருங்கள். அது ஏன் இங்கு மட்டும் நடக்கிறது? உலகில் எங்காவது ஒரு நடிகருக்கு பால் அபிசேகம் செய்கிற கோமாளித்தனம் உண்டா என்று விசாரித்துப் பாருங்கள். அது ஏன் இங்கு மட்டும் நடக்கிறது? இவர்கள்தாம் இப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனங்கள் செய்கிறார்கள் என்றால் நம் பத்திரிகைக்காரர்களாவது இவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டு நம் மானத்தைக் காக்கலாம். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? வேடிக்கையானது எது நடந்தாலும் காட்டுவதுதானே அவர்களுடைய வேலை. நாய் மனிதனைக் கடிப்பது செய்தியல்ல. மனிதன் நாயைக் கடிப்பதுதான் செய்தி என்பார்கள். அது போல, இப்படிப் பட்ட மனநலக் குறைவுகளை எடுத்துக் காட்டுவதுதானே அவர்கள் பணி. கூடவே அதை மனநலக் குறைவால் செய்யும் வேலை போலக் கொஞ்சம் கேவலமாகவும் காட்டினால் அது போன்ற வேலைகளைச் செய்வோர் திருந்த வாய்ப்பு இருக்கிறது. அவர்களைப் பெரிய சாதனையாளர்கள் போலக் காட்டினால் இன்னும் கொஞ்சம் பித்து கூடத்தானே செய்யும்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில், படிக்காதவர்கள்தாம் படப் பைத்தியம் பிடித்து அலைவார்கள்; படித்துப் பட்டம் விடுவோர் எல்லாம் அப்படி இல்லை என்றெண்ணிக் கொண்டிருந்தேன். படித்தவர்களோடும் பழக ஆரம்பித்த பின்புதான் புரிந்தது - அவர்கள் எந்த வகையிலும் படிக்காதோருக்குச் சளைத்தவர்கள் இல்லை என்று. நடிகர்களைப் பற்றிய வாக்குவாதங்களில் கத்திக் குத்துகள் நடத்திக் கொண்ட கல்லூரி மாணவர்கள் பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். வேலைக்கு வந்த பின்பு பார்த்தது என்னவென்றால், தான் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதை - அதுவும் மற்ற மொழி பேசுவோரிடம் வெறுப்படிக்கும் அளவுக்கு அந்த நடிகர் பற்றியே புகழ்ந்து புகழ்ந்து பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கும் சில பெரிய பெரிய பதவிகளில் இருக்கும் ஆட்களை எல்லாம் கண்டபோது எனக்கு ஒன்றும் புரிபட வில்லை. இந்த அளவுக்கா சினிமா மோகம் எம் மக்களைப் பீடித்திருக்கிறது?! நம்பவே முடியவில்லை என்னால்.

இத்தோடு தொலைக்காட்சிப் பித்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பல வீடுகளில் தொலைக்காட்சித் தொடர்கள் ஓடும் மாலை வேளைகளில் வேலையே நடப்பதில்லை. பல இடங்களில் தம் குடும்பப் பிரச்சனை ஒன்றைப் பற்றிப் பேசுவது போலவே தொடரில் கண்ட பிரச்சனைகள் பற்றிப் பேசுகிறார்கள். இந்தப் பித்துதானே தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஏமாந்து நாட்டை இழந்த சூழ்நிலைக்கு வழிகோலியது.

3. தனி மனித வழிபாடு:
மேற்கண்ட இரண்டு பிரச்சனைகளிலும் இருக்கும் ஒரு பொது அம்சம் - மித மிஞ்சிய தனி மனித வழிபாடு எனும் உளவியல் அவலம். அரசியலிலும் சினிமாவிலும் மட்டுமில்லை. இதய தெய்வம் எனல்களும் கோயில் கட்டுதல்களும் மட்டுமல்ல. வியாபாரிகள் சங்கம் மற்றும் இரயில்வே ஊழியர்களின் சங்க நோட்டிஸ்களிலும்  கூட அவர்களுடைய தலைவரை 'அஞ்சா நெஞ்சன்', 'பயமறியாப் பாயும் புலி' என்றெல்லாம் அடைமொழி கொடுத்து அசிங்கப் படுத்துகிறார்கள். ஒரு வேளைச் சாப்பாடோ குடிக்கத் தண்ணியோ வாங்கிக் கொடுத்து விட்டால் ஒருத்தரை என்ன வேண்டுமானாலும் சொல்வேன் என்கிற போக்கு, மொழியையும் அல்லவா அழித்து விடும். இப்படித்தான் ஏற்கனவே தமிழின் மிக அழகான பல சொற்கள் பொருள் இழந்து விட்டன.

ஒரு குறிப்பிட்ட ஆளுக்காக மட்டுமே ஒரு கட்சியைச் சார்ந்திருத்தல் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆளுக்காக மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்த்தல் போன்றவை எல்லாம் நம் தனி மனித வழிபாட்டின் அடையாளங்களே. திறமையைப் போற்றுதல் வேறு. அதைக் கொண்டிருப்பவரை எல்லாத்திலும் சிறந்தவராக சித்தரித்தல் வேறு. இந்த வழிபாடு, ஒருவருடைய மொழி ஆளுகை கண்டும் செய்யப் படுகிறது. தன் சாதிக்காகக் குரல் கொடுப்பது போல் வந்து நின்றால், அவர் பின்னாலும் ஏமாந்து போய்ச் செய்யப் படுகிறது. இத்தனை நாள் எங்கிருந்தான் என்று வியக்கிற மாதிரித் திடீரென வந்து குதிப்பான் - இத்தனை நாள் எங்கிருந்தார்கள் என்று வியக்கிற மாதிரித் திடீரென அவன் பின்னால் கூட்டம் கூட்டமாகப் போய்க் குவிவார்கள் - அவன் தகுதி தராதரத்துக்கு மிஞ்சி அவனைப் புகழ்வார்கள் - திடீரென நடு வீதியில் விட்டு விட்டு வேறொருத்தன் பின்னால் ஓடி விடுவார்கள்.

இதில் இரண்டு விதம் இருக்கிறது. எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் தன் மூளையில் இருக்கும் ஏதோவொரு கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட ஆள் பின்னால் காலம் எல்லாம் சுற்றி வீணடிப்பது ஒன்று. இப்படியெல்லாம் இவனைப் புகழ்ந்து பேசினால் அவனும் ஏமாந்து தனக்கு வேண்டியவற்றை அள்ளி அள்ளிக் கொடுப்பான் என நினைத்து காற்றுள்ள போது மட்டும் தூற்றுவது - பின்னர் தூற்றுவது இன்னொன்று. இந்த இரண்டாவது வகை காலம் காலமாக நம் பண்பாட்டில் இருந்து வரும் கோளாறு. சங்க காலத்தில் அரசவையில் புலவர்கள் செய்ததை இன்று பாராட்டு விழாக்களில் கவிஞர்கள் செய்கிறார்கள். இதற்கு இருவருடைய பிச்சைக்காரத்தனமுமே காரணம். தலைவனுக்கு வேண்டியது புகழ்ப் பிச்சை. புகழ்பவனுக்கு வேண்டியது அதற்குக் கைமாறாக எது கிடைத்தாலும் சரி என்கிற மாதிரியான பிச்சை. "அம்மா தர்மம் போடுங்கம்மா... காசிருந்தா காசு போடுங்க... இல்லைன்னா சோறிருந்தா சோறு போடுங்க... அதுவும் இல்லைன்னா கஞ்சி இருந்தா கஞ்சி ஊத்துங்கம்மா..." பாணிப் பிச்சை.

ஆயிரக் கணக்கான ஆட்கள் முன்னிலையில் என்னைப் பத்துப் பேர் புகழ்ந்தால் என் மவுசு கூடும் என்று எண்ணிக் கொண்டு, கோடிக்கணக்கான மக்கள் பணத்தைக் கொட்டி, பாராட்டு விழாக்கள் ஏற்பாடு செய்து கொண்டு, வாய்நீரை வடித்துக் கொண்டு புகழ்ச்சி வார்த்தைகளுக்குக் காத்திருக்கும் எச்சத் தனம் நம் இன அவலம். புகழக் கூடி வந்த ஒவ்வொருத்தரும் வந்து வேறு வழியில்லாமல் புகழும்போது அவரவர் மனதுக்குள் எவ்வளவு திட்டிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாத - அதையெல்லாம் பார்த்துச் சகிக்க முடியாமல் எத்தனை பேர் காறித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத பிறவிகளைத் தலைவர்களாக்கியது நம் இனத்தின் இழுக்குதானே.

இந்தத் தனி மனித வழிபாடுதான் இன்று வாரிசு அரசியலுக்கும் வம்ச அரசியலுக்கும் குடும்ப அரசியலுக்கும் மூல காரணம். எவ்வளவு திறமை இருந்தாலும் மற்றவர்கள் வெளியில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்கும் அதுதான் காரணம். இதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை கீழோர் கீழோராகவே இருக்க வேண்டியாகி விடும். இதைச் செய்யும் கீழோருக்குத்தான் இது புரியவே மாட்டேன் என்கிறது. இந்தத் தனி மனித வழிபாடுதான் நம் தலைவர்களை மேலும் நல்லவர்களாக விடாமல் கெடுப்பது. இதுதான் அவர்களைப் புகழுக்கு மயங்கி, தன்னை மறந்து, கடைசியில் தரம் கெட்டவர்களாக ஆக்கி விடுவது. இந்தத் தனி மனித வழிபாடுதான் நம் கலைஞர்களைத் திறமையைத் தீட்டாமல் கூட்டம் சேர்க்கும் வேலைகளில் நேரத்தை வீணடிக்கப் பணிப்பது.

4. சுய நலம்:
ஈழப் பிரச்சனை முதல் ஊழல்ப் பிரச்சனை வரை எல்லா இடங்களிலும் நாம் நிரூபித்திருப்பது நாம் எவ்வளவு சுயநலம் பிடித்த ஈனப் பிறவிகள் என்பதே. தினமும் நாளிதழ் வாசிக்க வேண்டியதில்லை - நிறைய நூல்கள் படிக்க வேண்டியதில்லை - பெரும் அறிவாளியாக இருக்க வேண்டியதில்லை. பச்சிளம் குழந்தைகளைக் கை-கால் துண்டித்துக் கதற விடுவதையும் பெண்களை மானபங்கப் படுத்தித் துடிக்க விடுவதையும் நடக்கக் கூட முடியாத பெரியோர் நடு வீதியில் குண்டு வெடிப்புகளுக்கு இடையில் சிக்கிச் சீரழிவதையும் கண்டவர்கள், அவை எவ்வளவு கொடுமையான சித்திரவதைகள் என்பதை ஒரு நிமிடம் உட்கார்ந்து யோசித்திருந்தால் போதும். ஒரு பொத்தானை மாற்றி அழுத்தியிருப்பார்கள் (கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பற்றிச் சொல்கிறேன்!). வாக்களித்த நான்கு கோடித் தமிழரில் பத்து விழுக்காட்டினர் அப்படி மாற்றி அழுத்தியிருந்தால் போதும். எல்லாமே மாறியிருக்கும்.

இன்று இலட்சக் கணக்கான உயிர்களின் தலை விதியே மாறியிருக்கும். ஈழத் தமிழருக்கு எதிரான ஒரு மாபெரும் இனப் படுகொலைக்குத் துணை போன ஈனத் தமிழர் என்ற சாபம் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். இந்த சாபம் என்றோ ஒருநாள் நம் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் அடிக்காமலா போய்விடும்? அந்த நிமிடத்தில் நமக்குப் பெரிதாகப் பட்டது கிடைத்த சில நூறு ரூபாய் நோட்டுகள். இதை என்னால் அறியாமை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழ்மையின் காரணமாக ஏற்பட்ட சமரசம் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. கேரளாவிலோ கர்நாடகத்திலோ இதைவிட ஏழ்மையில் இருக்கிறவர்கள் கூட இப்படிக் காசை வாங்கிக் கொண்டு கல்நெஞ்சம் கொண்டோராக மாறியிருக்க மாட்டார்கள். காசுக்காக எதையும் செய்யும் - தன் நலத்தைத் தவிர எதையும் பற்றி சிந்திக்க மறுக்கும் நம் பரம்பரைப் பண்பாடுதான் இதில் வெளிப்பட்டுள்ளதே தவிர வேறொன்றில்லை.

தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் செய்த பிரச்சாரங்களை வேறு மாநிலங்களில் செய்திருந்தால் கூட அவர்கள் எல்லாம் இரக்கப் பட்டுத் தம் வாக்குகளை மாற்றிப் போட்டு உதவியிருப்பார்கள். இதை ஒரு தமிழ் உணர்வு சார்ந்த பிரச்சனையாகக் கூட நான் பார்க்க வில்லை. இது ஒரு மனித உணர்வு சார்ந்த பிரச்சனை. ஒரு குண்டூசி குத்தினால் அதன் வலியை உணரக் கூடிய அளவு உங்கள் உடல் மரத்துப் போகாமல் இருக்கிறது என்றால், இந்தக் குண்டு வீச்சுகளைக் கண்டு துடிக்கிற அளவு உங்கள் மனம் மரத்துப் போகாமல் இருக்க வேண்டும். அதுதான் உங்கள் உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஆதாரம். இதில் ஒன்றை மட்டும் உணர முடிகிறது மற்றொன்றை முடியவில்லை என்றால் நீங்கள் தமிழர் என்று பொருள். சுயநலம் உங்கள் பண்பாடு என்று பொருள்.

 யாரும் நம்மைப் போருக்குத் துணைக்கழைக்க வில்லை. அடிபட்டவர்களுக்கு மருந்து போட அழைக்க வில்லை. நம்மிடம் எதிர் பார்க்கப்பட்டதெல்லாம் ஒரே ஒரு பொத்தானை மாற்றி அழுத்த வேண்டும் என்பது மட்டுமே. அங்கே அடித்தால் இங்கே வலிக்கிறது என்கிற உணர்வை மட்டும் ஏதோவொரு வகையில் பதிவு செய்ய வேண்டும் என்பது மட்டுமே. அதைக் கூடச் செய்யவில்லையே நாம். நாம் எப்படிப் பொதுநலவாதிகள் ஆவோம்?

எதைப் பேசினாலும் ஈழப் பிரச்சனையை அடிப்படையாக வைத்துப் பேசும் ஆள் அல்ல நான். அந்த ஒரு காரணத்துக்காகவே நம்மை சுயநலப் பேய்கள் என்று முடிவு செய்து விட்ட முன்புத்திக்காரன் அல்ல நான். தமிழ்நாட்டில் பேருந்தில் இடம் போடுவதைப் பாருங்கள். இரயில்களில் பொதுப் பெட்டிகளில் போய்ப் பாருங்கள். சினிமாக் கொட்டகைகளில் கொஞ்சம் நோட்டம் விட்டுப் பாருங்கள். பொது இடங்களில் தனக்கு வேண்டியதைப் பிடிக்க நம்மவர்கள் செய்யும் அட்டகாசங்களைப் பாருங்கள். அதை உணராமல் அலைகிற வரை நிம்மதியாக இருக்கலாம். அதையெல்லாம் உணர்ந்து நோக்க ஆரம்பித்து விட்டால் கொதித்துப் போவீர்கள். வாழ்க்கையையே வெறுத்து விடுவீர்கள். புதிதாகத் திருமணம் ஆனவராக இருந்தால் இந்த நாட்டில் நம் குழந்தையைப் பெற்று வளர விடவா என்று குழந்தைப் பேற்றைக் கூடக் கை விட்டு விடுவீர்கள்.

மூன்று பேர் உட்காரும் இருக்கையில் பைகளையெல்லாம் பரப்பிப் போட்டு ஒருத்தன் உட்கார்ந்திருப்பான். அதை நகற்றச் சொல்லி முன்னால் போய் நின்றால், கண்ணே தெரியாதவன் போல வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். சத்தமாகச் சொன்னால், சண்டைக்காரன் போல, "வேற இடமே இல்லையா இந்த வண்டியில்?" என்று முறைத்துக் கொண்டு கேட்பான். இதையெல்லாம் நான் இந்தப் பதிமூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூடக் கர்நாடகத்தில் அனுபவித்ததில்லை. சென்ற ஞாயிற்றுக் கிழமை கூட ஒசூர் போயிருக்கையில் ஒரு பன்றி மூஞ்சிக்காரன் நடு ரோட்டில் நின்று கொண்டு வண்டிக்கு வழி கொடுக்க மறுக்கிறான். ஒரு எட்டு வைத்து ஒதுங்கி நின்றான் என்றால் நான் எளிதாகப் போய் விடலாம். ஆனாலும் ஏதோ கொழுப்பு. அப்படியே நிற்கிறான். நமக்குத்தான் பன்றிகளோடு சண்டை போடுவது பிடிக்காதே. எவ்வளவு சிரமம் ஆனாலும் பரவாயில்லை என்று வளைத்து வட்டமடித்து, பின்னால் வரும் பஸ்ஸில் அவன் அடிபட்டுச் சாகட்டும் என்று சாபம் மட்டும் போட்டு விட்டுக் கடந்து சென்றேன். இத்தனைக்கும் அவன் குடிகாரனும் அல்ல. இளமைத் துடிப்பில் இயங்கும் குறை வயதுக்காரனும் அல்ல.

இது போன்ற அனுபவங்கள் வேறு எங்கும் கிடைக்குமா தெரியவில்லை. இதையெல்லாம் சுயநலம் - சூ*** கொழுப்பு என்பவை தவிர்த்து எந்த வகையில் சேர்க்க என்று தெரியவில்லை. இது போல ஒன்றல்ல - இரண்டல்ல... பல கதைகள் உண்டு என்னிடம். நான் பிறந்த இனத்தின் பெருமையை உலகுக்குச் சொல்ல! நினைவுக்கு வரும்போதெல்லாம் இங்கு வந்து நிரப்புகிறேன்.

5. குறுக்குப் புத்தி / திருட்டுத்தனம்:
குறுக்குப் புத்தி என்பதும் குறுகிய மனப்பான்மை என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு. அவை இரண்டுமே நம் பிரச்சனைகள் என்றபோதும் இரண்டும் வெவ்வேறு பிரச்சனைகள். இரண்டாவது பற்றி ஆறாம் எண்ணுக்குக் கீழ் பேசுவோம். இப்போதைக்கு குறுக்குப் புத்தி பற்றி மட்டும் பேசுவோம். குறுக்குப் புத்தி என்பது நேர்வழியில் செல்லாமல் காரியம் சாதிக்க வேண்டும் என்கிற மனோபாவம். அதுதான் திருட்டுத் தனத்தின் இளமைக் காலம். திருட்டுத்தனம் குறுக்குப் புத்தியின் முதுமைப் பருவம். அதனால்தான் உலக வரலாற்றிலேயே பெரிய ஊழலை நம்ம ஆட்கள் நடத்திக் காட்டி இருக்கிறார்கள். அதனால்தான் உலகிலேயே முதல் முறையாக உலகின் மிகப் பெரிய சனநாயக நாடான நம் நாட்டில் கோடானு கோடிப் பணத்தைக் கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்க முயன்ற கேவலம் நடந்தேறியது.

எதையும் எப்படியும் சாதிக்கும் வல்லமை என்று பெருமையாகச் சொன்னால் கொஞ்சப் பேர் என் மீது குறைவாகக் கோபப் படுவார்கள். சின்ன வயதிலேயே கவனித்திருக்கிறேன். வெளிநாடு அனுப்புகிறேன் என்று சொல்லி ஏமாற்றுபவன் ஒருவன் நம் எல்லா நகரங்களிலும் இருப்பான் (இந்த விஷயத்தில் நம்மை விடக் கேவலமானவர்கள் நமக்கு மேற்கே இருப்பவர்கள். நம்மவர்கள் கீழ்த் தரமாகச் செய்கிற அதே வேலையை மிக நுணுக்கமாகச் செய்வார்கள் அவர்கள்!). ஒவ்வோர் ஆண்டும் நிதி நிறுவனம் நடத்துவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டு ஓடுபவன் ஒருத்தன் வெளிச்சத்துக்கு வருவான். காவி உடை உடுத்திக் கொண்டு காறித் துப்பும் அளவுக்கு வேலைகள் செய்யும் ஒரு மகான் அடுத்தடுத்து அவதாரம் எடுத்துக் கொண்டே இருப்பான்.

பெங்களூரில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களில் சிக்குபவர்கள் இரு சாரார். அதில் ஒன்று நம்மவர்கள். எங்கள் ஊர்க்கார அப்துல் ரகுமான் மாமா பல வருடங்கள் வெளிநாட்டில் மாடாக உழைத்துச் சம்பாதித்துக் கொண்டு வந்த பணத்தை பெங்களூரில் சில கொள்ளையர்களிடம் மாட்டி இழந்தார். தமிழில் பேசுகிறார்களே என்று நம்மவர்களிடம் கெஞ்சிப் பார்த்த போது அவர்கள் சொன்னது - "இதெல்லாம் நாங்கள் நிறையக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது. குடுக்குறதக் குடுத்துட்டுப் போய்கினே இரு!". டெல்லியில் இருக்கும் வக்கீல் அண்ணன் சொன்னார். டெல்லியில் ஒரு முறை ஐம்பத்தி இரண்டு சேப்படித் திருடர்கள் சிக்கினார்களாம். அதில் ஒருத்தன் கூட தமிழ் நாட்டுக்கு வெளியில் பிறந்தவன் இல்லையாம். இதெல்லாம் சொல்வது என்ன?

நான் முதன் முதலில் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது, இவரைப் பார்க்க வேண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருப்பேன். அப்போது சென்னைக்கார நண்பர் ஒருவர் கேட்டார் - "இந்த ஊர்ப்பக்கம் இருந்து வருகிற எல்லோருமே ஏன் ஆட்கள் பிடிப்பதே வேலையாக அலைகிறீர்கள்? இந்த நேரத்தில் வேலைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். நேரடியாக நாலு கம்பெனிகளுக்குப் போய் விசாரித்து வரலாம். ஏம்பா இப்டி இருக்கீங்க?". அந்த உண்மை மனசைக் கொஞ்சம் அறுக்கிற மாதிரி இருந்தது. அதன் பின்பு, பெங்களூரில் இருக்கும் காலத்தில், சென்னையில் இருந்து வந்த ஒருத்தன் முதல் நாளே கேட்டான் - "இந்தக் கம்பெனில யார் யார் பெரிய ஆளுங்க? யார் யாரக் கைக்குள்ள போட்டாக் காரியம் சாதிக்கலாம்?". அறிமுகப் படுத்தி வைத்தேன். அடுத்த நாள் முதல் என்னை ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று டீ குடிக்கத் தொடங்கி விட்டான். 'அடப்பாவி, நாங்கள் வேலை வாங்கும் முன் செய்வதை நீ உள்ளே வந்தபின் செய்கிறாய். அவ்வளவுதான் வேறுபாடு. மொத்தத்தில் இது நம் இனக் கோளாறு!' என்று நினைத்துக் கொண்டேன்.

எந்தக் கல்யாண வீடு போனாலும் அங்கே நாலு பேர் தன் மகன் பெங்களூரில் பெரிய பதவியில் இருப்பதாகவும் அங்கு வந்திருக்கிற வேலையில்லாத எல்லோருக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் பேசும் பேச்சுகளைக் கேட்டாலே இப்போதெல்லாம் கோபம் வருகிறது. அதையும் நம்பி அவர்களுக்குக் கூடுதல் கும்பிடு போட்டாலும் போடுவார்களே ஒழிய, முறையான வழியில் போய் முன்னுக்கு வர மாட்டார்களா பாவிகள் என்று பாவமாக இருக்கும்.

இன்னும் எத்தனை ஆட்சி மாற்றங்கள் நடக்கட்டும். உலகமே அழிந்து மீண்டும் உருவாகட்டும். சென்னையில் ஆட்டோக்காரர்கள் நியாயமாக மீட்டர் போடுவார்களா? வேறு எந்த ஊரிலாவது இந்த அளவுக்கு ஆட்டோக்காரர்கள் அநியாயம் பண்ணுவதைப் பார்த்திருக்கிறீர்களா? நான் பெங்களூர் வந்த காலத்தில் ஏறி உட்கார்ந்தால் கேள்வியே இல்லை; இறங்கும் போது மீட்டர்ப் படி பணம் கொடுத்தால் சரியாகச் சில்லறை திருப்பித் தருவார்கள். அடுத்து, ஒரு காலத்தில், தமிழ் நாட்டில் இருந்து வரும் ஆட்கள் எல்லாம் ஏறும் முன்பே எவ்வளவு என்று கேட்டுக் கேட்டு இங்கிருந்த ஆட்டோக்காரர்களையும் கெடுத்து விட்டார்கள். இப்போது இங்குள்ளவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் - "சென்னைக்குப் போய்ப் பாருங்கள். நாங்கள் எல்லாம் பல மடங்கு மேல் என்பீர்கள்!" என்று.

இன்னொரு முறை, வீட்டு வேலை செய்ய வந்த வடக்கன் ஒருவன் எங்களை ஏமாற்ற முயன்ற போது, பஞ்சாயத்துப் பண்ண வந்த உள்ளூர்ப் பெரிசு சொன்னார் - "ஏன்டா... இந்தியாவையே ஏமாற்றுகிறவன் தமிழன். நீ அவனையே ஏமாற்றப் பாக்குறியா?". ஒரு பக்கம் பெருமை. ஒரு பக்கம் கவலை. இதெல்லாம் தவறான கற்பிதங்கள் ஆகவும் இருக்கலாம். ஆனால், அதற்கு இடம் கொடுக்கிற அளவுக்கு யாரோ சிலர் நடந்ததால்தானே நமக்கெலாம் இந்தப் பெயர்?!

6. குறுகிய மனப்பான்மை / பிற்போக்குத் தனம்:
மற்ற இந்திய இனத்தவர் எல்லோருமே நம் மீது வைக்கும் ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டு நாம் குறுகிய மனப்பான்மை கொண்டோர் என்பது. அத்தகைய அபிப்பிராயத்தின் மூல வேர் எங்கே இருக்கிறது என்றால், அது நம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து கிளம்பி இருக்கிறது. எல்லோரும் இன்னொரு மொழியைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளதே என்று மகிழ்ந்து ஏற்றுக் கொண்டபோது இவர்கள் மட்டும் ஏன் அதில் அரசியல் பண்ணுகிறார்கள் என்று எல்லோரும் முகம் சுளித்தது உண்மைதான். அப்படி அரசியல் பண்ணியவர்கள் ஒரு சாரார் இனத்தின் மானத்தைக் காக்கப் போராடினார்கள் என்பதும் உண்மை. இன்னொரு சாரார் அதை வைத்து அரசியல் மட்டுமே செய்தார்கள் என்பதும் உண்மை.

ஆனால், இந்தக் காரணத்துக்காக நம்மைக் குறுகிய மனப்பான்மை கொண்டோர் என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் இந்தியை எதிர்த்ததன் பலனை இப்போது எல்லோருமே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் மற்ற மாநிலத்தவர் எல்லோருமே நம் போராட்டத்தை எதிர்க்க வில்லை. நம் அளவுக்கு அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்களிடம் திராணியும் அதற்கான தலைமையும் இல்லை. அவ்வளவுதான். சனநாயக ரீதியாக நடத்தப் பட்ட வாக்கெடுப்புகள் அனைத்திலும் மற்ற மாநிலத்தவரும் பெரும் அளவில் இந்தியை எதிர்த்து வாக்களித்தார்கள். ஆனால், அவர்களுடைய மக்களும் நம்மைக் குறுகிய மனப்பான்மை கொண்டோர் என்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டை நாம் ஓரளவு தவிர்ப்பதற்கான வழி - இந்தி பேசுவோரை வெறுப்பது, அவர்களுடன் பழக மறுப்பது, அந்த மொழியே எனக்குப் பிடிக்காது என்று விளக்கங்கள் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பது. நம்முடையதல்லாத ஒரு மொழியை நம் மீது திணிப்பதை அரசியல் ரீதியாக எதிர்த்தோம். அதே வேளையில் அந்த மொழி பேசும் சக மனிதர்களுடன் பழகும்போது அவற்றையெல்லாம் காட்டிக் கொள்ளக் கூடாது. அப்படியெல்லாம் நடந்து கொள்வதால்தான் நமக்கு இப்படியோர் அவப் பெயர் வந்தது.

அந்தக் காலத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்து மைசூரில் போய் குடியமர்ந்து விட்ட குடும்பத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவன் அவனுடைய திருமண நேரத்தில் மிகவும் மன உளைச்சலில் திரிந்தான். காரணம் என்னவென்று கேட்டால், "கர்நாடகத்திலேயே வளர்ந்தவன் நான். தமிழ் நாட்டுப் பெண்களோ மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை!" என்றான். அடக் கொடுமையே! இப்படியும் கூட ஒரு பிரச்சனையா? நம்முடைய ஆளே ஒருவன் அப்படி நினைக்கிறான் என்றால் அதில் ஏதோ இருக்கிறது. "அவனுக்கு சுய மரியாதை இல்லை. அதுதான் காரணம்!" என்று எளிதாகக் கதையை முடிக்கும் ஆர்வம் எனக்கில்லை.

நம் பெண்களும் அப்படித்தான். மற்ற ஊர்களில் சாதாரணமாக ஆண்களும் பெண்களும் அருகருகில் அமர்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பே மகன் வயதில் இருந்த ஒரு பையன் பேருந்தில் தெரியாமல் இடித்ததற்கு ஏதோ கற்பழித்து விட்டது போல ஓர் அம்மா போட்ட கூப்பாட்டை வைத்து ஒரு கதையே எழுதினேன். அதற்கொரு நியாயமான காரணம் இருக்கிறது. நம் பண்பாடு அப்படி. ஆனால் உலகம் இவ்வளவு வேகமாக மாறும் இவ்வேளையில் நாம் மட்டும் பழமையே பெருமை என்று பேசிக் கொண்டிருந்தால் அது உருப்படுவதற்கான வழி இல்லை.

நம் பெண்கள் மட்டுமில்லை. நம் ஆண்களுமே கூட பணியிடங்களில் மற்றவர்களோடு திறந்த மனதோடு பழகுவதில்லை. வந்தவுடன் தேடித் பிடித்து நம்ம ஆட்களிடம் மட்டுமே சேர்வார்கள். இதையே இதை விடக் கேவலமாகச் செய்வார்கள் மலையாளிகள். ஆனால் வெளியில் அசிங்கமாகத் தெரியாத மாதிரிச் செய்வார்கள். நாமும் அந்த நுணுக்கங்களைப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லோரையும் சமமாக நினைத்துப் பழகுதல் என்பது மிக அடிப்படையான ஒரு மனிதக் குணாதிசயம். அதையும் பழகிக் கொள்வோமே.

இதில் பெங்களூரில் என்று மட்டுமில்லை. ஊரிலும் பல விதமான கூத்துகள் நடக்கின்றன. சாதிக்காரனிடம் மட்டுமே பழகுவேன் - வியாபாரத் தொடர்பு வைத்துக் கொள்வேன் - கை கொடுத்து முன்னுக்குக் கொண்டு வருவேன் - மற்றவர்களை என்ன செய்தாவது அழிக்க முயல்வேன் என்கிற மாதிரியான மனப்பான்மை இருக்கிறது. தேவமார் சரத் குமார் படம் பார்க்கக் கூடாது - நாடாக்கமார் கார்த்திக் படம் பார்க்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் போடும் கேவலமான ஆட்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

சாதி இந்தியா முழுக்க உள்ளது. நம்மை விட மோசமாகவும் சில இடங்களில் உள்ளது. மற்ற விஷயங்களில் எவ்வளவோ முன்னுக்கு வந்த பின்னும் நம்மிடம் இது இருப்பதுதான் நிரம்பவும் கேவலமாக உள்ளது. பெரும்பான்மை சமூகத்தவர்கள் செய்வதைப் பார்த்து விட்டு, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த மற்றவர்களும் சாதிக் கட்சிகள் தொடங்குவது - மாநாடு நடத்துவது என்று இறங்கி விட்டார்கள். இதெல்லாம் நல்லதுக்கில்லை. எல்லோரும் அவர்கள் வீதிகளை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம்தாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுக்கிக் கொண்டிருக்கிறோம். அதுவும் பின்னோக்கிச் செல்வதற்கு.

நாம் மற்றவர்களின் மொழியைக் கற்றுக் கொள்ள முயல்வதில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. நம்மிடம் அவர்கள் மொழியைத் திணிப்பது தவறு. ஆனால், வேறோர் இடத்தில் பிழைக்கப் போனால் நாம்தாம் அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் முடியாது என்றால் எப்படி? அதற்கொரு முக்கியக் காரணம் நம் மொழியின் அமைப்பு. மற்றவர்களைப் போல நாம் வடமொழியின் உள்வரவைப் பெரிதளவில் அனுமதிக்க வில்லை. அதனால், நம் உச்சரிப்புகள் இன்னும் மற்ற மொழிகளோடு ஒத்திசையவில்லை. ஆனாலும், உலகப் பெரு நீரோடையில் நாம் இணைந்தே ஆக வேண்டும். அதற்கான அறிகுறி நம் அடுத்த தலைமுறை ஆட்களிடம் கொஞ்சம் தெரிகிறது.


7. சுத்தம் / பொது இட நாகரிகங்கள்:
மலையாளத்தார் நம்மைப் பாண்டி என்றழைக்கிறார்கள். கன்னடத்தார் கொங்கா என்கிறார்கள். அதுவும் எல்லோரும் சொல்வதில்லை. தவறான பிறப்பு-வளர்ப்பு கொண்டோர் மட்டுமே அப்படியெல்லாம் பேசுவது. நம்மில் சிலர் தெலுங்கர்களை கொல்டி என்பது போல. மலையாளிகளைக் கஞ்சி என்பது போல. பாண்டி என்பதற்கும் கொங்கா என்பதற்கும் பெயர்க்காரணம் அவர்கள் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாண்டி நாடும் கொங்கு நாடும்தான். ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லும் போது ஒருவித உயர்வு மனப்பானமையோடு சொல்வதும் அதற்குள் ஏதோ பொருள் பொதிந்திருப்பதும் புத்தியுள்ள நம்மவர்களுக்குப் புரியாததில்லை. இரு சாராரிடமுமே அப்படி என்னப்பா எங்களைப் பார்த்தால் உங்களுக்குக் கேவலமாகப் படுகிறது என்று கேட்டபோது, கேள்விப் பட்டது நாம் கொஞ்சம் ஒரு மாதிரி என்பது. ஒரு மாதிரி என்றால்?

மலையாளத்தார் சொல்வது - நம்மவர்கள் ஒழுங்காகக் குளிப்பதில்லையாம். சுத்தமாக இருப்பதில்லையாம். இதற்கான பின்னணியை ஆய்ந்தபோது எனக்குத் தோன்றியது இரண்டு விஷயங்கள். ஒன்று - அவர்கள் அப்படிச் சொல்வதன் முக்கியக் காரணம் நம் நிறம். அவர்களை விட நாம் இயற்கையிலேயே கறுப்பாக இருப்பதால், கறுப்பு அழுக்கின் நிறம் என்பதால், நம்மை எளிதாகச் சுத்தம் இல்லாதோர் என்று பட்டம் கட்டி விடுகிறார்கள். அது நம்முடைய குறை இல்லை. இயற்கையின் குறை. அதைப் பற்றியும் கடைசிப் பாய்ண்ட்டில் விரிவாகப் பேசுவோம். அவர்கள் அளவுக்கு ஐரோப்பியர்களும் மற்ற வெளியோரும் வந்து இங்கே இனக்கலப்புகள் நடக்க வில்லை. அதனால் நாம் கறுப்பாகவே இருந்து விட்டோம். "அப்படியெல்லாம் சிவப்பாவதற்குப் பதில் கறுப்பாகவே இருந்து விடலாம் கருமம்!" என்றும் நம்மில் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

இரண்டு - அவர்கள் யாரைப் பார்த்து விட்டு இப்படிச் சொல்கிறார்கள் என்றால், அது நம் ஊரில் இருந்து பெரும் பெரும் உத்தியோகங்களுக்குப் போன கனவான்களைக் கண்டு அல்ல; மாறாக, அவர்கள் உடம்பு வளையாத பல பணிகளைச் செய்யச் சென்ற உழைக்கும் எளிய மக்களைப் பார்த்து இப்படியொரு பிம்பத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். எனவே, அதையும் ஒதுக்கி வைத்து விடலாம். உழைப்பவன் கறுப்பாகத்தான் இருப்பான். அவன் அருகில் சென்றால் வியர்வை நாற்றம் வரத்தான் செய்யும். வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டு வேறு மாதிரியான தொழில்கள் செய்வதற்கு இது எவ்வளவோ மேல். ஒருவேளை, அவர்கள் சரியாகக் குளிக்காமலும் இருந்திருக்கலாம். அது பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. ஏனென்றால், குளு குளு அறைகளில் பணி புரியும் பலரே ஒழுங்காகக் குளிப்பதில்லை பெங்களூரில். அவர்கள் எந்த ஊர்க் காரர்கள் என்று சொல்லி என் தரத்தையும் நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதையெல்லாம் பார்க்கும் போது குளிக்கிற விஷயத்தில் நாம் கேவலமில்லை என்றே நினைக்கிறேன்.

கன்னடத்தவர் நம்மை ஒரு மாதிரி என்று சொல்வது நம் காட்டு மிராண்டித் தனமான பழக்க வழக்கங்களுக்காக. காட்பாடி என்றொரு பெயரும் இட்டிருக்கிறார்கள் நமக்கு. அப்படி ஓர் ஊரும் நம் மாநிலத்தில் இருப்பதால் அது அவர்களுக்கு மிக எளிதாகி விட்டது. அதாகப் பட்டது, நமக்குப் பல பொது இட நாகரிகங்கள் தெரியாது என்பது. இவர்களுக்கும் அதே பதில்தான். கர்நாடகத்துக்குச் சென்ற அன்றைய தமிழர்களும் பெரும்பாலும் உழைக்கும் மக்கள். சாலை வேலைகளுக்கும் பாலங்கள் கட்டவும் போனவர்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பதைப் பெரிது படுத்தக் கூடாது. ஆனால், அதை நியாயப் படுத்துவதற்கும் இல்லை. அவர்களும் குடிக்கிறார்கள். பல வீடுகளில் குடும்பத்தோடு அமர்ந்து, கதை பேசிச் சிரித்து, குடித்துக் கும்மாளம் அடிக்கிறார்கள். ஆனால், குடித்து விட்டு வீதிகளில் புரள்வதும் உளறித் திரிவதும் நம்மவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலே அதிகம்.

நான் பெங்களூர் வந்த புதிதில் கண்ட ஒரு காட்சி - நம்ம ஆள் ஒருத்தன் (உழைப்பாளிதான்!) மித மிஞ்சிக் குடித்து விட்டு பேருந்தில் ரகளையான ரகளை பண்ணுகிறான். எல்லோரும் பயந்து ஒதுங்குகிறார்களே ஒழிய, கேள்வி கேட்க நாதியில்லை. எல்லோரையும் "தே*** மகனே!" என்று திட்டித் தீர்க்கிறான். ஒரு பூச்சி கூடப் பதிலுக்குச் சத்தம் கொடுக்க வில்லை. யாருக்கும் புரிந்திராது என்றே நினைக்கிறேன். இன்னொன்று, எல்லா இடத்திலும் இது போல அவன் நடந்து கொள்ள முடியுமா என்றும் தெரிய வில்லை. ஆனாலும், நம்ம ஊரில் இப்படியொன்று நடக்க முடியுமா? அதே இடத்தில் இன்னொரு நாயகன் உருவாகியிருப்பானே.

இன்னொரு முறை, குடும்பச் சண்டை ஒன்று வீதியில் நடந்து கொண்டிருந்தது. எது எதையோ எடுத்துக் கொண்டு மனைவியை அடிக்கப் போகிறான் குடிகாரக்  கணவன். அவனைத் தமிழில் உள்ள அனைத்துக் கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சித்து எதிர்த்துப் போரிடுகிறாள் வீரத் தமிழ் மனைவி. உடன் இருந்த பாதித் தமிழ் - பாதி மலையாள - பாலக்காட்டு ஐயர் நண்பர் சொன்னார், "நம் மக்கள் மட்டும்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள். கேரளாவில் வந்து பார். இது போன்று ஒரு காட்சியைக் காணவே முடியாது!" என்று. மிகவும் மன வருத்தமாக இருந்தது அன்று இரவு முழுவதும்.

இவை அனைத்துக்கும் மேல், தென்னிந்திய மாநிலங்கள் நான்கிலுமே ஓரளவு கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நம்ம ஊர் அளவுக்கு சாலையோரங்களில் அசிங்கம் செய்யும் பழக்கம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊர்களை வேறெங்கும் பார்க்க முடியவில்லை. அங்கும் உண்டு. ஆனால் இங்களவுக்கு இல்லை. ஒருவேளை, நான் பார்க்க வேண்டிய பகுதிகள் மற்ற மாநிலங்களில் விடுபட்டிருக்கலாம். அட்டவணை இருந்தால் அனுப்பி உதவுங்கள். உலகின் தலை சிறந்த இனம் எங்களுடையதுதான் என்று கத்திக் கத்திச் சொல்லும் முன் இதை நாம் சரி செய்து கொண்டே ஆக வேண்டும்.

கடைசியாக ஒன்று - இணையத்தில் நடக்கும் பெரும்பாலான தமிழ் விவாதங்கள் நினைத்துப் பார்க்கவே நாவும் உடலும் கூசும் அளவுக்குக் கேவலமான வார்த்தைகளில் நடத்தப் படுகின்றன. ஆங்கிலத்தில் நடக்கும் விவாதங்கள் அப்படியில்லை. ஓரளவு கன்னடம் பேசுவேன். கஷ்டப் பட்டு எழுத்துக் கூட்டி வாசிப்பேன். மற்றபடி, வேறு மொழிகள் எனக்குத் தெரியாது. எனவே, மற்றவர்களோடு ஒப்பிட முடியாது. ஆனால், அதையும் மற்ற நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் எவருமே இப்படியெல்லாம் விவாதம் செய்யும் உயரிய பண்பாடு அவர்களுடைய தளங்களில் இல்லை என்றே சொல்கிறார்கள். அவர்தம் இனமானம் காக்கப் பொய் சொல்கிறார்களோ?!

போன வாரம் ஊருக்குப் போகும் போது ஒரு அனுபவம். மதுரையில் அதிகாலை நாலு மணிக்கு பஸ்ஸில் அமர்கிறேன். பின்னால் ஒருவன் சத்தமாக மொபைல் போனில் பாட்டுப் போடுகிறான். அடுத்த சில நிமிடங்களில் பக்க வாட்டில் இருந்து அதை விடச் சத்தமாக ஒருவன் தெலுங்குப் பாட்டு போடுகிறான். போட்டிப் பாட்டாம். இவன் சத்தத்தைக் கூட்டுகிறான். அவனும் கூட்டுகிறான். இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. இந்தியாவைப் பழி வாங்க விரும்பும் எதிரிக்கு ஒரு கருத்துச் சொல்ல விரும்புகிறேன். குண்டு போட்டால், தமிழ் நாட்டை மட்டும் விட்டு விட்டுப் போடுங்கள். இவர்களை விட்டு வைப்பதுதான் இந்தியாவுக்குக் கொடுக்கும் சரியான தண்டனையாக இருக்கும்.

8. விளம்பர வேட்கை:
கன்னியாகுமரியில் இருந்து காசி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஒரு முறை போய் வாருங்கள். நான் அந்தச் சாலையில் ஹைதராபாத் வரை போயிருக்கிறேன். எந்தப் பகுதியில் எண்ணெய் வடிகிற அழகழகு மூஞ்சிகளோடு கலர் கலராக அதிகமான விளம்பரங்கள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். அவர்களே இந்தியாவின் தலை சிறந்த விளம்பரப் பிரியர்கள். யாரோ ஒருவர் பிறந்த நாளாக இருக்கட்டும், சடங்காக இருக்கட்டும், திருமணமாக இருக்கட்டும், சாவாகக் கூட இருக்கட்டும். முதல் வேலை ஐம்பது முதல் நூறு பேர் சேர்ந்து காசு போட்டு நோட்டிஸ் அடிக்கிறார்கள் அல்லது எல்லோருடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் போட்டு பெரும் ப்ளெக்ஸ் போர்ட் வைக்கிறார்கள். இதில் சிலர் மட்டும் சிங்கத்தை மிதிக்கும் படியும் புலியின் மீது வலம் வரும் படியும் காட்சி தருகிறார்கள். ஒரு சில போக்கிரிகள் கடவுளுக்கு இணையாகப் போற்றப் படுகிறார்கள். சராசரிப் பள்ளிச் சிறுவனுக்கு இருக்கும் அளவுக்குக் கூட உண்மையில் தைரியம் இல்லாத தன் திரைப்படக் கதாநாயகர்களின் வீர உறுமல்களையும் காட்டி, அது போலத் தானும் உறுமுவது போல அருகில் இன்னொரு படத்தையும் போட்டு அழிச்சாட்டியம் பண்ணுகிறார்கள். 

இது கட்சித் தலைவனுக்கு, சினிமாத் தலைவனுக்கு, சாதித் தலைவனுக்கு என்பதெல்லாம் போய், இப்போது சனி-ஞாயிறு நாட்களில் சரக்கு வாங்கிக் கொடுக்க முடிந்த எல்லோருக்கும் என்றாகி விட்டது. இதற்காகவே சிலர் குறிப்பிட்ட காலங்களில் கூடுதல்க் கும்பிடு போடுகிறார்கள்; கூடுதலாக சரக்கு வாங்கி ஊற்றுகிறார்கள். சென்ற ஆட்சியில் மொத்த மாநிலத்துக்கும் சில தெய்வங்களும் அவர்களின் கீழ் பகுதிக்கு ஒரு சிறு தெய்வம் என்றும் இருந்தது. இப்போது அது மாறி, மொத்தத் தமிழகத்துக்கும் ஒரே தெய்வம் என்றாகி விடும். சிறு தெய்வங்கள் சத்தமில்லாமல் தம் சேட்டைகளைச் செய்து கொள்ள வேண்டும். மூச்சுக்காற்று சத்தமாகக் கேட்டால் அடுத்த நாள் காலையில் தன் பதவி பறி போய்விட்ட செய்தியை வாசிக்க நேரிடும். 

உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி செய்வதற்கு அடுத்து இந்த விஷயத்தில் நாம்தான் நம்பர் ஒன். அங்கே அவர் மட்டும் செய்வதை இங்கே மொத்த மாநிலமும் செய்கிறது. அதுதான் வேறுபாடு. எந்தக் கோயிலுக்குப் போனாலும் அங்கே சாமி பெயரை விட அன்பளிப்புகள் அளித்த வள்ளல்களின் பெயரே பெரிதாக இருக்கிறது. விளக்கு ஒன்றை வழங்கி அது வெளிச்சம் கூடத் தர முடியாத அளவில் பெயர் எழுதி விடுகிறார்கள். கண்ணாடி ஒன்று வழங்கி அதில் யாருமே எதுவுமே காண முடியாத படி பெயர் எழுதி விடுகிறார்கள். இதில் சொந்த ஊர், இருப்பு, யார் வழிப் பேரன், யார் மகன், தம் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளின் பெயர்கள் வேறு. கேவலமப்பா. உங்களை மாதிரி ஆட்களால்தான் நாத்திகர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எப்படி என்று தெரியவில்லை. எங்கள் பகுதிகளில் ஒரு க்ரூப் இருக்கிறோம். திருமணப் பத்திரிகையைப் பார்த்தால் புத்தகம் போல இருக்கும். அதில் பெயர் இல்லாத யாரும் திருமணத்துக்கு வர மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எத்தனை பேருக்குச் சாப்பாடு ஏற்பாடு செய்கிறோமோ அத்தனை பேர் பெயரைப் போட்டாக வேண்டும். அதில் ஒரு பெயரை விட்டு விட்டாலும் செத்தான் எதிரி. சாகும் வரை அவனை ஒதுக்கி வைத்து விடுவார்கள். திருமணத்துக்கு வரும் தன் மற்ற பங்காளிகள் மூலம் அங்கேயே கலாட்டாக்கள் செய்யவும் ஏற்பாடு செய்து அனுப்பி வைப்பான் புறக்கணிக்கப் பட்டவன். அப்படி என்ன அதில் இருக்கிறதோ புரியவில்லை. பெயர் இருந்தும் கூடச் சில பிரச்சனைகள் வருவதுண்டு. சரியான வரிசையில் இல்லை, கொட்டெழுத்தில் இல்லை, முறை சரியாகப் போட வில்லை என்ற காரணங்களுக்காகவெல்லாம் பிரச்சனை செய்வார்கள். 

நானும் கர்நாடகத்தில் நான்கைந்து தேர்தல்கள் பார்த்து விட்டேன். ஒரு நாளும் நம்ம ஊரில் போலக் கூட்டமும் கும்மாளமும் சத்தமும் விளம்பரங்களும் செய்து பார்த்ததில்லை. சமீபத்தில்தான் அது அதிகரிப்பது காண்கிறேன். ஆட்டோக்காரர்கள் போல இவர்களும் நம்மைக் காப்பி அடிக்கிறார்கள் போல. இந்த முறை நம்ம ஊரிலேயே அதற்கு ஆப்பு அடித்து விட்டது தேர்தல் ஆணையம். நாற்பது ஆண்டுகளுக்குப் பின் நம் அரசியலில் நிகழ்ந்த நல்ல விஷயம். 

இதில் மதுரையைப் பற்றி முக்கியமாகச் சொல்ல வேண்டும். தனக்கு சரக்கு வாங்கிக் கொடுப்பவன் ஒன்னுக்கு அடிக்கப் போனால் கூட அதற்கு ஒரு நோட்டிஸ் அடித்து ஒட்டுவார்கள் அந்த ஊரில். அங்கு பார்த்த அளவுக்கு சினிமா நடிகர்களுக்குக் கட்-அவுட் வைப்பதை நான் எங்கும் பார்த்ததில்லை. வீதிகளில் மட்டுமின்றி வீடுகள், கடைகள், பனியன்கள், வண்டிகள், பைகள் என்று எல்லாவற்றிலும் ஒருத்தர் படத்தைப் போட்டுக் கொண்டு போகிற இடத்தில் எல்லாம் வயிறு பற்றி எரிகிற மாதிரி சேட்டைகள் எல்லாம் செய்தார்கள் ஒரு கூட்டம். இந்த முறை தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நான்கு நாட்களில் மதுரைக்குப் போன போது பார்க்கிறேன். மருந்துக்குக் கூட ஒரு படம் கூட இல்லை. இவ்வளவு பயம் இருந்தால் எதற்கு அப்படியெல்லாம் ஆட்டம் போட வேண்டும்?! அப்புறம் ஏன் இப்படி ஒளிந்து விளையாட வேண்டும்?! பாண்டிய நாட்டின் தலைநகரம்... அப்பப்பா... பயங்கரமப்பா... நக்கீரன் அங்குதான் வாழ்ந்தாராப்பா உண்மையிலேயே?!

9. பணப்பித்து / மனிதத்தன்மையின்மை:
சோழர் காலத்திலேயே திரை கடல் ஓடித் திரவியம் தேடியவர்கள் நாம். எத்தகைய துன்பங்களையும் தூக்கி விழுங்கி விட்டு நம் தேடலைத் தொடர்பவர்கள் நாமும் மலையாளிகளும். அவர்கள் மேற்கே இருக்கும் வளைகுடா நாடுகளை வளைத்துப் போட்ட நேரத்தில் நாம் கிழக்கே இருக்கும் தேசங்களுக்குச் சென்று கொட்டகை போடத் தொடங்கினோம். இயற்கை நமக்கு ஏதுவானதாக இல்லாமல் போனதால் எப்போதுமே வேண்டியதை வெளியில் சென்று தேட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம். அதுதான் நம்மை என்றும் பொருட் தேடலில் விற்பன்னர்கள் ஆக்கியது. ஆனால், போகிற போக்கில் பொருள் ஆர்வம் நம்மையே தூக்கி விழுங்கும் அளவுக்கு நம்மை ஆட் கொண்டு விட்டது. நம் அரசியல் ஆகட்டும்... தொழில்கள் ஆகட்டும்... கல்வி ஆகட்டும்... எல்லாமே பொருள் சார்ந்த ஒன்றாகவே முழுமையாக மாறி விட்டன. அதன் அடிப்படைக் கோட்பாடுகள் தூக்கி வீசப் பட்டு விட்டன.

மதுரை வியாபாரம் என்றொன்று இருந்ததாகச் சொல்வார்கள். அன்றைய தினம் சேர வேண்டிய இலாபம் சேர்ந்தவுடன் அதன் பின்பு வரும் எல்லோருக்குமே அசலுக்கு விற்று விட்டுக் கலைவார்களாம் அந்தக் காலத்து மதுரை வியாபாரிகள். இப்போது காய்கறிச் சந்தைகளில் கடைசி நேரம் செய்கிறார்களே அது போல. அதே மண்ணில் இன்று காசுக்காகச் செய்யும் பித்தலாட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மீனாட்சி அம்மன் கோயில் பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொல்லி விட்டு மதுரை சென்று வரும் எல்லோருமே வந்து புலம்பத்தான் செய்கிறார்கள். அங்கே ஏமாற்றினார்கள் - இங்கே ஏமாற்றினார்கள் - அதில் ஏமாற்றினார்கள் - இதில் ஏமாற்றினார்கள் என்று ஒரு நீண்ட அட்டவணை வாசிக்கிறார்கள்.

தம் குடும்ப உறுப்பினரின் மரணத்துக்குப் பின் சாம்பலைக் கரைக்க இராமேஸ்வரம் வந்த ஒரு வட இந்தியக் குடும்பத்தை மதுரை பேருந்து நிலையத்தில் வண்டிக்கு ஆள் பிடிக்கும் ஒருவன் எப்படியெல்லாம் ஏமாற்றி அலைக்கழித்தான் என்பது பற்றி எஸ். இராமகிருஷ்ணன் ஒரு முறை எழுதியதைப் படித்து விட்டு பல நாட்களாக மனம் உடைந்து அலைந்தேன். இராமேஸ்வரம் செல்லச் சென்னையில் இருந்து வந்தவரை மீண்டும் சென்னை வண்டியிலேயே ஏற்றி திருச்சி போகச் சொல்கிறான். இத்தனைக்கும் அடிப்படை - அன்றிரவு அவன் சரக்கு சாப்பிடத் தேவைப்படும் பணம். இது வட நாட்டுக் காரர்களுக்கு மட்டுமே நிகழ்வதில்லை. நமக்கும் ஒவ்வொரு முறை செல்லும் போதும் நடக்கத்தான் செய்கிறது. அவர்கள் அன்னியருக்கு என்று மட்டும் ஒதுக்கி வைத்திருக்கும் பழக்கங்கள் அல்ல அவை. அதே வேலைகளை வீட்டுக்குள் கூடச் செய்வார்கள்.

பத்து ரூபாய் களவாண்டதாகச் சொல்லி பெற்ற மகளையே தீயிட்டுக் கொளுத்திய தாய் தகப்பனைக் கொண்ட கும்பகோணம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறது. பின்னர் அந்தப் பத்து ரூபாயும் இவர்களால் தொலைக்கப் பட்டு மீண்டும் கிடைத்தது என்பதை அறிந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னால் படுத்துக் கூடத் தூங்க முடியவில்லை பல நாட்களாக.

தெருவுக்குத் தெரு திறக்கப் பட்டிருக்கும் பொறியியற் கல்லூரிகள் நம் கல்வி வளர்ச்சியின் ஆதாரமல்ல; பொருள் வேட்கையின் வெளிப்பாடே. பெரிய மேதாவி போலப் பேசும் தென் தமிழகத்துக் கதர்ப் புள்ளி ஒன்று கடந்த ஐந்து வருடங்களாக டெல்லியை விட மஞ்சள் துண்டை அதிகம் நக்கியது. முதலில் கொஞ்ச காலம் எனக்குப் புரிய வில்லை. காரணம் அறிந்தபோது அருவருப்பில் விடிய விடியக் காறிக் காறித் துப்பினேன். கடைசியில் என் உடம்பில்தான் நீர்ச் சத்து குறைந்து போனது. காரணம் என்ன தெரியுமா? அந்தப் புள்ளி ஆரம்பித்த எந்த அடிப்படை வசதியும் இல்லாத கல்லூரி ஒன்றுக்கு கேள்வியில்லாமல் அங்கீகாரம் அளித்ததாம் தலை. இப்போது கல்வி வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது கதர்ச் சட்டைப் புள்ளியின் கல்லூரியில்.

அதே போலப் பல கறுப்புச் சட்டை மேதாவிகள் ஏன் அப்படி நக்கித் திரிகிறார்கள் என்று எனக்கு நீண்ட நாட்களாகவே அறிந்து கொள்ள ஆர்வம். ஒவ்வொன்றாக விசாரித்தால் எல்லாமே பொருள் ரீதியான ஆதாயங்களுக்குப் பதிலாகச் செய்யப் படும் ஈன வேலைகள். கஞ்சிக்கு வழியில்லாதவன் காசுக்காகச் செய்யும் குற்றங்களை மட்டுமே நியாயப் படுத்தக் கற்றுக் கொண்டிருந்தோம் இது வரை. இப்போது எல்லாம் இருப்போருமே கூட அது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை ஆதரிக்க ஆரம்பித்து விட்டோம்.

எந்த அத்துவானக் காட்டுக்குள் போய் விசாரித்தாலும் அங்கு யாரோ ஒரு பெரும் புள்ளி மிரட்டி வாங்கியதாக ஓர் இடத்தைக் காட்டுகிறார்கள். ஆட்டுக் கறி போலத் துண்டு துண்டாக நறுக்கி அடக்கம் செய்தாலும் கூட ஒரு மனிதனுக்கு அவ்வளவு இடம் தேவைப் படாது. ஏன்தான் இப்படி இட மோகம் கொண்டு அலைகிறார்களோ எல்லோரும்?! பணத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை உலகமெங்கும் தலை தூக்கி வருகிறது என்ற போதிலும் இந்தியாவில் தமிழ் நாட்டுக்குத்தான் அதில் முதலிடம். இந்தத் தேர்தலுக்குப் பின் கொஞ்சம் அந்தக் கருத்தில் எனக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில தேர்தல்களைப் பார்த்து விட்டு இறுதி முடிவைச் சொல்கிறேன்.

10. இயற்கை:
இதற்கு நாம் பொறுப்பல்ல என்ற போதும் இது நமக்கொரு பெரும் பிரச்சனை. மேலே சொன்ன எல்லாப் பிரச்சனைகளுக்கும் நம் இயற்கையும் ஒரு காரணம். பெரும்பாலும் நீரில்லாத வறண்ட பூமி நம்முடையது. எந்தத் தொழில் செய்தாலும் எடு படாத மாதிரியான நில அமைப்பு நம்முடையது. நில நடுக் கோட்டுக்கு அருகில் இருப்பதால் ஆட்களும் கறுப்பாக இருக்கிறோம். அதுவே நம் பல பிரச்சனைகளைப் பெரிதாக்கிக் காட்டுகின்றன. நம்மைப் பலருக்குப் பிடிக்காதவர்களாக்கி விடுகின்றன.

சுனாமி என்ற பெயரை நாம் இப்போதுதான் கேள்விப் பட்டோம். ஆனால், அதனால் ஏற்படும் அழிவைக் காலம் காலமாகத் தாங்கி வருகிறோம். தென் மதுரையும் லெமூரியாக் கண்டமும் கபாடபுரமும் அழிந்தது அதனால்தான். நம் பெரும்பான்மை இலக்கியங்களும் வரலாறும் அழிந்தது அதனால்தான். பொன்னியின் செல்வன் காலத்திலேயே அது நம்மைத் தாக்கி அழித்த கதைகள் பற்றியெல்லாம் கல்கியார் விரிவாகச் சொல்லியிருக்கிறார். நம் முந்தைய தலைமுறையினரின் காலத்தில்தான் இராமேஸ்வரத்துக்குக் கிழக்கே இருந்த தனுஷ்கோடி அழிந்திருக்கிறது. இப்போதைய நாகப்பட்டினம் இருக்குமிடத்துக்கும் முதன் முதலில் நாகப்பட்டினம் உருவான இடத்துக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழித்து அழித்து ஓர் ஊரையே பல மைல் தொலைவில் உள்ளே தள்ளியிருக்கிறது ஆழிப்பேரலை. கடலூர் வடலூராகும் வடலூர் கடலூராகும் என்று கூட வள்ளலார் சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். எப்படியும் ஒவ்வொரு தலைமுறையும் ஒரு முறை வந்து நம் நாட்டை நாசம் செய்து விடுகிறது இது. இந்தியாவின் எந்த மாநிலமும் சுனாமியால் இவ்வளவு பாதிக்கப் படுவதில்லை.

பற்றாக் குறைக்கு மனிதன் தோன்றிய நாள் முதல் நம் மக்களைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கும் இலங்கைத் தீவு நமக்கு அருகில் இருக்கிறது. அயலார் படையெடுத்து வந்து துன்புறுத்திய போதெல்லாம் இந்தியக் கண்டத்தில் இருந்த எல்லோருமே ஓடி வந்த இடம் தென் கோடியில் இருந்த நம் இடம். இதற்குக் கீழே ஓட முடியாது. கடலில்தான் குதிக்க வேண்டும். எனவே திருப்பிப் போரிடும் கட்டாயத்துக்குத் தள்ளப் படும் இடம் இது. அதுதான் நம்முடைய போர்க்குணத்தை நமக்கு வரவழைத்திருக்க வேண்டும்.

அது மட்டுமில்லை. ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி அடுத்ததாக இந்தியா வந்தான் என்பதாகப் பல சான்றுகள் சொல்கின்றன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வந்தான் என்று இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அது தென் கோடியில் இருந்த தமிழ்ச் சீமைக்கு வந்தான் (அப்போது தமிழ் இருந்திராது என்பதை நானும் அறிவேன்!). துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால், மதுரை அல்லது தேனி மாவட்டத்தில் உள்ள பிரமலைக் கள்ளர்களின் டி.என்.ஏ. ஆப்பிரிக்கர்களின் டி.என்.ஏ.வுடன் பொருந்திப் போவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. அப்படியிருக்கையில் நாம் இன்னும் அந்தப் பழங்குடியினத்துக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பது நம் கோளாறு ஆகாது. அது நம் இரத்தத்தில் உள்ள கோளாறு. அதனால் நாம் மேலும் பண்பட இன்னும் கொஞ்சம் நாளாகலாம்.

தென் கோடியில் இருந்ததால் நமக்கு இழைக்கப் பட்ட இன்னோர் அநீதி - நாம் பெரும்பாலும் நம் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் பட்டோம். நம்மை விட வட கிழக்கில் உள்ளோரும் புறக்கணிக்கப் பட்டார்கள். இப்படிப் புறக்கணிக்கப் படுகையில் இயல்பாகவே பிரிவினை உணர்வுகள் வரத்தான் செய்யும். நாம் வேறு அவர்கள் வேறு என்கிற எண்ணவோட்டம் எழத்தான் செய்யும்.

பெரும்பாலும் மித மிஞ்சி உழைக்கும் மக்களாக இருந்ததால் உடல் வலியும் மன வலியும் மறந்து வாழ நமக்குக் கேளிக்கைகளும் பொழுதுபோக்குகளும் தேவைப் பட்டன. அதனால் வந்ததே நம் சினிமா மோகமாக இருக்கக் கூடும் என்பது என் எண்ணம்.

நம்முடைய பலங்களே பல இடங்களில் பலவீனங்களாக மாறியிருப்பதும் உண்டு. எல்லோருக்குமே அப்படித்தான். எது எப்படியோ, இதுதான் நாம். இதில் முடிந்தவற்றை மாற்றிக் கொண்டால் நல்லது என நினைத்தால் நல்லது. இல்லை, நாம் நாமாகவே இருக்க வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் மாறக் கூடாது என்று தொல் காப்பியம் சொல்லியிருக்கிறது என்று சொல்வதாக இருந்தாலும் சரி. அதுவும் நல்லதுதான். அப்படியே இருப்போம். :)

இதைப் படித்து விட்டு, நுனி மூக்கு வரை உங்களுக்குக் கோபம் பொங்கி வந்தால், தமிழ் நாட்டின் நல்லவை பத்து பற்றி நான் எழுதிய இந்த இடுகையையும் படியுங்கள் - http://bharatheechudar.blogspot.com/2011/03/10.html. அதன் பின்பும் உங்கள் கோபம் குறையாவிட்டால், சுயமரியாதையைக் கட்சி வைத்து வளர்த்த மண்ணில் இன்னுமொரு சுயமரியாதையற்ற பிறவி என்று என்னை மனதுக்குள் சபித்து விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். நான் சொல்வதை விட ஈன இனம் நம்முடையது என்று நிரூபிக்கும் வகையில் எதுவும் எழுதி விட வேண்டாம். மற்றபடி, உங்கள் நாகரிகமான விமர்சனங்களை ஏற்கக் காத்திருக்கிறேன்...

கருத்துகள்

  1. நல்லவை Vs. அல்லவை எனில் நல்லது Vs. அல்லது என்றாகிவிடும். கூர் கெட்டுவிட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. //அதற்கெல்லாம் காரணம் நாம் அடிப்படையிலேயே கொஞ்சம் தரங்கெட்ட கூட்டமோ என்றும் அடிக்கடித் தோன்றும்.//
    சந்தேகமே வேண்டாம். நாம் தரங்கெட்ட கூட்டம் தான்! எதிக்ஸ் என்றால் என்ன விலை என்ற நிலையில் தான் பெரும்பாலான தமிழர்கள் (என்னையும் சேர்த்து தான்).

    பதிலளிநீக்கு
  3. தமிழனின் தனி குணமான மற்றவர் மீது பொறாமை, வயத்தெரிச்சல் பற்றி மட்டும் சொல்லாமல் நல்ல பதிவை கொடுத்த உங்களை, அந்த அளவு எழுத முடியவில்லையே என்ற 'வயத்தெரிச்சலுடன் ' வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  4. @okyes- நன்றி நண்ப. அப்படியானால், இன்னா - இனியவை பரவாயில்லாமல் இருக்கும் என நினைக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  5. @bandhu- நன்றி நண்ப. அதுவும் உண்டு. விடுதலுக்கு மன்னிக்கவும். :)

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பரே. அதையும் சேர்த்துக் கொள்கிறேன் அட்டவணையில். :)

    பதிலளிநீக்கு
  7. நிதர்சனங்களின் சங்கமம் இப்பதிவு...
    சமுதாயத்தின் கோபம் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெரிக்கிறது.

    அருமை அருமை தோழா,

    பதிலளிநீக்கு
  8. அருமை...பத்தோடு நிறுத்தி விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  9. நன்றி ரெவரி. ஹா ஹா ஹா. பாகம் 2 தொடங்கி விடுவோமா?

    பதிலளிநீக்கு
  10. Gandhiji wrote in his biography that Tamils are jealousy in nature.

    பதிலளிநீக்கு
  11. Thanks for reading and the comment. I haven't heard this before. Good info.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்