இன்னொரு நிமிடம்...


மரணப் படுக்கையில்
வாழ்வின் கடைசிப் போராட்டம்
இம்முறை வாழ்க்கைக்காகவே

எண்பதாண்டு காலப்
பயணத்தின் முடிவை
மணித்துளிகளில் 
கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
பேரக்குழந்தைகள்

இறந்த காலத்தின் நினைவுகள்
இறக்கும் தருணத்தைத்
தொடப்போகிற அவசரத்தில்
அலை அலையாய்ப்
பாய்ந்து நீண்டு கொண்டிருக்கின்றன

கடந்த காலத்தின்
கசந்த நிகழ்வுகள் கூட
அசை போடலின் போது
இனிக்கிறது
எப்போதும் போலவே

வாழ்க்கையை
ஈடுபாட்டோடு வாழவில்லை
எதிர் காலத்தின்
எதிர் பார்ப்புகளோடு
கனவுலகிலும்
கற்பனாவுலகிலும்
களித்த சில கணங்களைத் தவிர்த்து

கூடிய சீக்கிரம்
போய்ச் சேர்ந்தால் நல்லதென்று
போன மாசம் வரை
நினைத்துக் கொண்டிருந்தது
நினைவுக்கு வந்து செல்கிறது

எப்போதும் சாகத் தயாரென்று
எப்போதும் இருமாந்த நாக்கு
வறண்டு நீள்கிறது
வாழ்வின் சில நிமிட நீட்சிக்காய்
சொட்டுத் தண்ணீர் வேண்டி...

'சுற்றியிருந்தோரெல்லாம் சூழ்ச்சிக்காரர்கள்'...
'இது பாவிகளின் உலகம்'...
'இங்கே வாழத் தகுதியிலாதவன் நான்'...
எவ்வளவு வெறுத்திருக்கிறேன்
இந்த பூமிப் பந்தை?!

பிறந்த கணத்தில்
ஆரம்பித்த
இந்த முட்கள் மீதான யாத்திரை
முடிவுறும் தருணத்துக்காய்
எத்தனை முறைகள்
ஏங்கியிருக்கிறேன்?!

எல்லைக் கோட்டைத்
தொடப் போகிற நேரத்தில்
திரும்பி ஓட வேண்டுமென்று
திசை மாறுகிறது மனது

கையில் கடிகாரத்தோடு
காத்துக் கொண்டிருக்கும்
பேரப்பிள்ளைகளும்
அந்த எருமை மாட்டுக்காரனும்
அனுமதித்தால் பார்க்கலாம்...
அனுமதிப்பீர்களா???

* 2003 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

 1. ///எல்லைக் கோட்டைத்
  தொடப் போகிற நேரத்தில்
  திரும்பி ஓட வேண்டுமென்று
  திசை மாறுகிறது மனது


  கையில் கடிகாரத்தோடு
  காத்துக் கொண்டிருக்கும்
  பேரப்பிள்ளைகளும்
  அந்த எருமை மாட்டுக்காரனும்
  அனுமதித்தால் பார்க்கலாம்...
  அனுமதிப்பீர்களா???
  //

  அற்புதம்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்